மரண பயத்தை விட்டு, ‘நீடிய வாழ்வை’ நோக்கி
பியேரோ காட்டி சொன்னபடி
இரைச்சல் சத்தம் லேசாகக் கேட்க ஆரம்பித்து, அதிகமாகிக் கொண்டே போனது. அதன்பின், உடனடியாகப் பதுங்கிக்கொள்ளும்படி எல்லாரையும் எச்சரித்து அபாயச் சங்கொலி முழங்கியது. அதையடுத்து வெடிகுண்டுகளின் பயங்கரமான சத்தமும், எல்லாம் வெடித்துச் சிதறும் சத்தமும் பீதியடைந்த மக்களின் காதுகளைப் பிளந்தன.
இது இத்தாலியிலுள்ள மிலான் நகரத்தில் 1943/1944-ல் நடந்தது. அந்தப் போர்க்களத்தில் நானும் இருந்தேன், ஓர் இளம் போர்வீரனாக. வெடிகுண்டுகளால் சிதைந்து சிதிலமான பாதுகாப்பு இடங்களுக்குப் போய், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை எடுத்து வருவதுதான் பெரும்பாலும் என் வேலையாக இருந்தது; அந்தச் சடலங்கள் அடையாளம் தெரியாதளவுக்குத் துண்டு துண்டாகியும் உருக்குலைந்தும் போயிருந்தன. இப்படிப்பட்ட கோரக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டதோடு நானேகூட சில சமயங்களில் மரண வாசல்வரை சென்று வந்தேன். அந்த மயிர்க்கூச்செறியும் சமயங்களில் நான் கடவுளிடம் ஜெபம் செய்தேன்; வெறித்தனமான படுகொலையிலிருந்து உயிர்தப்பினால் அவருடைய சித்தத்தைச் செய்ய என்னையே அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டேன்.
பஞ்சாய்ப் பறந்துபோன மரண பயம்
நான் இத்தாலியிலுள்ள கோமோவிலிருந்து சுமார் ஆறு மைல் (10 கி.மீ.) தொலைவில் அமைந்திருந்த ஒரு கிராமத்தில் வளர்ந்தேன்; அது சுவிட்சர்லாந்து எல்லையருகே இருந்தது. சிறுவயதிலேயே நான் மரணத்தைப் பார்த்துப் பார்த்துப் பயத்தில் வாழ்ந்தேன், துக்கத்தில் தவித்தேன். என்னுடைய அக்கா இரண்டு பேர் ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்குப் பலியானார்கள். அதன்பின் 1930-ல், என் அம்மா லூயிஜாவைப் பறிகொடுத்தேன்; அப்போது எனக்கு ஆறு வயதுதான். ஒரு கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டதால் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றினேன், வாரந்தோறும் ஆராதனைக்குப் போய் வந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு என் பயம் பஞ்சாய்ப் பறந்துபோனது, ஆனால் சர்ச்சுக்குப் போனதால் அல்ல, முடிதிருத்தும் கடைக்குப் போனதால்!
1944-ல் இரண்டாம் உலகப் போர் எண்ணற்றோரின் உயிரைக் குடித்தது. போர் நடந்த பகுதியை விட்டுவிட்டு, நடுநிலை வகித்த சுவிட்சர்லாந்துக்கு ஓடிப்போன ஆயிரக்கணக்கான இத்தாலிய வீரர்களில் நானும் ஒருவன். நாங்கள் பல்வேறு அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டோம். நாட்டின் வடகிழக்கே, ஷ்டைனாக் கிராமத்திற்கு அருகே அமைந்திருந்த ஒரு முகாமுக்கு நான் அனுப்பப்பட்டேன். அங்கு எங்களால் ஓரளவு சுதந்திரமாக இருக்க முடிந்தது. ஷ்டைனாக்கில் முடிதிருத்தும் கடை வைத்திருந்த ஒருவருக்கு எடுபிடி வேலைக்காக தற்காலிகமாய் ஆள் தேவைப்பட்டது. அதனால், நான் அவரோடு ஒரு மாதம் மட்டும் தங்கியிருந்து வேலை செய்தேன். ஆனால், அந்த ஒரே மாதத்தில் அங்கு சந்தித்த ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் என் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது.
