“அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்”
“நம்முடைய நண்பன் . . . தூங்குகிறான், அவனை எழுப்புவதற்காக நான் அங்கே போகப்போகிறேன்.” —யோவா. 11:11.
1. மார்த்தாள் தன்னுடைய சகோதரனுக்கு என்ன நடக்குமென்று உறுதியாக நம்பினாள்? (ஆரம்பப் படம்)
மார்த்தாள் இயேசுவின் நெருங்கிய தோழி, அவருடைய சிஷ்யை. தன்னுடைய சகோதரன் லாசரு இறந்த துக்கத்தில் அவள் இருந்தாள். அவளுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது? “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று இயேசு அவளிடம் வாக்குக் கொடுத்தார். அதைக் கேட்டவுடன் அவளுடைய சோகம் பறந்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இயேசு கொடுத்த வாக்குறுதியை மார்த்தாள் நம்பினாள்; “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். (யோவா. 11:20-24) எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஆனால், அதே நாளில் இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தார். லாசருவை அவர் உயிரோடு எழுப்பினார்!
2. மார்த்தாளைப் போலவே நீங்களும் ஏன் நம்பிக்கையோடு இருக்க விரும்புகிறீர்கள்?
2 இறந்துபோன நம்முடைய அன்பானவர்களை இயேசுவோ அவருடைய தகப்பனோ இப்போதே உயிரோடு எழுப்புவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், உங்களுடைய அன்பானவர்கள் எதிர்காலத்தில் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று மார்த்தாளைப் போலவே நீங்களும் உறுதியாக நம்புகிறீர்களா? ஒருவேளை, உங்களுடைய பாசமான கணவரையோ மனைவியையோ அம்மாவையோ அப்பாவையோ தாத்தாவையோ பாட்டியையோ, அருமைக் குழந்தையையோகூட நீங்கள் மரணத்தில் பறிகொடுத்திருக்கலாம். அவர்களைக் கட்டியணைக்கவும், அவர்களோடு ஆசையாக சிரித்துப் பேசவும் நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அப்படியென்றால், மார்த்தாளைப் போலவே நீங்களும், ‘அவங்க உயிரோட வருவாங்கன்னு எனக்கு தெரியும்’ என்று சொல்லலாம். அதேசமயத்தில், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் யோசித்துப் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும்.
3, 4. இயேசு என்ன செய்திருந்தார், அது மார்த்தாளின் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தியது?
3 மார்த்தாள் எருசலேமுக்குப் பக்கத்தில் குடியிருந்தாள். அதனால், கலிலேயாவில் இருந்த நாயீன் நகரத்துக்குப் பக்கத்தில் இயேசு ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்பியதை அவள் பார்த்திருக்க மாட்டாள். ஆனால், அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாள். அதேபோல், யவீருவின் மகளை இயேசு உயிரோடு எழுப்பியதைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருப்பாள். யவீருவின் வீட்டில் இருந்த எல்லாருக்குமே, ‘[அந்தச் சிறுமி] இறந்துவிட்டாள் என்பது தெரிந்திருந்தது.’ ஆனால், இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திரு!” என்று சொன்னார். உடனே அவள் எழுந்துகொண்டாள்! (லூக். 7:11-17; 8:41, 42, 49-55) இயேசுவால் நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என்பது மார்த்தாளுக்கும் அவளுடைய சகோதரியான மரியாளுக்கும் தெரிந்திருந்தது. அதனால், இயேசு அங்கே இருந்திருந்தால் லாசரு இறந்திருக்கவே மாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால், லாசரு இறந்துவிட்டார். அடுத்து என்ன நடக்கும் என்று மார்த்தாள் எதிர்பார்த்தாள்? எதிர்காலத்தில், அதாவது “கடைசி நாளில் அவன் உயிரோடு வருவான்” என்று அவள் சொன்னதைக் கவனியுங்கள். அதை ஏன் அவள் அவ்வளவு உறுதியாக நம்பினாள்? உங்களுடைய அன்பானவர்களும் எதிர்காலத்தில் உயிரோடு வருவார்கள் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்பலாம்?
