யோவான் எழுதியது
20 வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையில், இன்னும் இருட்டாக இருந்தபோதே, மகதலேனா மரியாள் கல்லறைக்கு* போனாள்;+ கல்லறையின் கல் ஏற்கெனவே எடுத்துப் போடப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.+ 2 அதனால், சீமோன் பேதுருவிடமும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரிடமும்+ ஓடிப்போய், “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து+ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள்.
3 அப்போது பேதுருவும் மற்ற சீஷரும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டார்கள். 4 சொல்லப்போனால், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால், மற்ற சீஷர் பேதுருவைவிட வேகமாக ஓடி முதலில் கல்லறைக்குப் போய்ச் சேர்ந்தார். 5 அவர் கல்லறைக்குள் குனிந்து பார்த்தபோது, அங்கே நாரிழை* துணிகள் கிடப்பதைப் பார்த்தார்,+ ஆனால் உள்ளே போகவில்லை. 6 அதன் பின்பு, சீமோன் பேதுருவும் வந்துசேர்ந்தார்; அவர் கல்லறைக்குள் போய், நாரிழைத் துணிகள் கிடப்பதைப் பார்த்தார். 7 இயேசுவின் தலையில் சுற்றப்பட்டிருந்த துணி மற்ற கட்டுத்துணிகளோடு இல்லாமல் தனியாக ஓர் இடத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தார். 8 அப்போது, கல்லறைக்கு முதலில் வந்துசேர்ந்த சீஷரும் உள்ளே போய்ப் பார்த்தார், பின்பு நம்பினார். 9 அவர் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள்.+ 10 பின்பு, அந்தச் சீஷர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
11 ஆனால், மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுதபடியே குனிந்து கல்லறைக்குள் பார்த்தாள். 12 அப்போது, வெள்ளை உடை அணிந்த இரண்டு தேவதூதர்கள்+ இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், தலைமாட்டில் ஒருவரும் கால்மாட்டில் ஒருவருமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். 13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “யாரோ என் எஜமானை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று சொன்னாள். 14 அவள் இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அங்கே இயேசு நிற்பதைப் பார்த்தாள். ஆனால், அவர் இயேசு என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.+ 15 இயேசு அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து, “ஐயா, நீங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் போய் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னாள். 16 அப்போது இயேசு, “மரியாளே!” என்று கூப்பிட்டார். அவள் திரும்பிப் பார்த்து, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சொன்னாள்; இதற்கு, “போதகரே!” என்று அர்த்தம். 17 இயேசு அவளிடம், “என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே. ஏனென்றால், நான் இன்னும் என் தகப்பனிடம் போகவில்லை. நீ என் சகோதரர்களிடம் போய்,+ ‘நான் என் தகப்பனிடமும்+ உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும்+ உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்’ என்று சொல்” என்றார். 18 அதன்படியே, மகதலேனா மரியாள் சீஷர்களிடம் போய், “நான் எஜமானைப் பார்த்தேன்!” என்று சொன்னாள். அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களையும் அவர்களிடம் சொன்னாள்.+
19 அன்று வாரத்தின் முதலாம் நாள். அன்று சாயங்காலத்தில், யூதர்களுக்குப் பயந்து சீஷர்கள் கதவுகளைப் பூட்டி வைத்திருந்தார்கள். இருந்தாலும், இயேசு அவர்கள் நடுவில் வந்து நின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார். 20 இப்படிச் சொல்லிவிட்டு, தன்னுடைய கைகளையும் தன்னுடைய விலாவையும் அவர்களுக்குக் காட்டினார்.+ எஜமானைப் பார்த்ததால் சீஷர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ 21 இயேசு மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்குச் சமாதானம்!+ தகப்பன் என்னை அனுப்பியதுபோல்+ நானும் உங்களை அனுப்புகிறேன்”+ என்று சொன்னார். 22 இப்படிச் சொன்ன பின்பு அவர்கள்மேல் ஊதி, “கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+ 23 யாருடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். யாருடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவை அவர்களுக்கு மன்னிக்கப்படாது” என்று சொன்னார்.
24 ஆனால், இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டு பேரில்* ஒருவரான திதிமு என்ற தோமா+ அவர்களோடு இல்லை. 25 அதனால் மற்ற சீஷர்கள் தோமாவிடம், “நாங்கள் எஜமானைப் பார்த்தோம்!” என்று சொன்னார்கள். அப்போது அவர், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தை* பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவருடைய விலாவில்+ கை வைத்தால் தவிர நான் நம்ப மாட்டேன்” என்று சொன்னார்.
26 எட்டு நாட்களுக்குப் பின்பு சீஷர்கள் மறுபடியும் வீட்டுக்குள் இருந்தார்கள், தோமாவும் அங்கே இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு அவர்கள் நடுவில் வந்துநின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார். 27 பின்பு தோமாவிடம், “உன் விரலால் என் கைகளைத் தொட்டுப் பார். உன் கையை என் விலாவில் வைத்துப் பார். சந்தேகப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கை வை” என்று சொன்னார். 28 அதற்கு தோமா, “என் எஜமானே, என் கடவுளே!” என்று சொன்னார். 29 அப்போது இயேசு, “என்னைப் பார்த்ததால்தான் நம்புகிறாயா? பார்க்காமலேயே நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று சொன்னார்.
30 உண்மைதான், இயேசு தன்னுடைய சீஷர்கள் முன்னால் இன்னும் நிறைய அடையாளங்களைச் செய்தார்; அவை இந்தச் சுருளில் எழுதப்படவில்லை.+ 31 ஆனால், இயேசுதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து என்று நீங்கள் நம்புவதற்காகவும், அப்படி நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் வாழ்வு பெறுவதற்காகவும்தான் இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.+