முடிதிருத்துபவரின் வாடிக்கையாளர்களில் ஒருவர்தான் அடோல்ஃபோ டெலீனீ; சுவிட்சர்லாந்தில் வசித்துவந்த இத்தாலியரான இவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நான் அதுவரை கேள்விப்பட்டதே இல்லை, இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை; ஏனென்றால், அந்தச் சமயத்தில் இத்தாலி முழுவதும் 150 சாட்சிகள்கூட இருந்திருக்க மாட்டார்கள். பைபிளிலுள்ள அருமையான சத்தியங்களைப் பற்றியும், சமாதானத்தையும் ‘நீடிய வாழ்வையும்’ குறித்த வாக்குறுதிகளைப் பற்றியும் அடோல்ஃபோ என்னிடம் சொன்னார். (யோவா. 10:10; வெளி. 21:3, 4) போரும் மரணமும் இல்லாத உலகம் வரப்போவதைக் கேட்டு நான் பூரித்துப்போனேன். என்னுடைய முகாமுக்குத் திரும்பியபோது அதைப் பற்றி இன்னொரு இத்தாலியரான ஜீசெப்பே டூபீனீ என்ற வாலிபரிடம் சொன்னேன்; அவரும் பூரித்துப்போனார். அடோல்ஃபோவும் மற்ற சாட்சிகளும் அடிக்கடி எங்கள் முகாமுக்கு வந்து எங்களைச் சந்தித்தார்கள்.
ஷ்டைனாக் கிராமத்திலிருந்து சுமார் ஆறு மைல் (10 கி.மீ.) தொலைவில் இருந்த ஆர்போனுக்கு அடோல்ஃபோ என்னை அழைத்துச் சென்றார்; ஒருசில சாட்சிகள் அங்கு இத்தாலிய மொழியில் கூட்டங்களை நடத்தி வந்தார்கள். அங்கு சொல்லப்பட்ட விஷயங்களைக் கேட்டு எனக்குத் தலைகால் புரியவில்லை; அடுத்த வாரம் நான் அங்கு நடந்து போனேன். பிற்பாடு, ஸுரிக் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்குச் சென்றேன். கொலை முகாம்களைப் பற்றிய ஸ்லைடு படக்காட்சிகள் அங்கு காட்டப்பட்டன; அதில் முக்கியமாகப் பிணக் குவியல்களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ஜெர்மனியிலிருந்த சாட்சிகள் நிறையப் பேர் தங்களுடைய விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டதைத் தெரிந்துகொண்டேன். அந்த மாநாட்டில் மாரீயா பிட்ஸாட்டோ என்ற சகோதரியையும் சந்தித்தேன்; அவர் சாட்சியாக இருந்ததால் இத்தாலியின் பாஸிச அதிகாரிகள் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கியிருந்தனர்.
போர் முடிவடைந்தபோது நான் இத்தாலிக்குத் திரும்பினேன்; அங்கு கோமோ என்ற இடத்தில் இருந்த ஒரு சிறிய சபைக்குச் சென்றேன். அதுவரை முறைப்படி நான் பைபிளைப் படிக்கவில்லை; ஆனால், அடிப்படை சத்தியங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தேன். மாரீயா பிட்ஸாட்டோவும் அந்தச் சபையைச் சேர்ந்தவர்தான். ஞானஸ்நானம் எடுப்பதன் அவசியத்தைப் பற்றி அவர் என்னிடம் விளக்கினார்; அதன்பின், சான்ட்ரியோ மாவட்டத்தில் காஸ்ட்யோனெ ஆன்டேவெனோ என்ற ஊரில் வசித்த மார்செல்லோ மார்டினேல்லி என்பவரைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். மார்செல்லோ பரலோக நம்பிக்கையுள்ள விசுவாசமிக்க சகோதரராக இருந்தார்; அந்தச் சர்வாதிகார ஆட்சி அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. அவரைச் சந்திக்க நான் 50 மைல் (80 கி.மீ.) தூரம் சைக்கிளில் போக வேண்டியிருந்தது.
ஞானஸ்நானம் எடுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென மார்செல்லோ பைபிளிலிருந்து விளக்கினார்; அதன்பின் நாங்கள் ஜெபம் செய்துவிட்டு ஆடா என்ற நதிக்குச் சென்றோம்; அங்குதான் நான் ஞானஸ்நானம் பெற்றேன். அது செப்டம்பர் 1946. என் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான நாள்! யெகோவாவுக்குச் சேவை செய்ய நான் தீர்மானம் எடுத்திருந்ததையும் நல்ல எதிர்காலத்தைப் பெறவிருந்ததையும் நினைத்து சந்தோஷத்தில் மிதந்தேன்; ஆகவே, அன்றைக்கு 100 மைல் (160 கி.மீ.) தூரம் சைக்கிளை மிதித்துச் சென்றதுகூட எனக்குத் தெரியவில்லை!
மே 1947-ல் இத்தாலியிலுள்ள மிலானில் போருக்குப் பிறகு முதன்முறையாக மாநாடு நடத்தப்பட்டது. சுமார் 700 பேர் வந்திருந்தார்கள்; அவர்களில், பாஸிச ஆட்சியின் துன்புறுத்தலைச் சகித்திருந்த பலரும் இருந்தார்கள். அந்த மாநாட்டில் விசித்திரமான ஒன்று நடந்தது. அகதிகள் முகாமில் நான் சாட்சி கொடுத்திருந்த ஜீசெப்பே டூபீனீ என்பவர் ஞானஸ்நானப் பேச்சைக் கொடுத்தார்; அதன் பிறகு அவரும் ஞானஸ்நானம் பெற்றார்!
அந்த மாநாட்டில், புரூக்ளின் பெத்தேலிலிருந்து வந்திருந்த சகோதரர் நேதன் நாரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கடவுளுடைய சேவைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும்படி என்னையும் ஜீசெப்பேவையும் அவர் உற்சாகப்படுத்தினார். ஒரு மாதத்திற்குள் முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன். வீட்டிற்குச் சென்று என் தீர்மானத்தைப் பற்றி என் குடும்பத்தாரிடம் சொன்னேன்; அவர்கள் என் மனதை மாற்றப் பார்த்தார்கள். ஆனால், நான் உறுதியோடு இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு மிலானில் இருந்த பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தேன். அங்கு நான்கு மிஷனரிகள் இருந்தார்கள்: ஜீசெப்பே (ஜோசெப்) ரோமானோ, அவர் மனைவி ஆன்ஜெலீனா; கார்லோ பேனான்டி, அவர் மனைவி கோஸ்டான்ஸா. அந்த பெத்தேல் குடும்பத்தின் ஐந்தாவது அங்கத்தினராக ஜீசெப்பே டூபீனீ சமீபத்தில்தான் போய்ச் சேர்ந்திருந்தார். நான் ஆறாவதாகப் போய்ச் சேர்ந்தேன்.
பெத்தேலில் ஒரு மாதம் சேவை செய்த பிறகு நான் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்; அந்நாட்டில் ஓர் இத்தாலியர் வட்டாரக் கண்காணியாக ஆனது அதுவே முதன்முறை. 1946-ல் அமெரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வந்திருந்த முதல் மிஷனரியான சகோதரர் ஜார்ஜ் ஃப்ரேட்யானேலி ஏற்கெனவே பயணக் கண்காணியாகச் சேவை செய்துவந்தார். அவர் சில வாரங்கள் எனக்குப் பயிற்சியளித்தார்; அதன்பின், நானே தனியாகக் களத்தில் இறங்கினேன். நான் சந்தித்த முதல் சபையை மறக்கவே முடியாது; அதுதான் ஃபாயென்ஸா சபை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அதுவரை நான் எந்தச் சபையிலும் ஒரு பேச்சுகூட கொடுத்தது கிடையாது! இருந்தாலும், முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கும்படி அங்கிருந்த இளைஞர்களையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தினேன். பிற்பாடு, அந்த இளைஞர்களில் சிலர் இத்தாலிய பிராந்தியத்தில் மிகப் பொறுப்புள்ள நியமிப்புகளைப் பெற்றார்கள்.
பயணக் கண்காணியாக நான் துவங்கிய வாழ்வு ருசிகரமானது. நான் பெற்ற சந்தோஷங்கள்... சந்தித்த இன்ப அதிர்ச்சிகள்... சமாளித்த சவால்கள்... அனுசரித்துப்போன விஷயங்கள்... என அதில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. அதோடு, சகோதர சகோதரிகளின் பாச மழையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
இத்தாலியில் போருக்குப்பின் மத நிலவரம்
அன்று இத்தாலியிலிருந்த மத சூழலைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டில் கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ஒரு புதிய அரசியல் சாசனம் 1948-ல் அமலுக்கு வந்தபோதிலும், சாட்சிகளுடைய பிரசங்க வேலையைத் தடைசெய்த பாஸிச சட்டங்கள் 1956-ல்தான் ரத்து செய்யப்பட்டன. குருமாரின் தொல்லையால் வட்டார மாநாடுகளின்போது அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டன. சில சமயங்களில் குருமாரின் முயற்சிகள் படுதோல்வி அடைந்தன; 1948-ல் மத்திய இத்தாலியிலுள்ள சல்மோனா என்ற சிறிய ஊரில் அதுதான் நடந்தது.
அங்கு மாநாடு ஒரு அரங்கத்தில் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நான்தான் சேர்மேனாக இருந்தேன், ஜீசெப்பே ரோமானோ பொதுப் பேச்சைக் கொடுத்தார். அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆம், நாடு முழுவதிலும் 500 பிரஸ்தாபிகள்கூட இல்லாதிருந்த அந்தச் சமயத்தில், 2,000 பேர் மாநாட்டிற்குத் திரண்டு வந்திருந்தார்கள்! பொதுப் பேச்சின் முடிவில் ஒரு வாலிபன் திடீரென மேடையில் தாவினான்; அவன், அந்தக் கூட்டத்திலிருந்த இரண்டு பாதிரிகளுடைய கையாளாக இருந்தான். குழப்பத்தை உண்டாக்க வேண்டுமென்ற குறியோடு தொண்டை கிழியக் கத்த ஆரம்பித்தான். நான் உடனே, “நீ ஏதாவது சொல்ல நினைத்தால், ஒரு மன்றத்தை வாடகைக்கு எடுத்து, என்ன சொல்ல வேண்டுமானாலும் அங்கு சொல்” என்றேன். கூடிவந்திருந்தவர்களுக்கும் அவனைப் பிடிக்கவில்லை, அவர்கள் போட்ட கூச்சலில் அவனுடைய குரலே அடிபட்டுப் போனது. அதனால் அவன் மேடையிலிருந்து குதித்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான்.
அந்தக் காலத்தில் பயணம் செய்வதென்றாலே ஒரு ‘த்ரில்’தான். நான் ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு நடந்து சென்றேன், சைக்கிளில் சென்றேன், நெரிசல்மிக்க பாடாவதியான பஸ்ஸுகளில் சென்றேன், அல்லது ரயிலில் சென்றேன். சில சமயங்களில் குதிரைத் தொழுவத்திலோ இரும்புச் சாமான்களின் கொட்டகையிலோதான் தங்கினேன். போர் முடிந்து கொஞ்சக் காலமே ஆகியிருந்தது; அதோடு, இத்தாலியர்கள் அநேகர் ஏழைபாழைகளாக இருந்தார்கள். கொஞ்சம் சகோதரர்களே இத்தாலியில் இருந்தார்கள், அவர்களும் வறுமையில் வாடினார்கள். என்றாலும், யெகோவாவின் சேவையைப் பொறுத்தவரை மகிழ்ச்சிக்குக் குறைவே இருக்கவில்லை.
கிலியட் பயிற்சி
1950-ல், ஜீசெப்பே டூபீனீயும் நானும் கிலியட் மிஷனரிப் பள்ளியின் 16-ஆம் வகுப்புக்கு அழைக்கப்பட்டோம். ஆங்கிலம் கற்றுக்கொள்வது எனக்கு மிகக் கஷ்டம் என்பது ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெரியும். என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன்; ஆனாலும், அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. முழு பைபிளையும் நாங்கள் ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் நான் மதிய உணவுகூட சாப்பிடாமல் உட்கார்ந்து அதைச் சத்தமாக வாசித்துப் பழக முயற்சி செய்தேன். கடைசியில், நான் பேச்சு கொடுக்க வேண்டிய நாள் வந்தது. அது நேற்று நடந்ததுபோல்தான் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது; வகுப்பின் பயிற்சியாளர் என்னைப் பார்த்து, “நீ அருமையாக சைகைகள் செய்தாய், மிக உற்சாகமாகப் பேசினாய், ஆனால் நீ பேசிய ஆங்கிலம்தான் சுத்தமாகப் புரியவில்லை!” என்று சொன்னார். இருந்தாலும், எப்படியோ நான் கிலியட் பள்ளியைத் திக்கித்திணறி முடித்துவிட்டேன். அதன்பின் ஜீசெப்பேவும் நானும் மறுபடியும் இத்தாலிக்கே அனுப்பப்பட்டோம். கிலியட்டில் கிடைத்த கூடுதல் பயிற்சியினால், மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவும் பக்குவத்தை இன்னுமதிகமாகப் பெற்றோம்.
1955-ல் நான் லிடியாவை மணந்தேன்; அதற்கு ஏழு வருடங்களுக்கு முன்பு அவளுடைய ஞானஸ்நானப் பேச்சை நான்தான் கொடுத்திருந்தேன். அவளுடைய அப்பா டோமேனிகோ, பாஸிச ஆட்சியின்கீழ் துன்புறுத்தப்பட்டு மூன்று வருடங்களுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்; என்றாலும், தன்னுடைய ஏழு பிள்ளைகளுமே சத்தியத்தை ஏற்க உதவியிருந்தார். லிடியாவும் சத்தியத்திற்காகக் கடுமையாய்ப் போராடியிருந்தாள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கான நம் சட்டப்பூர்வ உரிமையை அரசாங்கம் அங்கீகரிப்பதற்கு முன்பு அவள் மூன்று நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்களுக்குத் திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒரு மகன் பிறந்தான்; அவன் பெயர் பேன்யாமேனோ. 1972-ல் இன்னொரு மகன் பிறந்தான்; அவன் பெயர் மார்கோ. இரண்டு பேருமே தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து யெகோவாவுக்குப் பக்திவைராக்கியத்தோடு சேவை செய்வதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.
யெகோவாவின் சேவையில் மும்முரமாகவே...
நான் சந்தோஷத்தோடு மற்றவர்களுக்காகச் சேவை செய்த காலத்தில் மறக்க முடியாத பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, 1980-களின் ஆரம்பத்தில், அன்று இத்தாலியின் ஜனாதிபதியாக இருந்த ஸான்டிரோ பெர்டீனி என்பவருக்கு என் மாமனார் ஒரு கடிதம் எழுதினார். பாஸிச சர்வாதிகார ஆட்சியின்கீழ் இருவரும் வென்டாடேனே என்ற தீவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்; அங்குதான் அந்த ஆட்சியை எதிர்த்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதியைப் பேட்டி காண என் மாமனார் அனுமதி கேட்டார்; அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் என் மாமனாரின் குறிக்கோளாக இருந்தது. அனுமதி கிடைத்தபோது நான் அவருடன் சென்றேன்; இருவரும் மிக அன்பாக வரவேற்கப்பட்டோம், அது எங்களுக்குப் புது அனுபவமாக இருந்தது. ஜனாதிபதி என் மாமனாரைக் கட்டித் தழுவி வரவேற்றார். அதன்பின் நாங்கள் சத்தியத்தைப் பற்றிப் பேசிவிட்டு, சில பிரசுரங்களையும் கொடுத்தோம்.
பயணக் கண்காணியாக 44 வருடங்களுக்கு இத்தாலியெங்கும் இருந்த சபைகளைச் சந்தித்தேன்; பிறகு 1991-ல் அந்தச் சேவையிலிருந்து விலகினேன். அடுத்த நான்கு வருடங்களுக்கு மாநாட்டு மன்றக் கண்காணியாகச் சேவை செய்தேன்; அதன்பின், ஒரு பெரிய வியாதி வந்துவிட்டதால் என் வேலைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும், யெகோவாவின் அளவற்ற கருணையினால் இன்னமும் முழுநேர ஊழியம் செய்கிறேன். நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் முடிந்தளவு ஈடுபடுகிறேன்; சில பைபிள் படிப்புகளையும் நடத்தி வருகிறேன். இப்போதும்கூட நான் அனல்பறக்கும் பேச்சுகளைக் கொடுப்பதாகச் சகோதரர்கள் சொல்கிறார்கள். வயதானாலும் வலிமை குன்றாதிருப்பதற்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.
சிறுவயதில் மரண பயம் என்னை ஆட்டிப்படைத்தது; ஆனால், பைபிளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு முடிவில்லாமல் வாழப் போகிறேன் என்ற நம்பிக்கை பிறந்தது; இதைத்தான் “நீடிய வாழ்வு” என்று இயேசு அழைத்தார். (யோவா. 10:10) இதற்காகத்தான் நான் இப்போது ஆவலோடு காத்திருக்கிறேன்; ஆம், சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் பாதுகாப்போடும் என்றென்றுமே யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாத மழையில் நனையக் காத்திருக்கிறேன். எல்லாப் புகழும் நம் அன்பான படைப்பாளருக்கே சேரும்! அவரது பெயரைத் தாங்கியிருப்பது நம் பாக்கியம்!—சங். 83:17.
[பக்கம் 22, 23-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சுவிட்சர்லாந்து
பெர்ன்
ஸுரிக்
ஆர்போன்
ஷ்டைனாக்
இத்தாலி
ரோம்
கோமோ
மிலான்
ஆடா நதி
காஸ்ட்யோனெ ஆன்டேவெனோ
ஃபாயென்ஸா
சல்மோனா
வென்டாடேனே
[பக்கம் 22-ன் படம்]
கிலியட் பள்ளிக்குச் செல்லும் வழியில்
[பக்கம் 22-ன் படம்]
கிலியட்டில், ஜீசெப்பேவும் நானும்
[பக்கம் 23-ன் படம்]
எங்கள் திருமண நாளில்
[பக்கம் 23-ன் படம்]
55 வருடங்களுக்கும் மேலாக என் அன்பு மனைவி எனக்கு உற்றத் துணையாக இருந்திருக்கிறாள்