உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை
கல்லெறியுண்டார்கள் . . . பரீட்சை பார்க்கப்பட்டார்கள் . . . உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.”—எபிரெயர் 11:37, 38.
பூர்வ காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் மீது அநீதியான மனித சமுதாயம் பல சோதனைகளைக் கொண்டு வந்தபோதிலும் அவர்கள் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொண்டார்கள். உதாரணமாக, கடவுளுடைய ஊழியர்கள் கல்லெறியுண்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டார்கள். உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் விசுவாசத்தில் அசையவில்லை. நிச்சயமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல: “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.”—எபிரெயர் 11:37, 38.
2. ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்தவர்கள், முற்பிதாக்கள் மற்றும் மோசே ஆகியவர்களின் தேவபக்திக்குரிய விசுவாசத் தூண்டுதல் மிகுந்த செயல்கள் யெகோவாவின் தற்கால சாட்சிகளையும் கடவுளை விசுவாசத்துடன் சேவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் எபிரெயர் 11 மற்றும் 12 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றவர்களைப் பற்றியதென்ன? அவர்களுடைய விசுவாசத்தின் பல அம்சங்களைச் சிந்திப்பதிலிருந்து நாம் எவ்வாறு பலனடையலாம்?
நியாயாதிபதிகள், ராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் விசுவாசம்
3. விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல; அது கிரியைகளால் அல்லது செயல்களால் நிரூபிக்கப்பட வேண்டும். (எபிரெயர் 11:30, 31-ஐ வாசிக்கவும்) மோசேயின் மரணத்துக்குப் பின்பு, விசுவாசம்தானே இஸ்ரவேலருக்குக் காணானில் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றியை குவித்தது, ஆனால் இது அவர்களுடைய பாகத்தில் முயற்சியையும் தேவைப்படுத்தியது. உதாரணமாக யோசுவாவும் மற்றவர்களும் காண்பித்த விசுவாசத்தினாலே “எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.” ஆனால் “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி . . . [விசுவாசமற்ற எரிகோவின் குடிகளாகிய] கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். ஏன்? ஏனென்றால் அவள் இஸ்ரவேல் “வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு” அவர்களைக் கானானியருக்கு ஒளித்துவைப்பதன் மூலம் தன் விசுவாசத்தை நிரூபிக்கிறவளாயிருந்தாள். இஸ்ரவேலருக்கு முன்பாக “யெகோவா . . . சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணி” எமோரியரின் ராஜாக்களாகிய சீகோன் மற்றும் ஓகு மீது வெற்றி வழங்கிய அறிக்கைகைளில்தானே ராகாபின் விசுவாசம் பலமான ஆதாரத்தைக் கொண்டிருந்தது. ராகாப் ஒழுக்க சம்பந்தமாக தகுந்த மாற்றங்களைச் செய்தாள். மற்றும் எரிகோ வீழ்ச்சியுற்றபோது தன்னுடைய குடும்பத்தாரோடு காக்கப்படுவதன் மூலமும், இயேசு கிறிஸ்துவின் ஒரு வம்சத்தாளாக ஆவதன் மூலமும் அவள் தன்னுடைய கிரியையுள்ள விசுவாசத்துக்காக ஆசீர்வதிக்கப்பட்டாள்.—யோசுவா 2:1-11; 6:20-23; மத்தேயு 1:1, 5; யாக்கோபு 2:24-26.
4. ஆபத்துகளை எதிர்ப்படும்போது யெகோவாவை முழுமையாக சார்ந்திருப்பதிலும் விசுவாசம் காண்பிக்கப்படுகிறது. (எபிரெயர் 11:32) “கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையுங் குறித்து” தொடர்ந்து சொல்ல தனக்கு காலம் போதாது என்று பவுல் ஒப்புக் கொள்ளுகிறார். இவர்களுடைய சாதனைகள், விசுவாசத்திற்கும் இக்கட்டான சூழ்நிலைகளில் கடவுள் பேரில் சார்ந்திருத்தலுக்கும் ஏராளமான அத்தாட்சிகளை வழங்கின. இப்படியாக, விசுவாசத்தினாலும், 300 மனிதர்களை மட்டுமே கொண்டிருந்த ஒரு சேனையைக் கொண்டும் நியாதிபதியாகிய கிதியோன், ஒடுக்குகிற மேதியானிய இராணுவ பலத்தை நொறுக்கி வீழ்த்திடுவதற்குக் கடவுளால் பலப்படுத்தப்பட்டான். (நியாயாதிபதிகள் 7:1-25) தீர்க்கதரிசினியாகிய தெபோராளால் ஊக்குவிக்கப்பட்ட நியாயாதிபதியாகிய பாராக்கும் குறைவான ஆயுதங்களையுடைய 10,000 பேர் கொண்ட ஒரு காலாட் படையும் சிசெரா தலைமையின்கீழ் சென்ற 900 இருப்பு ரதங்களையுடைய யாபீன் அரசனின் பலமான படை பலத்தின் மீது வெற்றி கண்டன.—நியாயாதிபதிகள் 4:1—5:31.
