யெகோவா ‘விடுவிக்கிறவர்’ —பூர்வ காலத்தில்
“தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்; நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர்.”—சங். 70:5.
1, 2. (அ) யெகோவாவை வழிபடுவோர் எந்தச் சூழ்நிலைகளில் அவரிடம் உதவி கேட்டு ஜெபம் செய்கின்றனர்? (ஆ) இது சம்பந்தமாக என்ன கேள்வி எழுகிறது, இதற்கான பதில் எங்கே காணப்படுகிறது?
இன்பச் சுற்றுலா சென்றிருந்த பெற்றோர், திருமணமான தங்களுடைய 23 வயது மகள் மாயமாய் மறைந்துபோன செய்தியைக் கேட்டுக் கதிகலங்கினர். தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதாகச் சந்தேகித்தனர். உடனே எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினர். தங்களுக்கு உதவும்படி வழிநெடுக யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டே வந்தனர். 20 வயது சகோதரர் ஒருவருக்கு, படிப்படியாக ஆளையே முடமாக்கிவிடும் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, முதல் வேலையாக யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபித்தார். தனிமரமாய்த் தவித்த தாய், வேலை கிடைக்காததால் தனக்கும் தன்னுடைய 12 வயது மகளுக்கும் சாப்பாட்டுக்கு வழியின்றி திண்டாடினார். தன் இருதயத்தின் வேதனையையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். இந்த மூன்று சூழ்நிலைகளையும் பார்க்கையில், கடும் சோதனைகளோ கஷ்டங்களோ வரும்போது யெகோவாவை வழிபடுவோர் தங்களை அறியாமலேயே அவருடைய உதவியை நாடுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். நீங்கள் நிர்க்கதியாய் நின்றபோது யெகோவாவிடம் உதவி கேட்டு எப்பொழுதாவது மன்றாடியிருக்கிறீர்களா?
2 இப்போது, ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ‘உதவிகேட்டு ஜெபிக்கும்போது யெகோவா பதிலளிப்பார் என்று நாம் உண்மையிலேயே நம்ப முடியுமா?’ இதற்கான பதில் சங்கீதம் 70-ல் காணப்படுகிறது; இது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. உருக்கமான இந்தச் சங்கீதத்தை எழுத்தில் வடித்தவர், யெகோவாவை உண்மையோடு வழிபட்ட தாவீது ஆவார்; அவர், வாழ்க்கையில் கடும் சோதனைகளையும் சவால்களையும் சந்தித்தவர். கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அவர் யெகோவாவிடம் பின்வருமாறு சொன்னார்: “தேவனே, . . . நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர்.” (சங். 70:5) இந்த 70-ஆம் சங்கீதத்தை ஆராய்ந்து பார்ப்பது, கஷ்டம் வரும்போது நாமும் யெகோவாவிடம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும் என்பதையும் அவர் நம்மை ‘விடுவிப்பார்’ என்று ஏன் முழுமையாக நம்பலாம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும்.
‘நீரே . . . விடுவிக்கிறவர்’
3. (அ) சங்கீதம் 70-ல் எதற்காக உடனடியாய் உதவும்படி தாவீது கெஞ்சுகிறார்? (ஆ) இந்தச் சங்கீதத்தில் தாவீது எப்படிப்பட்ட நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார்?
3 இந்த 70-ஆம் சங்கீதத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் தாவீது தனக்கு உடனடியாய் உதவும்படி கடவுளிடம் மன்றாடுகிறார். (சங்கீதம் 70:1–5-ஐ வாசியுங்கள்.) அதாவது, தன்னை விடுவிப்பதற்காக, “தீவிரியும்” என்றும் “தீவிரமாய் வாரும்” என்றும் சொல்லி யெகோவாவிடம் அவர் கெஞ்சுகிறார். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வசனங்களில், அவர் ஐந்து காரியங்களுக்காக விண்ணப்பம் செய்கிறார். அவற்றில் மூன்று விண்ணப்பங்கள், அவரைக் கொலைசெய்ய வகைதேடியவர்களைப் பற்றியதாகும். அந்த விரோதிகளுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களை முறியடித்து அவமானப்படுத்தும்படி தாவீது விண்ணப்பிக்கிறார். அடுத்ததாக, 4-ஆம் வசனத்தில், யெகோவாவைத் தேடும் மக்களுக்காக விண்ணப்பிக்கிறார். அவர்கள் மகிழ்ந்து களிகூரவும் தேவனை மகிமைப்படுத்தவும் தூண்டப்படும்படி வேண்டுகிறார். இந்தச் சங்கீதத்தின் முடிவில், “நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர்” என்று யெகோவாவிடம் தாவீது சொல்கிறார். இந்த வசனத்தை விண்ணப்பம் செய்வதுபோன்ற தொனியில் சொல்லாமல், ‘நீரே . . . விடுவிக்கிறவர்’ என்ற உறுதியான தொனியில் அவர் சொல்கிறார். தனக்குக் கடவுள் எப்படியும் உதவுவார் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்ததையே இது காட்டுகிறது.