4 உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில காரணங்களை இப்போது பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது, நீங்கள் அடிக்கடி யோசித்துப் பார்க்காத சில விஷயங்களைக் கடவுளுடைய வார்த்தையில் கவனிக்கலாம். உங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை அவை பலப்படுத்தும்.
நமக்கு நம்பிக்கை தரும் சம்பவங்கள்!
5. லாசரு உயிரோடு எழுப்பப்படுவார் என்று மார்த்தாள் ஏன் உறுதியாக நம்பினாள்?
5 ‘என்னுடைய சகோதரன் உயிரோடு வருவான் என்று நினைக்கிறேன்’ என்று மார்த்தாள் சொல்லவில்லை; “அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். மார்த்தாள் ஏன் அவ்வளவு உறுதியாக நம்பினாள்? ஏனென்றால், கடந்த காலங்களில் நிறையப் பேர் உயிரோடு எழுப்பப்பட்டிருந்த விஷயம் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை, சிறு வயதில், வீட்டிலோ ஜெபக்கூடத்திலோ அவற்றைப் பற்றி அவள் கற்றிருக்கலாம். பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட மூன்று உயிர்த்தெழுதல்களைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்.
6. எந்த அற்புதத்தைப் பற்றி மார்த்தாள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பாள்?
6 அற்புதங்கள் செய்வதற்கான சக்தியைத் தீர்க்கதரிசியான எலியாவுக்குக் கடவுள் கொடுத்துவந்த காலத்தில்தான் முதல் உயிர்த்தெழுதல் நடந்தது. இஸ்ரவேலின் வடக்கே, பெனிக்கேயைச் சேர்ந்த சாறிபாத் ஊரில் வாழ்ந்துவந்த ஒரு ஏழை விதவை எலியாவை உபசரித்தாள். அப்போது, யெகோவா ஒரு அற்புதத்தைச் செய்தார். அவளும் அவளுடைய பையனும் உயிர் பிழைப்பதற்காக, அவளுடைய வீட்டிலிருந்த மாவும் எண்ணெயும் தீர்ந்துபோகாதபடி பார்த்துக்கொண்டார். (1 ரா. 17:8-16) பிற்பாடு, அவளுடைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோய்விட்டான். அப்போது, எலியா அவளுடைய உதவிக்கு வந்தார். அவர் யெகோவாவிடம், “கடவுளே, தயவுசெய்து இந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுங்கள்” என்று ஜெபம் செய்தார். அந்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அந்தப் பையனுக்கு மறுபடியும் உயிர் வந்தது! இதுதான், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் உயிர்த்தெழுதல். (1 ராஜாக்கள் 17:17-24-ஐ வாசியுங்கள்.) அந்த அதிசய சம்பவத்தைப் பற்றி மார்த்தாள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பாள்.
7, 8. (அ) மகனை இழந்து தவித்த பெண்ணுக்கு எலிசா எப்படி ஆறுதல் தந்தார்? (ஆ) எலிசா செய்த அற்புதம், யெகோவாவைப் பற்றி எதை நிரூபிக்கிறது?
7 பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது உயிர்த்தெழுதலை எலிசா தீர்க்கதரிசி செய்தார். சூனேம் ஊரில், ஒரு இஸ்ரவேலப் பெண் வாழ்ந்துவந்தாள். அவளுக்குப் பிள்ளைகளே இல்லை. அவள் எலிசாவை நன்றாக உபசரித்துவந்தாள். அதனால், யெகோவா அவளுக்கும் அவளுடைய வயதான கணவருக்கும் ஒரு மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், சில வருஷங்களுக்குப் பிறகு, அந்தப் பையன் இறந்துவிட்டான். அப்போது அவள் எப்படித் துடிதுடித்துப்போயிருப்பாள்! துக்கம் தாங்க முடியாமல், எலிசாவைப் பார்ப்பதற்காக 30 கிலோமீட்டர் (19 மைல்) தூரத்தில் இருந்த கர்மேல் மலைக்கு அவள் போனாள். அந்தப் பையனை உயிரோடு எழுப்புவதற்காக எலிசா தன்னுடைய ஊழியன் கேயாசியை முதலில் அனுப்பினார். ஆனால், கேயாசியால் அந்தப் பையனை உயிரோடு எழுப்ப முடியவில்லை. பிறகு, எலிசாவைக் கூட்டிக்கொண்டு அந்தப் பெண் தன்னுடைய வீட்டுக்கு வந்துசேர்ந்தாள்.—2 ரா. 4:8-31.
