உண்மையான கடவுளுக்கு நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்களா?
“நீங்களே என் சாட்சிகள், நானே கடவுள்; இது யெகோவாவின் திருவாக்கு.”—ஏசாயா 43:12, தி.மொ.
இயேசு மரிப்பதற்கு சற்று முன்பு ‘தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து’ ஜெபித்தார். தாம் யாரிடம் ஜெபித்துக் கொண்டிருந்தாரோ அவரை “ஒன்றான மெய்த் தேவன்” என்றழைத்தார். (யோவான் 17:1, 3) நியாயமாகவே சர்வலோகப் பேரரசரும் சிருஷ்டிகருமாக உயிருள்ள, உண்மையான ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும். நாம் உயிரோடிருப்பதற்குக் காரணம் அந்த உண்மையான கடவுளாதலால், அவருக்கு உரிய கனத்தை அவருக்கே செலுத்த வேண்டும். வெளிப்படுத்துதல் 4:11 விளக்குகிற விதமாகவே இது இருக்க வேண்டும்: “யெகோவாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்; உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
2 தம்முடைய பூமிக்குரிய சிருஷ்டிப்புகளை வெகுவாக பாதித்திருக்கும் கெட்ட நிலைமைகளை உண்மையான கடவுள் என்றென்றுமாகப் பொருத்துக் கொண்டிருக்க மாட்டார். அதே சமயத்தில் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு தாம் என்ன செய்யப் போகிறார் என்பதையும், தம்முடைய வணக்கத்தார் என்ன செய்யும்படி தாம் எதிர்பார்க்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கச் செய்வார் என்று நம்புவது நியாயமானது. (ஆமோஸ் 3:7) சத்தியத்தை நாடிடும் ஆட்களோடு அவர் எப்படி தொடர்பு கொள்கிறார்? அவர் மனமுவந்து செயல்படும் மனிதரையே தம்முடைய சார்பில் பேசும் ஆட்களாக உபயோகிக்கிறார். “நீங்களே என் சாட்சிகள் . . . இது யெகோவாவின் திருவாக்கு . . . எனக்கு முன் உண்டான தெய்வம், இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா.” (ஏசாயா 43:10, 11, தி.மொ.) உண்மையான கடவுள் தம்முடைய சாட்சிகளாக யாரை பயன்படுத்துகிறார் என்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அவர்களும் அவர்களுடைய செய்தியும் எப்படி மற்ற தெய்வங்களை வணங்குகிறவர்களுக்கு முரணாக இருக்கிறது?
மற்ற தெய்வங்களுக்கு ஒரு சவால்
3 மற்ற தெய்வங்களுக்கெதிரான இந்தச் சவாலை பதிவு செய்யும்படியாக யெகோவா ஏசாயாவை ஏவினார்: “இப்படிப்பட்டவைகளை [திருத்தமான தீர்க்கதரிசனத்தை] அறிவிப்பது அவர்களில் [புற தேசங்களின் மற்றும் மக்களின் தெய்வங்களில்] யார்? முன் அறிவித்திருக்கிறவைகளை [எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறவைகளை] இப்பொழுது சொல்பவன் யார்? கேட்பவர்கள் உண்மையென்று சொல்லும்படி [தெய்வங்களாக] அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து தங்களைக் குற்றமற்றவர்களென்று காட்டட்டும்.” (ஏசாயா 43:9, தி.மொ.) இவ்விதமாக மக்கள் வணங்கிவரும் எல்லா தெய்வங்களுமே தங்களைக் கடவுட்கள் என்று நிரூபிக்கும்படி யெகோவா அவற்றிற்கு சவாலிடுகிறார். தங்களுடைய தெய்வங்கள் நம்பிக்கைக்குறியவைகள் என்பதற்கும் வணக்கத்திற்கு பாத்திரமுள்ளவைகள் என்பதற்கும் அவற்றின் சாட்சிகள் அத்தாட்சியளிக்க வேண்டும்.
4 ஆனால் அந்தத் தெய்வங்களும் அவற்றின் வணக்கத்தாரும் அளித்திருப்பது என்ன? அவை நம்மை உண்மையான சமாதானத்திடமாகவும் செழிப்பினிடமாகவும், ஆரோக்கியத்தினிடமாகவும் ஜீவனிடமாகவும் வழிநடத்தியிருக்கின்றனவா? பூர்வீக தேசங்களின் அநேக தெய்வங்கள் மதிப்பற்றவையாயும் சக்தியற்றவையாயும் நிரூபித்திருக்கின்றன என்பதற்கு சரித்திரம் அத்தாட்சியளிக்கிறது. வணக்கத்துக்குரிய பொருட்களாகவுங்கூட அவை தப்பிப் பிழைத்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அவை இன்று இல்லை. பூர்வ எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சியா, கிரீஸ் ரோம் மற்றும் பிற நாடுகளின் தெய்வங்கள் பொய்யானவையாக நிரூபித்திருக்கின்றன. அவை சரித்திர நூல்களிலும் அல்லது வெறுமெனே பார்ப்பதற்கான காட்சி சொரூபங்களாக அரும்பொருட்காட்சி சாலைகளில்தான் காணப்படுகின்றன.
5 என்றபோதிலும் தற்கால தெய்வங்களும் அவற்றின் வணக்கத்தாரும் பூர்வீக கடவுட்களையும் வணக்கத்தாரையும்விட மேம்பட்டவையா? இந்து மதத்தில் மட்டும் பல கோடி தெய்வங்கள் இருக்கின்றன. புத்த மதத்தினர், கத்தோலிக்கர், கன்பூசியர், யூதர், முகமதியர், புராட்டஸ்டாண்டினர், ஷின்டோ மதத்தினர் மற்றும் டாவோ மதத்தினர் ஆகியோரும் மற்ற அநேகரும் தங்களுடைய சொந்த தெய்வங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் இயற்கை சக்திகளும் மிருகங்களும் பொருட்களும் கடவுட்களாக வணங்கப்பட்டு வருகிறது. தேசப்பற்றும், பொருளாசையும் கடவுட்களாகிவிட்டிருக்கின்றன மற்றும் தனக்குத்தானே கடவுளாகி விட்டிருக்கிறான். எப்படியெனில், அநேகர் அவற்றுக்குத்தானே தங்களுடைய முக்கிய பக்தியை செலுத்தி வருகின்றனர். “நானே யெகோவா, வேறொருவருமில்லை; என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை,” என்று அறிக்கையிட்டிருப்பவரை உண்மையில் பிரதிநிதித்துவம் செய்கிற வணக்க முறை எது?—ஏசாயா 45:5, தி.மொ.
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”
6 மதத்தைக் குறித்ததில் உண்மை மதம் எது, பொய் மதம் எது என்பதை அடையாளங்காண இயேசு நம்பத்தகுந்த ஒரு விதிமுறையை அமைத்தார். அவர் சொன்னதாவது: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.” (மத்தேயு 7:16-19) எனவே பொய்க் கடவுட்கள் இருக்க உண்மைக் கடவுள் யார் என்று உறுதி செய்துகொள்ள, பொய் வணக்கத்தாரிருக்க, உண்மை வணக்கத்தார் யார் என்று உறுதி செய்துகொள்ள அவர்கள் என்ன கனிகளைக் கொடுக்கிறார்கள் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் கொடுப்பது “நல்ல” கனிகளா, அல்லது “கெட்ட” கனிகளா?
7 உதாரணமாக, உலகிலுள்ள எந்த மதம் உலகமுழுவதிலும் அதைப் பின்பற்றுகிறவர்களிடையே நிலையான உண்மையான சமாதானத்தைக் கொண்டிருக்கிறது? நிச்சயமாகவே, உண்மை மதத்தின் அங்கத்தினர்கள், ஆவிக்குரிய சகோதரர்கள், ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கக்கூடாது. ஆனால் இந்த 20-ம் நூற்றாண்டுப் போர்களில் பத்து கோடி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்தப் போர்கள் அனைத்துமே இந்த உலகின் மதங்களின் ஆதரவு பெற்றவை. அநேக சமயங்களில் அவர்கள் தங்களுடைய சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கொன்றிருக்கின்றனர். கத்தோலிக்கர் கத்தோலிக்கரை கொன்றிருக்கின்றனர், புராட்டஸ்டாண்டினர் புராட்டஸ்டாண்டினரை கொன்றிருக்கின்றனர், முகமதியர் முகமதியரைக் கொன்றிருக்கின்றனர், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் அதே பாதையில்தான் சென்றிருக்கின்றனர்.
8 “கடவுளுடைய பெயரில் செய்யப்படும் வன்முறைச் செயல்கள்,” என்ற ஒரு தலையங்கக் கட்டுரையில், மைக் ராய்க்கோ என்பவர், கடவுளிடம் பேசுவது போன்று இந்த உலக மதங்களைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “நூற்றுக்கணக்கில் ஒருவரையொருவர் கொல்லுவதன் மூலம் அவர்கள் உம்மிடமாகத் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஒரு பக்கத்தில் இருப்பவர்கள் இன்னொரு பக்கத்திலிருப்பவர்களை முற்றிலுமாக நிர்மூலமாக்கிவிடுவது உம்மை வணங்குவதில் தங்களுடைய வழியே சரியானது என்று நிரூபிப்பதாயிருக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் போல் என்பது என் ஊகிப்பு.” போப் தன்னை சமாதான மனிதனாக சித்தரித்திட, “அவரைப் பின்பற்றுகிறவர்களோ எரிச்சலின் உச்சநிலையில் பல லட்சக்கணக்கான காலன் இரத்தம் சிந்துவது தெரிந்ததே.” உண்மைதான், ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர், ‘இந்த உலகம் பைத்தியமாகிவிட்டது’ என்றார். அவர் சொன்னார்: “மக்களை அன்பில் கட்டியமைத்திட வேண்டிய ஆழ்ந்த மத நம்பிக்கைகள் அநேக சமயங்களில் பைத்தியத்தின் பாகமாகவும் கொலையின் பாகமாகவும் இருப்பதாகத் தெரிகிறது.”
9 அப்படிப்பட்ட கெட்ட கனிகள், உண்மையான கடவுளை வணங்குகிறவர்கள் கொடுக்க வேண்டிய கனிகளுக்கு நேரெதிரானவையாக இருக்கின்றன. (கலாத்தியர் 5:19-23) எனவே போரிடும் மதங்களையும் தத்துவங்களையும் பின்பற்றுகிறவர்கள் நிச்சயமாகவே பொய் வணக்கத்தின் பாகமாக இருக்கிறார்கள், அதாவது “ஊமையான மதிப்பற்ற தெய்வங்களை” நோக்கியிருந்த பூர்வ எகிப்தியர், அசீரியர், பாபிலோனியர் மற்றும் பிற தேசத்தவர் போன்றிருக்கின்றனர். (ஆபகூக் 2:18, NW) உண்மையான கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை பூர்வீக பொய் வணக்கத்தின் பேரில் நிறைவேற்றமடைந்ததுபோலவே நம்முடைய காலத்திலும் இருக்கும்: “மதிப்பில்லா தெய்வங்கள் தாமே முற்றிலுமாய் ஒழிந்துபோகும்.” (ஏசாயா 2:18, NW) அவருடைய எச்சரிப்புகள் நம்பத்தகுந்தவை: “மதிப்பில்லா அந்தத் தெய்வங்களினிடமாகத் திரும்பாதீர்கள்.”—லேவியராகமம் 19:4, NW.
யெகோவாவுக்கு சாட்சி கொடுப்பவர்கள் யார்?
10 உண்மையான கடவுளுக்கு சாட்சியாக இருக்கும் ஒருவன் அவரைக் குறித்து சாட்சி சொல்பவனாக இருக்க வேண்டும். இந்த உலக மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் அப்படிப்பட்ட சாட்சி கொடுக்கிறார்களா? இந்த மதங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய வணக்கத்தைக் குறித்து உங்களிடம் எந்தளவுக்கு அடிக்கடி பேசுகிறார்கள்? தங்களுடைய கடவுளைப் பற்றி சாட்சி கொடுப்பதற்காக அவர்கள் எப்பொழுது உங்கள் வீட்டுக்கு வந்தார்கள்? சாட்சிகளை வழங்கும்படியாக உண்மையான கடவுள் பொய்க் கடவுளுக்கு சவால் விட்டிருக்க, அதற்கு செவிகொடுப்பார் யாருமில்லை. இந்த உலக மதத்தை சேர்ந்த மக்கள் அப்படிப்பட்ட சாட்சி கொடுப்பதில்லை. அவர்களால் உண்மையான கடவுள் யார் என்றோ அல்லது அவருடைய நோக்கங்கள் என்னவென்றோ சொல்ல முடியாது. அவர்களுடைய மத குருமார் அவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்க தவறிவிட்டனர்: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.”—மத்தேயு 15:14.
11 உண்மையான கடவுளுக்கு சாட்சி கொடுக்க தங்களுடைய நேரத்தையும் பொருளுடைமைகளையும் தங்களுடைய வாழ்க்கையையுங்கூட அற்பணிக்க மனமுள்ளவர்களாயிருப்பது யார்? “நானே யெகோவா, என் நாமம் இதுவே” என்று உண்மையான கடவுள் அறிக்கை செய்கிறார் என்று மக்களிடம் சொல்வது யார்? (ஏசாயா 42:8, தி.மொ.) “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்,” என்று போதிப்பது யார்? (சங்கீதம் 83:17) தாம் பூமியில் வாழ்ந்த சமயத்தில் அந்த உண்மையான கடவுளிடம் “உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்,” என்று இயேசு சொல்ல முடிந்தது. (யோவான் 17:6) நம்முடைய காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். அவர்களுடைய பெயர் யெகோவாவின் சாட்சிகள் என்பது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!
ராஜ்யத்தைக் குறித்து சாட்சி சொல்லுதல்
12 உண்மையான கடவுளுடைய பெயரைத் தெரியப்படுத்துவதோடுகூட, அவருடைய நோக்கங்களைக் குறித்து அவருடைய சாட்சிகள் என்ன சொல்லிக் கொண்டிருப்பார்கள்? “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று உண்மையான கடவுளிடம் ஜெபிக்க தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் இயேசு நல்ல முன்மாதிரியை வைத்தார். (மத்தேயு 6:10) கடவுளுடைய பரலோக ராஜ்யம் என்பது, கடைசியில் இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்யப்போகும் அரசாங்கமாகும். (தானியேல் 2:44) இயேசுவுடைய போதனையின் பொருள் இதுவே. (மத்தேயு 4:23) மனிதனுடைய பிரச்னைகளுக்கு இந்த ராஜ்யம் ஒன்றுதான் பரிகாரம் என்ற காரணத்தால்தானே அவர் பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “முதலாவது ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்கொண்டேயிருங்கள்.”—மத்தேயு 6:33, NW.
13 கடவுளுடைய ராஜ்யத்துக்கு இன்று சாட்சி கொடுப்பது யார்? உலக மதங்களை ஆய்வு செய்வதில் ஆழ்ந்த அக்கறையுடைய பேராசிரியர் C.S. பிராடன் பின்வருமாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதையும் தங்களுடைய சாட்சி கொடுக்கும் வேலையால் நிரப்பிவிட்டிருக்கின்றனர். . . . உலகிலே யெகோவாவின் சாட்சிகளைப் போல ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதில் காண்பித்திருக்கும் அதிக அளவான வைராக்கியத்தை எந்த ஒரு மத தொகுதியும் காண்பித்ததில்லை.” ஆனால் அவர் இப்படியாக 40 வருடங்களுக்கு முன்பு எழுதினார்! இன்று ராஜ்ய சாட்சி அதைவிட பெரிய அளவில் கொடுக்கப்பட்டு வருகிறது, எப்படியெனில் இப்பொழுது பத்து மடங்குக்கும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள்! பூமியெங்குமுள்ள 54,900 சபைகளில் ஏறக்குறைய முப்பத்தைந்து லட்சம் பேர் அந்த ராஜ்யத்துக்கு சாட்சி பகருகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. இந்த நல்ல கனிகள்தாமே, யெகோவா உண்மையான தீர்க்கதரிசனத்தின் கடவுள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. அவர்தாமே தம்முடைய குமாரனாகிய இயேசு நம்முடைய காலத்தைக் குறித்து முன்னறிவிக்கும்படி ஏவினார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.”—மத்தேயு 24:14; யோவான் 8:28.
கடவுளுடைய அன்பைப் பின்பற்றுதல்
14 கடவுளுடைய உண்மையுள்ள சாட்சிகள் அவருடைய பிரதான குணமாகிய அன்பை பிரதிபலிக்க வேண்டும். “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) ஆம், “தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும் பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும் . . . பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
15 யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே அப்படிப்பட்ட அன்பைக் கொண்டிருக்கிறார்கள். போர், தேசபக்தி மற்றும் இனப்பற்றின் தெய்வங்களுக்கு அவர்கள் தங்களைக் கீழ்ப்படுத்துவதில்லை. இந்த உலகத்தில் நடைபெறும் எந்தப் போரையும் அவர்கள் ஆதரிப்பதில்லை. எனவே உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அவர்கள், இயேசு சொன்ன விதமாக, “உலகத்தாரல்ல,” மற்றும் அவர்கள் ‘பட்டயத்தைப் போட்டுவிட்டார்கள்.’—யோவான் 17:14; மத்தேயு 26:52.
16 “வன்முறையை நியாய நிரூபணம் செய்வது குறித்து கூடுதல் காரியங்கள்” என்ற பொருள் கொண்ட ஓர் ஆய்வுறை பின்வருமாறு கூறியது: “வன்முறையில்லாத ‘கிறிஸ்தவ நடுநிலைமை’ என்ற தங்கள் நிலைநிற்கையை, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து காத்து வந்திருக்கிறார்கள் . . . எந்த விதமான தேசிய, இராணுவ சேவைக்கு எதிரான அவர்களுடைய நிலைநிற்கையில் தொடர்ந்திருத்தலும் தேசிய சின்னங்களுக்கு வணக்கத்துக்குரிய கனம் கொடுப்பதை மறுப்பதும் பல நாடுகளில் வழக்குகள், சிறை தண்டனை மற்றும் கட்டுக்கடங்காத கும்பல்களின் தாக்குதல்களில் விளைவடைந்திருக்கிறது . . . என்றபோதிலும் சாட்சிகள் வன்முறை வழியிலே பிரதிபலித்ததில்லை.” பிரேஸில் தினசரியாகிய ஓ டெம்போ அவர்களைக் குறித்து பின்வருமாறு கூறியது: “பூகோளமெங்கும் தங்களுடைய மதப் பிரச்சாரங்கள் நிரம்பிய கவர்ச்சியான மதங்கள் பல இருந்தாலும், இந்த பூமியில் அந்த ஒரே விதமான அன்பைக் காட்டும் எந்த ஒரு மதமும் இருக்கிறதில்லை.” இந்த உண்மையான அன்புதானே கடவுளுடைய உண்மையான சாட்சிகளை அடையாளப்படுத்துகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
துன்புறுத்தல் சாட்சி பகரும் வேலையை அதிகரிக்கச் செய்கிறது
17 துன்புறுத்தல் கூடுதலான பரந்த சாட்சி கொடுக்கப்படுவதில் விளைவடையக்கூடும். உதாரணமாக, இந்தியாவில் ஏறக்குறைய 8,000 யெகோவாவின் சாட்சிகள்தான் இருக்கின்றனர். என்றபோதிலும் அண்மையில் இந்தத் தேசத்தில் 11 சாட்சி பிள்ளைகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் மாதிரியைப் பின்பற்றி நீதிமன்றத்தில், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்று சொன்னதன் மூலம் யெகோவாவின் பெயரும் அவருடைய நோக்கங்களும் பேரளவில் பிரஸ்தாபப்படுத்தப்பட்டது. (அப்போஸ்தலர் 5:29) தேசிய கீதம் பாடாததனால் இந்த இந்திய பிள்ளைகள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டனர். ஆனால் பெங்களூர் டெக்கான் ஹெரல்டு அறிக்கையின்படி இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதாவது, “தேசிய கீதத்தைக் கட்டாயமாய்ப் பாட வேண்டிய நிபந்தனை இந்தத் தேசத்தில் இல்லை.” இந்தப் பிள்ளைகள் “சரியான மரியாதை காண்பித்திருக்கிறார்கள்,” என்றும், அவர்கள் பாடாததுதானே “எந்த விதத்திலும் கீழ்ப்படியாதத் தன்மையைக் குறிக்கவில்லை” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்தப் பிள்ளைகள் பள்ளியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
18 அதே தினசரி பின்வரும் காரியத்தையும் குறிப்பிட்டது: “இந்தப் பிள்ளைகள் தேசிய கீதம் பாட மறுத்ததற்குக் காரணம், யெகோவாவின் சாட்சிகள் தங்களைக் கிறிஸ்தவர்களாகவும் கடவுளுடைய ராஜ்யத்துக்கே தங்களை அற்பணித்திருப்பதாகவும் கருதுகிறார்கள். . . . எனவே அவர்கள் தேசத்தின் எந்த விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் பங்குகொள்வதில்லை.” மேலும், கல்கத்தாவின் டெலிகிராஃப் பின்வருமாறு அறிக்கையிட்டது: “நம்முடைய தேசத்தில் அண்மைக் காலம் வரையில் பெரும்பாலும் அறியப்படாதிருந்த யெகோவாவின் சாட்சிகளை இந்தப் பள்ளிப் பிள்ளைகளின் செயல் யாவரறிய வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.” ஆம், முடிவு வருவதற்கு முன்பு ‘ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி எல்லா தேசங்களுக்கும் ஒரு சாட்சியாக பிரசங்கிக்கப்படும்.’—மத்தேயு 24:14.
உண்மையான கடவுளுக்கு சாட்சிகள் கூட்டிச் சேர்க்கப்படுதல்
19 இன்று, உண்மையான கடவுளாகிய யெகோவா, தம்முடைய அரசுரிமைக்கும் நோக்கங்களுக்கும் சாட்சி கொடுத்திட தம்முடைய மக்களை பயன்படுத்துகிறார். அவருடைய செய்தியை அவர்கள் மிகுந்த பெலத்தோடு அறிவித்து வருகையில், எல்லா தேசங்களிலிருந்தும் உண்மை மனமுள்ள ஆட்களை ஏராளமான எண்ணிக்கையில் தம்முடைய வணக்கத்தாருடைய கூட்டுறவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். (ஏசாயா 2:2-4) யெகோவாவை வணங்க விரும்பியவர்கள் பொய்க் கடவுட்களின் வணக்கம் பலமாக இருந்த பூர்வீக பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட விதமாகவே, இவர்களும் தங்கள் பொய்க் கடவுள் வணக்கத்தை விட்டு உண்மைக் கடவுளை வணங்கத் திரும்புகிறார்கள்.—ஏசாயா 43:14.
20 உண்மையான கடவுளுக்கு நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்களா? உண்மை வணக்கத்தின் சார்பாக நிலைநிற்கை எடுத்து இந்த உலகத்தின் மற்றும் அதன் பொய்க் கடவுட்களின் இரத்தப் பழியிலும் வீழ்ச்சியுற்ற ஒழுக்கத்திலும் பங்குகொள்வதைத் தவிர்ப்பீர்களா? கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு துரிதப்படுத்துகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடுகிற வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு [பாபிலோனிய பொய் வணக்கத்தை விட்டு] வெளியே வாருங்கள்.” (வெளிப்படுத்துதல் 18:4) ஆம், “வெளியேறுங்கள்,” காலம் கடந்து போவதற்கு முன்பே செயல்படுங்கள்! ஒரு கத்தோலிக்க பத்திரிகைக்கு தன்னுடைய மதத் தெரிவு குறித்து பேட்டியளித்த அந்த நபரைப் போல இராதேயுங்கள். அவர் சொன்னார்: “நான் யெகோவாவின் ஒரு பார்வையாளன் என்று நினைக்கிறேன். யெகோவாவின் சாட்சிகள் நம்புவதை வெகுவாக நம்புகிறேன்—ஆனால் என்னை அதில் உட்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை.”
21 என்றபோதிலும் யெகோவா இந்த உலகத்தின் பொய்க் கடவுட்களையும் அவற்றின் வணக்கத்தாரையும் அழிக்கும்போது இந்த பூமியிலுள்ள ஒவ்வொருவரும் உட்படுவார்கள். “வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின் கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும்.” (எரேமியா 10:11) அந்தச் சமயத்தில் யாருமே பார்வையாளராக நின்றுகொண்டிருக்க மாட்டார்கள். உண்மையான கடவுளுக்கு சாட்சி கொடுப்பவர்களும் அப்படிச் செய்யாதவர்களும் மட்டுமே அங்கு இருப்பார்கள். (மத்தேயு 24:37-39; 2 பேதுரு 2:5; வெளிப்படுத்துதல் 7:9-15) உண்மையான கடவுளுக்கு நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்களா? நீங்கள் அப்படி இருக்க வேண்டும். ஏனென்றால், “உண்மையான கடவுளே நம்மை இரட்சித்து வரும் கடவுள், மரணத்துக்குத் தப்பிவிக்கிற வழிகள் ஆண்டவராகிய யெகோவாவில் உண்டு.”—சங்கீதம் 68:20, தி.மொ.
(w88 2⁄1)
விமர்சன கேள்விகள்
◻ உண்மையான கடவுள் பொய்க் கடவுட்களுக்கெதிராக விடும் சவால் என்ன?
◻ நம்பத்தகுந்த எந்த விதிமுறையின் அடிப்படையில் நாம் பொய் வணக்கத்திலிருந்து உண்மை வணக்கத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும்?
◻ இந்த உலகத்தின் தெய்வங்கள் பூர்வீக தெய்வங்களைப் போலவே மதிப்பற்றவை என்பதை என்ன கனிகள் காண்பிக்கின்றன?
◻ உண்மையான கடவுளின் சாட்சிகள் என்ன நல்ல கனிகளைத் தரவேண்டும்?
◻ பொய் வணக்கத்தை விட்டுவிடுவதற்கான நடவடிக்கையை இப்பொழுதே எடுக்க வேண்டியது ஏன் அவசரமானது?
[கேள்விகள்]
1. நாம் ஏன் உண்மையான கடவுளை கனப்படுத்த வேண்டும்?
2. (எ) உண்மையான கடவுளைக் குறித்து எதை நம்புவது நியாயமானது? (பி) அவரைத் தொழுதுகொள்ள விரும்புவோரிடமாக அவர் எப்படி தொடர்பு கொள்கிறார்?
3. எல்லா தெய்வங்களுக்கும் யெகோவா விடுத்திடும் சவால் என்ன?
4. பூர்வீக தேசங்களின் கடவுட்கள் மதிப்பற்றவையாயிருந்தன என்பது நமக்கு எப்படித் தெரியும்?
5. நவீன காலத்திய கடவுட்களைக் குறித்து நாம் என்ன கேட்டுக்கொள்ளலாம்?
6. பொய் வணக்கத்திலிருந்து உண்மை வணக்கத்தை நாம் எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டலாம்?
7. இந்த நூற்றாண்டுச் சரித்திரம் இவ்வுலக மதங்களைக் குறித்து நமக்கு என்ன சொல்லுகிறது?
8. நம்முடைய காலங்களில் மதத்தின் தோல்வியைக் குறித்து கருத்துரையாளர்கள் எப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்?
9. நாம் ஏன் “மதிப்பில்லா தெய்வங்களைப்” பின்பற்றக் கூடாது?
10. இந்த உலக மதங்களைத் தழுவியிருக்கும் ஆட்கள் உண்மையான கடவுளுக்கு சாட்சிகளா?
11. உண்மையான கடவுளுடைய பெயருக்கு யார் மட்டுமே சாட்சி கொடுத்து வருகிறார்கள்?
12. உண்மையான சாட்சிகள் மற்றவர்களுக்கு எந்த முக்கியமான உபதேசத்தை சொல்லிவர வேண்டும்?
13. (எ) கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் செய்யும் பிரசங்கிப்பு வேலை என்ன உண்மைகளை வெளிப்படுத்துகின்றன? (பி) ராஜ்ய பிரசங்கிப்பு வேலை எப்படி யெகோவாவே உண்மையான தீர்க்கதரிசனத்தின் கடவுள் என்பதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது?
14. கடவுளுடைய உண்மையான சாட்சிகள் பின்பற்ற வேண்டிய தன்மை யாது? அப்படிச் செய்யாதிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
15. யெகோவாவின் சாட்சிகள் உண்மையான அன்பை வெளிக்காட்டுகிறவர்கள் என்று ஏன் சொல்லலாம்?
16. கடவுளுடைய உண்மையான சாட்சிகளை அடையாளங்காண மற்றவர்கள் எப்படி உதவுகிறார்கள்?
17, 18. துன்புறுத்தல் ராஜ்ய சாட்சிக்குக் கூடுதல் துணையாக இருக்கக்கூடும் என்பதற்கு அண்மையில் சம்பவித்த என்ன சம்பவம் எடுத்துக்காட்டாயிருக்கிறது?
19. உண்மையான கடவுளை வணங்க விரும்பும் நேர்மை இருதயமுள்ள ஆட்கள் என்ன செய்ய வேண்டும்?
20, 21. வெறும் ஒரு பார்வையாளராக இராமல் பொய்க் கடவுட்களை விட்டொழிப்பது ஏன் இன்று துரிதமாக செய்யப்பட வேண்டிய ஒன்று?
[பக்கம் 17-ன் படம்]
பூர்வீக தேசங்களின் மதிப்பற்ற தெய்வங்கள் ஆராதனைக்குரிய பொருட்களாக நிலைக்காமற்
போய்விட்டன
[பக்கம் 18-ன் படம்]
நம்முடைய நூற்றாண்டில் இந்த உலக மதங்களால் ஆதரிக்கப்பட்ட போர்களில் ஏறக்குறைய பத்து கோடி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்
[பக்கம் 19-ன் படம்]
உண்மையான சாட்சிகள் தங்களிடையே கொண்டிருக்கும் அன்பினால் அறியப்படுவார்கள் என்று இயேசு சொன்னார்