அறிவியலும் மதமும் சத்தியத்திற்கான தேடுதலும்
“அநேக பொய் மதங்கள் . . . பரவியிருக்கின்றன என்ற உண்மை என்மீது கொஞ்சம் பாதிப்பைக் கொண்டிருந்தது.”—சார்ல்ஸ் டார்வின்
19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அறிவியலும் மதமும் ஒத்திசைவான உறவை அனுபவித்து வந்தன. “அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில்கூட, தெளிவாகவே இயல்பானதும் நேர்மையானதுமாக இருந்த முறையில் கடவுளைப்பற்றி பேசுவதற்கு எழுத்தாளர்கள் எவ்வித தயக்கத்தையும் உணரவில்லை,” என்று டார்வின்: முன்பும் பின்பும் (Darwin: Before and After) என்ற புத்தகம் சொல்கிறது.
டார்வினுடைய உயிரின தோற்றம் அதை மாற்ற உதவியது. மதத்தையும்—கடவுளையும்—காட்சிக்குப் புறம்பாக்கிவிடும்விதத்தில் அறிவியலும் பரிணாமமும் ஒரு பிணைப்பை உருவாக்க ஆரம்பித்தன. “பரிணாமத்திற்குரிய வகையான சிந்தனையில், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருவர் தேவையாகவோ பொருத்தமானதாகவோ இனிமேலும் இல்லை,” என்று சர் ஜூல்யன் ஹக்ஸ்லி சொல்கிறார்.
இன்று பரிணாமக் கோட்பாடு, அறிவியலின் தவிர்க்கமுடியாத ஓர் அஸ்திவாரமாக வலியுறுத்தப்படுகிறது. அந்த உறவுக்கான ஒரு முக்கியமான காரணம் இயற்பியல் அறிஞரான ஃப்ரெட் ஹாய்லால் சுட்டிக்காட்டப்படுகிறது: “பாரம்பரிய விஞ்ஞானிகள் சத்தியத்திடமாக எதிர்நோக்கிச் செல்வதைவிட மதத்தின் கடந்தகால மிதமீறிய கருத்துக்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுப்பதிலேயே அதிக அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.” என்ன வகையான மிதமிஞ்சிய காரியங்கள் மதத்தை அறிவியலுக்கு அவ்வளவு வெறுப்பூட்டுவதாக ஆக்கியிருக்கின்றன?
மதம் படைப்பிற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுக்கிறது
பைபிளை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகத் தோன்றும் ஒன்றில், “படைப்பை நம்புகிறவர்கள்”—பெரும்பாலும் மாறா கோட்பாடுடைய புராட்டஸ்டன்டினருடன் சேர்ந்து—பூமி மற்றும் பிரபஞ்சத்தின் வயது 10,000-க்கும் குறைந்த வருடங்களே என்று வலியுறுத்தினர். இந்த மிதமிஞ்சிய கருத்து, புவியியலாளர்கள், வானூல் அறிஞர்கள், மற்றும் இயற்பியலாளர்களின் கேலிக்குரியதானது, ஏனென்றால் இது அவர்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு முரண்படுகிறது.
ஆனால் உண்மையில் பைபிள் என்ன சொல்கிறது? “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:1) அதில் உட்பட்டிருந்த காலம் குறிப்பிடப்படவில்லை. சிருஷ்டிப்பின் “முதலாம் நாள்” ஆதியாகமம் 1:3-5 வரையாக சொல்லப்படக்கூட இல்லை. முதலாம் “நாள்” தொடங்கியபோது ஏற்கெனவே ‘வானங்களும் பூமியும்’ இருந்தன. ஆகவே, விஞ்ஞானிகள் வாதிடுவது போல வானங்களும் பூமியும் கோடிக்கணக்கான வருடங்களுக்குமுன் இருந்திருக்கக்கூடுமா? அவ்வாறு இருந்திருக்கக்கூடும். எவ்வளவு காலம் உட்பட்டிருந்தது என்று பைபிள் வெறுமனே சொல்வதில்லை.
மதத்தின் மற்றொரு மிதமிஞ்சிய கருத்து என்னவென்றால், சிருஷ்டிப்பின் ஆறு ‘நாட்களுக்கு’ சிலர் விளக்கம் கொடுக்கும் விதமாகும். பூமிக்குரிய படைப்பின் காலத்தை 144 மணிநேரங்கள் என்பதாக வரையறுத்து சில மாறா கோட்பாட்டாளர்கள் இந்த நாட்கள் சொல்லர்த்தமானவை என்று வலியுறுத்துகிறார்கள். இது விஞ்ஞானிகளில் சந்தேகத்தைக் கிளப்புகிறது; ஏனென்றால் தெளிவான அறிவியல்பூர்வ கணிப்புகளோடு இந்த வாதம் முரண்படுவதாக அவர்கள் உணருகிறார்கள்.
என்றபோதிலும், பைபிளைப் பற்றி மாறா கோட்பாட்டாளரின் விளக்கமே—பைபிள் தானே அல்ல—விஞ்ஞானத்திற்கு முரண்பட்டு நிற்கிறது. ஒவ்வொரு படைப்பு ‘நாளும்’ 24 மணிநேரங்களைக் கொண்டது என்று பைபிள் சொல்வதில்லை; உண்மையில், “தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின” அந்த மிக நீண்ட “நாளிலே” இந்த ‘நாட்கள்’ எல்லாம் உட்பட்டிருக்கின்றன; இது பைபிளிலுள்ள ‘நாட்கள்’ எல்லாமே 24 மணிநேரங்களைக் கொண்டவை அல்ல என்பதைக் காண்பிக்கிறது. (ஆதியாகமம் 2:4) சில, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடிப்பவையாக இருக்கக்கூடும்.a
இவ்வாறு படைப்பைப் பற்றிய கருத்துக்கு படைப்பை நம்புகிறவர்களாலும் மாறா கோட்பாட்டாளர்களாலும் ஒரு கெட்ட பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் வயது மற்றும் படைப்பின் ‘நாட்களின்’ காலப்பகுதி ஆகியவை பற்றிய அவர்களுடைய போதனைகள் நியாயமான அறிவியலுக்கும் ஒத்திசைவாக இல்லை, பைபிளோடும் ஒத்திசைவாக இல்லை. என்றபோதிலும், விஞ்ஞானிகளுக்கு மதத்தை வெறுக்கத்தக்கதாக்கியிருக்கும் மற்ற மிதமிஞ்சிய காரியங்களும் இருக்கின்றன.
அதிகார துர்ப்பிரயோகம்
வரலாறு முழுவதும், அதிகப்படியான அநியாயத்திற்கு மதமே காரணமாக இருந்திருக்கிறது. உதாரணமாக, இடைக் காலத்தின்போது, ஐரோப்பாவின் ஏகாதிபத்தியத்திற்கான சர்ச்சின் ஆதரவை நியாயப்படுத்துவதற்கு ஏற்றபடி படைப்பு கொள்கை திரிக்கப்பட்டது. அதனால் உணர்த்தப்பட்டது என்னவென்றால், மனிதர்கள் தத்தம் அந்தஸ்தில், செல்வந்தராகவோ ஏழையாகவோ, தெய்வ கட்டளையால் அவ்வாறு வைக்கப்படுகின்றனர். புத்திக்கூர்மையுள்ள பிரபஞ்சம் (The Intelligent Universe) இவ்வாறு விவரிக்கிறது: “குடும்ப எஸ்டேட்டிலிருந்து கொஞ்சத்தைப் பெறுவதோ ஒன்றையும் பெறாமலிருப்பதோ அவர்களுக்கான ‘கடவுளுடைய ஒழுங்கமைப்பு’ என்று செல்வந்தரின் இளம் மகன்கள் சொல்லப்பட்டார்கள்; வேலை செய்யும் மனிதன், ‘கடவுள் அவனை எந்த இடத்தில் வைப்பதை நல்லதாகக் கண்டிருந்தாரோ’ அதில் திருப்தியாக இருக்கும்படி தொடர்ந்து உந்துவிக்கப்பட்டான்.”
“கடந்தகாலத்திலிருந்த மதத்தின் மிதமிஞ்சிய கருத்துக்களுக்கு” திரும்பவுமாகச் சென்றுவிடுவது பற்றி அநேகர் பயப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை! மனிதனுடைய ஆவிக்குரிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாறாக, மதம் பெரும்பாலும் அதைச் சுரண்டிப் பிழைத்திருக்கிறது. (எசேக்கியேல் 34:2) இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு தலையங்கக் கட்டுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “யுகங்களினூடே அது ஏற்படுத்தி வைத்திருக்கிற பதிவைக் காண்கையில், மதம் ஏதாவது நம்பகத்தன்மையைத் தன்னில் தக்கவைத்திருக்கிறதா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. . . . மகா உன்னத படைப்பாளரின் பெயரில், . . . மனிதர்கள் தங்கள் சக மனிதர்களுக்கு விரோதமாக மிகவும் வெறுக்கத்தக்க அட்டூழியங்களைச் செய்திருக்கின்றனர்.”
பொய் மதத்தின் திடுக்கிட வைக்கும் பதிவு டார்வினின் சிந்தனையின்மீது கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. “கிறிஸ்தவம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது என்பதை நான் கொஞ்சங்கொஞ்சமாக நம்ப மறுக்க ஆரம்பித்தேன்,” என்று அவர் எழுதினார். “அநேக பொய் மதங்கள் பூமியின் பெரும் பகுதிகளின்மீது காட்டுத்தீபோல் பரவியிருக்கின்றன என்ற உண்மை என்மீது கொஞ்சம் பாதிப்பைக் கொண்டிருந்தது.”
உண்மை மதத்தின் வெற்றி
மத மாய்மாலம் இந்த உலகத்திற்குப் புதியதல்ல. இயேசுவின் நாளிலிருந்த அதிகாரப் பசியுடைய மதத் தலைவர்களிடம் அவர் சொன்னார்: “நீங்கள் புறம்பே நல்ல மனிதரைப் போல் தோன்றுகிறீர்கள்—ஆனால் உள்ளே பாசாங்கு மற்றும் துன்மார்க்கத்தால் நிறைந்திருக்கிறீர்கள்.”—மத்தேயு 23:28, ஃபிலிப்ஸ்.
எனினும் உண்மை கிறிஸ்தவம், “உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவான் 17:16) அதைப் பின்பற்றுகிறவர்கள் ஊழல்மிக்க மதத்திலும் அரசியலிலும் கலந்துகொள்வதுமில்லை; ஒரு படைப்பாளர் இருப்பதை மறுக்கும் தத்துவங்களால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதுமில்லை. “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 3:19.
என்றாலும், மெய் கிறிஸ்தவர்கள் அறிவியல் சம்பந்தமாகப் பேதைகளாக இருக்கிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அறிவியலால் உண்மை மதத்தைப் பின்பற்றுகிறவர்களின் ஆவல் தூண்டப்படுகிறது. “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?” என்று பண்டைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொல்லப்பட்டார். (ஏசாயா 40:26) அதேவிதமாக, படைப்பாளரை சிறந்தவகையில் புரிந்துகொள்வதற்கு, இயற்கையை மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை ஆராய்ந்து பார்க்கும்படி யோபு கேட்டுக்கொள்ளப்பட்டார்.—யோபு, 38-41 அதிகாரங்கள்.
ஆம், ஒரு படைப்பாளரில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மதிப்புகலந்த வியப்புடன் படைப்பை நோக்குகிறார்கள். (சங்கீதம் 139:14) மேலுமாக, எதிர்காலத்திற்கான ஒரு மகத்தான நம்பிக்கையைப் பற்றி படைப்பாளராகிய யெகோவா தேவன் சொல்வதை அவர்கள் நம்புகிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:1-4) மனிதனின் ஆரம்பமோ அவனுடைய எதிர்காலமோ குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்வைச் சார்ந்தில்லை என்பதை லட்சக்கணக்கானவர்கள் பைபிளைப் பற்றிய ஒரு படிப்பின்மூலமாக கற்றுக்கொள்கிறார்கள். மனிதனை உண்டாக்குவதில் யெகோவா ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார்; அந்த நோக்கம் கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதரின் ஆசீர்வாதத்திலும் பலனடையும் விதத்தில் நிறைவேற்றப்படும். இந்த விஷயத்தை நீங்கள் தாமே ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில விழித்தெழு! நவம்பர் 8, 1982, பக்கங்கள் 6-9-ஐயும் வேதாகமங்களின் பேரில் உட்பார்வை, (Insight on the Scriptures) தொகுதி 1, பக்கம் 545-ஐயும் பாருங்கள். படைப்பைப் பற்றியும் அறிவியல் மற்றும் பைபிளோடு அதன் முரண்பாடுகளைப் பற்றியும் கூடுதலான தகவலுக்கு ஆங்கில விழித்தெழு! பிரதிகளில் மார்ச் 8, 1983, பக்கங்கள் 12-15, மற்றும் மார்ச் 22, 1983, பக்கங்கள் 12-15-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
அத்தாட்சியைக் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்களா?
“யெகோவாவின் சாட்சிகள்கூட பேரளவிற்கு உயிரியலைப் பற்றி கற்றிருக்கிறார்கள்,” என்று வழக்கறிஞரான நார்மன் மாக்பெத் தன்னுடைய 1971-ன் புத்தகமான டார்வின் மறுமுயற்சி—நியாயங்காட்டுவதற்கான ஒரு முறையீடு (Darwin Retried—An Appeal to Reason) என்பதில் எழுதினார். பரிணாமத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை விழித்தெழு!-வில் வாசித்தபின், மாக்பெத் குறிப்பிடுகிறார்: “டார்வினிய கோட்பாட்டைப் பற்றி, அது சில அறிவாற்றல்மிக்க குறைகூறுதலைக் கொண்டிருந்ததைக் காண்பதில் நான் வியப்புற்றேன்.” அந்தப் பொருளின் பேரில் பரந்த ஆய்வையும் ஆதாரங்களிலிருந்து தீர்மானிக்கக்கூடிய மேற்கோள்களையும் கவனித்தவராய், அந்த எழுத்தாளர் இந்த முடிவுக்கு வந்தார்: “சிம்சன் இனிமேலும் இவ்வாறு சொல்வது சரியாக இருக்காது: ‘. . . அதில் [பரிணமாத்தில்] நம்பிக்கை வைக்காதவர்கள், ஏறக்குறைய ஒவ்வொருவரும், அறிவியல்பூர்வமான அத்தாட்சியைக் குறித்து தெளிவாகவே அறியாதவர்களாய் இருக்கிறார்கள்.’”
[பக்கம் 7-ன் படம்]
மனிதகுலத்தின் எதிர்காலம் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்வுக்கு விடப்படவில்லை