8 அவளுடைய வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பையனின் உடலுக்குப் பக்கத்தில் போய் எலிசா ஜெபம் செய்தார். யெகோவா அந்த ஜெபத்தைக் கேட்டு ஒரு அற்புதத்தைச் செய்தார். அந்தப் பையனை உயிரோடு எழுப்பினார்! மகனை மறுபடியும் உயிரோடு பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (2 ராஜாக்கள் 4:32-37-ஐ வாசியுங்கள்.) அப்போது, அவள் அன்னாளின் ஜெபத்தை நினைத்துப் பார்த்திருக்கலாம். ரொம்பக் காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அன்னாளை யெகோவா ஆசீர்வதித்ததால் அவள் சாமுவேலைப் பெற்றெடுத்தாள்; அப்போது அன்னாள் யெகோவாவைப் புகழ்ந்து, “உங்களால் . . . ஒருவரைக் கல்லறைக்கு அனுப்பவும் முடியும், அங்கிருந்து எழுப்பவும் முடியும்” என்று சொன்னாள். சூனேமில் இருந்த பையனை யெகோவா நிஜமாகவே உயிரோடு எழுப்பினார்! இப்படி, இறந்தவர்களைத் தன்னால் உயிரோடு எழுப்ப முடியும் என்பதை யெகோவா நிரூபித்தார்.
9. பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது உயிர்த்தெழுதலைப் பற்றி விளக்குங்கள்.
9 இன்னொரு அதிசயம் எலிசா இறந்த பிறகு நடந்தது. 50 வருஷங்களுக்கும் மேலாக அவர் ஒரு தீர்க்கதரிசியாகச் சேவை செய்திருந்தார். அதன் பிறகு, ‘எலிசா நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோயினால் அவர் இறந்துபோனார்.’ பிற்பாடு, எலிசாவின் எலும்புகள் மட்டும்தான் மிஞ்சியிருந்தன. ஒருநாள், சில இஸ்ரவேலர்கள், இறந்துபோன ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, திடீரென்று சில எதிரிகள் வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடனே, அந்த இஸ்ரவேலர்கள் இறந்துபோனவனின் உடலை எலிசாவின் கல்லறையில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். “அந்த உடல் எலிசாவின் எலும்புகள்மீது பட்டவுடனே உயிர் பெற்றது, அவன் எழுந்து நின்றான்” என்று பைபிள் சொல்கிறது. (2 ரா. 13:14, 20, 21) இந்தப் பதிவுகள் மார்த்தாளுக்கு என்ன உறுதியைத் தந்திருக்கும்? மரணத்தை ஒழிக்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்ற உறுதியைத் தந்திருக்கும். கடவுளுடைய சக்தி அளவற்றது, எல்லை இல்லாதது என்ற உறுதியை இந்தப் பதிவுகள் உங்களுக்கும் தருகின்றன, இல்லையா?
அப்போஸ்தலர்களின் காலத்தில் நடந்த சம்பவங்கள்
10. இறந்துபோன ஒரு கிறிஸ்தவ சகோதரிக்கு பேதுரு எப்படி உதவினார்?