4, 5. சங்கீதம் 70-லிருந்து தாவீதைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம், நாமும் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்?
4 இந்தச் சங்கீதம் தாவீதைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? தன்னுடைய உயிருக்கு உலைவைக்க விரோதிகள் வகைதேடுகிறார்கள் என்பதை தாவீது அறிந்தபோது, அவர் தானாகவே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவில்லை. மாறாக, அதை எப்போது, எப்படித் தீர்ப்பது என்பதை யெகோவா பார்த்துக்கொள்வாரென்ற நம்பிக்கையோடு இருந்தார். (1 சா. 26:10) யெகோவா தம்மைத் தேடுவோருக்குத் துணைநின்று அவர்களை விடுவிக்கிறார் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவருக்கு இருந்தது. (எபி. 11:6) யெகோவாவை வழிபடுவோர் மகிழ்ந்து சந்தோஷப்படவும் யெகோவாவின் மகத்துவங்களை மற்றவர்களிடம் அறிவித்து அவரை மகிமைப்படுத்தவும் தகுந்த காரணங்கள் இருப்பதாக அவர் நம்பினார்.—சங். 5:11; 35:27.
5 தாவீதைப் போலவே நாமும், யெகோவா நமக்குத் துணைநின்று நம்மை ‘விடுவிக்கிறவர்’ என்பதை முழுமையாக நம்பலாம். எனவே, நாம் கடும் சோதனைகளைச் சந்திக்கும்போதோ, நிர்க்கதியாய் நிற்கும்போதோ, நமக்கு உதவிசெய்யத் தீவிரித்து வரும்படி யெகோவாவிடம் ஜெபிப்பது சரியானதே. (சங். 71:12) அப்படியானால், உதவிகேட்டு நாம் செய்யும் ஜெபத்திற்கு யெகோவா எப்படிப் பதிலளிப்பார்? யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவுவார் என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன், உடனடி உதவி தேவைப்பட்டபோது தாவீதை அவர் விடுவித்த மூன்று வழிகளைப் பற்றி நாம் இப்போது சிந்திப்போம்.
விரோதிகளிடமிருந்து விடுவித்தார்
6. யெகோவா நீதிமான்களை விடுவிக்கிறவரென்று தாவீது அறிந்துகொண்டது எப்படி?
6 நீதிமான்கள் உதவிக்காக யெகோவாவை நம்பியிருக்கலாம் என்ற விஷயத்தை, அன்று கைவசமிருந்த பைபிள் பதிவுகளிலிருந்து தாவீது அறிந்துகொண்டார். தேவபக்தியற்ற உலகை யெகோவா வெள்ளத்தால் அழித்தபோது, நோவாவையும், கடவுள் பயமிக்க அவருடைய குடும்பத்தாரையும் உயிரோடு காப்பாற்றினார். (ஆதி. 7:23) சோதோம் கொமோராவில் வசித்த பொல்லாதவர்களை யெகோவா நெருப்பாலும் கந்தகத்தாலும் அழித்தபோது, நீதிமானாய் விளங்கிய லோத்துவையும், அவருடைய இரண்டு மகள்களையும் காப்பாற்றினார். (ஆதி. 19:12–26) கர்வம்பிடித்த பார்வோனையும் அவனுடைய ராணுவத்தையும் யெகோவா செங்கடலில் அழித்தபோது, தம் மக்களைப் பாதுகாத்து, பயங்கரமான அழிவிலிருந்து காப்பாற்றினார். (யாத். 14:19–28) அப்படியானால், ‘இரட்சிப்பை அருளும் தேவன்’ என்று யெகோவாவை தாவீது வேறொரு சங்கீதத்தின் வாயிலாகப் போற்றிப் புகழ்ந்ததில் ஆச்சரியமே இல்லை.—சங். 68:20.
