யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
இயேசுவின் சீஷனும் தம்பியுமான யாக்கோபு, அடையாளப்பூர்வ இஸ்ரவேலின் “பன்னிரண்டு கோத்திரங்களுக்கு” ஒரு கடிதம் எழுதுகிறார்; பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளிலிருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதை எழுதுகிறார். (யாக். 1:1) விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும்படியும் சோதனைகளைச் சகிக்கும்படியும் அவர்களுக்கு அறிவுரை அளிப்பதற்காக இதை எழுதுகிறார். சபைகளின் பிரச்சினைகளைச் சரிசெய்ய புத்திமதியும் அளிக்கிறார்.
ரோமப் பேரரசர் நீரோவால் பொ.ச. 64-ல் சீறியெழுந்த துன்புறுத்தல் அலைக்குச் சற்று முன்பு அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் கடிதத்தை எழுதுகிறார்; அதில், விசுவாசத்தில் உறுதியாக இருக்கும்படி கிறிஸ்தவர்களை ஊக்கமூட்டுகிறார். இதை முடித்தபின் வெகு சீக்கிரத்திலேயே அடுத்த கடிதத்தையும் எழுதுகிறார். அதில், கடவுளுடைய வார்த்தைக்குக் கவனம் செலுத்தும்படி சக கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; வரவிருக்கும் யெகோவாவின் நாளைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் அவர்களை எச்சரிக்கிறார். யாக்கோபும் பேதுருவும் எழுதிய கடிதங்களிலுள்ள விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் நிச்சயம் பயனடைவோம்.—எபி. 4:12.
‘விசுவாசத்தோடே கேட்கிறவர்களுக்கு’ கடவுள் ஞானத்தைத் தருகிறார்
“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்”; ஏனெனில், “அவன் உத்தமனென்று விளங்கினபின்பு . . . ஜீவகிரீடத்தைப் பெறுவான்” என்று யாக்கோபு எழுதுகிறார். ‘விசுவாசத்தோடே கேட்கிறவனுக்கு,’ சோதனைகளைச் சகிப்பதற்குத் தேவைப்படும் ஞானத்தை யெகோவா தருகிறார்.—யாக். 1:5–8, 12.
விசுவாசமும் ஞானமும், சபையில் ‘போதகராக’ ஆவோருக்கும் தேவைப்படுகின்றன. ‘சிறிய அவயவமான’ நாவு, ‘முழு சரீரத்தையும் கறைப்படுத்தும்’ எனக் குறிப்பிட்ட பிறகு, உலக மனப்பான்மைகள் கடவுளோடு ஒருவர் வைத்திருக்கும் உறவுக்குப் பங்கம் விளைவிக்கும் என யாக்கோபு எச்சரிக்கிறார். அதோடு, யாராவது ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டால், குணமாவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார்.—யாக். 3:1, 5, 6; 5:14, 15.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:13—‘நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டுவது’ எவ்வாறு? கடவுளுக்கு நாம் கணக்கு கொடுக்கும் சமயத்தில், நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டியிருப்பதை அவர் கருத்தில்கொண்டு, தம் குமாரனுடைய மீட்கும்பலியின் அடிப்படையில் மன்னிக்கிறார். (ரோ. 14:12) இரக்கத்தை நம் வாழ்க்கையில் முக்கியக் குணமாக்குவதற்கு இது ஒரு காரணம், அல்லவா?
4:5—எந்த வேதவாக்கியத்தை யாக்கோபு இங்கே மேற்கோளாகக் கூறுகிறார்? குறிப்பிட்ட எந்தவொரு வசனத்தையும் யாக்கோபு இங்கே மேற்கோளாகக் கூறவில்லை. என்றாலும், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட இந்த வார்த்தைகள், ஆதியாகமம் 6:5; 8:21; நீதிமொழிகள் 21:10; கலாத்தியர் 5:17 ஆகிய வசனங்களிலுள்ள பொதுவான கருத்தின் அடிப்படையில் கூறப்பட்டிருக்கலாம்.
5:20—‘தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவர்’ யாருடைய ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சிக்கிறார்? தவறான வழியிலிருந்து மனந்திரும்ப ஒரு பாவிக்குக் கிறிஸ்தவர் உதவும்போது, அவனை ஆன்மீக மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார், ஒருவேளை நித்திய அழிவிலிருந்துகூட காப்பாற்றுகிறார். இவ்வாறு உதவுகிற கிறிஸ்தவர், அந்தப் பாவியின் ‘திரளான பாவங்களை மூடுகிறார்.’
நமக்குப் பாடம்:
1:14, 15. தவறான ஆசையே பாவத்திற்குக் காரணம். ஆகவே, தவறான ஆசைகளின்மீதே கவனத்தை ஊன்ற வைத்து அவற்றை வளர்க்கக் கூடாது. மாறாக, நம் மனதையும் இருதயத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, அவற்றைப் பற்றியே ‘சிந்தித்துக் கொண்டிருக்க’ வேண்டும்.—பிலி. 4:8.
2:8, 9. ‘பட்சபாதம்’ காட்டுவது, அன்பு சம்பந்தமான ‘ராஜரிக பிரமாணத்துக்கு’ முரணானது. எனவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் பட்சபாதம் காட்டுவதில்லை.
2:14-26. நாம், மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குரிய அல்லது கிறிஸ்தவர்களுக்குரிய “கிரியைகளினால்” அல்லாமல், ‘விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறோம்.’ நமக்கு விசுவாசம் இருப்பதாகச் சொல்லிக்கொள்வது மட்டும் போதாது. (எபே. 2:8, 9; யோவா. 3:16) கடவுளுக்குப் பிரியமாய் நடக்க அந்த விசுவாசம் நம்மைத் தூண்ட வேண்டும்.
3:13-17. ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்,’ ‘லெளகிக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிற’ ஞானத்தைவிட நிச்சயம் மேலானது! ஆகவே, ‘புதையல்களைத் தேடுகிறதுபோல தேவ ஞானத்தைத் தேட’ வேண்டும்.—நீதி. 2:1–5.
3:18. ராஜ்யத்தின் நற்செய்தியாகிய விதை, ‘சமாதானத்தை நடப்பிக்கிறவர்களால் சமாதானத்திலே’ விதைக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, நாம் கர்வம்பிடித்தவர்களாகவோ, சண்டைக்காரர்களாகவோ, ரகளை செய்கிறவர்களாகவோ இல்லாமல் சமாதானம்பண்ணுகிறவர்களாய் இருப்பது அவசியம்.
‘விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்’
பரலோகத்தில் ஓர் இடத்தைப் பெறும் ‘ஜீவனுள்ள நம்பிக்கையை’ சக விசுவாசிகளுக்கு பேதுரு நினைப்பூட்டுகிறார். ‘நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் இருக்கிறீர்கள்’ எனக் கூறுகிறார். கீழ்ப்பட்டு இருப்பது சம்பந்தமாய்த் திட்டவட்டமாகப் புத்திமதி கொடுத்த பிறகு, ‘ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருக்கும்படி’ அனைவரையும் அறிவுறுத்துகிறார்.—1 பே. 1:3, 4; 2:9; 3:8.
யூத சமுதாயத்தின் “முடிவு சமீபமாயிற்று” என்பதால், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” எனச் சகோதரர்களுக்கு பேதுரு ஆலோசனை அளிக்கிறார். ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; . . . விசுவாசத்தில் உறுதியாயிருந்து, [சாத்தானுக்கு] எதிர்த்து நில்லுங்கள்’ என்றும் அவர் கூறுகிறார்.—1 பே. 4:7; 5:8, 9.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:20-22—ஞானஸ்நானம் நம்மை எவ்வாறு இரட்சிக்கிறது? நாம் இரட்சிக்கப்படுவதற்கான தகுதிகளில் ஞானஸ்நானம் பெறுவதும் ஒன்று. என்றாலும், ஞானஸ்நானம் பெற்றுவிட்டாலே நாம் இரட்சிப்பை அடைந்துவிடுவோம் என்று சொல்ல முடியாது. ‘இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால்தான்’ நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது. ஆகவே, ஞானஸ்நானம் பெறுகிறவர், இயேசு உயிர்த்தியாகம் செய்து மரித்ததாலும், உயிர்த்தெழுப்பப்பட்டதாலும், இறந்தவர்கள் மற்றும் உயிரோடிருப்பவர்கள் மீது அதிகாரம் பெற்றவராய் ‘தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பதாலுமே’ தனக்கு இரட்சிப்பு கிடைக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட விசுவாசத்தோடு முழுக்காட்டுதல் பெறுவது, ‘எட்டுப்பேர் மாத்திரம் ஜலத்தில் காக்கப்பட்டதற்கு’ ஒப்பாக இருக்கிறது.
4:6—“மரித்தோரான” யாருக்கு “சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது”? இவர்கள், ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்கள்’; அதாவது, நற்செய்தியைக் கேட்பதற்கு முன்பு ஆன்மீக ரீதியில் மரித்திருந்தவர்கள். (எபே. 2:1) என்றாலும், நற்செய்தியில் விசுவாசம் வைத்த பிறகு இவர்கள் ஆன்மீக ரீதியில் ‘உயிர் பிழைத்தார்கள்.’
நமக்குப் பாடம்:
1:7. நமது விசுவாசம் விலையேறப்பெற்றதாய் இருப்பதற்கு, அது நிரூபிக்கப்பட்டதாய், அதாவது சோதிக்கப்பட்டதாய், இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுதியான விசுவாசம், ‘உயிரைக் காத்துக்கொள்ள’ நிச்சயமாகவே உதவும். (எபி. 10:39, NW) ஆகவே, நமது விசுவாசத்திற்குச் சோதனைகள் வரும்போது நாம் பின்வாங்கக் கூடாது.
1:10-12. பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவ சபையாரைக் குறித்துக் கடவுளுடைய பூர்வ கால தீர்க்கதரிசிகள் எழுதிய ஆழமான ஆன்மீகச் சத்தியங்களை உன்னிப்பாய்க் கவனித்து, அவற்றைப் புரிந்துகொள்ளத் தேவதூதர்கள் ஆசைப்பட்டார்கள். என்றாலும், யெகோவா கிறிஸ்தவ சபையின் மூலமாக விஷயங்களைத் தெரிவிக்கத் துவங்கியபோதுதான் இவை தெளிவாயின. (எபே. 3:10) நாமும் தேவதூதர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, “தேவனுடைய ஆழங்களை” ஆராய்வதற்குக் கடினமாய் முயற்சி எடுக்க வேண்டும், அல்லவா?—1 கொ. 2:10.
2:21. நமக்கு முன்மாதிரியாக இருக்கும் இயேசு கிறிஸ்துவைப் போலவே, யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்கு ஆதரவாக நாம் மரணத்தைக்கூட சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
5:6, 7. நம் கவலைகளையெல்லாம் யெகோவாமீது வைக்கையில், நாளைக்காக அனாவசியமாகக் கவலைப்படாமல் உண்மை வணக்கத்திற்குத் தொடர்ந்து முதலிடம் கொடுக்க அவர் நமக்கு உதவுகிறார்.—மத். 6:33, 34.
“கர்த்தருடைய நாள் . . . வரும்”
“தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே [அதாவது, கடவுளுடைய சக்தியினாலே] ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று பேதுரு எழுதுகிறார். தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம்செலுத்துவது, ‘கள்ளப்போதகர்களிடமிருந்தும்,’ தீங்கு விளைவிக்கிற மற்றவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.—2 பே. 1:21; 2:1–3.
“கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து” பரிகாசம் செய்வார்கள், ஆனால் “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” என்று பேதுரு எச்சரிக்கிறார். அந்த ‘நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருப்பவர்களுக்கு’ சிறந்த ஆலோசனை அளிப்பதோடு பேதுரு தன் கடிதத்தை நிறைவுசெய்கிறார்.—2 பே. 3:3, 10–12.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:19—“விடிவெள்ளி” என அழைக்கப்படுவது யார், அவர் உதிப்பது எப்போது, இது நிகழ்ந்துவிட்டதென நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்? ராஜ்ய அதிகாரத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவே “விடிவெள்ளி” என அழைக்கப்படுகிறார். (வெளி. 22:16) ஒரு புதிய நாள் பிறந்துவிட்டதை அறிவிக்கிற விடிவெள்ளியாய், 1914-ல் எல்லாச் சிருஷ்டிகளுக்கும் முன்பாக மேசியானிய ராஜாவாக அவர் உதித்தார். இயேசுவின் மறுரூபக் காட்சி, அவரது மகிமைக்கும் ராஜ்ய அதிகாரத்திற்கும் ஒரு முற்காட்சியாக இருந்தது; அது, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை நம்பகமானது என்பதை உறுதிப்படுத்தியது. (மாற். 9:1-3) அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துவது நம் இருதயத்திற்கு அறிவொளியூட்டுவதால், விடிவெள்ளி உதித்துவிட்டதை நாம் புரிந்துகொள்கிறோம்.
2:4— ‘நரகம் [“டார்ட்டரஸ்,” NW]’ என்பது என்ன? கலகம் செய்த தூதர்கள் எப்போது அங்கே தள்ளப்பட்டார்கள்? டார்ட்டரஸ் என்பது, சிறைபடுத்தப்படுவதைப் போன்ற ஒரு நிலையாகும். மனிதர்கள் அந்நிலைக்குத் தள்ளப்படுவதில்லை; கெட்ட தூதர்களே தள்ளப்படுகிறார்கள். அது, கடவுளுடைய ஒளிமயமான நோக்கங்கள் சம்பந்தமாக மனதில் இருளடைந்த நிலையாகும். டார்ட்டரஸில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எந்த நம்பிக்கையும் இருக்காது. நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாத தூதர்களை டார்ட்டரஸில் கடவுள் தள்ளினார்; அவர்கள் அழிக்கப்படும் வரையில் அந்தத் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள்.
3:17—‘முன்னமே அறிந்திருப்பது’ என்று பேதுரு என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்? எதிர்காலத்தில் சம்பவிக்கப்போவதை முன்னமே அறிந்திருப்பது என்ற அர்த்தத்தில் பேதுரு குறிப்பிட்டார்; இந்த அறிவு அவருக்கும், பிற பைபிள் எழுத்தாளர்களுக்கும் கடவுளுடைய சக்தியினால் அளிக்கப்பட்டது. என்றாலும், அந்த அறிவை அவர்கள் முழுமையாய்ப் பெற்றிருக்கவில்லை; எனவேதான், பூர்வ கிறிஸ்தவர்கள் எதிர்காலச் சம்பவங்களைக் குறித்த எல்லா விவரங்களையும் அறிந்திருக்கவில்லை; மேலோட்டமாக மட்டுமே அறிந்திருந்தார்கள்.
நமக்குப் பாடம்:
1:2, 5-7. விசுவாசம், சகிப்புத்தன்மை, தேவபக்தி போன்ற குணங்களை வளர்ப்பதற்கு நாம் உள்ளப்பூர்வமாக முயற்சி எடுப்பது, “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் [திருத்தமாக] அறிகிற” அறிவைப் பெருக்க உதவும்; அதோடு, அந்த அறிவு சம்பந்தமாக ‘வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க விடாது.’—2 பே. 1:8.
1:12-15. ‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருக்க,’ தொடர்ந்து நமக்கு நினைப்பூட்டுதல் தேவை. இது, சபைக் கூட்டங்கள், தனிப்பட்ட படிப்பு, பைபிள் வாசிப்பு போன்றவற்றின் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது.
2:2. நம் நடத்தை, யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நிந்தையை ஏற்படுத்திவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்.—ரோ. 2:24.
2:4-9. யெகோவா முற்காலங்களில் செய்திருப்பதை வைத்துப் பார்க்கையில், அவர் “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” என நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
2:10-13. ‘மகத்துவங்கள் [“மகத்தானவர்கள்,” NW],’ அதாவது சபை மூப்பர்கள், குறைகள் உள்ளவர்கள்தான்; அவர்கள் சில சமயங்களில் தப்புத்தவறுகள்கூட செய்யலாம்; என்றாலும், நாம் அவர்களைத் தூஷிக்கக் கூடாது.—எபி. 13:7, 17.
3:2-4, 12. “பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய . . . கட்டளைகளையும்” கூர்ந்து கவனிப்பது, யெகோவாவின் நாள் சீக்கிரம் வரப்போவதை எப்போதும் மனதில் வைத்திருக்க உதவும்.
3:11-14. ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கிற’ நாம், (1) “பரிசுத்த நடக்கை” உள்ளவர்களாய், உடல், மன, ஒழுக்க, மற்றும் ஆன்மீக ரீதியில் சுத்தமாயிருக்க வேண்டும்; (2) ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது, சீஷராக்குவது போன்ற, ‘தேவபக்தியை’ வெளிக்காட்டும் செயல்களையே எப்போதும் செய்ய வேண்டும்; (3) நம் நடத்தையையும் சுபாவத்தையும் இந்த உலகத்தால் ‘கறைபடாதபடி’ பார்த்துக்கொள்ள வேண்டும்; (4) எல்லாக் காரியங்களையும் தூய உள்ளெண்ணத்தோடு செய்து, ‘பிழையில்லாதவர்களாய்’ இருக்க வேண்டும்; (5) கடவுளோடும், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடும், சக மனிதரோடும் “சமாதானத்தோடே” இருக்க வேண்டும்.