தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம்
4 சகோதரர்களே, நீங்கள் எப்படி நடக்க வேண்டும், கடவுளை எப்படிப் பிரியப்படுத்த வேண்டும்+ என்பதைப் பற்றி நாங்கள் கொடுத்த அறிவுரைகளின்படியே நடந்து வருகிறீர்கள். அதை இன்னும் முழுமையாகச் செய்யும்படி நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம், மன்றாடிக் கேட்கிறோம். 2 ஏனென்றால், நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் நாங்கள் கொடுத்த அந்த அறிவுரைகள்* உங்களுக்குத் தெரியும்.
3 நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்+ என்பதும், பாலியல் முறைகேட்டுக்கு* விலகியிருக்க வேண்டும்+ என்பதும் கடவுளுடைய விருப்பம்.* 4 உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.+ 5 கடவுளைப் பற்றித் தெரியாத உலக மக்கள்+ திருப்தியடையாமல் கட்டுக்கடங்காத காமப்பசிக்கு இடம்கொடுப்பது போல நாம் இடம்கொடுக்கக் கூடாது.+ 6 இந்த விஷயத்தில், யாரும் எல்லை மீறிப் போய்த் தன்னுடைய சகோதரனுக்குக் கெடுதல் செய்துவிடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட எல்லா செயல்களுக்கும் யெகோவா* தண்டனை கொடுப்பார். இதை நாங்கள் உங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம், கடுமையாக எச்சரித்தும் இருந்தோம். 7 ஏனென்றால், அசுத்தமாக வாழ்வதற்காக அல்ல, பரிசுத்தமாக வாழ்வதற்காகத்தான் கடவுள் நம்மை அழைத்திருக்கிறார்.+ 8 அப்படியானால், இந்தப் போதனையை அலட்சியம் செய்கிறவன் மனிதனை அல்ல, தன்னுடைய சக்தியை உங்களுக்குத் தருகிற கடவுளையே+ அலட்சியம் செய்கிறான்.+
9 சகோதர அன்பைப்+ பற்றி நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை; ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.+ 10 சொல்லப்போனால், மக்கெதோனியா முழுவதிலும் இருக்கிற சகோதரர்கள் எல்லாரிடமும் நீங்கள் அன்பு காட்டி வருகிறீர்கள். சகோதரர்களே, அதை இன்னும் அதிகமாகக் காட்டும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். 11 நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரையின்படியே, அமைதியாக வாழ்வதைக் குறிக்கோளாக வையுங்கள்,+ மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்,+ உங்கள் கைகளால் வேலை செய்யுங்கள்.+ 12 அப்போதுதான், வெளியாட்களுடைய* பார்வையில் நீங்கள் கண்ணியமாய் நடந்துகொள்கிறவர்களாக இருப்பீர்கள்;+ உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.
13 சகோதரர்களே, இறந்தவர்களுக்கு*+ என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்; அப்போதுதான், நம்பிக்கையில்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துக்கப்பட மாட்டீர்கள்.+ 14 இயேசு இறந்து உயிரோடு எழுந்தார்+ என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. அப்படியானால், இயேசுவின் சீஷர்களாக இறந்தவர்களையும்* அவரோடு இருப்பதற்காகக் கடவுள் உயிரோடு எழுப்புவார்.+ 15 யெகோவாவுடைய* வார்த்தையின் அடிப்படையில் இதைத்தான் நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்: நம் எஜமானுடைய பிரசன்னத்தின்போது நம்மில் உயிரோடிருப்பவர்கள் இறந்தவர்களை* எந்த விதத்திலும் முந்திக்கொள்ள மாட்டோம். 16 ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய+ குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.+ 17 பின்பு, நம்மில் உயிரோடிருப்பவர்கள், வானத்தில் நம் எஜமானைச் சந்திப்பதற்காக+ அவர்களோடுகூட மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.+ இப்படி, எப்போதும் நம் எஜமானோடு இருப்போம்.+ 18 அதனால், இந்த வார்த்தைகளைச் சொல்லி எப்போதும் ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துங்கள்.