7-9. (அ) யெகோவாவின் காக்கும் வல்லமையில் தாவீது நம்பிக்கை வைத்ததற்குக் காரணம் என்ன? (ஆ) இக்கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்தது யாரென்று தாவீது கூறினார்?
7 அதுமட்டுமல்ல, யெகோவாவின் காக்கும் வல்லமையை தாவீது தன் சொந்த வாழ்க்கையிலும் ருசித்திருந்தார். அதனால்தான் யெகோவாமீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. யெகோவாவின் “நித்திய புயங்கள்” அவருடைய ஊழியர்களை விடுவிக்கும் என்பதை தாவீது அனுபவத்தில் கண்டிருந்தார். (உபா. 33:27) கோபத்தில் கொதித்தெழுந்த ‘சத்துருக்களின்’ கைகளில் சிக்கிவிடாதபடி தாவீதை யெகோவா பலமுறை காப்பாற்றியிருந்தார். (சங். 18:17–19, 48) உதாரணமாக ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்க்கலாம்.
8 இஸ்ரவேல் ஸ்திரீகள் தாவீதின் வீரதீரத்தை மெச்சிப் பாடியபோது சவுல் ராஜா பொறாமையால் வெந்துபோனார். ஆகவே, இரண்டு சந்தர்ப்பங்களில் தாவீதின்மீது குறிவைத்து ஈட்டியை எறிந்தார். (1 சா. 18:6–9) அந்த இரண்டு முறையும் தாவீது ஈட்டி முனைக்குத் தப்பிவிட்டார். ஒரு ராணுவ வீரராக அவருக்கிருந்த திறமையாலும் சாமர்த்தியத்தாலுமா உயிர்தப்பினார்? இல்லை. யெகோவா ‘அவரோடேகூட இருந்தார்’ என்று பைபிள் பதிவு காட்டுகிறது. (1 சாமுவேல் 18:11–14-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, பெலிஸ்தரின் கையில் தாவீது மடிந்துபோவதற்கு சவுல் செய்த சதியும் பலிக்கவில்லை. அதனால், ‘கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டார்.’—1 சா. 18:17–28.
9 இந்த இக்கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்தது யாரென்று தாவீது கூறினார்? 18-ஆம் சங்கீதத்தின் தலைப்பிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம்: ‘தாவீது இந்தப் பாராட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னை . . . சவுலின் கைக்கு நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது’ என்று அது சொல்கிறது. அவர் தன் உள்ளத்தின் உணர்வுகளைப் பின்வருமாறு பாடினார்: ‘கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், . . . நான் நம்பியிருக்கிற என் துருகமுமாயிருக்கிறார்.’ (சங். 18:2) தம் மக்களை விடுவிக்க யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறதென்று தெரியவருகையில் நம் விசுவாசமும் பலப்படுகிறது, அல்லவா?—சங். 35:10.
வியாதியிலிருந்து விடுவித்தார்
10, 11. சங்கீதம் 41-ஐ வைத்துப் பார்க்கையில் தாவீது ராஜா எந்தச் சூழ்நிலையில் வியாதியாய்க் கிடந்திருக்கலாம்?
10 ஒரு சந்தர்ப்பத்தில் தாவீது ராஜா கடும் வியாதியால் அவதிப்பட்டார், அந்த விவரம் 41-ஆம் சங்கீதத்தில் கூறப்பட்டுள்ளது. கொஞ்ச காலத்திற்கு அவர் எழவே முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்; அவர் ‘இனி எழுந்திருப்பதில்லை’ என அவருடைய விரோதிகள் சிலர் நினைக்குமளவுக்கு வியாதியில் விழுந்துவிட்டார். (வசனங்கள் 7, 8) தாவீது அப்படி வியாதியாய்க் கிடந்தது எந்தச் சந்தர்ப்பத்தில்? இந்தச் சங்கீதத்தில் கூறப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கையில், தாவீதின் அரச பதவியைக் கைப்பற்றி அரியணை ஏறத் துடித்த அவருடைய மகன் அப்சலோமால் வந்த இக்கட்டான சூழ்நிலையாக அது இருக்கலாம்.—2 சா. 15:6, 13, 14.
11 உதாரணமாக, தன்னோடு அப்பம் புசித்த நம்பகமான சிநேகிதனே தனக்குக் குழிபறித்ததாக தாவீது குறிப்பிடுகிறார். (9-ஆம் வசனம்) இது, தாவீதின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு ஞாபகப்படுத்தலாம். அவருக்கு எதிராக அப்சலோம் கலகம் செய்தபோது, அவரது நம்பிக்கைக்குரிய ஆலோசகராய் இருந்த அகித்தோப்பேல் துரோகியாக மாறி, அப்சலோமின் பக்கம் சேர்ந்துகொண்டார். (2 சா. 15:31; 16:15) எழக்கூட தெம்பில்லாமல் பலவீனமாகப் படுக்கையில் கிடந்த ராஜாவுக்கு, தான் தொலைந்தால் நல்லதென்று எண்ணும் சதிகாரர்கள் தனக்கு எதிராகத் திட்டம் தீட்டுவது மட்டும் நன்றாகத் தெரிந்திருந்தது.—5-ஆம் வசனம்.
12, 13. (அ) தாவீது எவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்? (ஆ) தாவீதை யெகோவா எவ்வாறு பலப்படுத்தியிருக்கலாம்?
12 ‘விடுவிக்கிறவரான’ யெகோவாமீது தாவீதுக்கு இருந்த நம்பிக்கை குலையவே இல்லை. வியாதியாய்க் கிடக்கும் உண்மை ஊழியர் ஒருவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினார்: “தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.” (சங். 41:1, 3) இந்தச் சந்தர்ப்பத்திலும் தாவீதுக்கு இருந்த நம்பிக்கையைக் கவனியுங்கள். ‘அவனைக் கர்த்தர் தாங்குவார்’ என்று அவர் குறிப்பிட்டார். தன்னை யெகோவா விடுவிப்பார் என தாவீது உறுதியாய் இருந்தார். எப்படி?
13 யெகோவா தன்னை அற்புதமாய்க் குணமாக்குவார் என்று தாவீது எதிர்பார்க்கவில்லை. மாறாக, யெகோவா தன்னை “தாங்குவார்,” அதாவது வியாதியாகப் படுத்திருந்த தனக்குப் பக்கபலமும் ஆதரவுமாய் இருப்பார் என்று தாவீது உறுதியாய் நம்பினார். தாவீதுக்கு அப்படிப்பட்ட உதவி ரொம்பவே தேவைப்பட்டது. ஒருபக்கம் வியாதி அவரை வாட்டியெடுத்தது; இன்னொரு பக்கம் அவரைச் சூழ்ந்திருந்த விரோதிகள் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவந்தார்கள். (வசனங்கள் 5, 6) ஆறுதல் தரும் எண்ணங்களால் தாவீதின் மனதை நிரப்பி யெகோவா அவரைப் பலப்படுத்தியிருக்கலாம். அதனால்தான், ‘நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்குவீர்’ என்று தாவீதால் சொல்ல முடிந்தது. (வசனம் 12) ஒருபக்கம் வியாதி தன்னை உருக்க, இன்னொரு பக்கம் விரோதிகள் தன்னை நெருக்க, அந்தச் சூழ்நிலையிலும் யெகோவா தன்னை உத்தமனாகக் கருதியதை நினைத்தும்கூட அவர் ஊக்கம் பெற்றிருக்கலாம். கடைசியில் தாவீது தன் வியாதியிலிருந்து குணமானார். ஆகவே, வியாதியில் கிடப்பவர்களுக்குப் பக்கபலமாய் இருந்து அவர்களை ஆதரிக்க யெகோவாவால் முடியுமென்பதை அறிவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது, அல்லவா?—2 கொ. 1:3.
பொருள் தந்து போஷித்தார்
14, 15. தாவீதும் அவரோடிருந்தவர்களும் எப்போது சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டனர், என்ன உதவியைப் பெற்றனர்?
14 தாவீது, இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக ஆனபோது, ராஜ சாப்பாட்டையும் பானத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார்; தன்னோடு சேர்ந்து சாப்பிட மற்றவர்களையும் அழைத்தார். (2 சா. 9:10) அதே சமயத்தில், சாப்பாட்டிற்கு வழியில்லாத சூழ்நிலையையும் அவர் எதிர்ப்பட்டிருந்தார். அவருடைய மகனான அப்சலோம் அரசபதவியைக் கைப்பற்றுவதற்காகக் கலகக்காரர்களை ஒன்றுதிரட்டியபோது, தாவீதும் அவருடைய உண்மை ஆதரவாளர்களும் எருசலேமைவிட்டே வெளியேறினர். அவர்கள், யோர்தான் நதிக்குக் கிழக்கே இருந்த கீலேயாத் தேசத்திற்குத் தப்பியோடினர். (2 சா. 17:22, 24) அங்கே நாடோடிகளாய்த் திரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் ஓய்வெடுக்க வழியின்றி தவித்ததோடு, சாப்பாட்டிற்கும் தண்ணீருக்கும் திண்டாடினர். ஆள்நடமாட்டம் இல்லாத அந்தப் பாலைவனப் பகுதியில் இவற்றுக்கெல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள்?
15 ஒருவழியாக, அவர்கள் மக்னாயீம் நகரை அடைந்தனர். அங்கே தைரியசாலிகளாய் இருந்த சோபி, மாகீர், பர்சிலா ஆகிய மூவரைச் சந்தித்தனர். கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய தாவீதுக்கு உதவத் தங்கள் உயிரையே பணயம் வைக்க அவர்கள் தயாராய் இருந்தனர்; ஏனென்றால், அப்சலோம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால், தாவீதுக்கு ஆதரவளித்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்பதை அறிந்தும் அப்படி செய்தார். தாவீதும் அவரோடிருந்தவர்களும் எதிர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையை இந்த மூன்று பேரும் புரிந்துகொண்டனர்; எனவே, சாப்பிடுவதற்காக கோதுமை, வாற்கோதுமை, வறுத்த பயறு, பெரும் பயறு, சிறு பயறு, தேன், வெண்ணெய் ஆகிய உணவுப்பொருள்களையும், ஆடுகளையும், ஓய்வெடுப்பதற்காக படுக்கைகளையும் சுமந்து வந்தனர். (2 சாமுவேல் 17:27–29-ஐ வாசியுங்கள்.) அவர்கள் அந்தளவுக்குப் பற்றோடு உபசரித்தது, தாவீதின் இருதயத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் செய்ததையெல்லாம் தாவீதால் மறக்க முடியுமா என்ன!
16. தாவீதுக்கும் அவரோடிருந்தவர்களுக்கும் தேவையானவற்றைக் கொடுத்து உண்மையில் பராமரித்தது யார்?
16 உண்மையில், தாவீதுக்கும் அவரோடிருந்தவர்களுக்கும் தேவையானவற்றைக் கொடுத்துப் பராமரித்தது யார்? யெகோவாவே தம் மக்களைப் பராமரிக்கிறவர் என்பதை தாவீது உறுதியாய் நம்பினார். கஷ்டப்படுகிற சக வணக்கத்தாருக்குப் பொருளுதவி செய்யத் தம்முடைய ஊழியர்களின் மனதை நிச்சயமாய் அவரால் தட்டியெழுப்ப முடியும். தாவீதைப் பொறுத்தவரை, கீலேயாத் தேசத்தில் அலைந்து திரிந்த சமயத்தில் அந்த மூன்று பேர் காட்டிய தயவு, யெகோவா அன்போடு பராமரித்ததற்கு அடையாளமாகவே இருந்தது. வயதான காலத்தில் தாவீது இவ்வாறு எழுதினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் [தான் உட்பட] நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.” (சங். 37:25) யெகோவா தாராளமாய்க் கொடுக்கிறவர் என்பதை அறிவது ஆறுதல் அளிக்கிறது, அல்லவா?—நீதி. 10:3.
‘மக்களை எப்படி விடுவிப்பதென யெகோவா அறிந்திருக்கிறார்’
17. யெகோவா மீண்டும் மீண்டும் எதை நிரூபித்திருக்கிறார்?
17 பூர்வ காலத்தில் தாவீதை மட்டுமல்ல, தம்மை வணங்கிய இன்னும் பலரை யெகோவா விடுவித்திருக்கிறார். தாவீதின் காலத்துக்குப் பிறகும் அவர் அவ்வாறே செய்திருக்கிறார். இது உண்மை என்பதை அப்போஸ்தலன் பேதுருவின் பின்வரும் வார்த்தைகள் காட்டுகின்றன: ‘கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்.’ (2 பே. 2:9) இன்னும் இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
18. எசேக்கியாவின் காலத்தில் யெகோவா தம் மக்களை எவ்வாறு விடுவித்தார்?
18 பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், வலிமை வாய்ந்த அசீரிய வீரர்கள் யூதாமீது படையெடுத்து வந்து, எருசலேமை அச்சுறுத்தியபோது எசேக்கியா ராஜா இவ்வாறு ஜெபித்தார்: “இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை . . . இரட்சியும்.” (ஏசா. 37:20) கடவுளுடைய நற்பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே அவருடைய முக்கியக் கவலையாக இருந்தது. அவர் செய்த உருக்கமான ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார். ஒரேவொரு தூதர், 1,85,000 அசீரியர்களை ஒரே இரவில் வெட்டி வீழ்த்தி, யெகோவாவுக்கு உண்மையாய் இருந்த மக்களை விடுவித்தார்.—ஏசா. 37:32, 36.
19. முதல் நூற்றாண்டில், எந்த எச்சரிப்பைக் கேட்டுச் செயல்பட்ட கிறிஸ்தவர்கள் தப்பினர்?
19 இயேசு, தாம் மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன் யூதேயாவிலிருந்த தம் சீஷர்களின் நன்மைக்காக அவர்களை எச்சரித்து ஒரு தீர்க்கதரிசனம் சொன்னார். (லூக்கா 21:20–22-ஐ வாசியுங்கள்.) ஆண்டுகள் உருண்டோடின; பொ.ச. 66-ஆம் ஆண்டில், யூதர்கள் கலகம் செய்ததால் ரோமப் படைகள் எருசலேமுக்கு எதிராக வந்தன. செஸ்டியஸ் காலஸ் தலைமையில் வந்த படைகள் எருசலேமிலிருந்த ஆலய மதிலின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தின; பின்னர் திடீரென திரும்பிச் சென்றுவிட்டன. இயேசு முன்னறிவித்திருந்த அழிவை இனம்கண்டுகொண்ட உண்மைக் கிறிஸ்தவர்கள் தப்பிப்பதற்கு அதுவே தக்க சமயமெனக் கருதி மலைகளுக்கு ஓடிப்போயினர். பொ.ச. 70-ல் ரோமப் படைகள் திரும்பிவந்தன; இந்த முறை அவை திரும்பிச் செல்லாமல் எருசலேமை முற்றிலும் அழித்துவிட்டன. இயேசுவின் எச்சரிப்பைக் கேட்டுச் செயல்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தப் பயங்கரமான அழிவிலிருந்து தப்பினர்.—லூக். 19:41–44.
20. யெகோவா ‘விடுவிக்கிறவர்’ என நாம் ஏன் நம்பலாம்?
20 யெகோவா தம் மக்களுக்கு உதவுகிறார் என்பதற்கான அத்தாட்சியைச் சிந்தித்துப் பார்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. கடந்த காலங்களில் அவர் செய்த காரியங்கள் நம் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாய் அமைகின்றன. இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி, நாம் சந்திக்கிற சவால்கள் எப்படிப்பட்டவையாய் இருந்தாலும், யெகோவா ‘விடுவிக்கிறவர்’ என நாம் முழுமையாக நம்பலாம். என்றாலும், யெகோவா நம்மை எப்படி விடுவிப்பார்? கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அடுத்த கட்டுரையில் இவற்றை நாம் காணலாம்.
நினைவுபடுத்திப் பார்ப்போமா?
• 70-ஆம் சங்கீதம் நமக்கு என்ன நம்பிக்கை அளிக்கிறது?
• வியாதியாய்க் கிடந்த தாவீதுக்கு யெகோவா எப்படி உதவினார்?
• விரோதிகளிடமிருந்து தம் மக்களை யெகோவாவால் விடுவிக்க முடியும் என்பதற்கு உதாரணங்களைக் கூறுங்கள்.
[பக்கம் 6-ன் படம்]
எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார்