அதிகாரம் 9
“நான் உங்களுக்கு ஒரே இதயத்தை . . . கொடுப்பேன்”
முக்கியக் குறிப்பு: தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதும், அது சம்பந்தமாக எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான விளக்கமும்
1-3. யெகோவாவை வணங்கியவர்களை பாபிலோனியர்கள் எப்படிக் கேலி செய்தார்கள், ஏன்?
பாபிலோன் நகரத்தில் வாழ்கிற உண்மையுள்ள ஒரு யூதராக உங்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சிறைபிடிக்கப்பட்ட மற்ற யூதர்களோடு நீங்களும் கிட்டத்தட்ட 50 வருஷங்களாக அங்கே இருக்கிறீர்கள். வழக்கம்போல் ஓய்வுநாளில், சக வணக்கத்தாரோடு யெகோவாவை வணங்குவதற்காக நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். பரபரப்பான தெருக்கள் வழியாக நீங்கள் போகும்போது பிரமாண்டமான கோயில்களையும் கணக்குவழக்கில்லாத வழிபாட்டு இடங்களையும் பார்க்கிறீர்கள். இந்த இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். மார்டுக் போன்ற தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்துகிறார்கள், பாடல்களையும் பாடுகிறார்கள்.
2 இங்கிருந்து சற்றுத் தூரமான இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே, சிறிய தொகுதியாக கூடியிருக்கும் சக வணக்கத்தாரைப் பார்க்கிறீர்கள்.a அவர்களோடு அமைதியான ஒரு இடத்தில், ஒருவேளை நகரத்தின் ஒரு கால்வாய் பக்கத்தில், கடவுளை வணங்குவதற்கு ஒன்றுகூடுகிறீர்கள். எல்லாரும் சேர்ந்து ஜெபம் செய்கிறீர்கள், பாடல்களைப் பாடுகிறீர்கள், கடவுளுடைய வார்த்தையைத் தியானித்துப் பார்க்கிறீர்கள். அந்த இடத்தில், ஓரளவு நிம்மதியாக இருக்க முடிவதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். கால்வாய் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் படகுகள் உரசும் சத்தம் மட்டும்தான் லேசாகக் கேட்கிறது. உள்ளூர் மக்கள் அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால், வணக்கத்துக்காக அப்படி ஒன்றுகூடி வருவதை அவர்கள் பல தடவை தடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
3 பாபிலோன் மக்கள் நிறைய போர்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதற்குக் காரணம், தாங்கள் வணங்கிய பொய்த் தெய்வங்கள்தான் என்று நினைக்கிறார்கள். மார்டுக் தெய்வத்துக்கு யெகோவாவைவிட அதிக சக்தி இருக்கிறது என்பதற்கு, எருசலேமின் அழிவே ஒரு அத்தாட்சி என்று நினைக்கிறார்கள். அதனால், உங்கள் கடவுளையும் அவருடைய மக்களையும் அவர்கள் கேலி செய்கிறார்கள். சில சமயங்களில், “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்கிறார்கள். (சங். 137:3) யெகோவாவின் விரோதிகளுக்கு எதிராக சீயோனுக்கு, அதாவது எருசலேமுக்கு, கிடைத்த வெற்றிகளைப் புகழும் நிறைய சங்கீதங்கள் இருந்தன. ஒருவேளை பாபிலோனியர்கள் அந்தச் சங்கீதங்களைக் கிண்டல் செய்திருக்கலாம். அதேசமயத்தில், பாபிலோனியர்களைப் பற்றிய சங்கீதங்களும் இருந்தன. உதாரணத்துக்கு, “எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள். . . . சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்” என்ற வரிகள் ஒரு சங்கீதத்தில் இருந்தன. இப்படிப்பட்ட சங்கீதங்களை வைத்தும் அவர்கள் கேலி செய்திருக்கலாம்.—சங். 79:1, 3, 4.
4, 5. எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் என்ன நம்பிக்கையை அளித்தது? இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்? (ஆரம்பப் படம்.)
4 யெகோவாமீதும் அவருடைய தீர்க்கதரிசிகள்மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பதைப் பார்த்து விசுவாசதுரோக யூதர்களும் கேலி செய்கிறார்கள். இப்படி அவர்கள் கேலி கிண்டல் செய்தாலும், தூய வணக்கத்தில் ஈடுபடுவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தருகிறது. ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்வதும் பாடல்களைப் பாடுவதும் சந்தோஷத்தைத் தருகிறது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது உங்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது. (சங். 94:19; ரோ. 15:4) நீங்கள் ஒன்றாகக் கூடிவந்திருக்கும் இந்த நாளில், சக வணக்கத்தார் ஒருவர் எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் அடங்கிய ஒரு சுருளை எடுத்துவந்திருக்கிறார். யெகோவா தன்னுடைய மக்களை அவர்களுடைய தாய்நாட்டில் திரும்பவும் வாழ வைப்பார் என்ற வாக்குறுதியைக் கேட்க நீங்கள் ஆசையாக இருக்கிறீர்கள். இதுபோன்ற தீர்க்கதரிசனம் சத்தமாக வாசிக்கப்படுவதைக் கேட்கும்போது நீங்கள் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறப்பதுபோல் உணருகிறீர்கள். ஒருநாள் அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது நீங்கள் குடும்பத்தோடு உங்களுடைய தாய்நாட்டுக்குப் போய், தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்கு உதவுவதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறீர்கள்.
5 தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய வாக்குறுதிகள்தான் எசேக்கியேல் புத்தகத்தில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கின்றன. நம்பிக்கை தரும் அந்த முக்கிய விஷயத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். சிறைபிடிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேறின? நவீன காலத்தில் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகின்றன? சில தீர்க்கதரிசனங்கள் எப்படி எதிர்காலத்தில் பெரியளவில் நிறைவேறும்?
“அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”
6. கீழ்ப்படியாமல் போன தன்னுடைய மக்களைக் கடவுள் எப்படித் திரும்பத் திரும்ப எச்சரித்திருந்தார்?
