உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
குடிமாறி வந்திருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆன்மீக விதத்தில் உதவி செய்ய ஏன் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?
பள்ளியிலோ மற்றவர்களிடமிருந்தோ பிள்ளைகள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளலாம். பிள்ளைகள் ஒன்றுக்கும் அதிகமான மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது பிரயோஜனமாக இருக்கும். எந்த மொழியில் அவர்கள் சத்தியத்தை நன்றாகப் புரிந்துகொண்டு ஆன்மீக விதத்தில் முன்னேறுவார்கள் என்பதை பெற்றோர் யோசிக்க வேண்டும். அதாவது, பிள்ளைகள் உள்ளூர் மொழியில் நடக்கும் சபைக்குப் போவது பிரயோஜனமாக இருக்குமா அல்லது அவர்களுடைய தாய்மொழியில் நடக்கும் சபைக்குப் போவது பிரயோஜனமாக இருக்குமா என்பதைப் பெற்றோர் யோசிக்க வேண்டும். கிறிஸ்தவப் பெற்றோர், தங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதைவிட பிள்ளைகளுடைய தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.—w17.05, பக்கங்கள் 9-11.
“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று பேதுருவிடம் இயேசு கேட்டபோது, “இவற்றை” என்று எதைக் குறிப்பிட்டார்? (யோவா. 21:15)
பக்கத்தில் இருந்த மீன்களையோ, மீன் பிடிக்கும் தொழிலையோ, அல்லது இரண்டையும் சேர்த்தோ இயேசு குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இயேசு இறந்த பிறகு, பேதுரு மறுபடியும் தன் பழைய தொழிலுக்கே, அதாவது மீன் பிடிக்கும் தொழிலுக்கே, போய்விட்டார். இன்று கிறிஸ்தவர்கள் தங்கள் மனதில் வேலைக்கு எந்தளவு இடம் தந்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.—w17.05, பக்கங்கள் 22-23.
ஆபிரகாம் ஏன் தன் மனைவியிடம், ‘நீ என் தங்கை என்று சொல்லிவிடு’ என்றார்? (ஆதி. 12:10-13)
உண்மையில், சாராள் ஆபிரகாமுக்கு ஒன்றுவிட்ட சகோதரிதான். தான் ஆபிரகாமின் மனைவி என்று சாராள் சொல்லியிருந்தால், ஆபிரகாம் ஒருவேளை கொல்லப்பட்டிருக்கலாம்; கடவுள் வாக்குக் கொடுத்திருந்த வாரிசையும் பெற்றெடுக்க முடியாமல் போயிருக்கலாம்.—wp17.3, பக்கங்கள் 14-15.
எபிரெய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு உதவ எலியாஸ் ஹட்டர் என்ன புதுமையான முறையை உருவாக்கினார்?
பைபிளில் இருக்கிற எபிரெய வேர்ச்சொற்களையும், அவற்றின் முன்பும் பின்பும் சேர்ந்து வரும் எழுத்துக்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க அவர் மாணவர்களுக்கு உதவ நினைத்தார். அதற்காக, வேர்ச்சொற்களைத் தடித்த எழுத்திலும் அவற்றின் முன்பும் பின்பும் சேர்ந்து வரும் எழுத்துக்களை மெல்லிய எழுத்திலும் அச்சடித்தார். புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் என்ற ஆங்கில பைபிளின் அடிக்குறிப்புகளில் இதே முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—wp17.4, பக்கங்கள் 11-12.
மற்றவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை வைத்திருப்பது பற்றி கிறிஸ்தவர்கள் எதையெல்லாம் யோசிக்க வேண்டும்?
இதையெல்லாம் யோசிக்க வேண்டும்: உயிர் பரிசுத்தமானது என்று கடவுள் நினைக்கிறார். பாதுகாப்புக்காக வாளை வைத்துக்கொள்ளலாம் என்று இயேசு தன் சீஷர்களுக்குச் சொல்லவில்லை. (லூக். 22:36, 38) நம்முடைய வாள்களை மண்வெட்டிகளாக நாம் மாற்ற வேண்டும். பொருள் வசதிகளைவிட உயிர்தான் ரொம்ப முக்கியம். மற்றவர்களுடைய மனசாட்சியை நாம் மதிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக இருக்க நாம் விரும்புகிறோம். (2 கொ. 4:2)—w17.07, பக்கங்கள் 31-32.
இயேசுவின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் ஏன் வித்தியாசப்படுகின்றன?
மத்தேயுவின் பதிவு யோசேப்பைப் பற்றிய சம்பவங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. மரியாள் கர்ப்பமானது தெரிந்தவுடன் யோசேப்பு நடந்துகொண்ட விதம்... எகிப்துக்குப் போகும்படியும் பிற்பாடு திரும்பி வரும்படியும் கடவுள் யோசேப்பிடம் சொன்னது... ஆகியவற்றைப் பற்றி மத்தேயுவின் பதிவு சொல்கிறது. ஆனால் லூக்காவின் பதிவு மரியாளைப் பற்றிய சம்பவங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. எலிசபெத்தை மரியாள் பார்க்கப்போனது... இயேசு ஆலயத்திலேயே இருந்துவிட்டதைப் பார்த்து மரியாள் பிரதிபலித்த விதம்... ஆகியவற்றைப் பற்றி லூக்காவின் பதிவு சொல்கிறது.—w17.08, பக்கம் 32.
எப்படிப்பட்ட பிரச்சினைகளின் மத்தியிலும் பைபிள் நிலைத்திருக்கிறது?
பைபிளில் உள்ள வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களின் அர்த்தம் காலங்கள் போகப்போக மாறிவிட்டன. அரசியல் மாற்றங்கள், அந்தந்த சமயத்தில் மக்கள் பேசிய மொழியை மாற்றியிருக்கின்றன. மக்கள் பேசிய மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கு எதிர்ப்புகள் வந்தன.—w17.09, பக்கங்கள் 19-21.
நம்மைப் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருக்கிறாரா?
இல்லை. தன்னுடைய சீஷர்களின் தேவதூதர்கள் கடவுளுடைய முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னார். (மத். 18:10) தன் சீஷர்கள் ஒவ்வொருவர் மீதும் தேவதூதர்களுக்கு அதிக அக்கறை இருப்பதாகத்தான் குறிப்பிட்டார், அவர்கள் ஒவ்வொருவரையும் தேவதூதர்கள் அற்புதமாகப் பாதுகாப்பதாக அவர் குறிப்பிடவில்லை.—wp17.5, பக்கம் 5.
அன்பிலேயே உயர்ந்த அன்பு எது?
சரியான நியமங்களின் அடிப்படையிலான அகாப்பே அன்புதான் உயர்ந்த அன்பு. மற்றவர்களிடம் காட்டப்படுகிற பாசமும் கனிவான உணர்ச்சிகளும் இதில் அடங்குகின்றன. ஆனால், எந்தச் சுயநலமும் இல்லாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமான காரியங்களைச் செய்வதையும் இது குறிக்கிறது.—w17.10, பக்கம் 7.