எப்போதும் நல்லதையே செய்யுங்கள்
“[“எப்போதும்,” NW] நன்மை செய்யுங்கள்.”—லூக். 6:35.
1, 2. மற்றவர்களுக்கு நல்லது செய்வது ஏன் பெரும்பாலும் சவால்மிக்கது?
மற்றவர்களுக்கு நல்லது செய்ய நாம் ஆசைப்பட்டாலும் அது சவால்மிக்கதாய் இருக்கிறது. மற்றவர்களிடம் நாம் அன்பு காட்டினாலும் அவர்கள் நம்மிடம் அன்பு காட்டாதிருக்கலாம். நாம் ‘நித்தியானந்த தேவனையும்’ அவருடைய குமாரனையும் பற்றிய ‘மகிமையான சுவிசேஷத்தை’ நம்மால் முடிந்தவரை மக்களுக்குச் சொல்வதன்மூலம் நல்லதையே செய்ய முயற்சி செய்கிறோம்; என்றாலும், அவர்கள் அதற்குப் பாராமுகம் காட்டலாம் அல்லது நன்றி கெட்டவர்களாய் நடந்துகொள்ளலாம். (1 தீ. 1:11) இன்னும் சிலரோ, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக இயேசு மரித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். (பிலி. 3:18) அப்படியிருக்க, கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
2 “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், [“எப்போதும்,” NW] நன்மை செய்யுங்கள்” என்று தம்முடைய சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக். 6:35) இப்போது இந்த அறிவுரையைச் சற்று ஆழமாய் சிந்திப்போம். மற்றவர்களுக்கு நல்லது செய்வது சம்பந்தமாக இயேசு சொன்ன பிற குறிப்புகளிலிருந்தும் நாம் பயன் அடைவோம்.
“சத்துருக்களைச் சிநேகியுங்கள்”
3. (அ) மத்தேயு 5:43-45-ல் இயேசு குறிப்பிட்டதை உங்கள் சொந்த வார்த்தைகளில் சொல்லுங்கள். (ஆ) யூதர்களையும் யூதரல்லாதவர்களையும் குறித்ததில் எத்தகைய எண்ணம் முதல் நூற்றாண்டு யூத மதத் தலைவர்கள் மத்தியில் உருவானது?
3 தம்முடைய பிரபலமான மலைப்பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் பகைவர்களை நேசிக்கும்படியும் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யும்படியும் இயேசு கூறினார். (மத்தேயு 5:43-45-ஐ வாசியுங்கள்.) இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் யூதர்கள்; “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்று கடவுள் கொடுத்திருந்த கட்டளையை இவர்கள் அறிந்திருந்தார்கள். (லேவி. 19:18) “உன் ஜனப்புத்திரர்,” என்றும் ‘பிறன்’ என்றும் சொல்லப்பட்டிருப்பது யூதர்களையே குறிப்பதாக முதல் நூற்றாண்டிலிருந்த மதத் தலைவர்கள் நினைத்தார்கள். பிற தேசத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் விலகியிருக்க வேண்டுமென்றுதான் நியாயப்பிரமாண சட்டம் குறிப்பிட்டிருந்தது; ஆனால், யூதரல்லாத அனைவருமே பகைவர்கள், அவர்களை வெறுக்க வேண்டும் என்ற எண்ணம் பின்னர் அவர்கள் மத்தியில் உருவானது.
4. பகைவர்களிடம் இயேசுவின் சீஷர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது?
4 இதற்கு நேர்மாறாக, ‘உங்கள் சத்துருக்களை [“எப்போதும்,” NW] சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்’ என்று இயேசு சொன்னார். (மத். 5:44) தங்களைப் பகைத்த எல்லாரிடமும் அவருடைய சீஷர்கள் அன்பாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது. சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா குறிப்பிடுகிறபடி, “எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:27, 28) முதல் நூற்றாண்டில் இயேசுவின் போதனைகளைக் கேட்டு நடந்தவர்களைப் போலவே நாமும் ‘பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்கிறோம்’; அவர்கள் நம்மைப் பகைத்தாலும் கனிவாக நடந்துகொள்வதன்மூலம் நாம் அவர்களுக்கு நன்மை செய்கிறோம். அன்பாகப் பேசுவதன்மூலம் நம்மை ‘சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கிறோம்.’ தாக்கியோ பல விதங்களில் ‘நிந்தித்தோ,’ நம்மை ‘துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுகிறோம்.’ இப்படிச் செய்யும் ஜெபங்கள் துன்புறுத்துகிறவர்கள்மீது நமக்கு அன்பிருப்பதைக் காட்டுகின்றன; இவர்கள் மனம் மாறி, யெகோவாவின் தயவைப் பெற நடவடிக்கை எடுப்பதற்கு இந்த ஜெபங்கள் வழிசெய்யலாம்.
