உபாகமம்
6 பின்பு அவர், “உங்களுக்குக் கற்றுத்தரச் சொல்லி உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளும் விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும், அப்போது நீண்ட காலம் வாழ்வீர்கள்.+ 3 இஸ்ரவேலர்களே, நீங்கள் இவற்றைக் கேட்டுக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து, ஏராளமாகப் பெருகுவீர்கள்.
4 இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள்: நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.+ 6 இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 7 அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும்.*+ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+ 8 அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+ 9 அவற்றை உங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நகரவாசல்களிலும் எழுதிவைக்க வேண்டும்.
10 உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து,+ நீங்கள் கட்டாத பிரமாண்டமான நகரங்களையும்,+ 11 நீங்கள் உழைத்துச் சம்பாதிக்காத நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், நீங்கள் வெட்டாத கிணறுகளையும்,* நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ மரங்களையும் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+ 12 இதெல்லாம் நடக்கும்போது, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலை செய்த யெகோவாவை மறந்துவிடாதபடி கவனமாக இருங்கள்.+ 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்,+ அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்.+ அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும்.+ 14 உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் வணங்குகிற வேறெந்த தெய்வங்களையும் நீங்கள் தேடிப்போய் வணங்கக் கூடாது.+ 15 ஏனென்றால், உங்கள் நடுவில் இருக்கிற உங்கள் கடவுளாகிய யெகோவா தன்னை மட்டும்தான் வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+ மீறினால், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்.+ இந்தப் பூமியிலிருந்து அவர் உங்களை அடியோடு அழித்துவிடுவார்.+
16 நீங்கள் மாசாவில் செய்தது போல,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டும். 18 யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ, எது நல்லதோ அதையே செய்ய வேண்டும். அப்போதுதான், யெகோவா வாக்குறுதி தந்தபடியே, உங்கள் எதிரிகள் எல்லாரையும் துரத்தியடிப்பீர்கள்.+ 19 உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா வாக்குக் கொடுத்த நல்ல தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்,+ அங்கே சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்.
20 பிற்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம் வந்து, ‘நம் கடவுளாகிய யெகோவா ஏன் இந்த எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்?’ என்று கேட்டால், 21 நீங்கள் அவர்களிடம், ‘எகிப்தில் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம், ஆனால் யெகோவா தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+ 23 நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த+ இந்தத் தேசத்தைத் தருவதற்காக அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 24 இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து, நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்தார். நாம் என்றென்றைக்கும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அப்படிக் கட்டளை கொடுத்தார்.+ அதன்படியே, நாம் இன்றைக்கு நன்றாக வாழ்ந்து வருகிறோம்.+ 25 நம் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளையெல்லாம் கவனமாகப் பின்பற்றி வந்தால், நாம் அவருடைய நீதியான வழியில் நடக்கிறவர்களாக இருப்போம்’+ என்று சொல்லுங்கள்” என்றார்.