தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம்
3 ஆனால் கடைசி நாட்களில்,+ சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். 2 ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, 3 பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, 4 நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, 5 பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக* இருப்பார்கள்;+ இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. 6 இவர்களில் சிலர், தந்திரமாகக் குடும்பங்களுக்குள் நுழைந்து பலவீனமான பெண்களை வசப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய பாவங்களிலேயே ஊறிப்போனவர்கள், பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்தவர்கள்; 7 இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருந்தாலும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
8 யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்ததுபோல், இந்தப் பக்திமான்களும் சத்தியத்தை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் முழுக்க முழுக்க புத்திகெட்டுப்போனவர்கள்; விசுவாசத்தைப் பொறுத்தவரை கடவுளால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர்கள். 9 இனியும் இவர்களால் தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அந்த இரண்டு பேருடைய முட்டாள்தனத்தைப் போலவே இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சமாகிவிடும்.+ 10 நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும்,+ குறிக்கோளையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் நெருக்கமாகப் பின்பற்றி வந்திருக்கிறாய். 11 எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களும் பாடுகளும் அந்தியோகியா,+ இக்கோனியா,+ லீஸ்திரா+ ஆகிய நகரங்களில் எனக்கு வந்த கஷ்டங்களும் உனக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் நான் சகித்துக்கொண்டேன்; இவை எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னைக் காப்பாற்றினார்.+ 12 உண்மையில், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.+ 13 ஆனால், பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்.+
14 ஆனால், நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி;+ அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. 15 அதுவும், பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே+ அறிந்திருக்கிறாய்;+ அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.+ 16 வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.+ அவை கற்றுக்கொடுப்பதற்கும்,+ கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.+ 17 அதனால், கடவுளுடைய ஊழியன் எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவனாக இருப்பான்.