5. இஸ்ரவேலின் நியாயாதிபதிகளின் நாட்களில் விசுவாசத்திற்கு மற்றொரு முன்மாதிரி சிம்சோன், பெலிஸ்தரின் மகா எதிரி. உண்மைதான், கடைசியில் அவர்களால் குருடாக்கப்பட்ட கைதியாகிவிட்டான். ஆனால், தங்களுடைய பொய் தெய்வமாகிய தாகோனுக்கு மகா பலிகளை செலுத்திவந்த அந்த வீட்டின் மதில்களைத் தகர்த்தியபோது அவர்களில் பலருக்கு மரணத்தை ஏற்படுத்தினான். ஆம், சிம்சோன் அந்தப் பெலிஸ்தருடன் மாண்டான், ஆனால் வெறுப்படைந்தவனாய்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை. விசுவாசத்தோடு அவன் யெகோவாவில் சார்ந்திருந்தான். கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிரிகளாக இருந்த அந்தப் பகைவர்களைப் பழிவாங்குவதற்கு வேண்டிய பெலத்திற்காக அவன் யெகோவாவிடம் ஜெபித்தான். (நியாயாதிபதிகள் 16:18-30) யெகோவா தேவன் யெப்தாவுக்கு அம்மோனியர் மீது வெற்றி வழங்கினார். அவனுங்கூட யெகோவாவில் முழுமையாக சார்ந்திருந்ததற்கு அத்தாட்சி பகர்ந்த விசுவாசத்தைக் காண்பித்தான். அப்படிப்பட்ட விசுவாசம் இருந்ததால்தான் அவன் தன்னுடைய மகளை ஒரு நிரந்தர கன்னியாக யெகோவாவின் சேவைக்கு அற்பணிப்பதன் மூலம் தன் பொருத்தனையை நிறைவேற்ற முடிந்தது.—நியாயாதிபதிகள் 11:29-40.
6. தாவீதுங்கூட தன் விசுவாசத்துக்குக் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்திய இராட்சதனாகிய கோலியாத்துடன் யுத்தம் பண்ணினபோது அவன் ஓர் இளம் மனிதனாக மட்டுமே இருந்தான். ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்’ என்றான் தாவீது. ‘ஆனால் நானோ சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.’ ஆம், தாவீது கடவுள் பேரில் சார்ந்திருந்தான். உயரமான அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றான், கடவுளுடைய மக்களின் அக்கறைகள் சார்பாகப் போர் செய்யும் ஒரு பராக்கிரமசாலியான போர் வீரனாகவும் அரசனாகவும் ஆனான். தாவீதின் விசுவாசந்தானே அவனை யெகோவாவின் இருதயத்துக்குப் பிரியமானவனாக்கியது. (1 சாமுவேல் 17:4, 45-51; அப்போஸ்தலர் 13:22) சாமுவேலும் மற்ற தீர்க்கதரிசிகளும் வாழ்க்கை முழுவதுமாக மிகுந்த விசுவாசத்தையும் கடவுள் பேரில் முற்றிலும் சார்ந்திருப்பதையும் வெளிக்காட்டினர். (1 சாமுவேல் 1:19-28; 7:15-17) இளைஞரும் முதியோருமாகிய யெகோவாவின் தற்கால ஊழியர்களுக்கு என்னே அருமையான முன்மாதிரிகள்!
7. விசுவாசத்தினால் நாம் உத்தமத்தின் ஒவ்வொரு சோதனையையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும், மற்றும் தெய்வீக சித்தத்திற்கு இசைவாக இருக்கும் எதையும் சாதிக்க முடியும். (எபிரெயர் 11:33, 34-ஐ வாசிக்கவும்) விசுவாசத்தின் செயல்களை ஊக்குவிப்பவனாக பவுல் எபிரேய நியாயாதிபதிகளையும் ராஜாக்களையும் தீர்க்கதரிசிகளையும் தன் மனதில் கொண்டிருந்தான் என்பது தெளிவாகிறது, ஏனென்றால் அப்படிப்பட்டவர்களைக் குறித்து அப்பொழுதுதானே குறிப்பிட்டிருந்தான். “விசுவாசத்தினாலே” கிதியோன் மற்றும் யெப்தா போன்றவர்கள் “ராஜ்யங்களை ஜெயித்தார்கள்.” அப்படியே தாவீதும் பெலிஸ்தியரையும் மோவாபியரையும், சீரியரையும் ஏதோமியரையும் மற்றவர்களையும் மேற்கொண்டான். (2 சாமுவேல் 8:1-14) மேலும் விசுவாசத்தினாலே நேர்மையான நியாயாதிபதிகள் “நீதியை நடப்பித்தார்கள்.” மற்றும் சாமுவேலும் மற்ற தீர்க்கதரிசிகளும் கொடுத்த நீதியான ஆலோசனைகள் சிலரை தவறு செய்வதைத் தவிர்க்கவும் அல்லது தவறைக் கைவிடவும் செய்தது.—1 சாமுவேல் 12:20-25; ஏசாயா 1:10-20.
8. விசுவாசத்தினால் “வாக்குத்தத்தங்களைப் பெற்றவர்களில்” தாவீதும் ஓருவன். யெகோவா அவனுக்குப் பின்வரும் வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்: “உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” (2 சாமுவேல் 7:11-16) 1914-ல் மேசியானிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதன் மூலம் கடவுள் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.—ஏசாயா 9:6, 7; தானியேல் 7:13, 14.
9. அரசு தடை பிறப்பிக்கப்பட்டிருந்தபோதிலும் தன்னுடைய வழக்கத்தின்படியே கடவுளிடம் ஜெபிப்பதைத் தொடர்ந்தபோது தான் எதிர்ப்பட்ட உத்தமத்தின் பரீட்சையை தானியேல் தீர்க்கதரிசி வெற்றிகரமாக சந்தித்தான். உத்தமத்தைக் காத்துக்கொள்பவருக்குரிய விசுவாசத்தினாலே தானியேல் “சிங்கங்களின் வாய்களை அடைத்தான்,” அதாவது தான் போடப்பட்டிருந்த சிங்கக்கெபியிலே யெகோவா அவனை உயிரோடு காப்பாற்றினார்.—தானியேல் 6:4-23.
10. உத்தமத்தைக் காக்கும் தானியேலின் எபிரேய கூட்டாளிகளாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ “அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்.” அதாவது, பன்மடங்கு சூடாக்கப்பட்ட அக்கினி சூளையில் போடப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று அச்சுருத்தப்பட்டும், அவர்கள் நேபுகாத்நேச்சார் அரசனிடம், தங்களுடைய கடவுள் தங்களை விடுவித்தாலும் விடுவிக்காமற் போனாலும் பாபிலோனிய அரசனின் தெய்வத்தை சேவிக்கவோ அல்லது அவன் உண்டுபண்ணின சிலையை வணங்கவோ மாட்டோம் என்று சொன்னார்கள். அந்தச் சூளையின் அக்கினியை யெகோவா அனைத்துவிடவில்லை, ஆனால் அது அந்த மூன்று எபிரேயருக்கும் தீங்கு விளைவிக்காதபடி பார்த்துக்கொண்டார். (தானியேல் 3:1-30) அதுபோன்ற விசுவாசம், பகைவனின் கையில் மரிக்க நேரிட்டாலும் நாம் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ளச் செய்கிறது.—வெளிப்படுத்துதல் 2:10.
11. தாவீது, சவுல் அரசனின் மனிதருடைய “பட்டயக் கருக்குக்குத் தப்பினான்.” (1 சாமுவேல் 19:9-17) தீர்க்கதரிசிகளாகிய எலியாவும் எலிசாவுங்கூட பட்டயத்திற்குப் பலியாவதிலிருந்து தப்பினார்கள். (1 இராஜாக்கள் 19:1-3; 2 இராஜாக்கள் 6:11-23) ஆனால் ‘விசுவாசத்தினாலே பலவீனத்தில் பலன்கொண்டவர்கள்’ யார்? இஸ்ரவேலை மீதியானியரிடமிருந்து இரட்சித்திடுவதற்குத் தானும் தன்னுடைய மனிதரும் பலவீனமுள்ளவர்கள் என்று கிதியோன் கருதினான். ஆனால் அவன் கடவுளால் “வல்லவன்” ஆனான். அவர் அவனுக்கு வெற்றி கொடுத்தார்—அதுவும் 300 மனிதர்களைக் கொண்டு மட்டுமே! (நியாயாதிபதிகள் 6:14-16; 7:2-7, 22) சிம்சோனின் மயிர் கத்தரிக்கப்பட்டபோது “பலவீனத்தில்” இருந்த அவன் யெகோவாவால் “பலங்கொண்டு” அநேக பெலிஸ்தியருக்கு மரணத்தைக் கொண்டுவந்தான். (நியாயாதிபதிகள் 16:19-21, 28-30; நியாயாதிபதிகள் 15:13-19-ஐ ஒப்பிடவும்) படை பலத்திலும் உடல் நலத்திலும் பலவீனமாயிருந்த நிலையிலிருந்து ‘பலமுள்ளவனாக்கப்பட்டதில்’ அரசனாகிய எசேக்கியாவும் ஒருவன் என்று பவுல் நினைவுகூர்ந்திருக்கக்கூடும். (ஏசாயா 37:1—28:22) “யுத்தத்தில் வல்லவர்களான” கடவுளுடைய ஊழியர்களில் நியாயாதிபதியாகிய யெப்தாவும் அரசனாகிய தாவீதும் அடங்குவர். (நியாயாதிபதிகள் 11:32, 33; 2 சாமுவேல் 22:1, 2, 30-38) “அந்நியருடைய சேனைகளை முறியடித்தவர்களில்” நியாயாதிபதியாகிய பாராக்கும் உட்படுகிறான். (நியாயாதிபதிகள் 4:14-16) இந்த அனைத்து அருஞ்செயல்களுமே, விசுவாசத்தினால் நாம் உத்தமத்தின் ஒவ்வொரு சோதனையையும் மேற்கொள்ள முடியும் என்பதையும் தெய்வீக சித்தத்திற்கு இசைவாக இருக்கும் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் நமக்கு உறுதி செய்வதாயிருக்க வேண்டும்.
விசுவாசத்திற்கு முன்மாதிரியான மற்றவர்கள்
12. விசுவாசம் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையையும் உட்படுத்துகிறது. அது கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும் ஒரு நம்பிக்கை. (எபிரெயர் 11:35-ஐ வாசிக்கவும்.) விசுவாசத்தினாலே “ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்.” விசுவாசத்தினாலும் கடவுளுடைய வல்லமையினாலும் எலியா சாறிபாத்தில் ஒரு விதவையின் மகனை உயிர்த்தெழுப்பினான் மற்றும் எலிசா ஒரு சூனேமிய பெண்ணின் மகனை உயிர்த்தெழுப்பினான். (1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:17-37) “வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலை பெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்,” [சொல்லர்த்தமாக, “கோலால் அடிக்கப்பட்டார்கள்.”] யார் என்று வேதாகமத்தில் தெரிவிக்கப்படாத இந்த யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதால் கிடைக்கும் விடுதலையை ஏற்க மறுத்தார்கள், மரிக்கும்வரை அடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உயிர்த்தெழுதல் “மேன்மையானதாய்” இருக்கும், ஏனென்றால் எலியாவாலும் எலிசாவாலும் உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடைய காரியத்தில் இருந்ததுபோல் அவர்கள் மறுபடியும் மரித்துவிட வேண்டிய அவசியம் இருக்காது, மற்றும் “நித்திய பிதா”வாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய ராஜ்யத்தில் இது நடந்தேறும், அவருடைய மீட்கும் பொருளின் ஏற்பாடு பூமியில் முடிவற்ற வாழ்க்கையைக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது.—ஏசாயா 9:6; யோவான் 5:28, 29.
13. நமக்கு விசுவாசம் இருந்தால் நாம் துன்புறுத்தலை சகிக்கலாம். (எபிரெயர் 11:36-38-ஐ வாசிக்கவும்) நாம் துன்புறுத்தப்படும்போது உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நினைவுகூர்வது நமக்கு உதவியாக இருக்கும். மற்றும் [விசுவாச பரீட்சையாக] “நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்த” வேறு சிலரை கடவுள் காத்து வந்ததுபோல நம்மையும் காத்திடுவார் என்று உணருவதும் நமக்கு உதவியாக இருக்கும். இஸ்ரவேலர் “அவருடைய தீர்க்கதரிசிகளை [தொடர்ந்து, NW] நிந்தித்தபடியால் யெகோவாவுடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது.” (2 நாளாகமம் 36:15, 16) விசுவாசத்தினாலே மிகாயாவும் எலிசாவும் கடவுளுடைய மற்ற ஊழியர்களும் “நிந்தைகளை” சகித்தார்கள். (1 இராஜாக்கள் 22:24; 2 இராஜாக்கள் 2:23, 24; சங்கீதம் 42:3) இஸ்ரவேல் அரசர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் நாட்களில் “கசையடிகள்” கொடுக்கப்படுவது அறியப்பட்டிருந்தன, மற்றும் எதிராளிகள் எரேமியாவை வெட்கப்படுத்தும் வகையில் பெறுமனே கண்ணத்தில் அறையவில்லை., ஆனால் “அடித்தார்கள்.” “கட்டுகளும் காவல்களும் நமக்கு அவனுடைய அனுபவத்தையும் தீர்க்கதரிசிகளாகிய மிகாயா, மற்றும் அனானி ஆகியவர்களின் அனுபவங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (எரேமியா 20:1, 2; 37:15; 1 இராஜாக்கள் 12:11; 22:26, 27; 2 நாளாகமம் 16:7, 10) அதுபோன்ற விசுவாசத்தைக் கொண்டிருப்பதனால் யெகோவாவின் தற்கால சாட்சிகள் “நீதியினிமித்தமாக” அப்படிப்பட்ட துன்பங்களைச் சகித்துக்கொள்ள முடிகிறது.—1பேதுரு 3:14.
14. “கல்லெறியுண்டார்கள்” என்றான் பவுல். அப்படிப்பட்ட விசுவாச மனிதரில் ஒருவன்தான் ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரன் சகரியா. கடவுளுடைய ஆவியால் நிரப்பப்பட்டவனாக, அவன் யூதாவின் விசுவாச துரோகிகளுக்கு எதிராகப் பேசினான். விளைவு? யோவாஸ் ராஜாவின் கட்டளையின்பேரில் யெகோவாவின் ஆலயப் பிரகாரத்தில் அவனை அந்தக் கலகக்காரர் கல்லெறிந்து கொன்றார்கள். (2 நாளாகமம் 24:20-22; மத்தேயு 23:33-35) பவுல் தொடர்ந்து சொன்னதாவது: “வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள்.” “பரீட்சைப் பார்க்கப்பட்டவர்”களில் ஒருவனாகிய மிகாயா தீர்க்கதரிசியை அவன் நினைவுகூர்ந்திருக்கக்கூடும். அரசனாகிய மனாசேயின் ஆட்சி காலத்தில் ஏசாயா வாளால் இரண்டாக அறுக்கப்பட்டான் என்பது நிச்சயமற்ற சில யூத பாரம்பரியத்தில் காணப்படுகிறது.—1 இராஜாக்கள் 22:24-28.
15. மற்றவர்கள் “பட்டயத்தினாலே வெட்டப்பட்டார்கள்.” உதாரணமாக பொல்லாத ஆகாப் அரசனின் நாட்களில் எலியாவின் உடன் தீர்க்கதரிசிகளை “பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்.” (1 இராஜாக்கள் 19:9, 10) “செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்த” விசுவாசிகளில் எலியாவும் எலிசாவும் அடங்குவர். (1 இராஜாக்கள் 19:5-8, 19; 2 இராஜாக்கள் 1:8; 2:13; எரேமியா 38:6-ஐ ஒப்பிடவும்) துன்புறுத்தப்பட்டவர்களாய் “வனாந்திரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்த”வர்களில் எலியாவையும் எலிசாவையும் மட்டுமல்ல. ஆனால் விக்கிரகாராதனை செய்துவந்த யேசபேல் அரசி “யெகோவாவின் தீர்க்கதரிசிகளை சங்கரிக்க” ஆரம்பித்தபோது, ஒபதியாவால் ஐம்பது ஐம்பது பேராக கெபியில் ஒளித்து வைக்கப்பட்டு அப்பமும் தண்ணீரும் கொடுக்கப்பட்ட அந்த 100 தீர்க்கதரிசிகளையும் உட்படுத்த வேண்டும். (1 இராஜாக்கள் 18:4, 13; 2 இராஜாக்கள் 2:13; 6:13, 30, 31) ஆம், அவர்கள் உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்கள்! பவுல் பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமில்லை: “உலகம் [அநீதியான மானிட சமுதாயம்] அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.”!
16. கடவுளுடைய உரிய காலத்தில் அவரில் அன்புகூரும் அனைவரும் “வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடை”வார்கள் என்ற உறுதியை விசுவாசம் நமக்கு அளிக்கிறது. (எபிரெயர் 11:39, 40 வாசிக்கவும்) கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் வாழ்ந்த உத்தமத்தைக் காத்துக்கொண்ட மக்கள் “விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றார்கள்.” இப்பொழுது அது ஒரு வேதவசனப் பதிவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இன்னும் ராஜ்ய ஆட்சியின் கீழ் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்புடையவர்களாய் ஒரு பூமிக்குரிய உயிர்த்தெழுதலின் மூலம் “வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையப்” பெறவில்லை. ஏன்? “அவர்கள்” இயேசுவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களை “அல்லாமல் பூரணராகாதபடிக்கு” அப்படியாகும். அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுக்கோ “விசேஷித்த நன்மையானதொன்றை—அழியாத பரலோக வாழ்க்கை மற்றும் கிறிஸ்து இயேசுவுடன்கூட அரசாளும் சிலாக்கியங்களை—“தேவன் . . . முன்னதாக நியமித்திருந்தார்.” 1914-ல் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்பு துவங்கிய இவர்களுடைய உயிர்த்தெழுதலினால், இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பு, பரலோகங்களில் பூரணராக்கப்படுவார்கள்.’ (1 கொரிந்தியர் 15:50-57) வெளிப்படுத்துதல் 12:1-5) அந்தப் பூர்வகால சாட்சிகள் ‘பூரணராக்கப்படுவது’ அவர்களுடைய பூமிக்குரிய உயிர்த்தெழுதலோடு சம்பந்தப்பட்டதாயிருக்க வேண்டும், கடைசியாக “அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்”படுவதோடு சம்பந்தப்பட்டதாயிருக்க வேண்டும், மற்றும் தம்முடைய ஆயிரவருட ஆட்சியில் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைகளின் மூலமும் அவருடைய 1,44,000 பரலோக உடன் ஆசாரியர்களின் சேவைகளின் மூலமும் மானிட பரிபூரணத்தை அடைதலோடு சம்பந்தப்பட்டதாயிருக்க வேண்டும்.—ரோமர் 8:20, 21; எபிரெயர் 7:26; வெளிப்படுத்துதல் 14:1; 20:4-6.
நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவரை நோக்கியிருங்கள்
17. கிறிஸ்தவத்திற்கு முன்னான யெகோவாவின் சாட்சிகளுடைய கிரியைகளைக் குறித்து கலந்தாலோசித்த பவுல், விசுவாசத்தின் அடிப்படை முன்மாதிரியினிடமாக நம் கவனத்தைத் திருப்புகிறான். (எபிரெயர் 12:1-3-ஐ வாசிக்கவும்) ‘மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ கொண்டிருப்பது’ உற்சாகத்திற்கு ஓர் ஊற்றுமூலமாயிருக்கிறது! நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் பாரமான யாவற்றையும் களைந்துவிடுவதற்கு இது நம்மைத் தூண்டுகிறது. விசுவாசமின்மை அல்லது விசுவாசக் குறைவு என்ற பாவத்தைத் தவிர்க்கவும் நித்திய ஜீவனுக்கான கிறிஸ்தவ ஓட்டத்தில் சகிப்புத் தன்மையோடு ஓடவும் நமக்கு உதவுகிறது. என்றபோதிலும் இலக்கை சென்றடைவதற்கு நாம் இன்னும் அதிகத்தைச் செய்ய வேண்டும். அது என்ன?
18. கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான நம்முடைய ஓட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், “பிரதான கர்த்தாவும் [அல்லது பிரதான தலைவரும்] நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துபவருமாகிய இயேசுவை கவனமாக நோக்கியிருத்தல்” அவசியம். [NW] இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்திற்கு முன்னால் வாழ்ந்த ஆபிரகாம் மற்றும் உத்தமத்தைக் காத்துக்கொண்ட மற்றவர்களின் விசுவாசம் அபூரணமானது, முழுமையற்றது, ஏனென்றால் மேசியாவைக் குறித்து நிறைவேற்றமடையாதிருந்த தீர்க்கதரிசனங்களை அவர்கள் புரிந்துகொள்ளாமலிருந்தனர். (1 பேதுரு 1:10-12) ஆனால் மேசியானிய தீர்க்கதரிசனங்களில் பல இயேசுவின் பிறப்பு, ஊழியம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் நிறைவேற்றமடைந்தன. இப்படியாக பரிபூரணமான கருத்தில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, விசுவாசம் “வந்தது.” (கலாத்தியர் 3:24, 25) மேலும் இயேசு தம்முடைய பரலோக ஸ்தானத்திலிருந்து தம்மைப் பின்பற்றியவர்களின் விசுவாசத்தைப் பூரணபடுத்துபவராக தொடர்ந்து இருந்துவந்தார், அதாவது பொ.ச. 33-ல் பெத்தெகொஸ்தே நாளில் அவர்கள் மீது பரிசுத்த ஆவியைப் பொழிந்தபோதும், அவர்களுடைய விசுவாசத்தைப் படிப்படியாக பலப்படுத்திய வெளிப்படுத்துதல்கள் மூலமாகவும் அப்படிச் செய்துவந்தார். (அப்போஸ்தலர் 2:32, 33; ரோமர் 10:17; வெளிப்படுத்துதல் 1:1, 2; 22:16) யெகோவாவின் சாட்சிகளின் இந்தப் “பிரதான தலைவரும்” “உண்மையுள்ள சாட்சியுமானவருக்கு” நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்!—வெளிப்படுத்துதல் 1:5; மத்தேயு 23:10.
19. அவிசுவாசிகளின் நிந்தைகளைச் சகித்துக்கொள்வது அவ்வளவு எளியதன்று, எனவே பவுல் பின்வருமாறு ஊக்குவித்தான்: “நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆம், இயேசு கிறிஸ்துவாகிய உண்மையுள்ள சாட்சியினிடமாக நம்முடைய பார்வையை பதியச் செய்வோமானால் தெய்வீக சித்தத்தைச் செய்வதில் நாம் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்.—யோவான் 4:34.
20. ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளிடமிருந்து’ நாம் விசுவாசத்தின் பல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறோம். உதாரணமாக, ஆபேலின் விசுவாசத்தைப் போன்ற விசுவாசம் இயேசுவின் பலியினிடமாக நம்முடைய போற்றுதலைக் கூட்டியிருக்கிறது. யெகோவாவின் செய்தியை ஏனோக்கு தைரியத்துடன் அறிவித்ததுபோல விசுவாசம் நம்மை தைரியமுள்ள சாட்சிகளாக ஆக்குகிறது என்பது உண்மைதான். நோவாவைப் போல் நம்முடைய விசுவாசம், கடவுளுடைய அறிவுரைகளை நெருங்க பின்பற்றுவதற்கும் நீதியின் பிரசங்கிகளாகச் சேவிக்கவும் நம்மைத் தூண்டுகிறது. ஆபிரகாமின் விசுவாசம், கடவுளுக்குக் கீழ்ப்படிதலின் அவசியத்தையும் அவருடைய வாக்குத்தத்தங்களில் சில இன்னும் நிறைவேற்றமடையவில்லையென்றாலும் அவற்றில் நம்பிக்கை வைக்கவும் நம்மை ஏவுகிறது. விசுவாசம், இந்த உலகத்தால் கறைபடாதபடிக்கும் யெகோவாவின் மக்கள் சார்பாக உண்மை தவறாமல் நிலைத்திருக்கவும் செய்கிறது என்று மோசேயின் முன்மாதிரி காண்பிக்கிறது. இஸ்ரவேலின் நியாயாதிபதிகள், ராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அரிய தீரச் செயல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் சோதனைகளின் சமயத்தில் கடவுள் பேரிலுள்ள விசுவாசம் நம்மைக் காத்திடும் என்பதை நிரூபிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மிகச் சிறந்த முன்மாதிரி நம்முடைய விசுவாசத்தை உறுதியாகவும் அசையாததாகவும் வைக்கிறது என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! எனவே, இயேசுவை நம்முடைய தலைவராகக் கொண்டு, நம்முடைய தேவன் அருளும் பெலத்தால் யெகோவாவின் சாட்சிகளாக நாம் நிலையான விசுவாசத்தைத் தொடர்ந்து காண்பிப்போமாக. (w87 1/15)
உங்களுடைய விடைகள் என்ன?
◻ ஆபத்தான நிலைமையின்கீழ் கடவுளில் முழுவதுமாக சார்ந்திருப்பதில் விசுவாசம் காண்பிக்கப்படுகிறது என்பதை கிறிஸ்தவத்திற்கு முன்னான யெகோவாவின் சாட்சிகளுடைய என்ன செயல்கள் நிரூபிக்கின்றன?
◻ விசுவாசத்தினால் நாம் உத்தமத்தின் ஒவ்வொரு சோதனையையும் வெற்றிகரமாக எதிர்ப்பட முடியும் என்று ஏன் சொல்லலாம்?
◻ விசுவாசத்தின் மூலம் துன்புறுத்தலை சகிக்கலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ இயேசு “விசுவாசத்தை பூரணப்படுத்துகிறவர்” என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
◻ விசுவாசத்தின் பல அம்சங்களில் சில யாவை?
[கேள்விகள்]
1, 2. பூர்வ காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் என்ன விதமான சூழ்நிலைகளில் தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டார்கள்? அவர்களுடைய செயல்கள் எப்படி இன்று கடவுளுடைய ஊழியர்களைப் பாதிக்கின்றன?
3. விசுவாசம் கிரியைகளினால் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதை எரிகோ மற்றும் ராகாபை உட்படுத்திய சம்பவங்கள் எப்படி காண்பிக்கின்றன?
4. ஆபத்துகளை எதிர்ப்படும்போது விசுவாசத்தைக் காண்பித்தலைக் குறித்து கிதியோன் மற்றும் பாராக்கின் அனுபவங்கள் வலியுறுத்துவது என்ன?
5. யெகோவாவில் முழுமையாக சார்ந்திருத்தலுக்கு அத்தாட்சியாயிருந்த எந்த வழிகளில் சிம்சோனும் யெப்தாவும் விசுவாசத்தைக் காண்பித்தார்கள்?
6. தாவீது எப்படித் தன் விசுவாசத்தைக் காண்பித்தான்?
7. (எ) யார் “விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயித்தார்கள்?” (பி) யார் விசுவாசத்தினாலே “நீதியை நடப்பித்தார்கள்?”
8. தாவீது என்ன வாக்குத்தத்தத்தைப் பெற்றான்? அது எதற்கு வழிநடத்தியது?
9. எந்த சூழ்நிலையில் ‘சிங்கங்களின் வாய்கள் விசவாசத்தினால் அடைக்கப்பட்டன’?
10. யார் விசுவாசத்தினால் “அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்”? அதுபோன்ற விசுவாசம் நம்மை என் செய்ய வைக்கும்?
11. (எ) விசுவாசத்தின் மூலம் “பட்டயக்கருக்குக்குத் தப்பினது” யார்? (பி) விசுவாசத்தினால் “பலன்கொண்டவர்கள்” யார்? (சி) “யுத்தத்தில் வல்லவர்களாகி” “அந்நியருடைய சேனைகளை முறியடித்தவர்கள்” யார்?
12. எந்த “ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்”? (பி) விசுவாசமுள்ள சில மனிதரின் உயிர்த்தெழுதல் எந்த விதத்தில் “மேன்மையானதாய்” இருக்கும்?
13. (எ) “நிந்தைகளையும் அடிகளையும்” அனுபவித்தது யார்? (பி) “கட்டுகளையும் காவலையும்” அனுபவித்தது யார்?
14. (எ) “கல்லெறியுண்டவர்களில்” ஒருவன் யார்? (பி) யார் “வாளால் அறுப்புண்டிருக்கக்”கூடும்?
15. “துன்பத்தை” அனுபவித்து “வனாந்திரங்களிலே . . . அலைந்தவர்கள்” யார்?
16. (எ) கிறிஸ்தவத்திற்கு முன்னான யெகோவாவின் சாட்சிகள் ஏன் இன்னும் “வாக்குப்பண்ணப்பட்டதை அடையப்” பெறவில்லை? (பி) கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் “பூரணராக்கப்படுவது” என்ன காரியத்துடன் சம்பந்தப்பட்டதாயிருக்க வேண்டும்?
17, 18. (எ) நித்திய ஜீவனுக்கான நம்முடைய ஓட்டத்தில் வெற்றிபெற நாம் என்ன செய்ய வேண்டும்? (பி) இயேசு கிறிஸ்து எப்படி “நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துபவராக” இருக்கிறார்?
19. இயேசுவை ஏன் ‘இடைவிடாது நினைத்துக்கொள்ள’ வேண்டும்?
20. எபிரெயர் 11:1—12:3-ஐ சிந்திப்பதன் மூலம் விசுவாசத்தைக் குறித்து நீங்கள் கற்றுக்கொண்ட சில காரியங்கள் யாவை?
[பக்கம் 12, 13-ன் படம்]
யெகோவாவில் முழுமையாக சார்த்திருப்பதன் மூலம் தாவீது விசுவாசத்தைக் காண்பித்தான். இன்றைய யெகோவாவின் மக்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி!
[பக்கம் 14-ன் படம்]
“ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்.” உயிர்த்தெழுதலில் விசுவாசம் யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது