யெகோவா கொடுக்கும் தெளிவான எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்பீர்களா?
“வழி இதுவே, இதிலே நடவுங்கள்.”—ஏசா. 30:21.
1, 2. எதைச் செய்வதில் சாத்தான் குறியாக இருக்கிறான், பைபிள் நமக்கு எவ்வாறு உதவி செய்கிறது?
நீங்கள் பயணிக்கும்போது ஒரு வழிகாட்டிப் பலகை தவறான திசையைக் காட்டினால் ஏமாந்துவிடுவீர்கள், அல்லவா? ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள், அல்லவா? ‘மக்களை ஏமாற்றுவதற்காகவே ஒரு நயவஞ்சகன் அந்த வழிகாட்டிப் பலகையைத் திருப்பி வைத்திருக்கிறான்’ என்று உங்கள் நண்பர் எச்சரிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய எச்சரிப்பைக் கேட்டு நடப்பீர்கள், அல்லவா?
2 சாத்தானும் அந்த நயவஞ்சகனைப் போலத்தான் இருக்கிறான்; நம்மை ஏமாற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். (வெளி. 12:9) முந்தைய கட்டுரையில் நாம் சிந்தித்த அனைத்து ஆபத்துகளும் சாத்தான் உபயோகிப்பவையே; நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகவும் முடிவில்லா வாழ்விற்கு வழிநடத்தும் பாதையிலிருந்து விலகிச் செல்லவும் அவற்றையெல்லாம் உபயோகிக்கிறான். (மத். 7:13, 14) நம் நண்பரான யெகோவா தேவன், சாத்தானுடைய தவறான ‘வழிகாட்டிப் பலகைகளை’ குறித்து நம்மை எச்சரிக்கிறார் என்பதைக்கூட முந்தைய கட்டுரையில் சிந்தித்தோம். நம்மை ஏமாற்ற சாத்தான் உபயோகிக்கிற இன்னும் மூன்று விஷயங்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்க்க பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது என்பதைப் பற்றியும் இப்போது சிந்திப்போம். நாம் பைபிளை வாசிக்கும்போது யெகோவா நமக்குப் பின்னால் நடந்து வந்து, “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்வது போல உணருகிறோம். (ஏசா. 30:21) யெகோவா கொடுக்கும் தெளிவான எச்சரிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்கையில் அவர் சொல்வதைச் செய்ய நாம் இன்னும் உறுதியாய் இருப்போம்.
‘போலிப் போதகர்களை’ பின்பற்றாதீர்கள்
3, 4. (அ) போலிப் போதகர்கள் ஏன் தண்ணீர் இல்லாத கிணற்றைப் போலிருக்கிறார்கள்? (ஆ) இந்தப் போலிப் போதகர்களில் பெரும்பாலானோர் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் எதை விரும்புகிறார்கள்?
3 பயணத்தின்போது நீங்கள் ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்வதாகவும் அப்போது உங்களுக்குத் தாகம் எடுப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். தூரத்தில் ஒரு கிணறு இருப்பதைப் பார்க்கிறீர்கள். அதில் தண்ணீர் இருக்குமென்று நினைத்து அதை நோக்கி நடக்கிறீர்கள். ஆனால், அங்கு போய்ச் சேர்ந்ததும் அதில் தண்ணீர் இல்லை என்பது தெரிகிறது. நீங்கள் எந்தளவு ஏமாந்து போவீர்கள்! சத்தியத்தைத் தண்ணீருக்கும், போலிப் போதகர்களைத் தண்ணீர் இல்லாத கிணற்றிற்கும் ஒப்பிடலாம். இந்தப் போதகர்களிடம் சத்தியம் இருக்குமென்று நினைக்கிற மக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். அப்போஸ்தலர்களான பவுல் மற்றும் பேதுரு மூலம் இந்தப் போதகர்களைப் பற்றி யெகோவா நம்மை எச்சரிக்கிறார். (அப்போஸ்தலர் 20:29, 30-ஐயும் 2 பேதுரு 2:1-3-ஐயும் வாசியுங்கள்.) இந்தப் போலிப் போதகர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பவற்றை எல்லாம் பவுல் மற்றும் பேதுரு மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.
4 “உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி . . . உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்” என்று எபேசு சபையின் மூப்பர்களிடம் பவுல் கூறினார். “உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள்” என்று சக கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதினார். ஆகவே, போலிப் போதகர்கள் சபைக்கு உள்ளிருந்தே தோன்றலாம். அவர்களே விசுவாசதுரோகிகள்.a அவர்கள் எதை விரும்புகிறார்கள்? யெகோவாவின் அமைப்பைவிட்டுப் போகையில், ‘சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள’ விரும்புகிறார்கள் என்று பவுல் கூறினார். சீடர்கள் என்று அவர் கூறியபோது இயேசு கிறிஸ்துவின் சீடர்களையே அர்த்தப்படுத்தினார். போலிப் போதகர்கள், சபைக்கு வெளியே இருப்பவர்களைச் சீடர்களாக்க முயலுவது கிடையாது. மாறாக, சபைக்குள் இருப்பவர்களையே தங்களுடைய சீடர்களாக்க முயலுகிறார்கள். விசுவாசதுரோகிகள் ‘பசிவெறிபிடித்த ஓநாய்களை’ போலிருப்பதாக இயேசு கூறினார். சபையில் இருப்பவர்களின் விசுவாசத்தைக் குலைத்து, சத்தியத்தைவிட்டு அவர்களை விலகச் செய்வதே இந்த விசுவாசதுரோகிகளின் நோக்கமாகும்.—மத். 7:15; 2 தீ. 2:18.
5. போலிப் போதகர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?
5 போலிப் போதகர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்? மிகவும் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். ஒரு நாட்டிற்குள் பொருட்களைக் கடத்திச் செல்லும் குற்றவாளிகளைப் போல விசுவாசதுரோகிகள் தங்கள் கருத்துகளை “தந்திரமாய்” சபைக்குள் நுழைக்கிறார்கள். அவர்கள் ‘போலிப் போதனைகளை’ உபயோகிக்கிறார்கள். அதாவது, போலி ஆவணங்களை உண்மையானவை என தோன்றச் செய்யும் குற்றவாளிகளைப் போல தங்களுடைய தவறான கருத்துகளை உண்மையானவை எனத் தோன்றச் செய்கிறார்கள். ஏராளமானோர் தங்களுடைய ‘வஞ்சகமான போதனையை’ ஏற்கும்படி செய்கிறார்கள். அவர்கள் வேதவசனங்களை ‘திரித்துக் கூற’ விரும்புகிறார்கள் என்றும் பேதுரு சொன்னார். மற்றவர்கள் தங்கள் கருத்துகளை நம்ப வேண்டும் என்பதற்காக பைபிள் வசனங்களுக்குத் தவறான விளக்கம் அளிக்கிறார்கள். (2 பே. 2:1, 3, 13; 3:16) விசுவாசதுரோகிகளுக்கு நம்மேல் கொஞ்சம்கூட அக்கறையில்லை. நாம் அவர்களைப் பின்பற்றினால் முடிவில்லா வாழ்விற்கு வழிநடத்தும் பாதையிலிருந்து விலகிவிடுவோம்.
6. போலிப் போதகர்களைப் பற்றி பைபிள் என்ன தெளிவான எச்சரிப்பைக் கொடுக்கிறது?
6 இந்தப் போலிப் போதகர்களிடமிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 16:17-ஐயும் 2 யோவான் 9-11-ஐயும் வாசியுங்கள்.) “அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்ற தெளிவான அறிவுரையை அது கொடுக்கிறது. ஆகவே, நாம் அவர்களிடமிருந்து தூரமாய் விலகியிருக்க வேண்டும். பைபிள் கொடுக்கும் எச்சரிப்பு, தொற்று வியாதியுடைய ஒருவரிடமிருந்து விலகியிருக்கும்படி ஒரு டாக்டர் கொடுக்கும் எச்சரிப்பு போல இருக்கிறது. அந்த வியாதி உங்களைத் தொற்றிக்கொண்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பது டாக்டருக்குத் தெரியும். அவர் உங்களுக்குத் தெளிவான எச்சரிப்பு கொடுத்திருப்பதால் அவர் சொல்வதை நீங்கள் அப்படியே செய்வீர்கள். விசுவாசதுரோகிகள் ‘பைத்தியம்’ பிடித்தவர்கள் என்றும் மற்றவர்களையும் தங்களைப் போலவே சிந்திக்க வைப்பதற்காகத் தங்கள் போதனைகளை உபயோகிக்கிறார்கள் என்றும் பைபிள் கூறுகிறது. (1 தீ. 6:3, 4, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவோ நல்ல டாக்டரைப் போல இருக்கிறார். போலிப் போதகர்களிடமிருந்து விலகியிருக்கும்படி அவர் நம்மிடம் கூறுகிறார். அவர் கொடுக்கும் எச்சரிப்பை நாம் எப்போதுமே கேட்டு நடக்க வேண்டும்.
7, 8. (அ) போலிப் போதகர்களிடமிருந்து நாம் எப்படி விலகியிருக்கலாம்? (ஆ) போலிப் போதகர்களிடமிருந்து விலகியிருக்க நீங்கள் ஏன் உறுதியாய் இருக்கிறீர்கள்?
7 போலிப் போதகர்களிடமிருந்து நாம் எப்படி விலகியிருக்கலாம்? நாம் அவர்களோடு பேசக் கூடாது, அவர்களை நம் வீட்டிற்குள் அழைக்கக் கூடாது. அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கக் கூடாது, அவர்களோடு சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது, இன்டர்நெட்டில் அவர்களுடைய வெப்சைட்டை அலசக் கூடாது, அல்லது அவர்களைப் பற்றிய நம் கருத்துகளை இன்டர்நெட்டில் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருக்க நாம் ஏன் அவ்வளவு உறுதியாய் இருக்க வேண்டும்? “சத்தியத்தின் கடவுளை” நாம் நேசிப்பதே அதற்கு முதல் காரணம்; ஆகவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்திற்கு எதிரான பொய்ப் போதனைகளை நாம் கேட்க விரும்புவதில்லை. (சங். 31:5, NW; யோவா. 17:17) அருமையான சத்தியங்களை நமக்குப் போதிப்பதற்கு யெகோவா உபயோகிக்கும் அமைப்பை நாம் நேசிப்பதே இரண்டாவது காரணம். யெகோவாவின் பெயரையும், அதன் அர்த்தத்தையும், பூமிக்கான அவருடைய நோக்கத்தையும், மரிக்கும்போது நமக்கு என்ன ஏற்படுகிறது என்பதையும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் பற்றி நமக்குக் கற்றுக்கொடுத்தது யெகோவாவின் அமைப்புதானே? இவற்றையும் இன்னுமதிக சத்தியங்களையும் முதன்முதலில் கற்றுக்கொண்டபோது நீங்கள் பெற்ற சந்தோஷம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படியென்றால், போலிப் போதகர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு இந்தச் சத்தியங்களை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த அமைப்பைப் பற்றித் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.—யோவா. 6:66-69.
8 போலிப் போதகர்கள் என்ன சொன்னாலும் சரி நாம் அவர்களைப் பின்பற்ற மாட்டோம். தண்ணீர் இல்லாத கிணறுகளைப் போலிருக்கும் நபர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் சொல்வதைக் கேட்போர் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் உண்மையாய் இருக்க நாம் தீர்மானமாயிருக்கிறோம். இந்த அமைப்பு நம்மை ஏமாற்றியதே கிடையாது; கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியமெனும் சுத்தமான தண்ணீரை ஏராளமாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.—ஏசா. 55:1-3; மத். 24:45-47.
‘கட்டுக்கதைகளை’ பின்பற்றாதீர்கள்
9, 10. ‘கட்டுக்கதைகளை’ பற்றிய என்ன எச்சரிப்பை பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்தார், எத்தகைய கட்டுக்கதைகளைப் பற்றி பவுல் குறிப்பிட்டிருக்கலாம்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
9 சாலையில் உள்ள வழிகாட்டிப் பலகை தவறான திசையைக் காட்டினால் நாம் ஏமாந்துவிடுவோம், அல்லவா? அந்தப் பலகை தவறான திசையைக் காட்டுவதைச் சில சமயங்களில் எளிதில் கண்டுபிடித்துவிடலாம், மற்ற சமயங்களிலோ கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். சாத்தான் பரப்பும் பொய்களும் அவ்வாறே இருக்கின்றன. கவனமாக இல்லாவிட்டால் அவற்றில் சில நம்மை எளிதில் ஏமாற்றிவிடலாம். இந்தப் பொய்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் நம்மை எச்சரிக்கிறார். இவற்றை ‘கட்டுக்கதைகள்’ என்று அழைக்கிறார். (1 தீமோத்தேயு 1:3, 4-ஐ வாசியுங்கள்.) இந்தக் கட்டுக்கதைகள் யாவை, நாம் எவ்வாறு இவற்றைப் பின்பற்றுவதைத் தவிர்க்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டால்தான் முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் நம்மால் தொடர்ந்து நடக்க முடியும்.
10 மூப்பராயிருந்த தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில் கட்டுக்கதைகளைப் பற்றிய எச்சரிப்பைக் கொடுத்தார். சபையைச் சுத்தமாக வைக்கும்படியும், யெகோவாவுக்கு உண்மையாயிருக்க சகோதர சகோதரிகளுக்கு உதவும்படியும் பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார். (1 தீ. 1:18, 19) ‘கட்டுக்கதை’ என்பதற்கு பவுல் உபயோகித்த கிரேக்க வார்த்தை “ஒரு பொய்” அல்லது “கற்பனைக்கதை” என்ற அர்த்தத்தைத் தருகிறது. கட்டுக்கதை என்பது உண்மையோடு சம்பந்தமே இல்லாத மதம் சார்ந்த கதையைக் குறிப்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது. (தி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா) சுவாரஸ்யமான கட்டுக்கதைகளிலிருந்து தோன்றிய மதப் பொய்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டிருக்கலாம்.b இந்தக் கதைகள், ‘வீண் கேள்விகளை எழுப்புவதால்’ அவை ஆபத்தானவை என்று அவர் கூறினார். அதாவது, இந்தக் கதைகளை நம்புகிறவர்கள் பொய்யானவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்து அவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிப்பதிலேயே தங்கள் நேரத்தை வீணாக்குவார்கள் என்று கூறினார். மக்கள் அதிமுக்கியமானவற்றை மறந்துபோவதற்காகச் சாத்தான் இந்தக் கட்டுக்கதைகளையும் மதப் பொய்களையும் உபயோகிக்கிறான். ஆக, பவுலுடைய அறிவுரை தெள்ளத்தெளிவாக இருக்கிறது: கட்டுக்கதைகளைப் பின்பற்றாதிருங்கள்!
11. மக்களை ஏமாற்ற சாத்தான் எவ்வாறு பொய் மதங்களை உபயோகிக்கிறான், நாம் எந்த எச்சரிக்கையைக் கேட்டு நடக்க வேண்டும்?
11 கவனமாக இல்லாதவர்களை ஏமாற்றிவிடும் சில கட்டுக்கதைகள் யாவை? “சத்தியத்தைக் காதுகொடுத்துக் கேட்காமல்” இருக்கச் செய்யும் எந்தவொரு மத போதகமும் ஒரு “கட்டுக்கதை” எனலாம். (2 தீ. 4:3, 4) சாத்தான் மிகவும் தந்திரமானவன். மக்களை ஏமாற்ற அவன் பொய் மதங்களை உபயோகிக்கிறான். அதனால்தான் அவன் “ஒளியின் தூதனைப் போல்” நடிக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. (2 கொ. 11:14) உதாரணமாக, கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டாலும் திரித்துவம், எரிநரகம் போன்ற பொய்களைக் கற்பிக்கிறார்கள். உடல் மரித்தாலும் அதன் ஒரு பகுதி தொடர்ந்து உயிர் வாழ்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகைகள் கடவுளைப் பிரியப்படுத்துவதாக அநேகர் நினைக்கிறார்கள்; ஆனால், அந்தச் சமயங்களில் மக்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் பொய் மதங்களிலிருந்தே வந்தவை. பொய் மதங்களிலிருந்து விலகியிருக்கும்படியும், ‘அசுத்தமானதைத் தொடாதிருக்கும்படியும்’ கடவுள் கொடுக்கும் எச்சரிக்கையைக் கேட்டு நடந்தால் இந்தக் கட்டுக்கதைகள் நம்மை ஏமாற்றிவிடாது.—2 கொ. 6:14-17.
12, 13. (அ) சாத்தான் பரப்பும் மூன்று பொய்கள் யாவை, ஆனால் உண்மைகள் யாவை? (ஆ) கட்டுக்கதைகளால் சாத்தான் நம்மை ஏமாற்றாதிருக்க விரும்பினால் நாம் என்ன செய்ய வேண்டும்?
12 நாம் கவனமாக இல்லாவிட்டால் சாத்தான் பரப்பும் மற்ற பொய்கள் நம்மை ஏமாற்றிவிடலாம். அவற்றில் மூன்றைப் பற்றி இப்போது சிந்திக்கலாம். முதல் பொய்: உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்; எது சரி, எது தவறு என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள். டிவி, சினிமா, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இன்டர்நெட் ஆகியவற்றில் இதைத்தான் கேள்விப்படுகிறோம். இந்தப் பொய்யையே நாம் எப்போதும் கேட்பதால் இது நிஜம் என்று எளிதில் நம்பிவிடலாம், அதனால் இந்த உலகின் ஒழுக்கங்கெட்ட கருத்துகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிடலாம். ஆனால், உண்மை இதுதான்: எது சரி, எது தவறு என்பதைப் பற்றி கடவுள்தான் நமக்குச் சொல்ல வேண்டும். (எரே. 10:23) இரண்டாவது பொய்: கடவுள் பூமியில் எந்த மாற்றத்தையும் செய்யவே மாட்டார். இவ்வாறு நினைப்பதால் மக்கள் இன்றைக்காக மட்டுமே வாழ்கிறார்கள். நாளைய தினத்தைப் பற்றியோ கடவுளைப் பிரியப்படுத்துவதைப் பற்றியோ யோசிப்பதே கிடையாது. நாமும் அவர்களைப் போல யோசிக்க ஆரம்பித்துவிட்டால் கடவுளுடைய சேவையில் “செயலற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும்” ஆகிவிடலாம். (2 பே. 1:8) ஆனால், உண்மை இதுதான்: யெகோவா வெகு விரைவில் பூமியில் பெரிய மாற்றங்களைச் செய்யப் போகிறார்; நாம் அதை நம்புகிறோம் என்பதை நம் வாழ்க்கைமுறை காட்ட வேண்டும். (மத். 24:44) மூன்றாவது பொய்: கடவுளுக்கு உங்கள் மேல் அக்கறையே இல்லை. கடவுள் நம்மை நேசிக்கும் அளவுக்கு நாம் நல்லவர்கள் அல்ல என்று நம்மை நம்ப வைக்க சாத்தான் முயலுகிறான். இந்தப் பொய்யை நாம் நம்ப ஆரம்பித்துவிட்டால் யெகோவாவைச் சேவிப்பதையே நிறுத்திவிடுவோம். ஆனால், உண்மை இதுதான்: தம் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் யெகோவா நேசிக்கிறார், ஒவ்வொருவரும் அவருக்கு மிக முக்கியமானவர்களே.—மத். 10:29-31.
13 சாத்தானுடைய உலகிலுள்ள மக்களைப் போல யோசிக்காதபடி நாம் எப்போதும் கவனமாயிருக்க வேண்டும். அவர்கள் சொல்வதும் யோசிப்பதும் உண்மையைப் போலவே சில சமயங்களில் தோன்றலாம். ஆனால், சாத்தான் நம்மை ஏமாற்ற விரும்புகிறான் என்பதையும் ஏமாற்றுவதில் அவன் நிபுணன் என்பதையும் மறந்துவிடாதீர்கள். கட்டுக்கதைகளால் சாத்தான் நம்மை ஏமாற்றாதிருக்க விரும்பினால், பைபிள் தரும் எச்சரிப்புகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்.—2 பே. 1:16.
“சாத்தானைப்” பின்பற்றாதீர்கள்
14. சில இளம் விதவைகளுக்கு பவுல் என்ன எச்சரிப்பைக் கொடுத்தார், அதற்கு நாம் அனைவருமே ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
14 “சாத்தானைப் பின்பற்றும் வழி” என்பதாக வழிகாட்டிப் பலகையில் எழுதியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எந்தவொரு கிறிஸ்தவருமே அப்படியொரு பாதையில் செல்ல விரும்பமாட்டார். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களை அறியாமலேயே ‘சாத்தானைப் பின்பற்ற’ ஆரம்பித்துவிடலாம். இது எப்படி நடக்கலாம் என்று பவுல் விவரித்தார். (1 தீமோத்தேயு 5:11-15-ஐ வாசியுங்கள்.) அன்று சபையிலிருந்த சில “இளம் விதவைகளை” பற்றி அவர் எழுதினார்; ஆனால், அதிலிருந்து நாம் அனைவருமே பயனடையலாம். அந்த விதவைகள் தாங்கள் சாத்தானைப் பின்பற்றுவதாக நினைக்கவில்லை; ஆனால், அவர்கள் செய்த காரியங்களும் பேசிய விஷயங்களும் அவர்கள் சாத்தானைப் பின்பற்றியதையே காட்டின. நம்மை அறியாமலேயே சாத்தானைப் பின்பற்றுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? தீங்கு விளைவிக்கும் வீண்பேச்சை, அதாவது மற்றவர்களைக் குறித்துக் கெட்ட விஷயங்கள் பேசுவதை, பற்றி பவுல் கொடுத்த எச்சரிப்பை இப்போது சிந்திக்கலாம்.
15. சாத்தான் எதை விரும்புகிறான், தான் விரும்புகிறவற்றை நம்மைச் செய்ய வைப்பதற்கு அவன் என்ன தந்திரங்களை உபயோகிக்கிறான் என்று பவுல் கூறினார்?
15 நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதைச் சாத்தான் விரும்புவதில்லை. நற்செய்தியை அறிவிப்பதை நாம் நிறுத்திவிட வேண்டுமென்றே அவன் விரும்புகிறான். (வெளி. 12:17) நேரத்தை வீணாக்கும் முட்டாள்தனமான காரியங்களை அல்லது யெகோவாவின் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கும் காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்றே அவன் விரும்புகிறான். சாத்தான் தன்னுடைய இஷ்டம்போல் நம்மை நடக்க வைப்பதற்கு உபயோகிக்கிற சில தந்திரங்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். தன் காலத்திலிருந்த சில விதவைகள் ‘வேலைவெட்டி இல்லாமல் திரிவதாக’ அவர் கூறினார். நண்பர்களைச் சந்திப்பதிலும் உப்புசப்பில்லாத விஷயங்களைப் பேசுவதிலுமே இவர்கள் தங்கள் நேரத்தைக் கழித்தார்கள். அப்படிச் செய்யாதிருக்க நாம் கவனமாயிருக்க வேண்டும். உதாரணமாக, உப்புசப்பில்லாத விஷயங்களை, சில சமயங்களில் பொய்யான விஷயங்களை, பற்றி ஈ-மெயில் அனுப்புவதிலேயே நம் நேரத்தையும் மற்றவர்களுடைய நேரத்தையும் நாம் வீணடிக்கலாம். அந்த விதவைகள் “வம்பளக்கிறவர்களாக” இருந்ததாகவும் பவுல் கூறினார். வம்பளக்கிறவர்கள் சில சமயங்களில் மற்றவர்களைப் பற்றிக் கெட்ட விஷயங்களைப் பேசலாம். இது ஆபத்தானது; ஏனென்றால், அவ்வாறு வம்பளப்பது பழிதூற்றுவதற்கு, அதாவது மற்றவர்களைப் பற்றிப் பொய்களைப் பரப்புவதற்கு, வழிநடத்தலாம். இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். (நீதி. 26:20) மற்றவர்களைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிறவர்கள் அறிந்தோ அறியாமலோ சாத்தானைப் போலவே இருக்கிறார்கள்.c அடுத்ததாக, அந்த விதவைகள் “மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாக” இருந்ததாய் பவுல் கூறினார். மற்றவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. அப்படிச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இந்த ஆபத்துகள் காரணமாக, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற மிக முக்கியமான வேலையை நாம் மறந்தே போய்விடலாம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க நம் நேரத்தைச் செலவிட வேண்டும். அதை அறிவிப்பதை நிறுத்திவிட்டால் நாம் சாத்தானைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம். நாம் சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டால் யெகோவாவுக்கு எதிராக இருப்போம். நாம் யார் பக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.—மத். 12:30.
16. ‘சாத்தானைப் பின்பற்றி விலகிப்போகாதிருக்க’ விரும்பினால் நாம் என்ன செய்ய வேண்டும்?
16 பைபிள் சொல்லும் விஷயங்களுக்குச் செவிகொடுத்தால் நாம் ‘சாத்தானைப் பின்பற்றி விலகிப்போக’ மாட்டோம். நமக்கு உதவும் சில விஷயங்களை பவுல் குறிப்பிடுகிறார். நாம் “எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுகிறவர்களாக” இருக்க வேண்டுமென்று அவர் கூறுகிறார். (1 கொ. 15:58) நாம் யெகோவாவுக்காகக் கடினமாகச் சேவை செய்கையில், அவசியமற்ற, ஆபத்தான காரியங்களைச் செய்ய நமக்கு நேரமே இருக்காது. (மத். 6:33) நாம் செய்யும்படி பவுல் கூறுகிற மற்றொரு காரியம், கேட்கிறவர்களை ‘பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை’ பேசுவதாகும். (எபே. 4:29) ஆகவே, வீண்பேச்சு பேசாதீர்கள், அப்படிப் பேசுகிறவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.d உங்கள் சகோதர சகோதரிகளை நம்புங்கள், அவர்களுக்கு மரியாதை காட்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்களைப் பற்றி எப்போதும் நல்ல விஷயங்களையே பேசுவீர்கள். நமக்கு என்ன குறிக்கோள் இருக்க வேண்டுமென்றும் பவுல் கூறுகிறார். “மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்” என்று சொல்கிறார். (1 தெ. 4:11) உங்களுக்கு மற்றவர்கள்மீது அக்கறை இருப்பதை மரியாதையோடு காட்டுங்கள். சிலர் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசவோ அவற்றை மற்றவர்கள் அறிந்துகொள்ளவோ விரும்ப மாட்டார்கள் என்பதை உணருங்கள். அதோடு, மற்றவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களை அவர்களுக்காக நாம் எடுக்கக் கூடாது என்பதையும் நினைவில் வையுங்கள்.—கலா. 6:5.
17. (அ) நாம் இதுவரை சிந்தித்த அனைத்து எச்சரிப்புகளையும் யெகோவா ஏன் கொடுத்திருக்கிறார்? (ஆ) எதைச் செய்ய நாம் உறுதியாயிருக்க வேண்டும்?
17 நாம் எதைப் பின்பற்றக்கூடாது என்று தெளிவாக விளக்கியதற்கு யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், அல்லவா? யெகோவா நம்மை நேசிப்பதாலேயே இதுவரை சிந்தித்த அனைத்து எச்சரிப்புகளையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். நாம் சாத்தானிடம் ஏமாந்துபோய் கஷ்டப்படக் கூடாது என்று அவர் விரும்புகிறார். நாம் செல்ல வேண்டுமென்று யெகோவா விரும்புகிற வழி கஷ்டம் நிறைந்ததுதான்; ஆனால், அது மட்டுமே முடிவில்லா வாழ்விற்கான வழி. (மத். 7:14) “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று யெகோவா சொல்லும்போது அவருக்குச் செவிகொடுக்க நாம் எப்போதுமே உறுதியாயிருக்க வேண்டும்.—ஏசா. 30:21.
[அடிக்குறிப்புகள்]
a “விசுவாசதுரோகம்” என்பது உண்மை வணக்கத்திற்கு எதிராகக் கலகம் செய்து அதைவிட்டு விலகுவதாகும்.
b பவுலின் காலத்தில் நிலவிய கட்டுக்கதைகளுக்கு, தோபித்து புத்தகம் (தொபியாசு ஆகமம்) ஓர் உதாரணமாகும்; இந்தப் புத்தகமும் பைபிளின் ஒரு பாகமென சிலர் நினைக்கிறார்கள். இது, கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. இதில், பொய்யான கருத்துகளும் மாயாஜால கதைகளும் ஏராளமாக உள்ளன. நடந்திருக்க வாய்ப்பே இல்லாத கதைகளைப் பற்றிச் சொன்னாலும் அவை எல்லாம் உண்மையென இது கூறுகிறது.—வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 122-ஐப் பாருங்கள்.
c “பிசாசு” என்பதற்கான கிரேக்க வார்த்தை “மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதற்காக அவர்களைப் பற்றிப் பொய் சொல்லும் ஒருவனைக் குறிக்கிறது.” இது, முதன்முதலில் பொய் சொன்ன சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பட்டப் பெயராகும்.—யோவா. 8:44; வெளி. 12:9, 10.
d “காற்றில் பறக்கும் இறகுகள் போல...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
உங்கள் பதில் என்ன?
பின்வரும் வசனங்களிலுள்ள எச்சரிப்பிற்குச் செவிகொடுப்பதை நீங்கள் எப்படிக் காட்டுவீர்கள்?
[பக்கம் 19-ன் பெட்டி/படங்கள்]
காற்றில் பறக்கும் இறகுகள் போல...
தீங்கிழைக்கும் வீண்பேச்சினால் என்ன நடக்கும் என்பதைக் காட்டும் பழங்கால யூத கதை ஒன்றைக் கேளுங்கள்:
ஓர் ஊரில் மிகவும் புத்திசாலியான ஒருவர் வாழ்ந்தார். அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் ஒருவன் பரப்பி வந்தான். ஒரு நாள் இவன் மனந்திருந்தி, அந்தப் புத்திசாலியிடம் போய் தன்னை மன்னிக்கும்படி கேட்டான். “நான் உங்கள் பெயரைக் கெடுத்ததற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர், “இறகுகள் நிறைந்த ஒரு தலையணையை எடுத்து, அதைக் கிழித்து, இறகுகளைக் காற்றில் பறக்க விடு” என்று அவனிடம் சொன்னார். அதற்கான காரணம் புரியாவிட்டாலும் அவர் சொன்னபடியே செய்தான்.
பிறகு அவரிடம் வந்து, “இப்போது என்னை மன்னித்துவிட்டீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “முதலில் போய் அந்த இறகுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வா” என்றார்.
அதற்கு அவன், “ஆனால் அது முடியாதே, எல்லா இறகுகளும் காற்றில் பறந்து போய்விட்டதே” என்றான்.
அப்போது அவர், “இறகுகள் காற்றில் பல இடங்களுக்குப் பறந்துவிட்டது போலவே நீ சொன்ன பொய்களும் பலரிடம் பரவிவிட்டன. இறகுகளைத் திரும்பவும் எடுத்துவருவது எந்தளவு கஷ்டமோ அந்தளவு கஷ்டம்தான் நீ சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்குவதும்” என்றார்.
பாடம் தெளிவாக உள்ளது, அல்லவா? நாம் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் திரும்பவும் அள்ள முடியாது. நாம் சொன்னவற்றால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை நம்மால் சரிசெய்யவே முடியாது. ஆகவே, மற்றவர்களைப் பற்றித் தவறாக ஏதாவது சொல்வதற்கு முன்பு, நம் வார்த்தைகள் காற்றில் பறந்துசெல்லும் இறகுகள் போல இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
[பக்கம் 16-ன் படம்]
சிலர் எவ்வாறு விசுவாசதுரோகிகளைத் தங்கள் வீட்டிற்குள் அழைக்கலாம்?