நோவாவின் விசுவாசம் உலகை கண்டனம் செய்கிறது
உலகளாவிய ஜலப்பிரளயத்தின்போது உயிரைக் காப்பாற்ற தேவ பயமுள்ள நோவா பேழையைக் கட்டியதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது மிகப் பழமையான நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தக் கதை தெரியும். ஆனால் நோவாவின் வாழ்க்கை நம் அனைவருக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதைத்தான் பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி நாம் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்? நோவாவின் நிலைமையும் நம்முடைய நிலைமையும் ஒன்று போலிருக்கிறதா? அப்படியிருந்தால், எவ்வாறு அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் பயனடையலாம்?
நோவாவின் நாளைய உலகம்
ஆதாம் மரித்து 126 ஆண்டுகள் சென்ற பின் பொ.ச.மு. 2970-ல் நோவா பிறந்தார் என பைபிள் காலக்கணக்கு காட்டுகிறது. நோவாவின் நாளில், பூமி கொடுமையால் நிறைந்திருந்தது, ஆதாமின் சந்ததியாரில் அநேகர் தங்களுடைய மூதாதையின் தன்னிச்சையான போக்கையே பின்பற்றினார்கள். ஆகவே ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் யெகோவா கண்டார்.’—ஆதியாகமம் 6:5, 11, 12.
மனிதர் கலகம் செய்ததால் மாத்திரமே யெகோவா கோபம் கொள்ளவில்லை. ஆதியாகம பதிவு இவ்வாறு விளக்குகிறது: “தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். . . . அந்நாட்களில் இராட்சதர் [“நெபிலிம்,” NW] பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” (ஆதியாகமம் 6:2-4) இந்த வசனங்களை அப்போஸ்தலன் பேதுரு எழுதிய வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கீழ்ப்படியாமல் போன தூதர்களே இந்த “தேவகுமாரர்” என்பது தெரிகிறது. இருக்க வேண்டிய நிலையை விட்டுவிட்டு மாம்ச உடலெடுத்து வந்த இத்தூதர்கள் பெண்களுடன் உடலுறவு கொண்டதால் பிறந்த கலப்பின பிள்ளைகளே இந்த நெபிலிம்.—1 பேதுரு 3:19, 20.
“நெபிலிம்” என்பதன் அர்த்தம் ‘வீழ்த்துபவர்கள்.’ இது மற்றவர்களை விழச் செய்கிறவர்கள் என்பதைக் குறிக்கிறது. அவர்கள் கொடூரமாக துன்புறுத்தும் முரடர்களாக இருந்தனர், சிற்றின்ப வேட்கையுள்ள அவர்களுடைய அப்பாக்களின் பாவம் சோதோம் கொமோராவின் வக்கிர நடத்தையை ஒத்திருந்தது. (யூதா 6, 7) இவர்கள் ஒன்றுசேர்ந்து, பூமியில் தாங்கமுடியாத அக்கிரமத்தை நடப்பித்து வந்தார்கள்.
‘தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே உத்தமன்’
எங்கும் பொல்லாப்பு வியாபித்திருந்த காரணத்தால் மனிதகுலத்தை அழிக்க கடவுள் தீர்மானம் செய்தார். ஆனால் ஆவியால் ஏவப்பட்ட பதிவு இவ்வாறு கூறுகிறது: “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. . . . நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் [“கடவுளோடு நடந்தார்,” பொ.மொ.].” (ஆதியாகமம் 6:8, 9) அழிக்கப்படுவதற்கே தகுதியாயிருந்த தேவபக்தியற்ற உலகில் ‘கடவுளோடு நடப்பது’ எப்படி சாத்தியம்?
ஆதாமின் காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள மனிதனாகிய தன் தகப்பன் லாமேக்கிடமிருந்து நோவா நிறைய விஷயங்களைக் கற்றிருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. தன் மகனுக்கு நோவா (“அமைதி” அல்லது “ஆறுதல்” என்று அர்த்தம் தருவதாக கருதப்படுகிறது) என பெயர் வைக்கும்போது லாமேக்கு இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்.” பூமியின் மேலிருந்த சாபத்தை கடவுள் நீக்கிப்போட்டபோது அத்தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—ஆதியாகமம் 5:29; 8:21.
பெற்றோர் தேவபக்தியுள்ளவர்களாய் இருப்பதால் பிள்ளைகளுக்கு ஆன்மீகம் தானாக வந்துவிடும் என்று சொல்ல முடியாது, ஒவ்வொரு தனி நபரும் யெகோவாவோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நோவா கடவுள் அங்கீகரித்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் ‘கடவுளோடு நடந்தார்.’ கடவுளைப் பற்றி நோவா என்ன கற்றுக்கொண்டாரோ அது அவரை சேவிப்பதற்கு தூண்டியது. ‘மாம்ச ஜந்துக்களை அழிக்க பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்’ என்று கடவுள் தம்முடைய நோக்கத்தை தெரிவித்தபோது அவருடைய விசுவாசம் தடுமாறவில்லை.—ஆதியாகமம் 6:13, 17.
இதுவரை நிகழ்ந்திராத அழிவு கண்டிப்பாக வரும் என்பதில் நம்பிக்கை வைத்து, யெகோவா தந்த இந்தக் கட்டளைக்கு நோவா கீழ்ப்படிந்தார்: “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.” (ஆதியாகமம் 6:14) பேழையை கடவுள் சொன்னது போலவே உண்டுபண்ணுவது எளிதான வேலை இல்லை. ஆனாலும் “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:22) இதை நோவா தன்னுடைய மனைவி, சேம், காம், யாப்பேத் என்ற குமாரர்கள், அவர்களுடைய மனைவிமார்கள் ஆகியோரின் உதவியோடு செய்து முடித்தார். யெகோவா அப்படிப்பட்ட விசுவாசத்தை ஆசீர்வதித்தார். இன்று குடும்பங்களுக்கு என்னே அருமையான முன்மாதிரி!
பேழையைக் கட்டுவதில் என்னவெல்லாம் உட்பட்டிருந்தது? தண்ணீர் புக முடியாத, மூன்று மாடிகளைக் கொண்ட பிரமாண்டமான மரப்பெட்டியை உண்டுபண்ணும்படி நோவாவிடம் யெகோவா சொன்னார். அது சுமார் 133 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமுமாய் இருக்க வேண்டும் என்று சொன்னார். (ஆதியாகமம் 6:15, 16) இந்தப் பேழையின் கொள்ளளவு இன்று காணப்படும் பல்வேறு சரக்குக் கப்பல்களுக்கு ஒத்ததாக இருந்திருக்கும்.
என்னே பிரமாண்டமான ஒரு வேலை! ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, பேழை கட்டப்படும் இடத்துக்கு இழுத்து வந்து, அவற்றிலிருந்து மரப்பலகைகளை அல்லது உத்தரங்களை தயாரிக்க வேண்டியதாக இருந்திருக்கும். வேலை செய்வதற்கு தற்காலிகமாக சாரம் அமைப்பது, கடையாணிகள் அல்லது மரத்துண்டுகள் செய்வது, தண்ணீர் புகாதிருக்க தார் கொண்டு வருவது, தொட்டிகள், கருவிகள் ஆகியவற்றை முயன்று பெறுவது போன்ற பல காரியங்கள் உட்பட்டிருக்கும். பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் ஆகும் செலவு பற்றி வியாபாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதாக இருந்திருக்கும். மரப்பலகைகளை துல்லியமாக பொருத்தி போதிய அளவு உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதற்கு தச்சு வேலையில் திறமையும் தேவைப்பட்டிருக்கும். இந்த வேலை சுமார் 50 அல்லது 60 வருடங்கள் நடைபெற்றது என்றால் அதைக் குறித்து சற்று யோசித்து பாருங்கள்!
