“உங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனுடன்கூடிய பரிசுத்த சேவை”
“உங்கள் உடல்களை உயிருள்ள, பரிசுத்தமான, கடவுளுக்கு ஏற்கத்தகுந்த பலியாக அளியுங்கள், இதுவே, உங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனுடன்கூடிய பரிசுத்த சேவை.”—ரோமர் 12:1, NW.
1, 2. பைபிள் நியமங்களைப் பொருத்தக் கற்றுக்கொள்வது எப்படி ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதைப்போல் இருக்கிறது?
நீங்கள் எப்போதாவது ஒரு புதிய மொழியை கற்க முயற்சி செய்திருக்கிறீர்களா? முயன்றிருந்தால், அது கடினமான வேலை என்பதை சந்தேகமின்றி நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். வெறும் புது வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதைவிட அதிகம் இதில் உட்பட்டிருக்கிறது. ஒரு மொழியைத் திறமையுடன் பயன்படுத்த அதன் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். சொற்கள் எவ்விதம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதையும் முழுமையான கருத்துக்களை உருவாக்க அவை எவ்விதம் இணைகின்றன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
2 நாம் கடவுளுடைய வார்த்தையின் அறிவை எடுத்துக்கொள்வதும் இதற்கு ஒப்பாக இருக்கிறது. ஒருசில வேதவசனங்களை வெறுமனே அறிந்திருப்பதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது. அடையாள அர்த்தத்தில் சொன்னால், பைபிளின் இலக்கணத்தையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். வேதவசனங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாய் இருக்கின்றன என்பதையும் அவை எவ்விதம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படக்கூடிய நியமங்களாக உதவுகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு நாம் ‘தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ ஆகமுடியும்.—2 தீமோத்தேயு 3:16.
3. கடவுளுடைய சேவையைப் பொறுத்ததில் என்ன மாற்றம் பொ.ச. 33-ல் நடந்தது?
3 மோசேயின் நியாயப்பிரமாண ஏற்பாட்டின்கீழ், தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் உண்மைத்தன்மை பெருமளவுக்குக் காட்டப்படமுடியும். ஆயினும், பொ.ச. 33-ல் யெகோவா நியாயப்பிரமாணத்தை அவருடைய குமாரன் கொல்லப்பட்ட ‘கழுமரத்தின்மேல் ஆணியடித்தது’ போல் துடைத்தழித்துவிட்டார். (கொலோசெயர் 2:13, 14, NW) அதற்குப்பின்பு, கொடுக்கவேண்டிய பலிகளுக்கும் கடைப்பிடிக்கவேண்டிய சட்டங்களுக்கும் விரிவான பட்டியல் எதுவும் கடவுளுடைய ஜனங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக, “உங்கள் உடல்களை உயிருள்ள, பரிசுத்தமான, கடவுளுக்கு ஏற்கத்தகுந்த பலியாக அளியுங்கள், இதுவே, உங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனுடன்கூடிய பரிசுத்த சேவை” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. (ரோமர் 12:1, NW) ஆம், கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சேவையில், தங்கள் முழு இருதயம், ஆத்துமா, மனம், பலம் ஆகியவற்றோடுகூட தங்களையே அளிக்கவேண்டியிருந்தது. (மாற்கு 12:30; சங்கீதம் 110:3-ஐ ஒப்பிடுக.) ஆனால் ‘உங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனுடன்கூடிய பரிசுத்த சேவையை’ அளிப்பதன் அர்த்தம் என்ன?
4, 5. நம் நியாயமாய் சிந்திக்கும் திறனுடன் யெகோவாவை சேவிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
4 ‘நியாயமாய் சிந்திக்கும் திறன்’ என்ற சொற்றொடர், “பகுத்தறிவு வாய்ந்த” அல்லது “கூர்மதியுடைய” என பொருள்படும் லோகிகோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. கடவுளுடைய ஊழியர்கள் பைபிளால் பழக்குவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியை உபயோகிக்க வேண்டியதாகிறது. ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணற்ற சட்டங்களின் அடிப்படையில் தீர்மானங்களை செய்யாமல், கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களைக் கவனமாக மதிப்பிடவேண்டும். அவர்கள் பைபிளின் “இலக்கண”த்தை அல்லது அதன் பல்வேறு நியமங்கள் எவ்விதம் ஒன்றோடொன்று சம்பந்தப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவ்விதமாக, தங்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனைக்கொண்டு அவர்கள் சமநிலையான தீர்மானங்களை செய்யமுடியும்.
5 அப்படியென்றால் கிறிஸ்தவர்களுக்குச் சட்டமே இல்லை என்று அர்த்தமா? நிச்சயமாகவே அப்படியல்ல. உருவவழிபாடு, பாலுறவு ஒழுக்கயீனம், கொலை, பொய் பேசுதல், ஆவிக்கொள்கை, இரத்தத்தின் துர்ப்பிரயோகம், இன்னும் பிற அநேக பாவங்களை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள் தெளிவாக தடைசெய்கின்றன. (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8) ஆயினும், இஸ்ரவேலர்களுக்குத் தேவையாயிருந்ததைவிட வெகு அதிகமாக நாம் நம் நியாயமாய் சிந்திக்கும் திறனை உபயோகித்து பைபிள் நியமங்களைப் பொருத்த கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதைப் போன்றே இதற்குக் காலம் எடுக்கிறது, முயற்சியும் தேவை. நம்முடைய நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்ப்பது எப்படி?
உங்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்த்தல்
6. பைபிளைப் படிப்பதில் உட்பட்டிருப்பது என்ன?
6 முதலாவது, நாம் பைபிளின் ஆர்வமுள்ள மாணாக்கர்களாக இருக்கவேண்டும். கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:17) ஒரு பிரச்சினைக்குரிய பதில் ஒரே பைபிள் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. மாறாக, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் அல்லது பிரச்சினையின்மீது விளக்கம் தரும் அநேக வசனங்களின் நியாயகாரணங்களை நாம் சிந்திக்கவேண்டியிருக்கலாம். அவ்விஷயத்தின் பேரில் கடவுளுடைய எண்ணத்தை நாம் ஊக்கம்தளராமல் தேடவேண்டியது அவசியம். (நீதிமொழிகள் 2:3-5) நமக்குப் புரிந்துகொள்ளுதலும் அவசியம், ஏனெனில் “புரிந்துகொள்ளுதல் உள்ள மனிதனே திறமைமிக்க வழிநடத்துதலைப் பெறுபவன்.” (நீதிமொழிகள் 1:5, NW) புரிந்துகொள்ளுதல் உள்ள நபரால் ஒரு விஷயத்தின் தனித்தனி அம்சங்களைப் பிரித்து பிறகு அவற்றுக்கு ஒன்றோடொன்றுள்ள தொடர்பை உணர்ந்துகொள்ள முடியும். கோணல் மாணலாக வெட்டப்பட்ட படத்துண்டுகளை ஒருங்கிணைத்து முழு படத்தையும் பார்ப்பதுபோல் அவரால் பார்க்கமுடிகிறது.
7. சிட்சையைக் குறித்த பைபிள் நியமங்களின் பேரில் பெற்றோர்கள் எவ்விதம் நியாயகாரணங்களை சிந்திக்கலாம்?
7 உதாரணமாக, பெற்றோர்களின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தன் மகன்மீது அன்பாயிருக்கும் தகப்பன் அவனை “தண்டிக்கிறான்” என்று நீதிமொழிகள் 13:24 சொல்கிறது. இவ்வசனத்தில் இருப்பதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால், கடூரமான, இரக்கம் காட்டாத தண்டனையை சரியென காட்ட இது தவறாய் பயன்படுத்தப்படலாம். ஆயினும், கொலோசெயர் 3:21 சமநிலைப்படுத்தும் புத்திமதியை அளிக்கிறது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” தங்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி இந்நியமங்களை ஒருங்கிணைக்கும் பெற்றோர்கள் “துர்ப்பிரயோகம்” என்று சொல்லத்தக்க தண்டனையைக் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அனலான அன்புடனும், புரிந்துகொள்ளுதலுடனும், கண்ணியத்துடனும் நடத்துவர். (எபேசியர் 6:4) இவ்வாறு, பெற்றோர்களாக இருக்கும் விஷயத்திலும் அல்லது பைபிள் நியமங்கள் சம்பந்தப்பட்ட வேறெந்த விஷயத்திலும், சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலம் நாம் நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளலாம். இவ்விதம் நாம், பைபிள் நியமங்களின் “இலக்கண”த்தை, கடவுளுடைய உள்நோக்கம் என்ன, அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
8. பொழுதுபோக்கு என்ற விஷயத்துக்கு வருகையில் விட்டுக்கொடுக்காத, பிடிவாதமான நோக்குநிலைகளை நாம் எவ்விதம் தவிர்க்கலாம்?
8 நியாயமாய் சிந்திக்கும் நம் திறனை வளர்ப்பதற்கு இரண்டாவது வழி, விட்டுக்கொடுக்காத, பிடிவாதமான நோக்குநிலைகள் வைத்திருப்பதைத் தவிர்ப்பதாகும். வளைந்துகொடுக்காத மனநிலை நம் நியாயமாய் சிந்திக்கும் திறனின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பொழுதுபோக்கு என்ற விஷயத்தை எடுத்துகொள்ளுங்கள். ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த உலகத்தால் உருவாக்கப்படும் ஒவ்வொரு புத்தகமும், திரைப்படமும், தொலைக்காட்சி நிகழ்ச்சியும் கறைப்படிந்ததாயும் சாத்தானியத் தன்மை கொண்டதாயும் இருக்கிறது என்பது இதன் அர்த்தமா? அத்தகைய கருத்து நியாயமானதாய் இருக்காது. நிச்சயமாகவே, சிலர் தொலைக்காட்சி, திரைப்படங்கள், அல்லது உலகப்பிரகாரமான பிரசுரங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க விருப்பப்படலாம். அது அவர்களுடைய உரிமை, அதற்காக அவர்களை எவரும் குறைசொல்லக்கூடாது. ஆனால் அவர்களும் மற்றவர்களை அதே கண்டிப்பான வரையறைகளை வைக்கும்படி வற்புறுத்தக்கூடாது. களைப்பாறுதல் அல்லது பொழுதுபோக்கு விஷயத்தில் ஞானமாய் தெரிவு செய்ய உதவும் பைபிள் நியமங்களைத் தெளிவாகக் காட்டும் கட்டுரைகளை சங்கம் பிரசுரித்திருக்கிறது. இவ்வழிகாட்டும் அறிவுரைகளை மீறிச்சென்று, இவ்வுலகின் பெரும்பாலான பொழுதுபோக்கில் உள்ள ஒழுக்கயீனமான சிந்தை, மோசமான வன்முறை, ஆவிக்கொள்கை ஆகியவற்றைக் காணும் நிலையில் நம்மை வைத்துக்கொள்வது முற்றிலும் ஞானமற்றது. உண்மையில், பொழுதுபோக்கை ஞானமாய் தெரிவுசெய்வது, கடவுளுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருக்கும்வண்ணம் பைபிள் நியமங்களைப் பொருத்த நியாயமாய் சிந்திக்கும் திறனை நாம் உபயோகிக்கும்படி அவசியப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 10:31-33.
9. ‘எல்லா உணர்வு’ என்பதன் அர்த்தம் என்ன?
9 இன்றுள்ள பொழுதுபோக்கில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமற்றதாக இருப்பது தெளிவாய் இருக்கிறது.a எனவே, முதல் நூற்றாண்டில் ஒழுக்க “உணர்வில்லாதவர்களாய்” இருந்த சிலரைப்போல் நாம் ஆகிவிடாதபடி, ‘தீமையை வெறுக்க’ நம் இருதயங்களை பழக்கிக்கொள்ளவேண்டும். (எபேசியர் 4:17-19; சங்கீதம் 97:10) இப்படிப்பட்ட விஷயங்களின் பேரில் நியாயமாய் சிந்திக்க நமக்கு ‘அறிவும் எல்லா உணர்வும்’ தேவை. (பிலிப்பியர் 1:9) ‘உணர்வு’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “கூர்ந்த ஒழுக்கநெறி புலனுணர்வை” குறிக்கிறது. பார்வை போன்ற சொல்லர்த்தமான மனித புலன்களை இவ்வார்த்தை குறிப்பிடுகிறது. பொழுதுபோக்கிற்கு அல்லது நம் தனிப்பட்ட தீர்மானம் எடுக்கவேண்டிய வேறெந்த விஷயத்திற்கும் வருகையில், சரி-தவறு என்பவை மிகத் தெளிவாக புலப்படும் அம்சங்களை மட்டுமல்ல, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அம்சங்களையும் உணர்ந்துகொள்ளும் அளவுக்கு நம் ஒழுக்கநெறி புலனுணர்வு கூர்மையாக இருக்கவேண்டும். அதேசமயம், பைபிள் நியமங்களை ஏதோ நியாயமற்ற கடைநிலைக்குப் பொருத்தி எல்லா சகோதரர்களும் அப்படியே செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதை நாம் தவிர்க்கவேண்டும்.—பிலிப்பியர் 4:5.
10. சங்கீதம் 15-ல் வெளிப்படுத்தப்பட்டுள்ள யெகோவாவின் ஆளுமையை நாம் எப்படி புரிந்துகொள்ளலாம்?
10 நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்க்க மூன்றாவது வழி யெகோவாவின் சிந்தனையை உணர்ந்து அதை நம் இருதயத்தில் ஆழமாய் பதியவைப்பதாகும். தம் வார்த்தையில் யெகோவா தம் ஆளுமையையும் தராதரங்களையும் வெளிப்படுத்துகிறார். உதாரணமாக, சங்கீதம் 15-ல், எப்படிப்பட்ட நபரை யெகோவா தம் கூடாரத்தில் விருந்தாளியாக இருக்கும்படி அழைக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம். அத்தகைய ஆள் நீதியை நடப்பிக்கிறான், தன் இருதயத்தில் சத்தியத்தைப் பேசுகிறான், தன் வாக்கை மீறாதிருக்கிறான், மற்றவர்களுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் சுய அனுகூலத்தை தேடாதிருக்கிறான். இந்தச் சங்கீதத்தைப் படிக்கையில் உங்களையே கேட்டுகொள்ளுங்கள்: ‘இக்குணங்கள் என்னை விவரிக்கின்றனவா? யெகோவா என்னை அவருடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க அழைப்பாரா?’ யெகோவாவின் வழிகளுக்கும் சிந்தனைக்கும் இணக்கமாக நாம் ஆகும்போது நம் பகுத்தறியும் திறன்கள் பலப்படுத்தப்படுகின்றன.—நீதிமொழிகள் 3:5, 6; எபிரெயர் 5:14.
11. பரிசேயர் எவ்விதம் “நியாயத்தையும் தேவ அன்பையும்” விட்டுவிட்டார்கள்?
11 இவ்விஷயத்தில் தான் பரிசேயர் மோசமாக தவறினர். பரிசேயர் நியாயப்பிரமாணத்தின் சட்டநுணுக்க அமைப்பை அறிந்திருந்தனர், ஆனால் அதன் “இலக்கண”த்தை புரிந்துகொள்ளமுடியவில்லை. அந்த நியாயப்பிரமாணத்தின் ஏகப்பட்ட நுணுக்கங்களை மனப்பாடமாக அவர்களால் சொல்லமுடியும், ஆனால் அதற்குப் பின்னணியில் இருந்த யெகோவாவின் ஆளுமையைப் புரிந்துகொள்ள தவறினர். இயேசு அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்.” (லூக்கா 11:42) விட்டுக்கொடுக்காத மனங்களையும் கடின இருதயங்களையும் கொண்டவர்களாய் பரிசேயர் தங்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்த தவறினர். ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தானியத்தை சாப்பிட்டதால் இயேசுவின் சீஷர்கள்மீது குறைகண்டுபிடித்த அவர்கள், அதேநாளில் சற்றுப்பிறகு, இயேசுவை கொலைசெய்ய திட்டமிட்டபோது மனச்சாட்சியின் குத்தல் ஒன்றையும் உணராதிருந்தது அவர்களுடைய முரண்பாடான சிந்தனையை வெளிப்படையாக்கியது!—மத்தேயு 12:1, 2, 14.
12. ஒரு நபரான யெகோவாவுடன் நாம் எப்படி மேலும் இணக்கமாகலாம்?
12 நாம் பரிசேயர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக இருக்கவிரும்புகிறோம். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நம் அறிவானது ஒரு நபராக யெகோவாவுடன் நன்கு இணக்கமாயிருக்க நமக்கு உதவிசெய்யவேண்டும். இதை நாம் எப்படி செய்யலாம்? பைபிளின் அல்லது பைபிள் பிரசுரங்களின் ஒரு பகுதியை வாசித்தப்பின், பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளின் பேரில் ஆழ்ந்து சிந்திப்பது சிலருக்கு உதவியாக இருந்திருக்கிறது: ‘இந்தத் தகவல் யெகோவாவைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும் எனக்கு என்ன கற்பிக்கிறது? நான் மற்றவர்களோடு கொண்டுள்ள செயல்தொடர்புகளில் யெகோவாவின் குணங்களை நான் எப்படி காண்பிக்கலாம்?’ இத்தகைய கேள்விகளின் பேரில் தியானிப்பது நம் நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்த்து நாம் “தேவனைப் பின்பற்றுகிறவர்களாக” ஆகும்படி உதவுகிறது.—எபேசியர் 5:1.
மனிதர்களுக்கல்ல, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகள்
13. பரிசேயர் எவ்விதம் ஒழுக்கநெறி சர்வாதிகாரிகளைப் போல் நடந்துகொண்டனர்?
13 மூப்பர்கள் தங்கள் கவனிப்பின் கீழிருப்பவர்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தும்படி அனுமதிக்கவேண்டும். சபையின் அங்கத்தினர்கள் மனிதர்களுக்கு அடிமைகள் அல்லர். “நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.” என்று பவுல் எழுதினார். (கலாத்தியர் 1:10; கொலோசெயர் 3:23, 24) இதற்கு மாறாக, பரிசேயர் கடவுளுடைய அங்கீகாரத்தைவிட மனிதரின் அங்கீகாரத்தைப் பெறுவதே அதிக முக்கியமானது என மக்கள் நம்பவேண்டுமென்று விரும்பினர். (மத்தேயு 23:2-7; யோவான் 12:42, 43) பரிசேயர் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்கும் ஒழுக்கநெறி சர்வாதிகாரிகளாக தங்களையே ஆக்கிக்கொண்டு பின்பு மற்றவர்கள் எந்தளவு கீழ்ப்படிகிறார்கள் என்று நியாயம் தீர்த்தனர். பரிசேயரைப் பின்பற்றியவர்கள் பைபிளால் பழக்குவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியை உபயோகிப்பதில் பலவீனமாகி, உண்மையில் மனிதர்களுக்கு அடிமைகளாக ஆனார்கள்.
14, 15. (அ) மூப்பர்கள் தாங்கள் மந்தையின் உடன்வேலையாட்கள் என்பதை எப்படி காட்டலாம்? (ஆ) மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை மூப்பர்கள் எவ்விதம் கையாளவேண்டும்?
14 மந்தை பிரதானமாய் தங்களுக்குக் கணக்கு கொடுக்கவேண்டியதாக இல்லை என்பதை இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் அறிவர். ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணும் அல்லது பெண்ணும் தன்னுடைய சொந்த பாரத்தை சுமக்கவேண்டும். (ரோமர் 14:4; 2 கொரிந்தியர் 1:24; கலாத்தியர் 6:5) இப்படியிருப்பதே சரியானது. உண்மையில், மந்தையின் அங்கத்தினர் மனிதரின் அடிமைகளாக, அம்மனிதரின் பார்வையில் இருப்பதன் காரணமாகவே கீழ்ப்படிந்தால் அம்மனிதர் இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்? பிலிப்பியர்களைக் குறித்து சந்தோஷப்பட பவுலுக்கு காரணம் இருந்தது: “நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” அவர்கள் உண்மையிலேயே பவுலுக்கல்ல, கிறிஸ்துவுக்கு அடிமைகளாக இருந்தனர்.—பிலிப்பியர் 2:12.
15 எனவே, மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூப்பர்கள் தங்கள் கவனிப்பில் இருப்பவர்களுக்காக தாங்கள் தீர்மானங்களை செய்வதில்லை. ஒரு விஷயத்தில் உட்பட்டுள்ள பைபிள் நியமங்களை அவர்கள் விளக்குகின்றனர், அதன் பின் அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் தங்கள் நியாயமாய் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி ஓர் தீர்மானத்தை செய்ய அவர்கள் அனுமதிக்கின்றனர். இது ஒரு கனத்த உத்தரவாதம், ஆயினும் ஒவ்வொரு நபரும் சுமக்கவேண்டிய ஒன்று.
16. பிரச்சினைகளைக் கையாள இஸ்ரவேலில் என்ன ஏற்பாடு இருந்தது?
16 இஸ்ரவேலரை நியாயந்தீர்க்க யெகோவா நியாயாதிபதிகளைப் பயன்படுத்திய காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் நமக்கு சொல்கிறது: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.” (நியாயாதிபதிகள் 21:25) ஆயினும் வழிநடத்துதலைப் பெற தேவையான உதவியை யெகோவா தன் மக்களுக்கு அளித்தார். கேள்விகள், பிரச்சினைகள் சம்பந்தமாக முதிர்ச்சியுள்ள உதவியளிக்கக்கூடிய மூப்பர்கள் ஒவ்வொரு பட்டணத்திலும் இருந்தனர். கூடுதலாக, லேவிய ஆசாரியர்கள் மக்களுக்குக் கடவுளுடைய கட்டளைகளின்பேரில் கல்விபுகட்டுவதன்மூலம் நன்மையான விளைவை ஏற்படுத்தும் சக்தியாக செயல்பட்டனர். அதிக கடினமான விஷயங்கள் எழுந்தபோது, பிரதான ஆசாரியன் ஊரீம் தும்மீமின் மூலம் யெகோவாவின் ஆலோசனையைக் கேட்கமுடியும். வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) சொல்கிறது: “இந்த ஏற்பாடுகளை தனக்குப் பயன்படுத்திக்கொண்டு, கடவுளுடைய சட்டத்தின்பேரில் அறிவைப் பெற்று அதைப் பொருத்திய நபரின் மனச்சாட்சிக்குப் பழுதற்ற ஒரு வழிகாட்டி இருந்தது. அத்தகைய சந்தர்ப்பத்தில் அவன் ‘தன் பார்வைக்கு சரியானபடி செய்துவருவது’ தீமையை விளைவிக்காது. விருப்பமுள்ள அல்லது விருப்பமற்ற மனநிலையையும் போக்கையும் காட்ட யெகோவா மக்களை அனுமதித்தார்.”—தொகுதி 2, பக்கங்கள் 162-3.b
17. மூப்பர்கள் தங்கள் சொந்த தராதரத்தின்படியல்ல, கடவுளுடைய தராதரத்தின்படியே ஆலோசனை கொடுக்கிறார்கள் என்பதை எப்படி காட்டலாம்?
17 இஸ்ரவேலின் நியாயாதிபதிகளையும் ஆசாரியர்களையும் போல, சபை மூப்பர்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக முதிர்ச்சியுள்ள உதவியையும் மதிப்புவாய்ந்த ஆலோசனையையும் கொடுக்கின்றனர். சில சமயங்களில் அவர்கள், “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்”லவும் செய்கின்றனர். (2 தீமோத்தேயு 4:2) தங்கள் சொந்த தராதரத்தின்படியல்ல, கடவுளுடையதின்படியே அவ்விதம் செய்கின்றனர். மூப்பர்கள் முன்மாதிரியை வைத்து இருதயங்களை எட்ட முயலுகையில் இது எவ்வளவு பலனளிப்பதாக ஆகிறது!
18. மூப்பர்கள் இருதயத்தைத் தூண்டுவிக்க முயலுவது ஏன் விசேஷமாய் பலனளிப்பதாய் இருக்கிறது?
18 நம் கிறிஸ்தவ வேலைகளுக்கு இருதயமே “எஞ்ஜினாக” இருக்கிறது. எனவே பைபிள் “அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்று சொல்கிறது. (நீதிமொழிகள் 4:23) இருதயத்தைத் தூண்டிவிடும் மூப்பர்கள் இதனால் சபையிலுள்ளோர் கடவுளுடைய சேவையில் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய தூண்டுவிக்கப்படுவதைக் காண்கின்றனர். எப்போதுமே மற்றவர்களால் தள்ளப்படவேண்டிய அவசியமின்றி தாங்களாகவே ஸ்டார்ட் ஆகிவிடுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். வற்புறுத்தப்பட்ட கீழ்ப்படிதலை யெகோவா விரும்புவதில்லை. அன்பினால் நிறைந்த இருதயத்திலிருந்து வரும் கீழ்ப்படிதலையே அவர் எதிர்பார்க்கிறார். நியாயமாய் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள மந்தையிலிருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் மூப்பர்கள் இத்தகைய இருதயத்தால் தூண்டுவிக்கப்பட்ட சேவையை ஊக்குவிக்கலாம்.
‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்தல்
19, 20. கிறிஸ்துவின் சிந்தையை வளர்ப்பது ஏன் நமக்கு முக்கியமானது?
19 ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, கடவுளுடைய சட்டங்களை வெறுமனே அறிந்திருப்பது போதுமானதல்ல. “எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்,” என்று சங்கீதக்காரன் மன்றாடினார். (சங்கீதம் 119:34) யெகோவா தம் வார்த்தையில் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வெளிப்படுத்தியிருக்கிறார். (1 கொரிந்தியர் 2:16) நியாயமாய் சிந்திக்கும் திறனுடன் யெகோவாவை சேவித்த இயேசு நமக்கு ஒரு பரிபூரண மாதிரியை பின்வைத்துப்போயிருக்கிறார். கடவுளுடைய கட்டளைகளையும் நியமங்களையும் அவர் புரிந்துகொண்டார், அவற்றை பிழையற்றவிதத்தில் பொருத்தினார். அவருடைய முன்மாதிரியைக் கருத்தூன்றி கவனிப்பதன் மூலம் நாம் “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக” இருப்போம். (எபேசியர் 3:17-19) ஆம், பைபிளிலிருந்து நாம் இயேசுவைப்பற்றி அறிந்துகொள்வது நிறைய உண்மைகளைத் தெரிந்துவைத்திருப்பதைக் காட்டிலும் உயர்வாக செல்கிறது; யெகோவா தாமே எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை நாம் தெளிவாக காணச்செய்கிறது.—யோவான் 14:9, 10.
20 இவ்வாறாக, நாம் பைபிளைப் படிக்கையில், விஷயங்களின்பேரில் யெகோவாவின் சிந்திக்கும் விதத்தைப் புரிந்துகொண்டு சமநிலையான தீர்மானங்களை எடுக்கலாம். இதற்கு முயற்சி தேவை. யெகோவாவின் ஆளுமைக்கும் தராதரங்களுக்கும் உணர்வுள்ளவர்களாக நம்மை ஆக்கிக்கொண்டு, கடவுளுடைய வார்த்தையின் ஆர்வமிக்க மாணாக்கர்களாக நாம் ஆகவேண்டும். அடையாள அர்த்தத்தில், ஒரு புதிய இலக்கணத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆயினும், அவ்விதம் செய்பவர்கள் பவுலின் பின்வரும் அறிவுரையை கடைப்பிடிப்பவர்களாக இருப்பர்: “உங்கள் உடல்களை உயிருள்ள, பரிசுத்தமான, கடவுளுக்கு ஏற்கத்தகுந்த பலியாக அளியுங்கள், இதுவே, உங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனுடன்கூடிய பரிசுத்த சேவை.”—ரோமர் 12:1, NW.
[அடிக்குறிப்புகள்]
a பேய்த்தனம், ஆபாசம், கொடுமை போன்றவை அடங்கிய பொழுதுபோக்கையும், கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத நல்லொழுக்கமற்ற, கட்டுப்பாடற்ற கருத்துக்களைப் பரப்பும் குடும்பமாக பார்க்கக்கூடியது என்றழைக்கப்படும் பொழுதுபோக்கையும் இது பொருத்தமற்றதென விலக்கும்.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
◻ கடவுளுடைய சேவையைப் பொறுத்ததில் என்ன மாற்றம் பொ.ச. 33-ல் நடந்தது?
◻ நியாயமாய் சிந்திக்கும் திறனை நாம் எப்படி வளர்க்கலாம்?
◻ மந்தையிலிருப்பவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருக்கும்படி மூப்பர்கள் எப்படி உதவலாம்?
◻ ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் ஏன் வளர்க்கவேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
நியாயமாய் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்த மூப்பர்கள் மற்றவர்களுக்கு உதவுகின்றனர்