10 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில்கூட, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்த உயிர்த்தெழுதல்களைப் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. நாயீன் ஊருக்குப் பக்கத்திலும் யவீருவின் வீட்டிலும் இயேசு செய்த உயிர்த்தெழுதல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். கொஞ்சக் காலம் கழித்து, தொற்காள் என்ற தபீத்தாளை அப்போஸ்தலன் பேதுரு உயிரோடு எழுப்பினார். அவளுடைய உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அவர் போய், ஜெபம் செய்துவிட்டு, “தபீத்தாளே, எழுந்திரு!” என்று சொன்னார். உடனே, அவளுக்கு உயிர் வந்தது! பிறகு, அவளை அங்கிருந்த மற்ற கிறிஸ்தவர்களிடம் பேதுரு “உயிரோடு ஒப்படைத்தார்.” இதைக் கேள்விப்பட்டு அந்த ஊரிலிருந்த “நிறைய பேர் எஜமானின் சீஷர்களானார்கள்.” அந்தளவுக்கு அந்தச் சம்பவம் அவர்களுடைய மனதைத் தொட்டது. அந்தப் புதிய சீஷர்கள் இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியையும், இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவாவால் முடியும் என்பதைப் பற்றியும் எல்லாருக்கும் சொன்னார்கள்.—அப். 9:36-42.
11. ஒரு இளைஞனுக்கு என்ன நடந்ததாக மருத்துவரான லூக்கா சொன்னார், அந்தச் சம்பவம் மற்றவர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
11 இன்னொரு உயிர்த்தெழுதலைச் சிலர் நேரடியாகப் பார்த்தார்கள். ஒரு சமயம், துரோவாவில் (இன்று, வடகிழக்கு துருக்கி) இருந்த ஒரு மாடி அறையில் நடந்த கூட்டத்தில் அப்போஸ்தலன் பவுல் நடுராத்திரிவரை பேசிக்கொண்டிருந்தார். ஐத்திகு என்ற ஒரு இளைஞன் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து, பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால், அவன் அசந்து தூங்கிவிட்டதால் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டான். முதலில் ஓடிப்போய் அவனைப் பார்த்தது ஒருவேளை லூக்காவாக இருந்திருக்கலாம். லூக்கா ஒரு மருத்துவராக இருந்ததால், அந்த இளைஞன் வெறுமனே காயம் அடையவோ மயக்கம் அடையவோ இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவன் இறந்துபோயிருந்தான்! பவுலும் கீழே இறங்கிப் போய், ஐத்திகுவை அணைத்துக்கொண்டு, “இவனுக்கு உயிர் வந்துவிட்டது” என்று சொன்னார். எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம்! அந்த அற்புதத்தைப் பார்த்த எல்லாரும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்! இறந்துபோன அந்த இளைஞன் மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட்டதைப் பார்த்து “அளவில்லாத ஆறுதல் அடைந்தார்கள்.”—அப். 20:7-12.
உறுதியான நம்பிக்கை
12, 13. உயிர்த்தெழுதல் சம்பந்தமாக நாம் பார்த்த பதிவுகளின் அடிப்படையில், என்னென்ன கேள்விகள் எழுகின்றன?
12 உயிர்த்தெழுதல் சம்பந்தமாக இப்போது நாம் பார்த்த பதிவுகள், மார்த்தாளுக்கு இருந்த அதே நம்பிக்கையை உங்களுக்கும் தர வேண்டும். நமக்கு உயிர் கொடுத்திருக்கும் கடவுளால், இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்ப முடியும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். இருந்தாலும், ‘அந்த ஒவ்வொரு உயிர்த்தெழுதலையும் எலியா, இயேசு, பேதுரு போன்ற கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களில் யாராவதுதானே செய்தார்கள்? அதுவும், யெகோவா அற்புதங்களைச் செய்துவந்த காலமாக அது இருந்ததே!’ என்று நாம் யோசிக்கலாம். அப்படியென்றால், அற்புதங்கள் நடக்காத காலங்களில் இறந்துபோனவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுள் அவர்களை எதிர்காலத்தில் உயிரோடு எழுப்புவார் என்று உண்மையுள்ள ஆண்களாலும் பெண்களாலும் எதிர்பார்க்க முடிந்ததா? “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்ன மார்த்தாளைப் போலவே அவர்களாலும் நம்பிக்கையோடு இருக்க முடிந்ததா? எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று மார்த்தாள் ஏன் நம்பினாள், நீங்கள் ஏன் அதை நம்பலாம்?
13 எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்குத் தெரிந்திருந்ததாக நிறைய பைபிள் பதிவுகள் காட்டுகின்றன. அவற்றில் சில பதிவுகளை இப்போது பார்க்கலாம்.
14. ஆபிரகாமைப் பற்றிய பதிவிலிருந்து உயிர்த்தெழுதலைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 நிறைய வருஷம் காத்திருந்து பெற்ற மகனாகிய ஈசாக்கை என்ன செய்யும்படி ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார்? “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன் ஈசாக்கைத் தயவுசெய்து மோரியா தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று அவர் சொன்னார். (ஆதி. 22:2) இதைக் கேட்டபோது ஆபிரகாமுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆபிரகாமின் சந்ததி மூலம் எல்லா தேசங்களைச் சேர்ந்தவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 13:14-16; 18:18; ரோ. 4:17, 18) அதோடு, “ஈசாக்கின் வழியாக” அந்த ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் யெகோவா சொல்லியிருந்தார். (ஆதி. 21:12) ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பலியாகக் கொடுத்திருந்தால் இதெல்லாம் எப்படி நடந்திருக்கும்? கடவுளால் ஈசாக்கை உயிரோடு எழுப்ப முடியும் என்று ஆபிரகாம் நம்பியதாக பவுல் சொன்னார்; அப்படிச் சொல்வதற்குக் கடவுளுடைய சக்திதான் அவரைத் தூண்டியது. (எபிரெயர் 11:17-19-ஐ வாசியுங்கள்.) ஆனாலும், ஈசாக்கு உடனடியாகவோ சில மணிநேரங்களிலோ ஒரே நாளிலோ அல்லது ஒரே வாரத்திலோ உயிரோடு எழுப்பப்படுவான் என்று ஆபிரகாம் நினைத்ததாக பைபிள் சொல்வதில்லை. தன் மகன் எப்போது உயிரோடு எழுப்பப்படுவான் என்று ஆபிரகாமால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், யெகோவா அவனைக் கண்டிப்பாக உயிரோடு எழுப்புவார் என்று அவர் நம்பினார்.
15. உண்மையுள்ள மனிதராகிய யோபுவுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
15 எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பது உண்மையுள்ள மனிதராகிய யோபுவுக்கும் தெரிந்திருந்தது. ஒரு மரம் வெட்டப்பட்ட பிறகு, அது மறுபடியும் வளர்ந்து பழையபடி ஒரு பெரிய மரமாகிவிடும். ஆனால், மனிதர்களின் விஷயத்தில் அப்படி நடக்காது. (யோபு 14:7-12; 19:25-27) ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனாகவே மறுபடியும் உயிரோடு வர முடியாது. (2 சா. 12:23; சங். 89:48) அதற்காக, கடவுளால் அவனை உயிரோடு எழுப்ப முடியாது என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால், யெகோவா தன்னை நினைத்துப் பார்ப்பார் என்று யோபு நம்பினார். (யோபு 14:13-15-ஐ வாசியுங்கள்.) ஆனால், எதிர்காலத்தில் இது எப்போது நடக்குமென்று யோபுவால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், மனிதனுக்கு உயிர் கொடுத்தவரால் தன்னை ஞாபகத்தில் வைத்து உயிரோடு எழுப்ப முடியும் என்றும், அவர் கண்டிப்பாக அப்படிச் செய்வார் என்றும் யோபு நம்பினார்.
16. தானியேலை ஒரு தேவதூதர் எப்படி உற்சாகப்படுத்தினார்?
