‘கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’
“கடைசி ஆதாம் உயிர் கொடுக்கிறவர் ஆனார்.”—1 கொ. 15:45.
1-3. (அ) எதையும் நம்முடைய முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டும்? (ஆ) உயிர்த்தெழுதல் ஏன் மிகவும் முக்கியம்? (ஆரம்பப் படம்)
உங்களுடைய மதத்திலுள்ள முக்கியமான நம்பிக்கைகள் என்னவென்று யாராவது கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? யெகோவாதான் படைப்பாளர்... அவர்தான் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார்... இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார்... எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலை பூமியில் கடவுளுடைய மக்கள் என்றென்றும் வாழ்வார்கள்... என்றெல்லாம் நீங்கள் நம்புவதை சந்தோஷமாகச் சொல்வீர்கள். ஆனால், நீங்கள் நெஞ்சார நேசிக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது உயிர்த்தெழுதலைப் பற்றியும் சொல்வீர்களா?
2 நாம் சாகாமலேயே மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து இந்தப் பூமியில் என்றென்றும் வாழப்போவதை எதிர்பார்க்கிறோம் என்பது உண்மைதான்; ஆனாலும், உயிர்த்தெழுதலை நம்முடைய முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடுவதற்கு நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. உயிர்த்தெழுதல் ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதாவது, “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், கிறிஸ்துவும் உயிரோடு எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்” என்று அவர் சொன்னார். இயேசு உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால், இப்போது பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்க முடியாது, நம்முடைய ஊழியமும் வீணாகத்தான் இருக்கும். (1 கொரிந்தியர் 15:12-19-ஐ வாசியுங்கள்.) ஆனால், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார் என்று நமக்குத் தெரியும். அதை நாம் நம்புகிறோம். மற்றவர்கள் நம்மைக் கேலி செய்தாலும், இறந்தவர்களை உயிரோடு எழுப்ப கடவுளால் முடியும் என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த விஷயத்தில், உயிர்த்தெழுதலைத் துளியும் நம்பாத யூத சதுசேயர்களிலிருந்து நாம் வித்தியாசமாக இருக்கிறோம்.—மாற். 12:18; அப். 4:2, 3; 17:32; 23:6-8.
3 ‘உயிர்த்தெழுதலை’ பற்றிய போதனை, ‘கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளில்’ ஒன்று என்பதாக பவுல் சொன்னார். (எபி. 6:1, 2) தானும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் உறுதியாகச் சொன்னார். (அப். 24:10, 15, 24, 25) உயிர்த்தெழுதல் ஒரு அடிப்படை போதனையாக இருந்தாலும், அதாவது கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற அடிப்படை விஷயமாக இருந்தாலும், அதை அலசி ஆராய வேண்டியது அவசியம். (எபி. 5:12) ஏன்?
4. உயிர்த்தெழுதல் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?
4 மக்கள் பைபிளைப் படிக்க ஆரம்பிக்கும்போது, கடந்த காலங்களில் நடந்த உயிர்த்தெழுதல்களைப் பற்றிய பதிவுகளைப் பொதுவாக வாசிப்பார்கள். உதாரணத்துக்கு, லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதைப் பற்றி வாசிப்பார்கள். அதோடு, இறந்தவர்கள் எதிர்காலத்தில் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று ஆபிரகாமும் யோபுவும் தானியேலும் உறுதியாக நம்பியதைப் பற்றியும் கற்றுக்கொள்வார்கள். இருந்தாலும், யாராவது உங்களிடம், “உயிர்த்தெழுதல பத்தி நூத்துக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால சொல்லப்பட்ட வாக்குறுதியெல்லாம் நிறைவேறும்னு எப்படி நம்புறது, பைபிளிலிருந்து காட்டுங்க பார்க்கலாம்” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும் என்று பைபிள் சொல்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொண்டால் நம் விசுவாசம் பலமாகும்.
நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்ட ஒரு உயிர்த்தெழுதல்
5. நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
5 இறந்த கொஞ்ச நேரத்திலோ கொஞ்ச நாளிலோ ஒருவர் உயிரோடு எழுப்பப்படுவதைக் கற்பனை செய்வது நமக்குச் சுலபமாக இருக்கலாம். (யோவா. 11:11; அப். 20:9, 10) ஆனால், நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு ஒருவர் உயிரோடு எழுப்பப்படுவார் என்று சொல்லப்படுவதை நம்ப முடியுமா? அந்த வாக்குறுதி ரொம்பக் காலத்துக்கு முன்பு இறந்தவரைப் பற்றிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, சமீபத்தில் இறந்தவரைப் பற்றிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, அதை நம்மால் நம்ப முடியுமா? சொல்லப்போனால், வாக்குறுதி கொடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு நடந்த ஒரு உயிர்த்தெழுதலை நீங்கள் ஏற்கெனவே நம்பிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அது யாருடைய உயிர்த்தெழுதல்? எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்ற உங்கள் நம்பிக்கைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
6. இயேசுவைப் பற்றி சங்கீதம் 118 எதை முன்னறிவித்தது?
6 பல வருஷங்களுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்ட ஒரு உயிர்த்தெழுதலைப் பற்றி இப்போது கவனிக்கலாம். அது சங்கீதம் 118-ல் சொல்லப்பட்டிருக்கிறது; அதை ஒருவேளை தாவீது எழுதியிருக்கலாம். “யெகோவாவே, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள், உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம். . . . யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. நிசான் 9-ம் தேதி, அதாவது தான் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இயேசு ஒரு கழுதைமேல் ஏறி எருசலேமுக்குள் போனபோது, மேசியாவைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். (சங். 118:25, 26; மத். 21:7-9) ஆனால், பல வருஷங்களுக்குப் பிறகு நடக்கவிருந்த ஒரு உயிர்த்தெழுதலைப் பற்றி சங்கீதம் 118 குறிப்பிட்டதாக நாம் எப்படிச் சொல்லலாம்? “கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது” என்றும் அது சொல்வதைக் கவனியுங்கள்.—சங். 118:22.
7. யூதர்கள் எப்படி இயேசுவை ஒதுக்கித்தள்ளினார்கள்?
7 யூதத் தலைவர்கள்தான் ‘கட்டிடம் கட்டுகிறவர்களாக,’ அதாவது மேசியாவை ஒதுக்கித்தள்ளியவர்களாக இருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் புறக்கணித்ததன் மூலமும் அவரைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ளாததன் மூலமும் அவரை ஒதுக்கித்தள்ளியது உண்மைதான். ஆனால், இந்த அர்த்தத்தில் மட்டும்தான் அவரை ஒதுக்கித்தள்ளினார்களா? இல்லை. அவரைக் கொலை செய்ய வேண்டுமென்று பிலாத்துவிடம் வற்புறுத்திக் கேட்டதன் மூலமும் நிறைய யூதர்கள் அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். (லூக். 23:18-23) அப்படியென்றால், அவர்களும் இயேசுவின் மரணத்துக்குப் பொறுப்பாளிகளாக இருந்தார்கள்.
8. இயேசுவால் எப்படி “மூலைக்குத் தலைக்கல்லாக” ஆக முடிந்தது?
8 இயேசு ஒதுக்கித்தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றால், அவரால் எப்படி “மூலைக்குத் தலைக்கல்லாக” ஆக முடிந்தது? உயிரோடு எழுப்பப்பட்டதன் மூலமாகத்தான் அப்படி ஆக முடிந்தது. இயேசு சொன்ன ஒரு உவமை இதைத் தெளிவுபடுத்துகிறது. அந்த உவமையில், ஒரு தோட்டத்தின் சொந்தக்காரர் தனக்காக வேலை செய்த தோட்டக்காரர்களிடம் தன் ஆட்களை அனுப்பினார். அந்தத் தோட்டக்காரர்கள் அந்த ஆட்களை மோசமாக நடத்தினார்கள். கடைசியில், தன் மகனுடைய பேச்சையாவது அவர்கள் கேட்பார்கள் என்று நினைத்து தன் மகனையே அவர் அனுப்பினார். ஆனால், அந்த மகனையும் அவர்கள் கொலை செய்துவிட்டார்கள். இயேசு அந்த உவமையைச் சொன்ன பிறகு, சங்கீதம் 118:22-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டினார். (லூக். 20:9-17) அப்போஸ்தலன் பேதுரு, எருசலேமில் கூடிவந்திருந்த ‘யூதத் தலைவர்களிடமும் பெரியோர்களிடமும் வேத அறிஞர்களிடமும்’ பேசியபோது அதே வசனத்தை மேற்கோள் காட்டினார். “இயேசுவை நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள், ஆனால் அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்” என்று சொன்னார். பிறகு, “அந்த இயேசுதான், ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய உங்களால் கொஞ்சம்கூட மதிக்கப்படாத கல்லாக இருந்தபோதிலும் மூலைக்குத் தலைக்கல்லாக ஆகியிருக்கிறார்’” என்று சொன்னார்.—அப். 3:15; 4:5-11; 1 பே. 2:5-7.
9. சங்கீதம் 118:22-ல் முன்னறிவிக்கப்பட்ட முக்கியமான சம்பவம் எது?
9 நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு நடக்கவிருந்த ஒரு உயிர்த்தெழுதலைப் பற்றி சங்கீதம் 118:22 முன்னறிவித்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேசியா ஒதுக்கித்தள்ளப்படுவார்... கொலை செய்யப்படுவார்... மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுவார்... பிறகு மூலைக்குத் தலைக்கல்லாக ஆவார்... என்றெல்லாம் அந்த வசனம் சொன்னது. இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, மனிதர்களை மீட்பதற்குத் தகுதியுள்ள ஒரே நபராக அவர் ஆனார்; அதனால்தான், “நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்று பைபிள் சொல்கிறது.—அப். 4:12; எபே. 1:20.
10. (அ) சங்கீதம் 16:10 எதை முன்னறிவித்தது? (ஆ) சங்கீதம் 16:10 தாவீதைப் பற்றிச் சொல்லவில்லை என்று நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?
10 ஒரு குறிப்பிட்ட உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொன்ன இன்னொரு வசனத்தை இப்போது கவனிக்கலாம். ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆன பிறகு அது நிறைவேறியது. முன்னறிவிக்கப்பட்டு அல்லது வாக்குறுதி கொடுக்கப்பட்டுப் பல காலத்துக்குப் பிறகும் உயிர்த்தெழுதல் நடக்கும் என்ற நம்பிக்கையை அது நமக்குக் கொடுக்கிறது. “நீங்கள் என்னைக் கல்லறையில் விட்டுவிட மாட்டீர்கள். உங்களுக்கு உண்மையாக இருப்பவர் சவக்குழியைக் காண விட மாட்டீர்கள்” என்று சங்கீதம் 16-ல் தாவீது எழுதினார். (சங். 16:10) தனக்கு மரணமே வராது என்றோ, தான் கல்லறையில் இருக்கப்போவதில்லை என்றோ தாவீது சொல்லவில்லை. அவர் வயதாகி, இறந்துபோய், ‘“தாவீதின் நகரத்தில்” அடக்கம் செய்யப்பட்டார்’ என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. (1 ரா. 2:1, 10) அப்படியென்றால், சங்கீதம் 16:10 யாரைப் பற்றிச் சொல்கிறது?
11. சங்கீதம் 16:10-ஐப் பற்றி பேதுரு எப்போது விளக்கினார்?
11 அந்த வசனத்தை தாவீது எழுதி ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆன பிறகு, அது யாரைப் பற்றிச் சொன்னது என்று பேதுரு விளக்கினார். இயேசு இறந்து, உயிரோடு எழுப்பப்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான யூதர்களிடமும் யூத மதத்துக்கு மாறியவர்களிடமும் பேதுரு பேசினார். (அப்போஸ்தலர் 2:29-32-ஐ வாசியுங்கள்.) தாவீது இறந்துபோய் அடக்கம் செய்யப்பட்டிருந்ததை பேதுரு அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அதோடு, “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து [தாவீது] முன்கூட்டியே தெரிந்து, . . . [அதைப் பற்றி] சொல்லியிருந்தார்” என்றும் பேதுரு குறிப்பிட்டார். கூடியிருந்த யாரும் அதை மறுத்ததாக பைபிள் சொல்வதில்லை.
12. சங்கீதம் 16:10 எப்படி நிறைவேறியது, உயிர்த்தெழுதலைப் பற்றிய வாக்குறுதி சம்பந்தமாக அது என்ன உறுதியைத் தருகிறது?
12 பேதுரு, தான் சொல்லிக்கொண்டிருந்த குறிப்பை வலியுறுத்துவதற்காக, சங்கீதம் 110:1-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். (அப்போஸ்தலர் 2:33-36-ஐ வாசியுங்கள்.) வசனங்களிலிருந்து அவர் நியாயங்காட்டிப் பேசியதால், இயேசுதான் “எஜமானாகவும் கிறிஸ்துவாகவும்” இருக்கிறார் என்பதை அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நம்பினார்கள். இயேசு உயிரோடு எழுப்பப்பட்டபோதுதான் சங்கீதம் 16:10 நிறைவேறியது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். பிற்பாடு, பிசீதியாவில் இருந்த அந்தியோகியா நகரத்தில் அப்போஸ்தலன் பவுல் யூதர்களிடம் பேசியபோது அதே விஷயத்தை அத்தாட்சியாகக் குறிப்பிட்டார். அந்த அத்தாட்சி, அவர்களுடைய மனதை அந்தளவுக்குத் தொட்டதால், இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். (அப்போஸ்தலர் 13:32-37, 42-ஐ வாசியுங்கள்.) உயிர்த்தெழுதலைப் பற்றிய அந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு நிறைவேறியபோதிலும் அவை நம்பகமானவை என்ற உறுதியை அந்த அத்தாட்சி நமக்கும் தருகிறது!
உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும்?
13. உயிர்த்தெழுதல் சம்பந்தமாக நமக்கு என்னென்ன கேள்விகள் வரலாம்?
13 முன்னறிவிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகும் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! ஆனாலும் சிலர், ‘அப்படின்னா, என்னோட அன்பானவரை பார்க்க நான் ரொம்ப காலம் காத்திருக்கணுமா? உயிர்த்தெழுதல் எப்ப நடக்கும்?’ என்று கேட்கலாம். இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசியபோது, அவர்களுக்குச் சில விஷயங்கள் தெரியாது என்றும், அவர்களால் அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது என்றும் சொன்னார். ‘காலங்களையும் வேளைகளையும்’ பற்றிய விவரங்கள் ‘தகப்பனின் கட்டுப்பாட்டில்’ இருப்பதாகவும் அவர் சொன்னார். (அப். 1:6, 7; யோவா. 16:12) இருந்தாலும், உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும் என்பதைப் பற்றிய சில விவரங்கள் பைபிளில் இருக்கின்றன.
14. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும், அவருடைய காலத்துக்கு முன்னால் நடந்த உயிர்த்தெழுதல்களுக்கும் என்ன வித்தியாசம்?
14 பைபிளில் இருக்கிற உயிர்த்தெழுதல் பதிவுகளிலேயே மிக முக்கியமானது இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய பதிவுதான். அவர் உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால், இறந்துபோன அன்பானவர்களை மறுபடியும் பார்க்கும் நம்பிக்கை யாருக்குமே கிடைத்திருக்காது. இயேசுவின் காலத்துக்கு முன்னால் உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் என்றென்றும் வாழவில்லை; உதாரணத்துக்கு, எலியாவினாலும் எலிசாவினாலும் உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் என்றென்றும் வாழவில்லை. அவர்கள் மறுபடியும் இறந்து மண்ணோடு மண்ணாக ஆகிவிட்டார்கள். ஆனால், “உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து இனி இறப்பதில்லை . . . மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது.” பரலோகத்தில் அவர் “என்றென்றும்” உயிரோடு இருக்கிறார்.—ரோ. 6:9; வெளி. 1:5, 18; கொலோ. 1:18; 1 பே. 3:18.
15. “இறந்தவர்களில் முதல் நபராக கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன?
15 பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்ட முதல் நபர் இயேசுதான்; இப்படிப்பட்ட பரலோக உயிர்த்தெழுதல்களில் மிக முக்கியமானதும் அவருடைய உயிர்த்தெழுதல்தான். (அப். 26:23) அவரைப் போலவே மற்றவர்களும் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படவிருந்தார்கள். தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (லூக். 22:28-30) ஆனால், இறந்த பிறகுதான் அவர்களுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்கவிருந்தது. கிறிஸ்துவைப் போலவே அவர்கள் பரலோக உடலில் உயிரோடு எழுப்பப்படவிருந்தார்கள். “இறந்தவர்களில் முதல் நபராக கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று பவுல் எழுதினார். கிறிஸ்துவுக்குப் பிறகு மற்றவர்களும் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று அவர் தொடர்ந்து எழுதினார். அதாவது, “ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; முதல் நபராக உயிரோடு எழுப்பப்பட்டவர் கிறிஸ்து; பின்பு, கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று எழுதினார்.—1 கொ. 15:20, 23.
16. பரலோக உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும்?
16 பரலோக உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அது கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது நடக்கும். அவருடைய ‘பிரசன்னம்’ 1914-ல் ஆரம்பமானது என்று யெகோவாவின் சாட்சிகள் பல வருஷங்களாக பைபிளிலிருந்து காட்டிவந்திருக்கிறார்கள். இப்போதும் நாம் அவருடைய ‘பிரசன்னத்தின்’ காலத்தில்தான் வாழ்ந்துவருகிறோம். இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு ரொம்பவே நெருங்கிவிட்டது.
17, 18. கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது உயிரோடு இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன நடக்கும்?
17 பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் இப்படி விளக்குகிறது: ‘இறந்தவர்களுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்; . . . இயேசு இறந்து உயிரோடு எழுந்தார் என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. அப்படியானால், . . . இறந்தவர்களை அவரோடு இருப்பதற்காகக் கடவுள் உயிரோடு எழுப்புவார். . . . நம் எஜமானுடைய பிரசன்னத்தின்போது நம்மில் உயிரோடிருப்பவர்கள் இறந்தவர்களை எந்த விதத்திலும் முந்திக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடு . . . பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள். பின்பு, நம்மில் உயிரோடிருப்பவர்கள், வானத்தில் நம் எஜமானைச் சந்திப்பதற்காக அவர்களோடுகூட மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவோம். இப்படி, எப்போதும் நம் எஜமானோடு இருப்போம்.’—1 தெ. 4:13-17.
18 பரலோக உயிர்த்தெழுதல் கிறிஸ்துவின் பிரசன்னம் துவங்கிய கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ஆரம்பித்தது. மிகுந்த உபத்திரவத்தின்போது உயிரோடு இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.’ (மத். 24:31) இதன் அர்த்தம் என்ன? இப்படி ‘எடுத்துக்கொள்ளப்படுகிற’ யாரும் “மரணத்தில் தூங்கப்போவதில்லை,” அதாவது இறந்த நிலையிலேயே இருக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக, இறந்தவுடன் ‘ஒரே நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில், எல்லாரும் மாற்றம் அடைவார்கள்.’—1 கொ. 15:51, 52.
19. ‘மேலான உயிர்த்தெழுதல்’ என்றால் என்ன?
19 இன்று, உண்மையுள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பரலோக நம்பிக்கை இல்லை. பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்ய அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனாலும், அவர்கள் ‘யெகோவாவின் நாளுக்காக,’ அதாவது இந்தப் பொல்லாத உலகத்தை அவர் அழிக்கப்போகும் நாளுக்காக, ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த நாள் எப்போது வருமென்று யாருக்கும் தெரியாது, ஆனால் அது ரொம்பச் சீக்கிரத்தில் வருமென்று அத்தாட்சிகள் காட்டுகின்றன. (1 தெ. 5:1-3) கடவுளுடைய புதிய உலகத்தில், இன்னொரு விதமான உயிர்த்தெழுதல் நடக்கும். அப்போது, மக்கள் இந்தப் பூமியில் உயிரோடு எழுப்பப்படுவார்கள். பரிபூரணத்தை அடைந்து என்றென்றும் வாழும் நம்பிக்கையை அவர்கள் பெற்றிருப்பார்கள். பழங்காலத்தில் உயிரோடு எழுப்பப்பட்டு, பிற்பாடு மறுபடியும் இறந்துபோன நபர்களுடைய உயிர்த்தெழுதலோடு ஒப்பிடும்போது, இவர்களுடைய உயிர்த்தெழுதல் ‘மேலான உயிர்த்தெழுதலாக’ இருக்கும்.—எபி. 11:35.
20. உயிர்த்தெழுதல் ஒழுங்கான முறையில் நடக்கும் என்று நாம் ஏன் நம்பலாம்?
20 பரலோக நம்பிக்கையுள்ள “ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 15:23) அதனால், பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதல்களும் அந்தந்த வரிசைப்படி ஒழுங்கான முறையில் நடக்கும் என்று நாம் நம்பலாம். அப்படியென்றால், நம் மனதில் இந்தக் கேள்விகள் வரலாம்: ‘சமீபத்தில் இறந்தவர்கள் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி ஆரம்பித்ததும் உயிரோடு எழுப்பப்பட்டு, அவர்களுக்குப் பழக்கமானவர்களால் வரவேற்கப்படுவார்களா? புதிய உலகத்தில் கடவுளுடைய மக்களை ஒழுங்கமைப்பதற்காக, அன்று திறமையான தலைவர்களாக இருந்த உண்மையுள்ள ஆட்கள் சீக்கிரத்தில் உயிரோடு எழுப்பப்படுவார்களா? யெகோவாவுக்கு ஒருபோதும் சேவை செய்யாத ஆட்கள் எப்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்? எங்கே உயிரோடு எழுப்பப்படுவார்கள்?’ இதுபோல் எத்தனையோ கேள்விகளை நாம் கேட்கலாம். ஆனால், இதைப் பற்றியெல்லாம் இப்போது நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் என்ன நடக்குமென்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், யெகோவா இதையெல்லாம் எப்படிச் செய்யப்போகிறார் என்பதைப் பார்க்கும்போது நாம் பூரித்துப்போவோம் என்பது மட்டும் நிச்சயம்!
21. உங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
21 அதுவரை, யெகோவாமீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் தன்னுடைய ஞாபகத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்றும் இயேசுவின் மூலம் யெகோவா வாக்குக் கொடுத்தார். (யோவா. 5:28, 29; 11:23) இறந்தவர்களை யெகோவா உயிரோடு எழுப்புவார் என்பதற்குக் கூடுதலான ஒரு அத்தாட்சியை இயேசு ஒருசமயம் சொன்னார்; அதாவது, ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் ‘யெகோவாவைப் பொறுத்தவரை உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்’ என்று சொன்னார். (லூக். 20:37, 38) நிச்சயமாகவே, ‘[இறந்தவர்கள்] உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று . . . நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் சொல்ல எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன!—அப். 24:15.