5, 6. நம் பகைவர்களை ஏன் நேசிக்க வேண்டும்?
5 நம் பகைவர்களை ஏன் நேசிக்க வேண்டும்? “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:45) இந்த அறிவுரையைக் கேட்டு நடந்தால், நாம் கடவுளுடைய ‘புத்திரராய்’ ஆவோம்; யெகோவா, ‘தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுவதால்’ அவரைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருப்போம். இதே விஷயத்தை லூக்கா எழுதுகையில், ‘நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் [கடவுள்] நன்மை செய்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.—லூக். 6:35.
6 ‘சத்துருக்களை எப்போதும் சிநேகிக்க’ வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் [அதாவது, வரிவசூலிப்பவர்களும்] அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் [“பிற இனத்தவரும்,” பொது மொழிபெயர்ப்பு] அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?” (மத். 5:46, 47) நம்மை நேசிப்பவர்களை மட்டுமே நேசித்தால், எந்தப் ‘பலனையும்,’ அதாவது கடவுளிடமிருந்து எந்தத் தயவையும் பெற முடியாது. பொதுவாக மக்களால் வெறுக்கப்பட்ட வரிவசூலிப்பவர்கள்கூட தங்களை நேசித்தவர்களையே நேசித்தார்கள்.—லூக். 5:30; 7:34.
7. நம் ‘சகோதரர்களை’ மட்டுமே வாழ்த்துவது ஏன் ‘விசேஷித்த’ காரியமாய் இருக்காது?
7 சாதாரணமாய் யூதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையில், “சமாதானம்” என்று சொல்லி வாழ்த்துவார்கள். (நியா. 19:20; யோவா. 20:19) இது, ஒரு நபர் சுகநலத்துடன், வளமாக வாழ வாழ்த்துவதை அர்த்தப்படுத்தியது. நம் ‘சகோதரர்களாக’ நாம் கருதுகிறவர்களை மட்டுமே இப்படி வாழ்த்தினால், அது ‘விசேஷித்த’ காரியமாய் இருக்காது. இயேசு சொன்னதுபோல, “பிற இனத்தவரும்” இப்படித்தான் செய்தார்கள்.
8. தமக்குச் செவிகொடுத்தவர்களிடம் ‘நீங்கள் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்’ என்று இயேசு சொன்னபோது எதைச் செய்யும்படி ஊக்கப்படுத்தினார்?
8 வழிவழியாய் பெற்ற பாவத்தின் காரணமாக, கிறிஸ்துவின் சீஷர்களால் தவறுசெய்யாத, பூரணராய் இருக்க முடியவில்லை. (ரோ. 5:12) எனினும், சொற்பொழிவின் இந்தப் பகுதியை முடிக்கையில், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:48) இவ்வாறு, ‘பரலோக . . . பிதாவான’ யெகோவாவைப் பின்பற்றி, அன்பில் பூரணராய் இருக்கும்படி தமக்குச் செவிகொடுத்தவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். அதாவது, தங்களுடைய பகைவர்களை நேசிப்பதன்மூலம் அன்பில் பூரணராய் இருக்கும்படி அவர் ஊக்கப்படுத்தினார். இதுவே நம்மிடமும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் மன்னிக்க வேண்டும்?
9. “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
9 நமக்குத் தீங்கு செய்யும் ஒருவரை இரக்கத்துடன் மன்னிக்கும்போது நாம் எப்போதும் நல்லதையே செய்கிறவர்களாய் இருப்போம். சொல்லப்போனால், இயேசு கற்பித்த பரமண்டல ஜெபத்தின் ஒரு பகுதியில், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. (மத். 6:12) ஆனால், இது பண சம்பந்தப்பட்ட கடன்களை மன்னிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ‘பாவங்களை’ மனதில் வைத்துத்தான் ‘கடன்கள்’ என்று இயேசு சொன்னார் என்பதை லூக்கா சுவிசேஷம் காட்டுகிறது; “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே” என்று அது சொல்கிறது.—லூக். 11:4.
10. மன்னிக்கும் விஷயத்தில் கடவுளை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
10 மனந்திரும்பியவர்களைத் தாராளமாய் மன்னிக்கிற யெகோவாவை நாம் பின்பற்ற வேண்டும். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு [“தாராளமாய்,” NW] மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபே. 4:32) “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். . . . அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். . . . மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்று சங்கீதக்காரனான தாவீது பாடினார்.—சங். 103:8-14.
11. கடவுள் யாரை மன்னிக்கிறார்?
11 தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னித்திருந்தால் மட்டுமே மக்கள் கடவுளுடைய மன்னிப்பைப் பெற முடியும். (மாற். 11:25) இந்தக் குறிப்பை இயேசு இவ்வாறு வலியுறுத்தினார்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத். 6:14, 15) ஆம், மற்றவர்களைத் தாராளமாய் மன்னிப்பவர்களையே கடவுள் மன்னிப்பார். “[“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று பவுல் சொன்ன அறிவுரைக்குக் கீழ்ப்படிவது, எப்போதும் நல்லதையே செய்வதற்கான ஒரு வழியாகும்.—கொலோ. 3:13.
“குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்”
12. மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்ப்பு செய்வது சம்பந்தமாக இயேசு என்ன அறிவுரை வழங்கினார்?
12 நல்லதையே செய்வதற்கான மற்றொரு வழியை மலைப்பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார்; மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பு செய்யாதிருக்கும்படி அப்போது ஜனங்களிடம் அவர் சொன்னார். இந்தக் குறிப்பை வலியுறுத்த மக்களின் மனதில் பதியும் ஓர் உதாரணத்தையும் கூறினார். (மத்தேயு 7:1-5-ஐ வாசியுங்கள்.) “குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நாம் பார்க்கலாம்.
13. இயேசு போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோர் எந்த விதத்தில் ‘விடுதலைபண்ணுகிறவர்களாக’ ஆக முடியும்?
13 “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு சொன்னதாக மத்தேயுவின் சுவிசேஷம் குறிப்பிடுகிறது. (மத். 7:1) இயேசு சொன்ன இதே விஷயத்தை லூக்காவின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.” (லூக். 6:37) முதல் நூற்றாண்டிலிருந்த பரிசேயர்கள், வேதத்தை விட்டுவிட்டு பாரம்பரியங்களின் அடிப்படையில் மற்றவர்களைக் குற்றவாளிகளென கடுமையாய்த் தீர்ப்பு செய்தார்கள். இயேசு போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் அப்படிச் செய்கிறவர்கள் யாராவது இருந்திருந்தால், அவர்கள் இனியும் மற்றவர்களை ‘குற்றவாளிகளென்று தீர்க்கும்’ மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டியிருந்தது. மாறாக, அவர்கள் ‘விடுதலைபண்ணுகிறவர்களாக,’ அதாவது, மற்றவர்களின் குற்றங்குறைகளை மன்னிக்கிறவர்களாக ஆக வேண்டியிருந்தது. மன்னிப்பது சம்பந்தமாக இதே போன்ற அறிவுரையை அப்போஸ்தலன் பவுலும் கொடுத்தார்.—எபேசியர் 4:32-ஐ வாசியுங்கள்.
14. இயேசுவின் சீஷர்கள், தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கும்போது அந்தத் தீங்கு செய்தவர்கள் என்ன செய்யத் தூண்டப்படுவார்கள்?
14 இயேசுவின் சீஷர்கள், தீங்கு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்; அப்போதுதான் அந்தத் தீங்கு செய்தவர்கள் மற்றவர்களை மன்னிக்கத் தூண்டப்படுவார்கள். “நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத். 7:2) மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.—கலா. 6:7.
15. தொட்டதற்கெல்லாம் குற்றங்குறை காண்பது தவறு என்பதை இயேசு எப்படி விளக்கினார்?
15 தொட்டதற்கெல்லாம் குற்றங்குறை காண்பவர்களாய் இருப்பது எவ்வளவு தவறென இயேசு சுட்டிக்காட்டியதை சற்று எண்ணிப் பாருங்கள். “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” என்று இயேசு கேட்டார். (மத். 7:3, 4) குற்றங்குறை காண முயற்சி செய்கிற ஒருவர், தன் சகோதரனின் “கண்ணில்” இருக்கிற சிறு குறையைப் பார்க்கிறார். தன் சகோதரன் உண்மையில் காரியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லையென தான் நினைப்பதாகச் சொல்கிறார். பார்க்கப்போனால் அந்தக் குறை, துரும்பைப் போல சின்னஞ்சிறியதாக இருந்தாலும் அந்தத் “துரும்பை எடுத்துப்போட” முன்வருகிறார். தன் சகோதரன் காரியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு மனமுவந்து உதவுவதாக இவர் காட்டிக்கொள்கிறார்.
16. பரிசேயர்களின் கண்ணில் “உத்திரம்” இருந்ததென ஏன் சொல்லலாம்?
16 முக்கியமாய், யூத மதத் தலைவர்கள் தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பவர்களாய் இருந்தார்கள். உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் அற்புதத்தால் பார்வை பெற்ற ஒரு குருடன் இயேசுவை கடவுள் அனுப்பியிருக்க வேண்டுமென உறுதியாய் சொன்னான். அதைக் கேட்ட பரிசேயர்கள், “முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ” என்று கோபமாகக் கேட்டார்கள். (யோவா. 9:30-34) யெகோவாவின் நெறிமுறைகளுக்கு இசைய, நியாயமாய்த் தீர்ப்பு செய்யும் விஷயத்தில், பரிசேயர்களின் கண்ணில் “உத்திரம்” இருந்தது; இது அவர்களுடைய பார்வையை முழுமையாய் மறைத்துப் போட்டது. எனவேதான், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” என்று இயேசு கூறினார். (மத். 7:5; லூக். 6:42) மற்றவர்களுக்கு நல்லதையே செய்து, அவர்களிடம் நல்ல விதத்தில் நடந்துகொள்ள நாம் தீர்மானமாய் இருந்தால், நம் சகோதரனுடைய கண்ணில் “துரும்பு” இருக்கிறதாவென சதா நோட்டம் விடுகிறவர்களாக இருக்க மாட்டோம். மாறாக, நாம் அபூரணர் என்பதை ஒத்துக்கொண்டு, நம்முடைய சக விசுவாசிகளிடம் குற்றங்குறை காணாதிருப்போம்.
மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்
17. மத்தேயு 7:12-க்கு இசைய மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
17 கடவுள் தம்முடைய ஊழியர்களின் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பதன்மூலம் ஒரு தகப்பனைப் போல நடந்துகொள்கிறார் என மலைப்பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 7:7-12-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைத்தது கவனிக்கத்தக்கது. அவர் சொல்வதாவது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத். 7:12) இந்த விதத்தில் சக மனிதரிடம் நடந்துகொண்டால்தான், உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாய் நாம் இருப்போம்.
18. நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே நாமும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென ‘நியாயப்பிரமாணம்’ எப்படிக் காட்டியது?
18 மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோமோ அப்படியே நாமும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென இயேசு குறிப்பிட்ட பிறகு, “இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று சொன்னார். அவர் சொன்ன விதமாகவே நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும்போது, ‘நியாயப்பிரமாணத்தின்’ நோக்கத்திற்கு இசைய நாம் செயல்படுகிறோம். இந்த நியாயப்பிரமாணம் என்பது, ஆதியாகமம்முதல் உபாகமம்வரை உள்ள பைபிள் புத்தகங்கள் ஆகும். இந்தப் புத்தகங்கள், தீமையை ஒழித்துக்கட்ட யெகோவா ஒரு வித்துவைப் பிறப்பிக்கப் போவதைப்பற்றிக் குறிப்பிட்டன; அதோடு, பொ.ச.மு. 1513-ல் மோசே வாயிலாக இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கின. (ஆதி. 3:15) மேலும், இஸ்ரவேலர் நியாயமாய் நடந்துகொள்வது, பாரபட்சம் காட்டாதிருப்பது, தேசத்தில் துன்பப்படுகிறவர்களுக்கும், தங்கள் மத்தியில் குடியிருக்கும் அந்நியர்களுக்கும் நல்லதையே செய்வது போன்ற பிற விஷயங்களையும் இந்த நியாயப்பிரமாணம் தெளிவாக விளக்கியது.—லேவி. 19:9, 10, 15, 34.
19. நாம் நல்லதையே செய்ய வேண்டுமென ‘தீர்க்கதரிசனங்கள்’ எப்படிக் காட்டுகின்றன?
19 ‘தீர்க்கதரிசனங்கள்’ என இயேசு குறிப்பிட்டபோது எபிரெய வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன புத்தகங்களே அவருடைய மனதில் இருந்திருக்க வேண்டும். இந்தப் புத்தகங்களில், கிறிஸ்துவில் நிறைவேற்றமடைந்த மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருக்கின்றன. ஜனங்கள் தமக்குப் பிரியமானதைச் செய்து, மற்றவர்களிடம் நல்ல விதத்தில் நடந்துகொள்ளும்போது அவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார் என்பதையும் இப்புத்தகங்கள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, “நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; . . . இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, . . . ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்” என்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை ஏசாயா தீர்க்கதரிசனத்தில் காணப்படுகிறது. (ஏசா. 56:1, 2) ஆம், தம்முடைய ஜனங்கள் எப்போதும் நல்லதையே செய்ய வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்யுங்கள்
20, 21. மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் எப்படி உணர்ந்தார்கள், மலைப்பிரசங்கத்தை நீங்கள் ஏன் தியானிக்க வேண்டும்?
20 இயேசு தம்முடைய ஒப்பற்ற மலைப்பிரசங்கத்தில் சொன்ன முக்கியமான குறிப்புகளில் சிலவற்றையே நாம் சிந்தித்திருக்கிறோம். இருப்பினும், அந்தச் சமயத்தில் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை நம்மால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. “இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என பைபிள் சொல்கிறது.—மத். 7:28, 29.
21 முன்னறிவிக்கப்பட்ட ‘வியத்தகு ஆலோசகர்’ இயேசு கிறிஸ்துவே என்பது தெள்ளத் தெளிவானது. (ஏசா. 9:6, பொ.மொ.) தம்முடைய பரலோகத் தகப்பனின் கண்ணோட்டத்தை இயேசு எந்தளவுக்குப் புரிந்து வைத்திருந்தார் என்பதற்கு மலைப்பிரசங்கம் ஒரு தலைசிறந்த உதாரணம். அந்தச் சொற்பொழிவில் நாம் இதுவரை சிந்தித்திருக்கிற குறிப்புகள் தவிர இன்னும் அநேக குறிப்புகளும் உள்ளன. உதாரணத்திற்கு, உண்மையான சந்தோஷத்தைப்பற்றி அதில் விவரமாய் சொல்லப்பட்டுள்ளது; ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பது எப்படி, நீதியாய் நடந்துகொள்வது எப்படி, எதிர்காலம் பாதுகாப்பாயும் சந்தோஷமாயும் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளும் அதில் உள்ளன. ஆகவே, கடவுளுடைய உதவிக்காக ஜெபம்செய்து, மத்தேயு புத்தகத்தில் 5 முதல் 7 வரையான அதிகாரங்களை கவனமாக நாம் மீண்டும் படித்துப் பார்க்கலாம், அல்லவா? இந்த அதிகாரங்களில் காணப்படும் இயேசுவின் வியத்தகு ஆலோசனைகளைத் தியானியுங்கள். மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்து சொன்னவற்றை வாழ்க்கையில் பின்பற்றுங்கள். அப்போது, நீங்கள் இன்னும் சிறந்த விதத்தில் யெகோவாவுக்குப் பிரியமாய் நடப்பவர்களாகவும், மற்றவர்களிடம் நல்ல விதத்தில் நடந்துகொள்பவர்களாகவும், எப்போதும் நல்லதையே செய்பவர்களாகவும் இருப்பீர்கள்.
உங்கள் பதில்?
• நம்முடைய பகைவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
• நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?
• மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பதைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?
• மத்தேயு 7:12-க்கு இசைய மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
“குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு ஏன் சொன்னார் தெரியுமா?
[பக்கம் 8-ன் படம்]
நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
உங்களிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் அவர்களிடம் எப்போதும் நடந்துகொள்கிறீர்களா?