கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!
“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் கிருபையாய் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”—எரேமியா 31:3, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. தம்முடைய நாளிலிருந்த பாமர மக்களிடமாக இயேசு வைத்திருந்த மனநிலை எவ்வாறு பரிசேயர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது?
அதை அவருடைய கண்களில் அவர்களால் காண முடிந்தது. இந்த மனிதனாகிய இயேசு தங்கள் மதத் தலைவர்களைப்போல் இல்லவே இல்லை; அவர் அக்கறை காட்டினார். இந்த மக்களுக்காக மனதுருகினார், ஏனெனில் அவர்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்”தனர். (மத்தேயு 9:36) அவர்களுடைய மதத் தலைவர்கள் அன்பான, இரக்கமுள்ள கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அன்பான மேய்ப்பர்களாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பாமர மக்களை அவர்கள் வெறும் தாழ்வான மக்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் இகழ்வாகக் கருதினர்!a (யோவான் 7:47-49; ஒப்பிடுக: எசேக்கியேல் 34:4.) தெளிவாகவே, அத்தகைய புரட்டப்பட்ட, வேதப்பூர்வமற்ற நோக்குநிலை, யெகோவா தமது மக்களைக் கருதிய நோக்குநிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாயிருந்தது. அவர் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சொல்லியிருந்தார்: “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்.”—எரேமியா 31:3, தி.மொ.
2. கடவுளுடைய பார்வையில் தான் மதிப்பற்றவர் என்று யோபின் மூன்று தோழர்களும் எவ்வாறு அவரை நம்பவைக்க முயன்றனர்?
2 என்றாலும், யெகோவாவின் நேசமுள்ள ஆடுகளை அவை மதிப்பற்றவை என்று நம்பவைக்க முதலாவதாகப் பரிசேயர்கள் முயற்சி செய்யவேயில்லை. யோபின் காரியத்தைக் கவனியுங்கள். யெகோவாவுக்கு அவர் நீதிமானும் உத்தமனுமாக இருந்தார், ஆனால் தான் வாழ்ந்ததற்கான எந்த அத்தாட்சியும் விட்டுச்செல்லாமல் மரிக்கக்கூடிய ஓர் ஒழுக்கங்கெட்ட நபராகவும் பொல்லாத விசுவாசதுரோகியாகவும் யோபு இருந்தார் என்று அந்த மூன்று ‘தேற்றரவாளர்களும்’ மறைமுகமாகச் சொன்னார்கள். கடவுள் தம்முடைய சொந்த தேவதூதர்களையுங்கூட நம்பாமல், பரலோகத்தையே அசுத்தமாகக் கருதினதினிமித்தம் யோபு தன் பங்கில் காட்டிய எந்த நீதியையும் கடவுள் மதிப்பாகக் கருதமாட்டார் என்று அவர்கள் ஆணித்தரமாகச் சொன்னார்கள்!—யோபு 1:8; 4:18; 15:15, 16; 18:17-19; 22:3.
3. இன்று, மக்கள் நேசிக்கப்படாதவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்று நம்பவைக்கும் முயற்சியில், சாத்தான் எந்த உபாயத்தைப் பயன்படுத்தி வருகிறான்?
3 இன்று, மக்கள் நேசிக்கப்படாதவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்று நம்பவைக்கும் முயற்சியில், சாத்தான் இன்னும் இந்தச் ‘சூழ்ச்சி வேலையையே’ பயன்படுத்தி வருகிறான். (எபேசியர் 6:11, NW அடிக்குறிப்பு) அவன் அடிக்கடி மக்களின் இறுமாப்பையும் தற்பெருமையையும் கவர்ந்திழுத்து அவர்களை வஞ்சிக்கிறான் என்பது உண்மையே. (2 கொரிந்தியர் 11:3) ஆனால் பலவீனமான ஆட்களின் சுய மரியாதையைக் கீழ்ப்படுத்துவதாலும் மகிழ்ச்சியடைகிறான். இந்தக் கடினமான “கடைசிநாட்களில்” இது விசேஷமாக அவ்வாறு இருக்கிறது. அநேகர் இன்று “சுபாவ அன்பில்லாத” குடும்பங்களில் வளர்ந்து வருகின்றனர்; பலர் கொடுமையுள்ள, தன்னலமிக்க, தலைகனம் படைத்த ஆட்களோடு போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5) கொடுமை, இன வேற்றுமை, பகைமை, அல்லது தகா உபயோகம் ஆகியவை நிறைந்த ஆண்டுகள், அவர்கள் மதிப்பற்றவர்கள் மேலும் நேசிக்கப்படாதவர்கள் என்று அத்தகைய ஆட்களை நம்பச் செய்யும். ஒரு மனிதன் எழுதினார்: “நான் யாரையும் நேசிக்கவேண்டும் என்றோ என்னை யாராகிலும் நேசிக்கவேண்டும் என்றோ உணருவது கிடையாது. கடவுள் என்மீது அக்கறை கொள்ளத்தான் செய்கிறார் என்று நம்புவதை மிகவும் கடினமாகக் காண்கிறேன்.”
4, 5. (அ) சுய-மதிப்பில்லாமை என்ற கருத்து ஏன் வேதவசனங்களுக்கு மாறாயிருக்கிறது? (ஆ) நம்முடைய முயற்சிகள் எதுவுமே ஒன்றுக்கும் மதிப்பில்லை என்று நம்புவதால் வரும் ஆபத்தானவொரு விளைபயன் என்ன?
4 சுய-மதிப்பில்லாமை என்ற கருத்து, கடவுளுடைய வார்த்தையின் சத்தியமாகிய மீட்கும்பொருள் என்னும் போதகத்தை இருதயத்தில் குத்தும்படி செய்கிறது. (யோவான் 3:16) என்றும் வாழ்வதற்கான வாய்ப்பை நமக்குப் பெற்றுத்தர கடவுள் தம்முடைய சொந்த குமாரனின் அருமையான உயிராகிய அவ்வளவு உயர்ந்த ஒரு பரிசை செலுத்துவாரேயானால், உண்மையில் அவர் நம்மில் அன்புகூரத்தான் வேண்டும்; ஏதோவொரு வகையில் நாம் அவருடைய பார்வையில் மதிப்புள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும்!
5 கூடுதலாக, நாம் கடவுளுக்குப் பிரியமற்றவர்களாக இருக்கிறோம் என்றும் நம்முடைய முயற்சிகள் எதுவுமே ஒன்றுக்கும் மதிப்பில்லை என்றும் உணருவது எவ்வளவு உற்சாகமிழக்கச் செய்வதாயிருக்கும்! (ஒப்பிடுக: நீதிமொழிகள் 24:10.) இந்த எதிர்மறையான கருத்தில், எங்கு முடியுமோ அங்குக் கடவுளுக்கான நம்முடைய சேவையை விருத்தி செய்வதற்கு உதவ, திட்டமிட்டு அளிக்கப்பட்ட நல்லெண்ணத்துடன் கூடிய உற்சாகமுங்கூட சிலருக்கு எதிர்மாறானதாக, கண்டிப்பதுபோல் தொனிக்கக்கூடும். நாம் செய்வதெல்லாம் போதாது என்ற நம்முடைய சொந்த உள்ளார்ந்த முடிவை அது எதிரொலிப்பதாகத் தோன்றக்கூடும்.
6. நம்மைக் குறித்த மட்டுமீறிய எதிர்மறையான எண்ணங்களுக்கான சிறந்த மாற்று மருந்து என்ன?
6 அத்தகைய எதிர்மறையான உணர்ச்சிகளை உங்களுக்குள் நீங்கள் அறியவந்தால், மனமுறிவடையாதீர்கள். அவ்வப்போது நம்மில் அநேகர் நம்மைக் குறித்து நியாயமற்ற விதத்தில் குற்றம் காண்பவர்களாக இருக்கிறோம். மேலும் கடவுளுடைய வார்த்தை “சீர்திருத்தலுக்”கும் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்”கும் திட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். (2 தீமோத்தேயு 3:17; 2 கொரிந்தியர் 10:4) அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால் தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (1 யோவான் 3:19, 20) அவ்வாறெனில், நாம் யெகோவாவுக்கு அருமையானவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் போதிக்கும் மூன்று வழிகளைச் சிந்திக்கலாம்.
யெகோவா உங்களை மதிப்பாகக் கருதுகிறார்
7. கடவுளுடைய பார்வையில் அவர்களுடைய மதிப்பைக் குறித்து இயேசு எவ்வாறு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் போதித்தார்?
7 முதலாவதாக, கடவுளுடைய பார்வையில் நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நேர்முகமாக பைபிள் போதிக்கிறது. இயேசு சொன்னார்: “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6, 7) அந்நாட்களில், உணவிற்காக விற்கப்படுவதில் மிகவும் மலிவான பறவை குருவியாகும், அப்படியிருந்தும் ஒன்றுங்கூட அதன் படைப்பாளரால் கவனியாமல் விட்டுவிடப்படவில்லை. இவ்வாறு வியக்கத்தக்க வித்தியாசத்திற்கான அடித்தளமானது போடப்படுகிறது: மிக மிக மதிப்புவாய்ந்த மனிதர்களைப் பொருத்தமட்டில், கடவுள் முற்றுமுழுமையாக அவர்களை அறிந்து வைத்திருக்கிறார். நம் தலையிலுள்ள மயிரெல்லாம் தனித்தனியாக எண்ணப்பட்டிருப்பதுபோல இருக்கிறது அது!
8. நம் தலைகளிலுள்ள மயிர்களை யெகோவாவால் எண்ண முடியும் என்று நினைப்பது ஏன் கூடிய காரியந்தான்?
8 மயிர்கள் எண்ணப்படுவதா? இயேசு கொடுத்த உவமையின் இந்த அம்சம் கூடிய காரியமல்ல என்று நீங்கள் சந்தேகப்பட்டால், இதைச் சிந்தித்துப் பாருங்கள்: கடவுள் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை முற்றுமுழுமையாக நினைவில் வைத்திருப்பதால் அவர்களை அவரால் உயிர்த்தெழுப்ப முடியும்—அவர்களுடைய சிக்கலான மரபியல் குறியீடுகளும் அவர்களுடைய வருடக்கணக்கான ஞாபகங்களும் அனுபவங்களும் அடங்கலாக எல்லா நுணுக்கத்தோடும் அவர்களை மறுபடியும் படைக்க முடியும். ஒப்பிடுகையில், நம்முடைய மயிர்களை எண்ணுவது (சாதாரண தலையானது, சுமார் 1,00,000 மயிர்களை முளைப்பிக்கும்) சர்வசாதாரண செயலாகவே இருக்கும்!—லூக்கா 20:37, 38.
யெகோவா நம்மில் எதைப் பார்க்கிறார்?
9. (அ) யெகோவா மதிப்பாகக் கருதும் சில குணங்கள் யாவை? (ஆ) அத்தகைய குணங்கள் ஏன் அவருக்கு அருமையானவையாய் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
9 இரண்டாவதாக, யெகோவா நம்மில் எதை மதிப்பாகக் கருதுகிறார் என்று பைபிள் நமக்குப் போதிக்கிறது. எளிதாகச் சொன்னால், நம்முடைய நற்குணங்களிலும் நம்முடைய பிரயாசைகளிலும் அவர் சந்தோஷமடைகிறார். தாவீது ராஜா தன் மகனாகிய சாலொமோனிடம் சொன்னார்: “கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.” (1 நாளாகமம் 28:9) இந்த வன்முறையான, பகைமை நிறைந்த உலகில் இருக்கும் நூறு கோடிக்கணக்கான மனித இருதயங்களைக் கடவுள் ஆராய்ந்து வரும்போது, சமாதானத்தையும் சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கும் ஓர் இருதயத்தைக் கண்டுபிடிக்கையில் அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! (ஒப்பிடுக: யோவான் 1:47; 1 பேதுரு 3:4.) கடவுள் தம்மிடம் அன்பால் பொங்குகிற ஓர் இருதயத்தையும் தம்மைப் பற்றி கற்றுக்கொண்டு, அத்தகைய அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதில் நாட்டமுள்ள ஓர் இருதயத்தையும் பார்க்கையில் என்ன நடக்கிறது? மல்கியா 3:16-ல், யெகோவா தம்மைக் குறித்து பிறரிடம் பேசுகிறவர்களைக் கேட்பதாகவும் “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிற” யாவருக்கும் “ஞாபகப் புஸ்தகம் ஒன்”றைக் கொண்டிருப்பதாகவுங்கூட நமக்குச் சொல்கிறார். அத்தகைய குணங்கள் அவருக்கு அருமையானவையே!
10, 11. (அ) யெகோவா தங்களுடைய நற்குணங்களை மதிப்பிடுவதற்கான அத்தாட்சியை எவ்வாறு சிலர் குறைத்து மதிப்பிடக்கூடும்? (ஆ) யெகோவா எல்லா நற்குணங்களையும் மதிப்பாகக் கருதுகிறார் என்று அபியாவின் உதாரணம் எவ்வாறு காட்டுகிறது?
10 என்றபோதிலும், சுயகண்டனத்திற்கு உட்படும் இருதயம் கடவுளுடைய பார்வையில் நம்முடைய மதிப்பிற்கான அத்தகைய அத்தாட்சியைக் காணாதபடி செய்யக்கூடும். அது ஒருவேளை, ‘ஆனால் என்னைவிட அந்தக் குணங்களில் பெரும்பான்மையர் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றனர். அவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு ஏமாற்றமடைவார்!’ என்று விடாது முணுமுணுக்கக்கூடும். யெகோவா ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ கண்டிப்பான தராதரங்களை உடையவராகவோ இல்லை. (கலாத்தியர் 6:4) அதிக புத்திக்கூர்மையோடு அவர் இருதயங்களை அறிகிறார், மேலும் எல்லா நற்குணங்களையும் மதிப்பாகக் கருதுகிறார்.
11 உதாரணமாக, யெரொபெயாம் ராஜாவின் விசுவாசதுரோக வம்சமுழுவதும் அழிக்கப்பட்டு, “எரு”வைப்போல களையப்பட வேண்டும் என்று யெகோவா உத்தரவிட்டபோது, ராஜாவின் ஒரு மகனாகிய அபியா மாத்திரம் கண்ணியமான விதத்தில் அடக்கம் பண்ணப்படும்படி அவர் கட்டளையிட்டார். ஏன்? “இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக அவனிடத்திலே ஏதோவொரு நல்ல காரியம் காணப்பட்டது.” (1 இராஜாக்கள் 14:10, 13, NW) அபியா யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தானாக இருந்ததை இது குறிக்கிறதா? அவசியம் குறிக்கவேண்டியதில்லை, ஏனெனில் அவனுடைய பொல்லாத வீட்டாராகிய மீதிப்பேரைப்போல, அவனும் மரித்தான். (உபாகமம் 24:16) இருந்தாலும், அபியாவின் இருதயத்தில் கண்ட “ஏதோவொரு நல்ல காரிய”த்தை மதிப்பாகக் கருதி, யெகோவா அதற்கேற்ப செயல்பட்டார். முழு பைபிளின்பேரில் மாத்யூ ஹென்ரியின் விளக்கவுரை என்ற ஆங்கில நூல் குறிப்பிடுகிறது: “அவ்விதமான ஏதோ நல்ல காரியம் இருந்தால் அது கண்டறியப்படும்: அதை நாடுகிற கடவுள் அதைப் பார்க்கிறார், எவ்வளவு அற்பமாயிருந்தாலும் அதனால் அவர் பிரியப்படுகிறார்.” உங்களிடம் குறைந்தளவான ஏதோவொரு நற்குணத்தைக் கடவுள் பார்த்தாரேயானால் அவரை நீங்கள் உண்மையோடு சேவிக்கும் வரையில் அதை அவரால் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
12, 13. (அ) யெகோவா நம்முடைய முயற்சிகளை மதிப்பாகக் கருதுகிறார் என்று சங்கீதம் 139:3 எவ்வாறு காட்டுகிறது? (ஆ) யெகோவா நம் செயல்களை சலிக்கிறார் என்று எந்தக் கருத்தில் சொல்ல முடியும்?
12 யெகோவா நம்முடைய முயற்சிகளை அவ்விதமாகவே மதிப்பாகக் கருதுகிறார். சங்கீதம் 139:1-3-ல் நாம் வாசிக்கிறோம்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் [“நான் பயணப்படுவதையும் நீட்டி படுப்பதையும் அளந்திருக்கிறீர்,” NW]; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.” ஆகவே யெகோவா நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கிறார். ஆனால் வெறுமனே அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகத்தை அவர் செய்கிறார். “என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்ற சொற்றொடர் எபிரெயுவில், “என் வழிகளை எல்லாம் நீர் பொக்கிஷப்படுத்துகிறீர்” அல்லது “என் வழிகளை எல்லாம் நீர் அருமையாகக் கருதுகிறீர்” என்ற அர்த்தத்தையும் கொடுக்கக்கூடும். (ஒப்பிடுக: மத்தேயு 6:19, 20.) நாம் இந்தளவு அபூரணர்களாயும் பாவமுள்ளவர்களாயும் இருக்கையில் யெகோவாவால் எவ்வாறு நம் வழிகளை அருமையாகக் கருத முடியும்?
13 அக்கறையூட்டும் விதமாக, சில வல்லுநர்களின் பிரகாரம், யெகோவா தன் பயணங்களையும் ஓய்வு வேளைகளையும் ‘அளந்திருக்கிறார்’ என்று தாவீது எழுதுகையில், எபிரெயு நேர்பொருளில் “சலித்தலை” அல்லது “புடைத்தலை” அர்த்தப்படுத்தியது. ஒரு நோக்கீட்டு நூல் குறிப்பிட்டது: “அது, எல்லா பதரையும் புடைத்தெடுத்து எல்லா தானியத்தையும் விட்டுவிடுவதை—மதிப்பு வாய்ந்த எல்லாவற்றையும் சேமித்து வைப்பதை . . . அர்த்தப்படுத்துகிறது. ஆகவே இங்கு எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், கடவுள் அவரை, சொல்லப்போனால், சலித்தார். . . . அவர் எல்லா பதரையும் அல்லது மதிப்பற்ற எல்லாவற்றையும் பிரித்தெடுத்து, மிச்சமிருந்தது போலியல்லாததாகவும் கணிசமானதாகவும் இருக்கும்படி செய்தார்.” சுயகண்டனத்திற்கு உட்பட்டிருக்கும் இருதயம் நாம் செய்யும் காரியங்களை எதிரான விதத்தில் சலிக்கக்கூடும், கடந்தகால குற்றங்களுக்காக இரக்கமற்ற விதத்தில் நம்மைக் கண்டித்து, செய்த காரியங்களை ஒன்றுமில்லாததாக்கக்கூடும். ஆனால் நாம் உண்மையில் மனந்திரும்பி தப்பிதங்களைத் திரும்பவும் செய்யாதபடியிருக்க பிரயாசப்பட்டால் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிப்பார். (சங்கீதம் 103:10-14; அப்போஸ்தலர் 3:19) அவர் மதிப்புள்ளவற்றைத் தனியே பிரித்தெடுத்து, நம்முடைய நற்காரியங்களை நினைவுகூருகிறார். உண்மையில் சொன்னால், நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கும் வரை, அவற்றை என்றும் நினைவில் வைத்திருக்கிறார். இவற்றை மறப்பதை அநீதியாக அவர் கருதுவார், அவர் ஒருக்காலும் அநீதியுள்ளவருமல்ல!—எபிரெயர் 6:10.
14. கிறிஸ்தவ ஊழியத்தில் நம்முடைய செயல்பாட்டை யெகோவா மதிப்பாகக் கருதுகிறார் என்று எது காட்டுகிறது?
14 கடவுள் மதிப்பாகக் கருதும் சில நற்காரியங்கள் யாவை? தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, ஏறக்குறைய நாம் செய்யக்கூடிய எதுவுமே நற்காரியங்களாகும். (1 பேதுரு 2:21) அவ்வாறெனில், ஓர் அதிமுக்கியமான வேலையானது நிச்சயமாகக் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பரப்புவதாகும். ரோமர் 10:15-ல் நாம் வாசிக்கிறோம்: “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்.” நாம் எப்போதுமே நம்முடைய சாதாரண கால்களை “அழகான”வையாக நினைக்க மாட்டோமென்றாலும், இங்கே பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தையே கிரேக்க செப்டூவஜன்ட் மொழிபெயர்ப்பில் ரெபெக்காள், ராகேல், யோசேப்பு ஆகியோரை விவரிக்க பயன்படுத்தப்பட்டது—இவர்கள் யாவரும் தங்கள் அழகுக்குப் பேர்பெற்றவர்களாக இருந்தனர். (ஆதியாகமம் 26:7; 29:17; 39:6) ஆகவே நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் சேவையில் ஈடுபட்டிருப்பதானது, அவருடைய பார்வையில் மிகவும் அழகானதாகவும் அருமையானதாகவும் இருக்கிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.
15, 16. யெகோவா நம் சகிப்புத்தன்மையை ஏன் மதிப்பாகக் கருதுகிறார், இந்த உண்மையை சங்கீதம் 56:8-ல் உள்ள வார்த்தைகள் எவ்வாறு வலியுறுத்துகின்றன?
15 கடவுள் மதிப்பாகக் கருதும் இன்னொரு குணம் நம்முடைய சகிப்புத்தன்மையாகும். (மத்தேயு 24:13, NW) நீங்கள் யெகோவாவுக்கு உங்களுடைய புறமுதுகைக் காட்டும்படி செய்ய சாத்தான் விரும்புகிறான் என்பதை நினைவில் வையுங்கள். யெகோவாவுக்கு உத்தமமாய் நிலைத்திருக்கும் ஒவ்வொரு நாளும் சாத்தானின் நிந்திப்புகளுக்கு மறுவுத்தரவு தர நீங்கள் உதவியிருக்கிற இன்னொரு நாளாகும். (நீதிமொழிகள் 27:11) சில சமயம் சகித்திருப்பது அவ்வளவு சுலபமல்ல. உடல்நலப் பிரச்சினைகள், பண நெருக்கடிகள், உணர்ச்சி சம்பந்தப்பட்ட துன்பம், மேலும் இதர இடையூறுகள் கடந்துபோகும் ஒவ்வொரு நாளையும் ஒரு சோதனையாக மாறச் செய்யலாம். அத்தகைய சோதனைகளில் சகித்திருப்பது யெகோவாவுக்கு விசேஷமாய் அருமையாக இருக்கிறது. ஆகையால்தான், தாவீது ராஜா தன்னுடைய கண்ணீரை அடையாளப்பூர்வமான “துருத்தி”யில் சேகரித்து வைக்கும்படி யெகோவாவைக் கேட்டார்; “அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” என்று அவர் கேட்டார். (சங்கீதம் 56:8) ஆம், யெகோவாவுக்கான நம்முடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்காக நாம் சகிக்கும் எல்லா கண்ணீரையும் துன்பத்தையும் அவர் பொக்கிஷமாகக் கருதி, நினைவில் வைக்கிறார். அவையும் அவருடைய பார்வையில் அருமையாயிருக்கின்றன.
16 நம்முடைய நற்குணங்களையும் முயற்சிகளையும் கருத்தில்கொண்டு, நம் ஒவ்வொருவரிலும் மிகவும் மதிப்பானதை யெகோவா காண்கிறார் என்பது எத்தனை தெளிவாயிருக்கிறது! சாத்தானின் உலகம் எப்படி நம்மை நடத்தினாலுஞ்சரி, யெகோவா நம்மை அருமையானவர்களாகவும் “சகல ஜாதிகளாலும் விரும்பப்ப”டுகிற காரியங்களின் பாகமாகவும் கருதுகிறார்.—ஆகாய் 2:7.
யெகோவா தம்முடைய அன்பைக் காட்ட என்ன செய்திருக்கிறார்
17. யெகோவாவும் இயேசுவும் தனிப்பட்ட நபர்களாக நம்மிடம் அன்புகூருகிறார்கள் என்று கிறிஸ்துவின் மீட்கும் பலி ஏன் நம்மை நம்பவைக்க வேண்டும்?
17 மூன்றாவதாக, யெகோவா நம்மிடம் அன்பை நிரூபித்துக் காட்ட அதிகத்தைச் செய்கிறார். நிச்சயமாகவே, கிறிஸ்துவின் மீட்கும் பலி, நாம் மதிப்பற்றவர்கள் அல்லது நேசிக்கப்படாதவர்கள் என்ற சாத்தானிய பொய்க்கு மிகவும் அதிக பலமான பதிலாகத் திகழ்கிறது. கழுமரத்தில் இயேசு பட்ட வேதனைமிக்க மரணமும் தம்முடைய நேச குமாரனின் மரணத்தைப் பார்ப்பதில் யெகோவா சகித்த இன்னும் அதிகப்படியான வேதனையும் நம்மிடம் அவர்களுக்குள்ள அன்பிற்கான நிரூபணமாக இருக்கிறது என்பதை மறக்கவே வேண்டாம். மேலும், அந்த அன்பு தனிப்பட்ட விதமாக நமக்குப் பொருந்துகிறது. அவ்வாறே அப்போஸ்தலன் பவுல் அதைக் கருதி எழுதினார்: ‘தேவனுடைய குமாரன் என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.’—கலாத்தியர் 2:20.
18. யெகோவா எந்தக் கருத்தில் நம்மைக் கிறிஸ்துவிடம் இழுத்துக்கொள்ளுகிறார்?
18 கிறிஸ்துவினுடைய பலியின் நன்மைகளை அனுகூலப்படுத்திக்கொள்வதற்கு தனிப்பட்ட விதத்தில் நமக்கு உதவுவதன் மூலம் யெகோவா தம்முடைய அன்பை நம்மிடம் நிரூபித்திருக்கிறார். யோவான் 6:44-ல் இயேசு சொன்னார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” தனிப்பட்ட ஆட்களாக நம்மை வந்தடையும் பிரசங்க வேலையின் மூலமும் நமக்கு மட்டுப்பாடுகளும் அபூரணங்களும் இருந்தாலும் ஆவிக்குரிய சத்தியங்களைக் கிரகித்து, அப்பியாசிக்க யெகோவா பயன்படுத்தும் அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமும் யெகோவா தனிப்பட்ட விதமாக நம்மை அவருடைய குமாரனிடமாகவும் நித்திய ஜீவ நம்பிக்கையிடமாகவும் இழுத்துக்கொள்ளுகிறார். ஆகையால், இஸ்ரவேலைப் பற்றி சொன்னதுபோல யெகோவா நம்மைப் பற்றி சொல்லக்கூடும்: “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் கிருபையாய் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”—எரேமியா 31:3, தி.மொ.
19. ஜெபமென்னும் சிலாக்கியமானது யெகோவா தனிப்பட்ட அன்பை நம்மீது வைத்திருக்கிறார் என்று ஏன் நம்பச் செய்ய வேண்டும்?
19 என்றாலும், ஒருவேளை ஜெபமென்னும் சிலாக்கியத்தின் மூலம் யெகோவாவின் அன்பை நாம் மிகவும் நெருக்கமான விதத்தில் அனுபவிக்கலாம். நம் ஒவ்வொருவரையும் அவரிடம் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று அழைக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:17) அவர் செவிகொடுக்கிறார்! “ஜெபத்தைக் கேட்கிறவரே” என்றுங்கூட அழைக்கப்படுகிறார். (சங்கீதம் 65:2) இந்தப் பதவியை அவர் எந்தவொரு நபருக்கும் தம்முடைய சொந்த குமாரனுக்குங்கூட ஒப்படைக்கவில்லை. சற்று யோசித்துப் பாருங்கள்: சர்வலோக படைப்பாளர் பேச்சு சுயாதீனத்தோடு ஜெபத்தில் அவரை அணுகும்படி நம்மை ஊக்குவிக்கிறார். உங்களுடைய மன்றாட்டுகள் யெகோவா என்ன செய்திருக்க மாட்டாரோ அதையே செய்யும்படியாக அவரைத் தூண்டக்கூடும்.—எபிரெயர் 4:16; யாக்கோபு 5:16; காண்க: ஏசாயா 38:1-16.
20. கடவுள் நம்மில் அன்புகூருவதானது ஏன் நம்முடைய பங்கில் சுய முக்கியத்துவத்திற்கோ தற்பெருமைக்கோ சாக்குப்போக்காக இருக்கக்கூடாது?
20 எந்தச் சமநிலையான கிறிஸ்தவனும் தான் உண்மையில் இருப்பதைவிட அதிமுக்கியமான நபராகத் தன்னைத்தானே கருதுவதற்கு சாக்குப்போக்காக, அத்தகைய கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டை எடுத்துக்கொள்ள மாட்டார். பவுல் எழுதினார்: “எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.” (ரோமர் 12:3) ஆகவே நம்முடைய பரம பிதாவினுடைய அன்பின் இதமான வெப்பத்தை அனுபவிக்கையில், நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும் கடவுளுடைய தயவு தகுதியற்றது என்பதை நினைவில் வைக்கவும் வேண்டும்.—லூக்கா 17:10-ஐ ஒப்பிடுக.
21. என்ன சாத்தானிய பொய்யை நாம் தொடர்ந்து எதிர்த்துநிற்க வேண்டும், எந்தத் தெய்வீக சத்தியத்தை நாம் எப்போதும் யோசிக்க வேண்டும்?
21 அழிந்துவருகிற இந்தப் பழைய உலகில் சாத்தான் முன்னேற்றுவிக்கும் எல்லா எண்ணங்களையும் தடுக்க நம்மால் ஆனதையெல்லாம் நாம் ஒவ்வொருவரும் செய்வோமாக. நாம் மதிப்பற்றவர்கள் அல்லது நேசிக்கப்படாதவர்கள் என்ற யோசனையை நிராகரிப்பதை அது உட்படுத்துகிறது. கடவுளுடைய மிகப் பரந்த அன்புங்கூட மேற்கொள்ள முடியாதபடி மிகவும் கடினமான அளவுக்கு, நீங்களே உங்களை ஓர் இடையூறாக காணும்படியாகவோ சர்வத்தையும் பார்க்கும் அவருடைய கண்கள் காண முடியாதளவுக்குக்கூட உங்களுடைய நற்கிரியைகள் மிகவும் அற்பமாயிருப்பதாகவோ அவருடைய அருமை குமாரனின் மரணமுங்கூட நிவிர்த்தி செய்ய முடியாதபடி உங்களுடைய பாவங்கள் மிகத் திரளாக இருப்பதாகவோ இந்த ஒழுங்குமுறையில் உள்ள வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்திருக்கிறதென்றால், பொய்யே உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. அத்தகைய பொய்களை அவற்றிற்குரிய எல்லா அருவருப்போடும் அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்! ரோமர் 8:38, 39-ல் உள்ள அப்போஸ்தலன் பவுலின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தைகளை எப்போதும் நாம் மனதில் வைப்போமாக: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”
[அடிக்குறிப்புகள்]
a உண்மையில் பார்த்தால், அவர்கள் ஏழையான மக்களை “அம்ஹாஆரெட்ஸ்” அல்லது “மண்ணுக்குரிய மக்கள்” என்ற அவமதிக்கும் பதத்தால் புறக்கணித்தனர். ஒரு நிபுணரின் பிரகாரம், ஒருவர் இவர்களை நம்பி, விலையுயர்ந்த பொருட்களைக் கொடாமலோ இவர்களுடைய சாட்சியத்தை நம்பாமலோ இவர்களுக்கு விருந்தோம்பாமலோ இவர்களுடைய விருந்தாளிகளாக இல்லாமலோ இவர்களிடமிருந்து வாங்காமலோகூட இருக்கவேண்டும் என்று பரிசேயர்கள் கற்றுத்தந்தனர். ஒருவருடைய மகளை இத்தகையவரில் ஒருவருக்கு விவாகம்பண்ணிக் கொடுப்பது, அவளைக் கட்டி வெட்டவெளியில் ஒரு விலங்கின் முன்பாக உதவியற்ற நிலைமையில் விடுவதுபோல் இருக்கும் என்று மதத் தலைவர்கள் சொன்னார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
◻ நாம் மதிப்பற்றவர்கள், நேசிக்கப்படாதவர்கள் என்று ஏன் சாத்தான் நம்மை நம்பவைக்க முயலுகிறான்?
◻ யெகோவா நம் ஒவ்வொருவரையும் மதிப்பாகக் கருதுகிறார் என்று இயேசு எவ்வாறு போதித்தார்?
◻ யெகோவா நம் நற்குணங்களை உயர்வாக மதிக்கிறார் என்று நமக்கு எவ்வாறு தெரியும்?
◻ யெகோவா நம் முயற்சிகளை பொக்கிஷமாகக் கருதுகிறார் என்று எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?
◻ தனிப்பட்ட நபர்களாக நம்மிடம் யெகோவா எவ்வாறு தம் அன்பை நிரூபித்திருக்கிறார்?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவா தம்முடைய பெயரைச் சிந்திக்கிற யாவரையும் கவனித்து, நினைவில் வைக்கிறார்