6 கீழ்ப்படியாமல் போன தன்னுடைய மக்களை தண்டிக்கப் போவதாக யெகோவா சொன்னார். அவர் எப்படித் தண்டிப்பார்? “அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்” என்று எசேக்கியேல் மூலமாக யெகோவா தெள்ளத் தெளிவாகச் சொன்னார். (எசே. 12:11) இந்தப் புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை எசேக்கியேல் நடித்தும் காட்டினார். ஆனால், இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் எச்சரிப்பு அல்ல. மோசேயின் காலத்திலிருந்தே, அதாவது சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பிருந்தே, தன்னுடைய மக்களை யெகோவா எச்சரித்துவந்திருந்தார். அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமல் நடந்தால், சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள் என்று எச்சரித்திருந்தார். (உபா. 28:36, 37) ஏசாயா, எரேமியா போன்ற தீர்க்கதரிசிகளும் இதுபோன்ற எச்சரிப்புகளைக் கொடுத்திருந்தார்கள்.—ஏசா. 39:5-7; எரே. 20:3-6.
7. என்ன வழிகளில் யெகோவா தன்னுடைய மக்களைத் தண்டித்தார்?
7 ஆனால், பெரும்பாலோர் அந்த எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்தவே இல்லை. போகப் போக, கெட்ட மேய்ப்பர்களின் தவறான வழிநடத்துதலின் காரணமாக அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்; அவருக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டார்கள்; சிலை வழிபாட்டில் ஈடுபட்டார்கள்; எல்லா விதமான பாவக் காரியங்களையும் செய்தார்கள். இதையெல்லாம் பார்த்து யெகோவா ரொம்ப வேதனைப்பட்டார். அதனால், பஞ்சத்தில் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டார். ஒருகாலத்தில், ‘பாலும் தேனும் ஓடிய தேசம்’ இப்போது பஞ்சத்தால் வாடியது! அது அவர்களுக்குப் பேரிடியாகவும் பெருத்த அவமானமாகவும் இருந்தது. (எசே. 20:6, 7) யெகோவா பல காலத்துக்கு முன் சொன்னது போலவே, கீழ்ப்படியாமல் போன அந்த மக்களைத் தண்டித்தார். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போக அனுமதித்தார். கடைசியாக கி.மு. 607-ல், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்துப்போட்டான். உயிர்தப்பிய ஆயிரக்கணக்கான யூதர்கள் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள். இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தது போல, அங்கே அவர்கள் கேலி கிண்டலையும், எதிர்ப்பையும் சந்தித்தார்கள்.
8, 9. விசுவாசதுரோகிகள் சம்பந்தமாக கிறிஸ்தவ சபைக்குக் கடவுள் என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
8 யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டது போன்ற நிலைமை, கிறிஸ்தவ சபைக்கும் ஏற்பட்டிருக்கிறதா? ஆம், ஏற்பட்டிருக்கிறது. பூர்வ கால யூதர்களுக்கு முன்கூட்டியே எச்சரிப்பு கொடுக்கப்பட்டதைப் போல, கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களுக்கும் எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. இயேசு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்த காலத்திலேயே இப்படிச் சொன்னார்: “போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்; ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள்.” (மத். 7:15) இதேபோன்ற ஒரு எச்சரிப்பை, பல வருஷங்களுக்குப் பிறகு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் கொடுத்தார். “நான் போன பின்பு கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் உங்கள் நடுவில் நுழைவார்கள் என்பது எனக்குத் தெரியும். கடவுளுடைய மந்தையை அவர்கள் மென்மையாக நடத்த மாட்டார்கள். அதோடு, உங்கள் மத்தியிலிருந்தே சிலர் எழும்பி சீஷர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துச் சொல்வார்கள்” என்று அவர் சொன்னார்.—அப். 20:29, 30.
9 அப்படிப்பட்ட ஆபத்தான ஆட்களை எப்படிக் கண்டுபிடிப்பது, அவர்களைவிட்டு எப்படி விலகுவது என கிறிஸ்தவர்களுக்குச் சொல்லித்தரப்பட்டது. விசுவாசதுரோகிகளைச் சபையிலிருந்து நீக்கும்படி மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. (1 தீ. 1:19; 2 தீ. 2:16-19; 2 பே. 2:1-3; 2 யோ. 10) இருந்தாலும், பூர்வ கால யூதா மற்றும் இஸ்ரவேல் மக்களைப் போல, கிறிஸ்தவர்களும் போகப் போக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அன்பான எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்தாமல் போய்விட்டார்கள். முதல் நூற்றாண்டின் முடிவுக்குள், விசுவாசதுரோகத்தால் சபை பாதிக்கப்பட்டிருந்தது. இப்படி, பொய்ப் போதனைகளாலும் கலகத்தாலும் சபை பாதிக்கப்பட்டிருந்ததை, அப்போது உயிரோடிருந்த கடைசி அப்போஸ்தலனாகிய யோவான் கவனித்தார். விசுவாசதுரோகம் தீவிரமாகப் பரவுவதற்குத் தடையாக இருந்தவர்களில் யோவான்தான் கடைசி நபர். (2 தெ. 2:6-8; 1 யோ. 2:18) அவர் இறந்த பிறகு என்ன நடந்தது?
10, 11. கோதுமைப் பயிர்களையும் களைகளையும் பற்றி இயேசு சொன்ன உவமை, இரண்டாம் நூற்றாண்டிலிருந்து எப்படி நிறைவேறியது?
10 யோவான் இறந்த பிறகு, கோதுமைப் பயிர்களையும் களைகளையும் பற்றி இயேசு சொன்ன உவமை நிறைவேற ஆரம்பித்தது. (மத்தேயு 13:24-30-ஐ வாசியுங்கள்.) இயேசு முன்கூட்டியே சொல்லியிருந்தபடி, சபையில் “களைகளை,” அதாவது போலிக் கிறிஸ்தவர்களை, சாத்தான் விதைத்தான். அதனால், சிலை வழிபாடு, பொய் மதப் பண்டிகைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், கடவுளை நம்பாத தத்துவ ஞானிகளின் பொய்ப் போதனைகள், சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதங்கள் ஆகியவற்றால் சபை வேகமாக கறைபட ஆரம்பித்தது. தன்னுடைய மகனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சபை இப்படிக் கறைபட்டுப் போனதைப் பார்த்து யெகோவா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! அதனால், அதற்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுத்தார். உண்மையில்லாமல் போன இஸ்ரவேலர்கள் சிறைப்பட்டுப்போக அனுமதித்தது போல இவர்களும் சிறைப்பட்டுப்போக யெகோவா அனுமதித்தார். இரண்டாம் நூற்றாண்டின் ஒரு கட்டத்திலிருந்து போலிக் கிறிஸ்தவர்கள் அதிகரிக்க ஆரம்பித்ததால், கோதுமைப் பயிர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனது. ஒரு விதத்தில், உண்மையான கிறிஸ்தவ சபை பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனில் சிறைப்பட்டிருந்தது. போலிக் கிறிஸ்தவர்களோ, பொய் மதப் பேரரசின் பாகமாகிவிட்டார்கள். போலிக் கிறிஸ்தவர்கள் அதிகமானதும் கிறிஸ்தவமண்டலம் உருவானது.
11 கிறிஸ்தவமண்டலம் ஆதிக்கம் செலுத்திய அந்த வருஷங்கள் ஒரு இருண்ட காலப்பகுதியாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில்கூட இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட ‘கோதுமைப் பயிர்களை’ போன்ற உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலர் இருந்தார்கள். எசேக்கியேல் 6:9-ல் சொல்லப்பட்டுள்ள சிறைபிடிக்கப்பட்ட யூதர்களைப் போல அவர்களும் உண்மைக் கடவுளை நினைத்துப் பார்த்தார்கள். அவர்களில் சிலர் கிறிஸ்தவமண்டலத்தின் பொய்ப் போதனைகளைத் தைரியமாக எதிர்த்தார்கள். அதனால் அவர்கள் கேலி செய்யப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். யெகோவா தன்னுடைய மக்களை அந்த ஆன்மீக இருளில் நிரந்தரமாக விட்டுவிட வேண்டுமென்று நினைத்தாரா? இல்லவே இல்லை! பூர்வ இஸ்ரவேலர்களிடம் யெகோவா தன்னுடைய நியாயமான கோபத்தை குறிப்பிட்ட காலத்துக்குக் காட்டியதுபோல் இவர்களிடமும் காட்டியது உண்மைதான். (எரே. 46:28) ஆனால், அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபடி அப்படியே விட்டுவிடவில்லை. பூர்வ பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களைப் பற்றி மறுபடியும் பார்க்கலாம். அவர்களுடைய சிறையிருப்புக் காலம் முடிவடையும் என்பதற்கான நம்பிக்கையை யெகோவா அவர்களுக்கு எப்படிக் கொடுத்தார் என்று தெரிந்துகொள்ளலாம்.
“என் கோபம் அடங்கும்”
12, 13. எசேக்கியேலின் காலத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த ஆக்ரோஷம் தணிவதற்கு என்ன காரணங்கள் இருந்தன?
12 யெகோவா தன்னுடைய மக்களிடம் கோபத்தை வெளிக்காட்டினாலும், அவர் என்றென்றைக்கும் கோபமாகவே இருக்க மாட்டார் என்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். உதாரணத்துக்கு, அவர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன். நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.” (எசே. 5:13) யெகோவாவுக்கு அவர்கள்மீது இருந்த ஆக்ரோஷம் தணிவதற்கு என்ன காரணங்கள் இருந்தன?
13 சிறைபிடிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உண்மையுள்ள யூதர்களும் உண்மையில்லாத யூதர்களும் இருந்தார்கள். சிறையிருப்பில் இருந்த தன் மக்களில் சிலர் திருந்துவார்கள் என்று எசேக்கியேல் மூலமாக கடவுள் முன்னறிவித்தார். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அருவருப்பான காரியங்களைச் செய்ததை அவர்கள் நினைத்துப் பார்த்து தங்களை மன்னிக்கும்படியும் தங்களுக்குக் கருணை காட்டும்படியும் அவரிடம் மன்றாடுவார்கள். (எசே. 6:8-10; 12:16) சிறைபிடிக்கப்பட்ட உண்மையுள்ள யூதர்களில் எசேக்கியேலும் ஒருவர். சிறைபிடிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசியான தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும்கூட கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள். சொல்லப்போனால், சிறையிருப்பின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்க்குமளவுக்கு தானியேல் நீண்ட காலம் உயிரோடிருந்தார். இஸ்ரவேலர்களின் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு உள்ளப்பூர்வமாக அவர் செய்த ஜெபம் தானியேல் 9-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யெகோவாவிடமிருந்து மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற ஏங்கிய ஆயிரக்கணக்கான யூதர்களின் உணர்ச்சிகளை அவருடைய ஜெபம் படம்பிடித்துக் காட்டியது. அப்படியென்றால், சிறையிருப்பிலிருந்து விடுதலை கிடைக்கப்போவதைப் பற்றியும் தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றியும் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எசேக்கியேல் சொன்ன வாக்குறுதிகள் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்!
14. யெகோவா தன்னுடைய மக்களை அவர்களுடைய தாய்நாட்டுக்கு ஏன் திரும்பக் கொண்டுவந்தார்?
14 யெகோவா தன்னுடைய மக்களை விடுதலை செய்து அவர்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்ப கொண்டுவந்ததற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருந்தது. விடுதலை பெறுவதற்கான தகுதி அவர்களுக்கு இருந்ததால் அல்ல, எல்லா தேசத்தாருக்கும் முன்னால் தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கு அது சரியான சமயமாக இருந்ததால்தான் யெகோவா அப்படிச் செய்தார். (எசே. 36:22) உன்னதப் பேரரசராகிய யெகோவாவோடு ஒப்பிடும்போது மார்டுக் போன்ற பொல்லாத தெய்வங்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை பாபிலோனியர்கள் அப்போது புரிந்துகொள்வார்கள். சிறைபிடிக்கப்பட்டு தன்னோடு இருந்தவர்களிடம் சொல்லும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொன்ன ஐந்து வாக்குறுதிகளை இப்போது பார்க்கலாம். முதலில், அந்த ஒவ்வொரு வாக்குறுதியும் உண்மையுள்ள யூதர்கள் மத்தியில் எப்படி நிறைவேறியது என்பதைப் பார்க்கலாம். பிறகு, அவை எப்படிப் பெரியளவில் நிறைவேறின என்று பார்க்கலாம்.
15. தாய்நாட்டுக்குத் திரும்புகிறவர்களின் மதப் பழக்கங்களில் என்ன மாற்றம் ஏற்படும்?
15 முதலாவது வாக்குறுதி. சிலை வழிபாடும் பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட அருவருப்பான பழக்கவழக்கங்களும் இனிமேல் இருக்காது. (எசேக்கியேல் 11:18; 12:24-ஐ வாசியுங்கள்.) இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, எருசலேமும் அதன் ஆலயமும் சிலை வழிபாடு போன்ற பொய் மதப் பழக்கங்களால் கறைபட்டிருந்தது. அப்படிப்பட்ட பழக்கங்களில் மக்கள் ஈடுபட்டதால் அவர்கள் யெகோவாவைவிட்டு விலகிப்போனார்கள். ஆனால், சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் திரும்பவும் சுத்தமான, கறைபடியாத தூய வணக்கத்தில் ஈடுபடும் காலம் வரும் என்பதை எசேக்கியேல் மூலம் யெகோவா முன்னறிவித்தார். அவர்களுக்குக் கிடைக்கப்போகும் எல்லா ஆசீர்வாதங்களும், ஒரு முக்கியமான விஷயத்தைச் சார்ந்திருந்தன. ஆம், தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைச் சார்ந்திருந்தன.
16. தன்னுடைய மக்களின் தாய்நாட்டைப் பற்றி யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார்?
16 இரண்டாவது வாக்குறுதி. தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள். “உங்களுக்கு இஸ்ரவேல் தேசத்தைக் கொடுப்பேன்” என்று சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் யெகோவா சொன்னார். (எசே. 11:17) இது ஒரு முக்கியமான வாக்குறுதி. ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்ட கடவுளுடைய மக்கள் தங்களுடைய அருமையான தாய்நாட்டுக்குத் திரும்பிப் போக வாய்ப்பே இல்லை என்பதாகச் சொல்லி அவர்களை பாபிலோனியர்கள் கேலி செய்தார்கள். (ஏசா. 14:4, 17) தாய்நாட்டுக்குத் திரும்புகிறவர்கள் உண்மையாக இருந்தால், அவர்களுடைய தேசம் வளமானதாகவும் அதிக விளைச்சல் தருவதாகவும் இருக்கும்; வேலைக்கோ சாப்பாட்டுக்கோ அவர்கள் திண்டாட வேண்டியிருக்காது. பஞ்சத்தால் ஏற்பட்ட அவமானமும் வேதனையும் இனி அவர்களுக்கு ஏற்படாது.—எசேக்கியேல் 36:30-ஐ வாசியுங்கள்.
17. பலிகள் சம்பந்தமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டது?
17 மூன்றாவது வாக்குறுதி. யெகோவாவின் பலிபீடத்தில் திரும்பவும் காணிக்கைகள் செலுத்தப்படும். திருச்சட்டத்தின்படி பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவது தூய வணக்கத்தின் முக்கிய பாகமாக இருந்தது. இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவரை மட்டுமே வணங்கினால் அவர்களுடைய காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வார். அதன் மூலம் அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் கிடைப்பதோடு அவர்கள் கடவுளோடு நெருக்கமாகவும் இருக்க முடியும். அவர்களுக்கு யெகோவா தந்த வாக்குறுதியில் இப்படிச் சொன்னார்: “என்னுடைய பரிசுத்த மலையில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் என்னை வணங்குவார்கள். . . . அங்கே உங்களைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். பரிசுத்த காணிக்கைகளையும் முதல் விளைச்சலையும் நீங்கள் கொண்டுவர வேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.” (எசே. 20:40) ஆம், தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும். அதன் மூலம் கடவுளுடைய மக்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
18. யெகோவா தன்னுடைய ஆடுகளை எப்படி மேய்ப்பார்?
18 நான்காவது வாக்குறுதி. கெட்ட மேய்ப்பர்கள் நீக்கப்படுவார்கள். கடவுளுடைய மக்கள் அந்தளவு மோசமான தவறுகளைச் செய்ததற்கு முக்கியக் காரணம் அவர்களை வழிநடத்திய கெட்ட ஆட்கள்தான். அவர்களை நீக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். அப்படிப்பட்ட கெட்ட மேய்ப்பர்களைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதி இதுதான்: “அவர்கள் என்னுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு விட மாட்டேன். . . . அவர்களுடைய வாயிலிருந்து என்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவேன்.” தனக்கு உண்மையாக இருந்த மக்களுக்கு யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.” (எசே. 34:10, 12) அதை அவர் எப்படிச் செய்வார்? விசுவாசமும் உண்மையுமுள்ள ஆண்களை மேய்ப்பர்களாகப் பயன்படுத்தி அதைச் செய்வார்.
19. ஒற்றுமை சம்பந்தமாக யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார்?
19 ஐந்தாவது வாக்குறுதி. யெகோவாவை வணங்குகிறவர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கும். சிறைபிடிக்கப்படுவதற்கு முன்பு கடவுளுடைய மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததைப் பார்த்து உண்மை வணக்கத்தார் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்! பொய்த் தீர்க்கதரிசிகள் மற்றும் கெட்ட மேய்ப்பர்களின் பேச்சைக் கேட்டு நடந்த மக்கள், கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசிகளை எதிர்த்தார்கள். எதிரும்புதிருமான பல பிரிவுகளாக மக்கள் பிரிந்திருந்தார்கள். அதனால், “நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும் புதிய மனதையும் கொடுப்பேன்” என்று எசேக்கியேல் மூலம் யெகோவா வாக்குக் கொடுத்தார். (எசே. 11:19) தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதால் கிடைக்கும் மிகச் சிறந்த ஆசீர்வாதங்களில் இதுவும் ஒன்று. தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்கள், சக வணக்கத்தாரோடு ஒற்றுமையாக இருந்தால்... யெகோவாவின் உண்மையுள்ள பிரதிநிதிகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரோடு ஒற்றுமையாக இருந்தால்... எந்த எதிரியாலும் அவர்களைத் தோற்கடிக்க முடியாது. இதற்கு முன் அவர்கள் யெகோவாவுக்குக் கெட்ட பெயரையும் அவமானத்தையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது, ஒரு தேசமாக யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுபடியும் கிடைத்தது.
20, 21. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் மத்தியில் கடவுளுடைய வாக்குறுதிகள் எப்படி நிறைவேறின?
20 இந்த ஐந்து வாக்குறுதிகளும் தாய்நாட்டுக்குத் திரும்பிய யூதர்கள் மத்தியில் நிறைவேறியதா? பூர்வ காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள யோசுவா சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: “உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை . . . அவை எல்லாமே நிறைவேறியிருக்கின்றன, அவற்றில் ஒரு வார்த்தைகூட பொய்த்துப்போகவில்லை.” (யோசு. 23:14) யோசுவாவின் காலத்தில் யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல சிறையிருப்பிலிருந்து திரும்புகிறவர்களின் காலத்திலும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
21 யெகோவாவிடமிருந்து விலகிப்போவதற்குக் காரணமாக இருந்த சிலை வழிபாட்டையும் அருவருப்பான பொய் மதப் பழக்கவழக்கங்களையும் யூதர்கள் விட்டுவிட்டார்கள். தாய்நாட்டுக்குத் திரும்பிப் போவதற்கான வாய்ப்பே இல்லையென்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பப் போனார்கள். நிலத்தில் பயிர்செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள். எருசலேமுக்கு வந்த பிறகு அவர்கள் முதல் வேலையாக யெகோவாவின் பலிபீடத்தைத் திரும்பக் கட்டி, அதில் அவருக்குப் பிரியமான பலிகளைச் செலுத்தினார்கள். (எஸ்றா 3:2-6) அவர்களை வழிநடத்துவதற்கு நல்ல மேய்ப்பர்களை யெகோவா கொடுத்தார். உண்மையுள்ள குருவாகவும் நகலெடுப்பவராகவும் இருந்த எஸ்றா, ஆளுநர்களான நெகேமியா மற்றும் செருபாபேல், தலைமைக் குருவான யோசுவா, தைரியமுள்ள தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா மற்றும் மல்கியா போன்ற நல்ல மேய்ப்பர்களை அவர்களுக்குக் கொடுத்தார். யெகோவா கொடுத்த வழிநடத்துதலுக்கு மக்கள் கீழ்ப்படிந்தவரையில் அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். பல காலத்துக்கு முன் அனுபவித்த ஒற்றுமையை அவர்கள் மறுபடியும் அனுபவித்தார்கள்.—ஏசா. 61:1-4; எரேமியா 3:15-ஐ வாசியுங்கள்.
22. தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக யெகோவா கொடுத்த வாக்குறுதிகள், ஒரு பெரிய நிறைவேற்றத்துக்கு அடையாளமாக இருந்தன என்பது நமக்கு எப்படித் தெரியும்?
22 தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக யெகோவா கொடுத்த வாக்குறுதிகளின் முதல் நிறைவேற்றம் உற்சாகமளிப்பதாக இருந்தது. ஆனால், அந்த நிறைவேற்றம் ஒரு பெரிய நிறைவேற்றத்துக்கு அடையாளமாக மட்டுமே இருந்தது. அது நமக்கு எப்படித் தெரியும்? அந்த வாக்குறுதிகள் நிபந்தனையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டன. அந்த மக்கள் கீழ்ப்படிந்து நடக்கும்வரை அந்த வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றுவார். காலப்போக்கில், அந்த யூதர்கள் மறுபடியும் கீழ்ப்படியாமல் போனதால்... கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்ததால்... அவருடைய தயவை இழந்தார்கள். ஆனாலும் யோசுவா சொன்னது போல, யெகோவாவின் வார்த்தை ஒருபோதும் நிறைவேறாமல் போகாது. ஆம், அந்த வாக்குறுதிகள் பெரியளவிலும் முழுமையாகவும் நிறைவேறும். எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
‘உங்களுடைய . . . பலிகளைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன்’
23, 24. “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” எப்போது ஆரம்பித்தன, எப்படி?
23 பைபிளை ஆழமாகப் படிக்கிற நமக்கு, இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவுக் காலம், அதாவது கடைசி நாட்கள், 1914-ல் ஆரம்பித்துவிட்டது என்று தெரியும். யெகோவாவின் ஊழியர்களுக்கு இது ஒரு சோகமான காலம் அல்ல. சொல்லப்போனால், 1914-ல் ஒரு அருமையான காலப்பகுதி ஆரம்பித்தது. அதை, “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” என பைபிள் குறிப்பிடுகிறது. (அப். 3:21) அந்தக் காலப்பகுதி 1914-ல் ஆரம்பித்தது என்று நமக்கு எப்படித் தெரியும்? 1914-ல் பரலோகத்தில் என்ன நடந்தது? அந்த வருஷத்தில் இயேசு கிறிஸ்து, மேசியானிய ராஜாவாக ஆனார். இது, தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதற்கு எப்படி ஒரு ஆரம்பமாக இருந்தது? தாவீது ராஜாவின் வம்சத்தில் வருபவர்தான் என்றென்றைக்கும் ராஜாவாக ஆட்சி செய்வார் என்று யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதியை யோசித்துப் பாருங்கள். (1 நா. 17:11-14) கி.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தபோது தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் ஆட்சி தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
24 ‘மனிதகுமாரனாக’ இருந்த இயேசு, தாவீதின் வம்சத்தில் வந்தார். அதனால், தாவீதின் வாரிசாக ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு இருந்தது. (மத். 1:1; 16:13-16; லூக். 1:32, 33) யெகோவா, 1914-ல் இயேசுவைப் பரலோகத்தில் ராஜாவாக்கியபோது, “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” ஆரம்பித்தன. அப்போதிலிருந்து, தூய வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டும் வேலையைத் தொடர்ந்து செய்ய அந்தப் பரிபூரண ராஜாவை யெகோவா பயன்படுத்த ஆரம்பித்தார்.
25, 26. (அ) கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனின் சிறையிருப்பில் இருந்த காலம் எப்போது முடிவுக்கு வந்தது? அது நமக்கு எப்படித் தெரியும்? (“1919 என்று எப்படிச் சொல்கிறோம்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (ஆ) 1919-லிருந்து எது நிறைவேற ஆரம்பித்தது?
25 ராஜாவான பிறகு இயேசு முதல் வேலையாக தன்னுடைய அப்பாவோடு சேர்ந்து, பூமியில் கடவுளுடைய மக்கள் செலுத்தி வந்த வணக்கத்தைச் சோதனையிட்டார். (மல். 3:1-5) கோதுமைப் பயிர்களையும் களைகளையும் பற்றிய உவமையில் இயேசு முன்னறிவித்தபடி, கோதுமைப் பயிர்களுக்கும் களைகளுக்கும் ரொம்பக் காலமாகவே வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அதாவது, பரலோக நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் போலிக் கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது.b ஆனால், 1914-ல் அறுவடைக் காலம் வந்தபோது, அவர்களுக்கு இடையே இருந்த வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது. 1914-க்கு முன், பல வருஷங்களாகவே உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் மோசமான தவறுகளை அம்பலப்படுத்தி வந்தார்கள். அதோடு, அந்தக் கறைபடிந்த அமைப்பிலிருந்து விலக ஆரம்பித்தார்கள். தூய வணக்கத்தைத் திரும்பவும் முழுமையாக நிலைநாட்டுவதற்கு யெகோவா குறித்திருந்த காலமாக அது இருந்தது. அதனால், 1919-ன் ஆரம்பத்தில், அதாவது “அறுவடைக் காலம்” ஆரம்பித்து சில வருஷங்களிலேயே, கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்கள். (மத். 13:30) அப்போது, அவர்களுடைய சிறையிருப்பின் காலம் முடிவுக்கு வந்தது.
26 அந்தச் சமயத்தில், தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள், பூர்வ காலத்தில் நிறைவேறியதைவிட மிகப் பெரியளவில் நிறைவேற ஆரம்பித்தன. நாம் ஏற்கெனவே பார்த்த ஐந்து வாக்குறுதிகள் பெரியளவில் எப்படி நிறைவேறின என்று இப்போது பார்க்கலாம்.
27. சிலை வழிபாட்டிலிருந்து தன்னுடைய மக்களைக் கடவுள் எப்படிச் சுத்திகரித்தார்?
27 முதலாவது வாக்குறுதி. சிலை வழிபாட்டுக்கும் மற்ற அருவருப்பான மதப் பழக்கவழக்கங்களுக்கும் முடிவு. 19-ஆம் நூற்றாண்டின் முடிவிலும் சரி, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் சரி, உண்மைக் கிறிஸ்தவர்கள் தூய வணக்கத்துக்காகக் கூடிவந்தார்கள். அதேசமயத்தில், பொய் மதப் பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதை நிறுத்த ஆரம்பித்திருந்தார்கள். திரித்துவம், ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை, நரகத்தைப் பற்றிய போதனை ஆகியவை ஒதுக்கித்தள்ளப்பட்டன. ஏனென்றால், அவை பைபிளில் இல்லாத பொய் மதப் போதனைகளாக இருந்தன. வணக்கத்துக்காக உருவங்களைப் பயன்படுத்தினாலே அது சிலை வழிபாடுதான் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. போகப் போக, சிலுவையைப் பயன்படுத்துவதுகூட ஒருவகையான சிலை வழிபாடுதான் என்பதைக் கடவுளுடைய மக்கள் புரிந்துகொண்டார்கள்.—எசே. 14:6.
28. கடவுளுடைய மக்கள் என்ன அர்த்தத்தில் தங்களுடைய தேசத்தில் திரும்பவும் நிலைநாட்டப்பட்டார்கள்?
28 இரண்டாவது வாக்குறுதி. கடவுளுடைய மக்கள் மறுபடியும் ஆன்மீகத் தேசத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள், மகா பாபிலோனைச் சேர்ந்த பொய் மதங்களைவிட்டு வெளியே வந்ததால், அவர்கள் அருமையான ஆன்மீகத் தேசத்தில், அதாவது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சூழலில் இருக்கிறார்கள். இனி அவர்களுக்கு ஆன்மீகப் பஞ்சமே வராது. (எசேக்கியேல் 34:13, 14-ஐ வாசியுங்கள்.) அந்தத் தேசத்தில் இருப்பவர்களுக்கு ஏராளமான ஆன்மீக உணவைக் கொடுத்து யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 19-ஆம் அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.—எசே. 11:17.
29. 1919-ல் பிரசங்க வேலைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
29 மூன்றாவது வாக்குறுதி. யெகோவாவின் பலிபீடத்தில் மறுபடியும் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களிடம் மிருக பலிகளை அல்ல, அதைவிட மதிப்புள்ள பலிகளைச் செலுத்தும்படி சொல்லப்பட்டது. யெகோவாவைப் புகழ்வதற்காகவும், அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்காகவும் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள்தான் அந்தப் பலிகள். (எபி. 13:15) பல நூற்றாண்டுகளாக அவர்கள் மகா பாபிலோனில் சிறைப்பட்டிருந்த காலத்தில், இப்படிப்பட்ட பலிகளைச் செலுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. ஆனாலும், சிறையிருப்புக் காலம் முடிவுக்கு வரும் சமயத்தில், கடவுளுடைய மக்கள் ஏற்கெனவே அப்படிப்பட்ட புகழ்ச்சிப் பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்துகொண்டும், கூட்டங்களில் கடவுளைச் சந்தோஷமாகப் புகழ்ந்துகொண்டும் இருந்தார்கள். 1919-லிருந்து, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை,” ஊழியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது; ஊழியத்தை இன்னும் நன்றாக ஒழுங்கமைத்தது. (மத். 24:45-47) அதனால், யெகோவாவின் பலிபீடம் புகழ்ச்சிப் பலிகளால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அதாவது, அவருடைய பரிசுத்த பெயருக்குப் புகழ் சேர்க்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது.
30. தன்னுடைய மக்களுக்கு நல்ல மேய்ப்பர்கள் கிடைக்க இயேசு என்ன செய்தார்?
30 நான்காவது வாக்குறுதி. கெட்ட மேய்ப்பர்கள் நீக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவமண்டலத்தின் சுயநலம் பிடித்த, போலியான, கெட்ட மேய்ப்பர்களிடமிருந்து கடவுளுடைய மக்களை கிறிஸ்து விடுவித்தார். கிறிஸ்துவின் மந்தையிலிருந்த அப்படிப்பட்ட மேய்ப்பர்கள் தங்களுடைய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்கள். (எசே. 20:38) நல்ல மேய்ப்பரான இயேசு, தன்னுடைய ஆடுகளை நன்றாக கவனித்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதற்காக 1919-ல் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமித்தார். பரலோக நம்பிக்கையுள்ள அந்தச் சிறிய தொகுதியைச் சேர்ந்தவர்கள், கடவுளுடைய மக்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுப்பதில் முன்நின்று வழிநடத்தினார்கள். இப்படி, கடவுளுடைய மக்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். “கடவுளுடைய மந்தையை” கவனித்துக்கொள்வதில் அவர்களுக்கு உதவுவதற்காக, பிற்பாடு மூப்பர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. (1 பே. 5:1, 2) மந்தையை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எசேக்கியேல் 34:15, 16-லிருந்து கிறிஸ்தவ மூப்பர்கள் தெரிந்துகொள்ளலாம்.
31. எசேக்கியேல் 11:19-லுள்ள தீர்க்கதரிசனத்தை யெகோவா எப்படி நிறைவேற்றினார்?
31 ஐந்தாவது வாக்குறுதி. யெகோவாவை வணங்குகிறவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமை. கடந்த பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டலத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகளும் எக்கச்சக்கமான உட்பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமாகச் செயல்படுகின்றன. ஆனால், மகா பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தன்னுடைய மக்கள் மத்தியில் அற்புதமான ஒரு விஷயத்தை யெகோவா செய்திருக்கிறார். “நான் உங்களுக்கு ஒரே இதயத்தை . . . கொடுப்பேன்” என்று எசேக்கியேல் மூலம் யெகோவா கொடுத்த வாக்குறுதி மிகப் பெரியளவில் நிறைவேறியிருக்கிறது. (எசே. 11:19) உலகம் முழுவதிலும், வித்தியாசமான இனம், மதம், சமுதாயம், மற்றும் பொருளாதார அந்தஸ்திலிருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே ஒரே விதமான பைபிள் சத்தியங்கள் கற்றுத்தரப்படுகின்றன. அவர்கள் ஒரே விதமான வேலையை ஒற்றுமையோடு செய்கிறார்கள். இதுபோன்ற ஒற்றுமையை வேறு எங்குமே பார்க்க முடியாது. இயேசு பூமியில் இருந்த கடைசி இரவில், தன்னுடைய சீஷர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று உருக்கமாக ஜெபம் செய்தார். (யோவான் 17:11, 20-23-ஐ வாசியுங்கள்.) நம் நாளில், இயேசுவின் இந்த விண்ணப்பத்தை யெகோவா மிகப் பெரியளவில் நிறைவேற்றியிருக்கிறார்.
32. தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (“சிறையிருப்பும் திரும்ப நிலைநாட்டப்படுவதும்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
32 தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுகிற இந்தக் காலப்பகுதியில் வாழ்வதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? இன்று நம்முடைய வணக்க முறையின் ஒவ்வொரு அம்சத்திலும் எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பார்க்கிறோம். ‘உங்களுடைய . . . பலிகளைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன்’ என்று எசேக்கியேல் மூலம் யெகோவா முன்னறிவித்திருந்தார். அவர் சொன்னபடியே, இப்போது தன்னுடைய மக்கள் செலுத்தும் பலிகள்மீது பிரியமாக இருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (எசே. 20:41) கடவுளுடைய மக்கள் பல நூற்றாண்டுகளாக ஆன்மீகச் சிறையிருப்பில் இருந்தாலும், அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு யெகோவாவுக்குப் புகழ்ச்சிப் பலிகளைச் செலுத்திவருகிறார்கள். உலகம் முழுவதிலும் ஒற்றுமையாகவும், ஆன்மீக விதத்தில் பலமாகவும் இருக்கிற இவர்களோடு சேர்ந்து நீங்களும் புகழ்ச்சிப் பலிகளைச் செலுத்துவதை ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறீர்களா? தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக எசேக்கியேல் சொன்ன சில தீர்க்கதரிசனங்கள் இன்னும் பெரியளவில் நிறைவேற வேண்டியிருக்கிறது.
“ஏதேன் தோட்டத்தைப் போல”
33-35. (அ) சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் விஷயத்தில் எசேக்கியேல் 36:35-லுள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ஆ) இன்று யெகோவாவின் மக்கள் விஷயத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுகிறது? (“எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
33 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற [அதாவது, திரும்பவும் நிலைநாட்டப்படுகிற] காலங்கள்” தாவீதின் ராஜ வம்சம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டபோது ஆரம்பித்தன. 1914-ல் இயேசு ராஜாவாக ஆனபோது தாவீதின் ராஜ வம்சம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது. (எசே. 37:24) அடுத்ததாக, பல நூற்றாண்டுகளாக ஆன்மீகச் சிறையிருப்பிலிருந்த தன்னுடைய மக்கள் மத்தியில் தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்ட கிறிஸ்துவுக்கு யெகோவா அதிகாரம் கொடுத்தார். தூய வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டியதோடு கிறிஸ்து தன்னுடைய புதுப்பிக்கிற வேலையை முடித்துவிட்டாரா? இல்லை! அந்த வேலை, எதிர்காலத்திலும் அற்புதமான விதத்தில் தொடர்ந்து நடக்கும். எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்கள் அதைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் விவரங்களை நமக்குத் தருகின்றன.
34 உதாரணத்துக்கு, “‘பாழாக்கப்பட்ட தேசம் ஏதேன் தோட்டத்தைப் போல ஆகிவிட்டது’ . . . என்று [மக்கள்] சொல்வார்கள்” என கடவுளுடைய வார்த்தை சொல்வதைக் கவனியுங்கள். (எசே. 36:35) எசேக்கியேல் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மற்ற யூதர்கள் விஷயத்தில் இந்த வாக்குறுதி எப்படி நிறைவேறியது? அது சொல்லர்த்தமாக நிறைவேறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, ஆரம்பத்தில் யெகோவா உருவாக்கிய ஏதேன் தோட்டத்தைப் போலவே தங்களுடைய தேசம் மாறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. (ஆதி. 2:8) ஆனால், புதுப்பிக்கப்பட்ட தங்களுடைய தேசம் அழகான, செழிப்பான தேசமாக மாறும் என்றுதான் யெகோவா வாக்குக் கொடுத்தார் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
35 இன்று நம்முடைய விஷயத்தில் அந்த வாக்குறுதி எப்படி நிறைவேறுகிறது? சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்தில், இந்த வாக்குறுதி சொல்லர்த்தமாக நிறைவேறும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இன்று அது ஆன்மீக விதத்தில் நிறைவேறிவருகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். யெகோவாவின் ஊழியர்களான நாம், திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ஒரு ஆன்மீகத் தேசத்தில், அதாவது ஆன்மீகச் சூழலில் வாழ்கிறோம். அங்கே, நாம் பயனுள்ள விதத்தில் சேவை செய்கிறோம். அதோடு, அந்தப் பரிசுத்த சேவைக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கிறோம். இந்த ஆன்மீகத் தேசம் நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்கும்?
36, 37. பூஞ்சோலை பூமியில் என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேறும்?
36 அர்மகெதோன் என்ற மாபெரும் போருக்குப் பிறகு, இயேசு இந்தப் பூமியையும் புதுப்பிக்க ஆரம்பிப்பார். ஆயிர வருஷ ஆட்சியின்போது, மனிதர்களைப் பயன்படுத்தி இந்த முழு பூமியையும் ஏதேன் தோட்டமாக, அதாவது பூஞ்சோலையாக, அவர் மாற்றுவார். (லூக். 23:43) இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக இருக்க வேண்டும் என்பதுதான் எப்போதுமே யெகோவாவின் நோக்கமாக இருந்திருக்கிறது. அப்போது, மக்கள் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருப்பதோடு பூமியையும் நன்றாகப் பராமரிப்பார்கள். பூமியெங்கும், ஆபத்தோ பயமோ இருக்காது. “நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன். மூர்க்கமான காட்டு மிருகங்களைத் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன். அப்போது, அவர்கள் வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்” என்ற வாக்குறுதி நிறைவேறும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.—எசே. 34:25.
37 அந்தக் காட்சியை உங்கள் கண் முன்னால் கொண்டுவாருங்கள். எந்தப் பயமும் இல்லாமல் இந்தப் பூமியில் உங்களால் எங்கு வேண்டுமானாலும் போக முடியும். மிருகங்கள் உங்களை ஒன்றும் செய்யாது. எந்த ஆபத்தும் உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடாது. அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் தன்னந்தனியாக நடந்துபோக முடியும். அதன் அழகை ரசிக்க முடியும். அங்கே, எந்தப் பயமும் இல்லாமல் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடியும்.
38. எசேக்கியேல் 28:26-லுள்ள வாக்குறுதி நிறைவேறுவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
38 இந்த வாக்குறுதி நிறைவேறுவதையும் நாம் பார்ப்போம்: “அவர்களைக் கேவலமாக நடத்துகிற சுற்றுவட்டார ஜனங்கள் எல்லாரையும் நான் தண்டித்த பின்பு, அவர்கள் அங்கே பாதுகாப்பாக வாழ்வார்கள். வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைத்து, பயமில்லாமல் வாழ்வார்கள். அப்போது, நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்.” (எசே. 28:26) யெகோவாவுடைய எதிரிகள் எல்லாரும் அழிக்கப்பட்ட பிறகு, இந்தப் பூமியில் நாம் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வோம். இந்தப் பூமியை நாம் நன்றாகப் பராமரிப்பதோடு நம்மையும் நம் அன்பானவர்களையும்கூட நன்றாகக் கவனித்துக்கொள்வோம். வசதியான வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்போம்; திராட்சைத் தோட்டங்களையும் அமைப்போம்.
39. பூஞ்சோலை பூமியைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
39 இந்த வாக்குறுதிகள் எல்லாம் உங்களுக்கு வெறும் கனவுபோல் தெரிகிறதா? அப்படியானால், “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற” இந்தக் காலப்பகுதியில் நடந்ததையெல்லாம் யோசித்துப் பாருங்கள். மனித சரித்திரத்திலேயே மிகவும் இருண்ட இந்தக் காலத்தில், அதுவும் சாத்தானுடைய கடுமையான எதிர்ப்பின் மத்தியில், கடவுள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இயேசு தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டியிருக்கிறார். எசேக்கியேல் மூலமாக கடவுள் கொடுத்திருக்கும் எல்லா வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு இதைவிட பெரிய அத்தாட்சி இருக்க முடியுமா?
a சிறைபிடிக்கப்பட்ட பெரும்பாலான யூதர்கள் பாபிலோன் நகரத்தைவிட்டு கொஞ்ச தூரத்தில் வாழ்ந்தார்கள். உதாரணத்துக்கு எசேக்கியேல், கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் யூதர்களோடு வாழ்ந்தார். (எசே. 3:15) ஆனால், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களில் சிலர், பாபிலோன் நகரத்திலேயே வாழ்ந்தார்கள். அவர்களில் ‘அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்’ இருந்தார்கள்.—தானி. 1:3, 6; 2 ரா. 24:15.
b உதாரணத்துக்கு, 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகளில் யாரெல்லாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்திருக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.