1 சாமுவேல்
26 சீப்+ நகரத்தார் கிபியாவிலிருந்த+ சவுலிடம் வந்து, “எஷிமோனுக்கு* எதிரில் இருக்கிற ஆகிலா குன்றில் தாவீது ஒளிந்திருக்கிறான்”+ என்று சொன்னார்கள். 2 அதனால், சவுல் 3,000 இஸ்ரவேல் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தாவீதைத் தேடி சீப் வனாந்தரத்துக்குப் போனார்.+ 3 எஷிமோனுக்கு எதிரில் இருக்கிற ஆகிலா குன்றுக்குப் போகிற வழியில் சவுல் முகாம்போட்டிருந்தார். அப்போது, வனாந்தரத்தில் தங்கியிருந்த தாவீது, தன்னைத் தேடி சவுல் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டார். 4 சவுல் நிஜமாகவே வந்திருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ள தாவீது உளவாளிகளை அனுப்பினார். 5 பிற்பாடு, சவுல் முகாம்போட்டிருந்த இடத்துக்கு தாவீது போனார். அங்கே, சவுலும் அவருடைய படைத் தலைவராகிய நேரின் மகன் அப்னேரும்+ தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த முகாமில் சவுலைச் சுற்றிலும் அவருடைய படைவீரர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். 6 தாவீது ஏத்தியனாகிய+ அகிமெலேக்கிடமும் செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயிடமும்,+ “சவுலின் முகாமுக்குள்ளே என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபிசாய், “நான் வருகிறேன்” என்றார். 7 படைவீரர்கள் இருந்த இடத்துக்கு தாவீதும் அபிசாயும் ராத்திரியில் போனார்கள். அங்கே சவுல் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவருடைய தலைமாட்டில் அவருடைய ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் அவரைச் சுற்றிப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
8 அப்போது அபிசாய் தாவீதிடம், “இன்றைக்குக் கடவுள் உங்களுடைய எதிரியை உங்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஈட்டியால் அவரை ஒரே குத்தாகக் குத்திப்போடுகிறேன், அடுத்த குத்துக்கு அவசியமே இருக்காது” என்றார். 9 ஆனால் தாவீது அபிசாயிடம், “அவரை ஒன்றும் செய்துவிடாதே! யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல்*+ கை வைத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து யாராவது தப்பிக்க முடியுமா?”+ என்று கேட்டார். 10 அதோடு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* யெகோவாவே அவரைப் பழிவாங்குவார்.+ இல்லையென்றால், அவர் இயற்கையாகவோ போரிலோ சாவார்,+ அந்த நாள் கண்டிப்பாக வரும்.+ 11 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!+ அது யெகோவாவின் பார்வையில் பெரிய பாவம். அதனால், நீ தயவுசெய்து அவருடைய தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொள், நாம் போகலாம்” என்றார். 12 சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் அங்கிருந்து போனார்கள். சவுலின் ஆட்கள் யாரும் அவர்களைப் பார்க்கவோ கவனிக்கவோ இல்லை,+ யாரும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவும் இல்லை. ஏனென்றால், யெகோவா அவர்கள் எல்லாருக்கும் ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்திருந்தார். 13 பின்பு, தாவீது எதிர்ப்பக்கம் போய், தங்களுக்கு நடுவே நிறைய இடைவெளி இருக்கும்படி, தூரத்திலிருந்த மலையின் உச்சியில் நின்றார்.
14 தாவீது அங்கிருந்த வீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் சத்தமாகக் கூப்பிட்டு,+ “அப்னேரே, உங்களுக்குக் கேட்கிறதா?” என்றார். அதற்கு அப்னேர், “ராஜாவைக் கூப்பிடுவது யார்?” என்று கேட்டார். 15 அப்போது தாவீது, “நீங்கள் வீரர்தானே? இஸ்ரவேலில் உங்களைப் போல யாராவது இருக்கிறார்களா? பிறகு ஏன் உங்களுடைய எஜமானை நீங்கள் பாதுகாக்கவில்லை? உங்களுடைய ராஜாவைக் கொல்வதற்கு ஒரு படைவீரன் அங்கு வந்திருந்தான்.+ 16 ஆனால், நீங்கள் யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட+ உங்கள் எஜமானைப் பாதுகாக்கவில்லை. பெரிய தப்பு செய்துவிட்டீர்கள். அதனால், உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்களுக்கு மரண தண்டனைதான் கிடைக்க வேண்டும். இப்போது சுற்றுமுற்றும் பாருங்கள். ராஜாவின் தலைமாட்டில் இருந்த ஈட்டியும் தண்ணீர் ஜாடியும்+ எங்கே?” என்றார்.
17 அப்போது, சவுல் தாவீதின் குரலை அடையாளம் கண்டுகொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?”+ என்றார். அதற்கு தாவீது, “ஆமாம், என் எஜமானாகிய ராஜாவே, என் குரல்தான்” என்றார். 18 அதோடு, “எஜமானே, ஏன் என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்கள்?+ அடியேன் என்ன பாவம் செய்தேன்? அப்படியென்ன குற்றம் செய்துவிட்டேன்?+ 19 எஜமானே, ராஜாவே, தயவுசெய்து அடியேன் பேசுவதைக் கேளுங்கள். என்னைக் கொல்ல யெகோவா உங்களைத் தூண்டியிருந்தால், நான் செலுத்தும் உணவுக் காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால், மனுஷர்கள் யாராவது உங்களைத் தூண்டியிருந்தால்,+ அவர்கள் யெகோவாவின் முன்னால் சபிக்கப்படட்டும். ஏனென்றால், யெகோவாவின் சொத்தைவிட்டு+ என்னைப் பிரிப்பதற்காக, ‘போய் வேறு தெய்வங்களைக் கும்பிடு!’ என்று சொல்லித் துரத்தியிருக்கிறார்கள். 20 இப்போது யெகோவாவின் சன்னிதியிலிருந்து ரொம்பத் தூரத்தில் நான் சாகும்படி செய்துவிடாதீர்கள். மலைகளில் கவுதாரியை வேட்டையாடுவதுபோல் இஸ்ரவேலின் ராஜா ஒரு சாதாரண பூச்சியை+ வேட்டையாடலாமா?” என்றார்.
21 அதற்கு சவுல், “தாவீதே, என் மகனே, நான் பாவம் செய்துவிட்டேன்.+ இனி நான் உனக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டேன். ஏனென்றால், இன்றைக்கு நீ என்னுடைய உயிருக்கு மதிப்புக் காட்டினாய்.+ நான்தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டேன், பெரிய தப்பு செய்துவிட்டேன்” என்றார். 22 அப்போது தாவீது, “இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது. உங்களுடைய ஆட்களில் ஒருவன் வந்து இதை எடுத்துக்கொள்ளட்டும். 23 யெகோவாதான் அவரவருடைய நீதிக்கும் உண்மைக்கும் தகுந்தபடி அவரவருக்கு* பலன் அளிப்பார்.+ இன்றைக்கு யெகோவா உங்களை என் கையில் கொடுத்தார். ஆனால், யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை.+ 24 இன்றைக்கு எனக்கு எப்படி உங்களுடைய உயிர் மதிப்புள்ளதாக இருந்ததோ அதுபோல் என்னுடைய உயிரும் யெகோவாவின் பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கட்டும். எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவர் என்னைக் காப்பாற்றட்டும்”+ என்றார். 25 அதற்கு சவுல், “தாவீதே, என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! நீ கண்டிப்பாகப் பெரிய காரியங்களைச் சாதிப்பாய்! உனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்”+ என்றார். பின்பு, தாவீது புறப்பட்டுப் போனார், சவுலும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினார்.+