16 இன்னொரு உண்மையுள்ள மனிதராகிய தானியேலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் அவர் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்தார், யெகோவாவும் அவருக்குத் துணையாக இருந்தார். ஒரு சமயம், ஒரு தேவதூதர் தானியேலிடம், “கடவுளுக்கு மிகவும் பிரியமானவனே . . . எதற்கும் கவலைப்படாதே. தைரியமாக இரு, நம்பிக்கையோடு இரு” என்று சொன்னார்.—தானி. 9:22, 23; 10:11, 18, 19.
17, 18. தானியேலுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார்?
17 தானியேலுக்குக் கிட்டத்தட்ட 100 வயதானபோது, அதாவது அவருடைய வாழ்நாளின் கடைசி கட்டத்தில், தனக்கு இனி என்ன நடக்குமோ என்று அவர் யோசித்துப் பார்த்திருப்பார். மறுபடியும் உயிரோடு வாழ முடியுமென்று தானியேல் நம்பினாரா? கண்டிப்பாக! “நீ முடிவுவரை சகித்திரு. அதன்பின் ஓய்வெடுப்பாய்” என்று கடவுள் அவருக்கு வாக்குக் கொடுத்ததாக தானியேல் புத்தகத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. (தானி. 12:13) இறந்தவர்கள் ஓய்வெடுக்கிறார்கள் என்பது தானியேலுக்குத் தெரிந்திருந்தது; அதோடு, அவர் சீக்கிரத்தில் போய்ச் சேரவிருந்த ‘கல்லறையில் திட்டம் போட முடியாது’ என்பதும், “அங்கே அறிவோ ஞானமோ இல்லை” என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (பிர. 9:10) ஆனாலும், தானியேலின் வாழ்க்கை கல்லறையிலேயே முடிந்துவிடாது. அவருக்கு அருமையான ஒரு எதிர்காலத்தைத் தரப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார்.
18 “முடிவு நாளில் உன் பங்கை பெறுவதற்காக எழுந்திருப்பாய்” என்று யெகோவாவின் தூதர் அவரிடம் சொன்னார். அது எப்போது நடக்குமென்று தானியேலுக்குத் தெரியவில்லை. தான் இறந்துபோய் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என்று மட்டும் அவருக்குப் புரிந்தது. ஆனால், “உன் பங்கை பெறுவதற்காக எழுந்திருப்பாய்” என்ற வாக்குறுதியைக் கேட்டபோது, எதிர்காலத்தில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார் என்பதைப் புரிந்துகொண்டார். “முடிவு நாளில்,” அதாவது அவர் இறந்து பல வருஷங்களுக்குப் பிறகு, அது நடக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.
19, 20. (அ) இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த சம்பவங்களுக்கும், இயேசுவிடம் மார்த்தாள் சொன்ன விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
19 “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது” தன்னுடைய உண்மையுள்ள சகோதரன் லாசரு “உயிரோடு வருவான்” என்று நம்ப மார்த்தாளுக்கு நல்ல காரணங்கள் இருந்தன. தானியேலுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியும், எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதில் மார்த்தாளுக்கு இருந்த பலமான விசுவாசமும் இன்று நமக்கும் நம்பிக்கை தர வேண்டும். உயிர்த்தெழுதல் நடக்கும் என்பது நிச்சயம்!
20 அன்று நிஜமாகவே நடந்த உயிர்த்தெழுதல்களைப் பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்த்தோம். இறந்தவர்களால் மறுபடியும் உயிரோடு வாழ முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன. உண்மையோடு கடவுளுக்குச் சேவை செய்த ஆண்களும் பெண்களும், எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதை எதிர்பார்த்தார்கள் என்றும் நாம் பார்த்தோம். இருந்தாலும், வாக்குறுதி கொடுக்கப்பட்டு பல காலத்துக்குப் பிறகு உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா? அப்படி அத்தாட்சி இருக்கிறதென்றால், எதிர்காலத்தில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலை நாம் இன்னும் ஆவலோடு எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது நடக்கும்? இந்த விஷயங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.