மத்தேயு எழுதியது
7 பின்பு அவர், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்,+ அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.+ 2 மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்;+ எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.*+ 3 உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை* கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்?+ 4 உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று கேட்க முடியும்? 5 வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்;+ அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துப்போட்டு, திரும்பிவந்து உங்களைக் குதறிவிடும்.+
7 கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்;+ தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.+ 8 ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்,+ தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும். 9 உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா? 10 மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? 11 பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்கு+ நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!+
12 அதனால், மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்;+ சொல்லப்போனால், திருச்சட்டத்தின் சாராம்சமும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் சாராம்சமும் இதுதான்.+
13 இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்;+ ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். 14 ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.+
15 போலித் தீர்க்கதரிசிகளைக்+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்;+ ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள்.+ 16 அவர்களுடைய கனிகளை* வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். முட்செடியிலிருந்து திராட்சைகளையும், முட்புதரிலிருந்து அத்திகளையும் பறிக்க முடியுமா?+ 17 நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்.+ 18 நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்க முடியாது, கெட்ட மரம் நல்ல கனியைக் கொடுக்க முடியாது.+ 19 நல்ல கனி கொடுக்காத மரமெல்லாம் வெட்டப்பட்டு, நெருப்பில் போடப்படும்.+ 20 இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்.+
21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+ 22 அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே,+ உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோமே, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோமே, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களை* செய்தோமே’+ என்று சொல்வார்கள்; 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது!* அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’+ என்று சொல்வேன்.
24 நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான்.+ 25 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. 26 அதேசமயம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான்.+ 27 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது,+ அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.
28 இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்.+ 29 ஏனென்றால், அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.+