அடுத்து நோவா போதிய அளவு உணவையும் தீவனங்களையும் தயாரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். (ஆதியாகமம் 6:21) ஏராளமான மிருகங்களை கூட்டிச்சேர்த்து அவற்றை பேழைக்குள் கொண்டுசெல்ல வேண்டும். கடவுள் சொல்லியிருந்தபடியெல்லாம் நோவா செய்தார், வேலை செய்து முடிக்கப்பட்டது. (ஆதியாகமம் 6:22) யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தபடியால் வேலை முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டது.
‘நீதியை பிரசங்கித்தவர்’
பேழையைக் கட்டுவதோடுகூட, நோவா எச்சரிக்கை செய்தி ஒன்றை அறிவித்து ‘நீதியைப் பிரசங்கிப்பவராக’ கடவுளை உண்மையுடன் சேவித்துக்கொண்டிருந்தார். ஆனால், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் [ஜனங்கள்] உணராதிருந்தார்கள்.”—2 பேதுரு 2:5; மத்தேயு 24:38, 39.
அந்த நாட்களில் ஆன்மீகத்திலும் தார்மீகத்திலும் இருந்த மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு பார்த்தால், அழிவு வரும் என்பதைத் துளியும் நம்பாத அந்த ஜனங்கள் நோவாவின் குடும்பத்தை எப்படி கேலி செய்திருப்பார்கள், பழித்து பரிகாசம் செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்வது சுலபமாக இருக்கிறது. இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று ஜனங்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் நோவா தன் குடும்பத்திற்கு ஆன்மீக ஊக்குவிப்பையும் ஆதரவையும் அளிப்பதில் வெற்றி கண்டார், அதனால்தான் தேவபக்தியே துளிகூட இல்லாத அந்தக் கால ஜனங்களின் ஒழுக்கங்கெட்ட கலகத்தன வழிகளை இவர்கள் ஒருபோதும் பின்பற்றவில்லை. விசுவாசமுள்ளவர் என்பதை தன் சொல்லிலும் செயலிலும் காட்டுவதன் மூலம் நோவா அந்தக் காலத்திலிருந்த உலகத்தைக் கண்டனம் செய்தார்.—எபிரெயர் 11:7.
ஜலப்பிரளயத்திலிருந்து காக்கப்படுதல்
மழை பெய்ய ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு, கட்டி முடிக்கப்பட்ட பேழைக்குள் செல்லும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார். நோவாவின் குடும்பமும் மிருகங்களும் உள்ளே சென்றபின், ‘யெகோவா கதவை அடைத்தார்.’ ஏளனமும் கேலிப்பேச்சும் இனியும் இவர்கள் காதுகளில் விழவில்லை. ஜலப்பிரளயம் வந்தபோது, கீழ்ப்படியாத தேவதூதர்கள் மாம்ச உடலை களைந்துவிட்டு அழிவிலிருந்து தப்பினார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்ன ஆனது? பேழைக்கு வெளியே, நெபிலிமும் பூமியின்மேல் இருந்த உயிருள்ள யாவும் அழிந்துபோயின! நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் மாத்திரமே தப்பிப்பிழைத்தனர்.—ஆதியாகமம் 7:1-23, NW.
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஒரு சந்திர வருடமும் பத்து நாட்களும் பேழைக்குள் இருந்தார்கள். அவர்கள் மிருகங்களுக்கு தீவனங்களைப் போடுவதிலும் தண்ணீர் காட்டுவதிலும், கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் நாட்கள் செல்வதை கவனிப்பதிலும் மிகவும் மும்முரமாக இருந்தார்கள். ஒரு கப்பல் பயணத்தின்போது வைக்கப்படும் துல்லியமான பதிவைப் போலவே, ஜலப்பிரளயத்தின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்தவற்றை ஆதியாகமம் தேதியோடு குறிப்பிடுகிறது.—ஆதியாகமம் 7:11, 17, 24; 8:3-14.
பேழைக்குள் இருந்தபோது நோவா தன் குடும்பத்தோடு ஆன்மீக காரியங்களை கலந்து பேசுவதிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதிலும் தலைமை தாங்கியிருக்க வேண்டும். நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாரின் மூலமாகத்தான் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலங்களைப் பற்றிய வரலாறு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்கள் அறிந்திருந்த நம்பத்தகுந்த வாய்மொழிப் பாரம்பரியங்களையும், எழுத்து வடிவ வரலாற்று ஆவணங்களையும் வைத்து ஜலப்பிரளயத்தின்போது பயனுள்ள உரையாடல்களை நடத்தியிருப்பார்கள்.
தண்ணீர் வற்றிய பிறகு, காய்ந்த பூமியின்மீது அடியெடுத்து வைக்கையில் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்! உடனடியாக அவர் செய்த முதல் காரியம் ஒரு பலிபீடத்தை உண்டுபண்ணி, குடும்பத்தின் ஆசாரியராக, தங்களைக் காப்பாற்றியவருக்கு பலிகளைச் செலுத்தியதுதான்.—ஆதியாகமம் 8:18-20.
‘நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே’
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37) இன்று அதே போலவே கிறிஸ்தவர்கள் நீதியை பிரசங்கிக்கிறவர்களாக, மனந்திரும்பும்படி ஜனங்களை துரிதப்படுத்தி வருகிறார்கள். (2 பேதுரு 3:5-9) இந்த ஒப்புமையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஜலப்பிரளயத்திற்கு முன்னால் நோவாவின் மனதில் என்னவெல்லாம் தோன்றியிருக்கும் என்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம். தான் பிரசங்கிப்பது வீண் என எப்போதாவது நினைத்தாரா? சில சமயங்களில் சோர்ந்து போனாரா? பைபிள் நமக்கு சொல்வதில்லை. கடவுள் சொன்னபடியெல்லாம் நோவா செய்தார் என்று மாத்திரமே அது நமக்குச் சொல்கிறது.
இப்போது, நோவாவின் நிலைமை எவ்வாறு நம்முடைய நிலைமைக்கு ஒத்திருக்கிறது என்பதை பார்க்க முடிகிறதா? கஷ்டங்கள் மத்தியிலும் எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அதன் காரணமாகவே கடவுள் அவரை நீதிமான் என கூறினார். கடவுள் எப்போது சரியாக ஜலப்பிரளயத்தைக் கொண்டுவருவார் என்பது நோவாவின் குடும்பத்திற்கு தெரியாது, ஆனால் அது வரும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். பல வருடங்கள் கடினமாக உழைத்த போதும் பலனற்றதாக தோன்றிய பிரசங்க வேலையின் போதும், துவண்டு போகாமல் நோவாவை தூக்கி நிறுத்தியது கடவுளுடைய வார்த்தை மீது அவர் வைத்திருந்த விசுவாசமே. ஆம், நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.”—எபிரெயர் 11:7.
இப்படிப்பட்ட விசுவாசத்தை நோவா எப்படி பெற்றார்? யெகோவாவைப் பற்றி அவர் அறிந்திருந்த காரியங்கள் அனைத்தையும் தியானிக்க நேரம் செலவழித்தார், அவர் பெற்ற அந்த அறிவினால் வழிநடத்தப்பட தம்மை அனுமதித்தார். நோவா ஜெபத்தில் கடவுளோடு பேசினார் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், யெகோவாவோடு அவர் அத்தனை நெருக்கமாக பழகியதால் அவர் ‘கடவுளோடு நடந்தார்.’ குடும்பத் தலைவனாக, நோவா சந்தோஷமாக தன்னுடைய குடும்பத்திற்காக நேரத்தையும் அன்பான கவனிப்பையும் கொடுத்தார். இது அவருடைய மனைவி, மூன்று குமாரர்கள், மருமகள்கள் ஆகியோரின் ஆன்மீக நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதையும் உட்படுத்தியது.
நோவாவைப் போலவே இன்று மெய்க் கிறிஸ்தவர்களும், யெகோவா சீக்கிரத்தில் தேவபயமற்ற இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்பதை அறிந்திருக்கிறார்கள். அந்த நாளோ அல்லது நாழிகையோ நமக்குத் தெரியாது, ஆனால் ‘நீதியைப் பிரசங்கித்தவருடைய’ இந்த விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றினால், நாம் ‘உயிரோடே காக்கப்படுவோம்.’—எபிரெயர் 10:36-39, NW.
[பக்கம் 29-ன் பெட்டி]
அது உண்மையில் சம்பவித்ததா?
மானிடவியல் ஆராய்ச்சித் துறை நிபுணர்கள் ஏறக்குறைய எல்லா இனத்தாரிடமிருந்தும் தேசங்களிடமிருந்தும் ஜலப்பிரளயத்தைப் பற்றி 270 புராணங்களை சேகரித்திருக்கின்றனர். “ஜலப்பிரளயம் பற்றிய கதை உலகம் முழுவதிலும் காணப்படுகிறது” என்று க்ளாஸ் வெஸ்டர்மான் என்ற அறிஞர் கூறுகிறார். “படைப்பைப் பற்றிய பதிவைப் போலவே இது நம்முடைய முக்கியமான கலாச்சார பொக்கிஷத்தின் பாகமாகும். உண்மையில் இது ஆச்சரியமாயுள்ளது: பூமியில் எல்லா இடங்களிலும் பண்டைய காலத்தில் நிகழ்ந்த ஜலப்பிரளயம் பற்றிய கதைகளை நாம் காண்கிறோம்.” இதற்கு என்ன விளக்கம்? கருத்துரையாளர் ஏன்ரீக்கோ கால்பியாட்டி இவ்வாறு கூறுகிறார்: “வித்தியாசமான, ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மக்களின் மத்தியில் இந்த ஜலப்பிரளயம் பற்றிய பாரம்பரியம் எப்போதும் காணப்படுவது, இந்த பாரம்பரியங்கள் ஒரு வரலாற்று உண்மையை அடிப்படையாக கொண்டிருப்பதற்கு அடையாளமாக இருக்கிறது.” ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அறிஞர்களின் கருத்தைக் காட்டிலும் அதிக முக்கியமானது, இயேசு தாமே மனிதகுலத்தின் வரலாற்றில் ஜலப்பிரளயத்தை உண்மை சம்பவமாக குறிப்பிட்டு பேசினார் என்பதே.—லூக்கா 17:26, 27.
[பக்கம் 30-ன் பெட்டி]
புராணங்களில் நெபிலிம்?
தெய்வங்களுக்கும் மனிதர்களுக்குமிடையே நடந்த முறைகேடான பாலுறவால் பிறந்த “தெய்வமகன்கள்” அல்லது “அரைத் தெய்வங்கள்” பற்றிய கதைகள் கிரேக்க, எகிப்திய, யூகரிட்டிக், ஹுரியன், மெசொப்பொத்தாமிய இறையியலில் சர்வ சாதாரணமாக காணப்பட்டன. கிரேக்க புராண தெய்வங்கள் மனித உருவிலும், பேரழகு வாய்ந்தவையாகவும் இருந்தன. அவை சாப்பிட்டன, குடித்தன, உறங்கின, உடலுறவு கொண்டன, சச்சரவு செய்தன, சண்டை போட்டன, வஞ்சித்தன, கற்பழித்தன. பரிசுத்தமாக இருப்பதாக அவை கருதப்பட்டாலும், அவை ஏமாற்றின, குற்றம் புரிந்தன. அக்கிலிஸ் போன்ற வீரர்கள் மனிதரிலிருந்தும் தெய்வத்திலிருந்தும் வந்ததாக சொல்லப்பட்டனர், அவர்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட வல்லமை பெற்றிருந்தனர், ஆனால் சாவாமை அவர்களுக்கு அருளப்படவில்லை. ஆகவே ஆதியாகமம் நெபிலிமைப் பற்றி கூறுகிறதை வைத்துப் பார்க்கும்போது, இந்த புராணங்கள் எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.