2 ராஜாக்கள்
17 ஆகாஸ் ராஜா யூதாவை ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தில், ஏலாவின் மகன் ஓசெயா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஒன்பது வருஷங்கள் ஆட்சி செய்தார். 2 யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். ஆனால், தனக்கு முன்பிருந்த இஸ்ரவேல் ராஜாக்கள் அளவுக்கு மோசமாக நடக்கவில்லை. 3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+ 4 ஆனால், தனக்கு எதிராக ஓசெயா சூழ்ச்சி செய்வதை அசீரிய ராஜா தெரிந்துகொண்டான். ஏனென்றால், எகிப்தின் ராஜாவான சோவிடம் உதவி கேட்டு தூதுவர்களை ஓசெயா அனுப்பியிருந்தார்;+ அதோடு, முந்தைய வருஷங்களில் அசீரிய ராஜாவுக்குக் கொடுத்து வந்த கப்பத்தையும் கொடுக்காமல் நிறுத்திவிட்டார். அதனால், அசீரிய ராஜா அவரைக் கட்டி சிறையில் அடைத்தான்.
5 இஸ்ரவேல் தேசத்தின் மீது அசீரிய ராஜா படையெடுத்து வந்தான்; சமாரியாவை மூன்று வருஷங்களுக்கு முற்றுகையிட்டான். 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
7 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்கு எதிராக, அதாவது எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து தங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தவருக்கு எதிராக, பாவம் செய்தார்கள்;+ அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்,*+ 8 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த தேசத்தாரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள், இஸ்ரவேலின் ராஜாக்கள் ஏற்படுத்திய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்; அதனால்தான் இப்படி நடந்தது.
9 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களை விடாப்பிடியாகச் செய்துவந்தார்கள். எல்லா நகரங்களிலும், காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களிலும், ஆராதனை மேடுகளை அமைத்துவந்தார்கள்.+ 10 ஒவ்வொரு குன்றின் மேலும் அடர்த்தியான ஒவ்வொரு மரத்தின் கீழும்+ பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்* நிறுத்திவந்தார்கள்.+ 11 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா துரத்தியடித்த தேசத்தாரைப் போலவே எல்லா ஆராதனை மேடுகளிலும் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்கள்.+ மோசமான காரியங்களைச் செய்து யெகோவாவைப் புண்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
12 “நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது”+ என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தபோதிலும், இஸ்ரவேலர்கள் அருவருப்பான* சிலைகளை+ வணங்கிவந்தார்கள். 13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார். 14 ஆனால், அவர் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. தங்களுடைய கடவுளான யெகோவாமீது விசுவாசம் வைக்காத முன்னோர்களைப் போலவே இவர்களும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்.+ 15 அவருடைய விதிமுறைகளை ஒதுக்கித்தள்ளிக்கொண்டே இருந்தார்கள்.+ தங்களுடைய முன்னோர்களோடு அவர் செய்த ஒப்பந்தத்தையும் மீறிக்கொண்டே இருந்தார்கள். அவர் திரும்பத் திரும்பத் தங்களை எச்சரித்தபோதிலும் அதை அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள்.+ ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கிவந்தார்கள்,+ கடைசியில் அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் ஆனார்கள்.+ சுற்றியிருந்த தேசத்தாரைப் பின்பற்ற வேண்டாமென்று யெகோவா கட்டளையிட்டிருந்தும், அவர்களைப் பின்பற்றினார்கள்.+
16 தங்களுடைய கடவுளான யெகோவா தந்த எல்லா கட்டளைகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு உலோகக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்கள்,+ பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்கள்;+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டார்கள்,+ பாகாலை வழிபட்டார்கள்.+ 17 தங்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்,*+ குறி கேட்டார்கள்,+ சகுனம் பார்த்தார்கள், யெகோவாவைப் புண்படுத்துவதற்காக அவர் வெறுக்கிற காரியங்களை வேண்டுமென்றே செய்துவந்தார்கள்.
18 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவா பயங்கர கோபமடைந்தார், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.
19 ஆனால், யூதா மக்கள்கூட தங்களுடைய கடவுளான யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை;+ இஸ்ரவேலர்களுடைய பழக்கவழக்கங்களை இவர்களும் பின்பற்றினார்கள்.+ 20 இஸ்ரவேலர்களின் வம்சத்தில் வந்த எல்லாரையும் யெகோவா ஒதுக்கித்தள்ளினார்; அவர்களை அவமானப்படுத்தி கொள்ளைக்காரர்களின் கையில் விட்டுவிட்டார். கடைசியில், அவர்களைத் தன் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார். 21 தாவீதின் வம்சத்திலிருந்து இஸ்ரவேலைப் பிரித்தெடுத்தார். அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் யெகோவாவைவிட்டு விலகிப்போக யெரொபெயாம் காரணமானார், அவர்களை மிகப் பெரிய பாவம் செய்ய வைத்தார். 22 யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களையும் இஸ்ரவேல் மக்கள் செய்துவந்தார்கள்,+ அவற்றைவிட்டு விலகவில்லை. 23 யெகோவா தன்னுடைய ஊழியர்களான எல்லா தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்தபடியே+ அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்கும்வரை அப்படியேதான் செய்துவந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தேசத்திலிருந்து அசீரியாவுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்,+ அவர்கள் இன்றுவரை அங்குதான் இருக்கிறார்கள்.
24 பின்பு பாபிலோன், கூத்தா, ஆவா, காமாத், செப்பர்வாயிம்+ ஆகிய இடங்களிலிருந்த மக்களை அசீரிய ராஜா கொண்டுவந்து, இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக அவர்களை சமாரியா நகரங்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியா நகரங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருந்தார்கள். 25 அவர்கள் அங்கே குடியேறிய சமயத்தில் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், யெகோவா அவர்களுடைய ஊருக்குள் சிங்கங்களை அனுப்பினார்,+ அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன. 26 அப்போது, அசீரிய ராஜாவிடம், “வேறு தேசங்களிலிருந்து சிறைபிடித்துவந்து சமாரியா நகரங்களில் நீங்கள் குடியேற்றிய மக்களுக்கு அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தை* பற்றியோ தெரியவில்லை. அதனால், அவர் சிங்கங்களை ஊருக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவை அந்த மக்களைக் கொன்றுபோடுகின்றன. அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ அவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை” என்று சொல்லப்பட்டது.
27 அப்போது அசீரிய ராஜா, “அங்கிருந்து நீங்கள் சிறைபிடித்துவந்த குருமார்களில் ஒருவரை அங்கேயே திருப்பி அனுப்பிவிடுங்கள். அங்கிருக்கிற மக்களுக்கு அந்தத் தேசத்தின் கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் அவர் சொல்லிக்கொடுக்கட்டும்” என்று கட்டளையிட்டார். 28 அதனால், சமாரியாவிலிருந்து அவர்கள் சிறைபிடித்துப்போன குருமார்களில் ஒருவர் பெத்தேலுக்குத்+ திரும்பி வந்து அங்கே குடியேறி, யெகோவாவை எப்படி வணங்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.+
29 ஆனால், ஒவ்வொரு தேசத்தாரும் அவரவருக்கென்று ஒரு தெய்வச் சிலையைச் செய்துகொண்டார்கள். ஆராதனை மேடுகளில் சமாரியர்கள் கட்டியிருந்த கோயில்களில் அவற்றை வைத்தார்கள். ஒவ்வொரு தேசத்தாரும் தாங்கள் குடியிருந்த நகரங்களில் இப்படித்தான் செய்தார்கள். 30 பாபிலோனியர்கள் சுக்கோத்-பெனோத் சிலையையும், கூத்தியர்கள் நேர்கால் சிலையையும், காமாத்தியர்கள்+ அசிமா சிலையையும் செய்தார்கள்; 31 ஆவீமியர்கள் நிபேகாஸ், தர்தாக் தெய்வங்களின் சிலைகளைச் செய்தார்கள்; செப்பர்வாயிமியர்கள் தங்களுடைய தெய்வங்களான+ அத்ரமலேக்கு, அன்னமலேக்கு ஆகியவற்றுக்குத் தங்கள் மகன்களை நெருப்பில் பலியிட்டார்கள். 32 அவர்கள் யெகோவாவுக்குப் பயந்தபோதிலும், தங்களுடைய ஆட்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து கோயில்களில் பூசாரிகளாக நியமித்துக்கொண்டார்கள். அங்கிருந்த கோயில்களில் அவர்கள் பூஜை செய்தார்கள்.+ 33 இப்படி, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்தபோதிலும், எந்தத் தேசத்திலிருந்து பிடித்துவரப்பட்டார்களோ அந்தத் தேசத்து மக்களின் மதத்தை* பின்பற்றி, அவர்களுடைய தெய்வங்களை வழிபட்டார்கள்.+
34 முன்பு தாங்கள் பின்பற்றிய மதங்களைத்தான்* இன்றுவரை பின்பற்றுகிறார்கள். அவர்கள் யாரும் யெகோவாவை வழிபடுவதில்லை; யெகோவாவின் சட்டதிட்டங்களையும், நீதித்தீர்ப்புகளையும், திருச்சட்டத்தையும், இஸ்ரவேல் என்று அவர் பெயர் மாற்றிய யாக்கோபுடைய மகன்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் அவர்கள் யாரும் பின்பற்றுவதில்லை.+ 35 இஸ்ரவேலர்களோடு யெகோவா ஒப்பந்தம் செய்தபோது,+ “மற்ற தெய்வங்களை நீங்கள் வழிபடக் கூடாது. நீங்கள் அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றுக்குச் சேவை செய்யவோ அவற்றுக்குப் பலி கொடுக்கவோ கூடாது.+ 36 மகா வல்லமையாலும் பலத்தாலும் எகிப்து தேசத்திலிருந்து உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டுவந்த யெகோவாவைத்தான்+ நீங்கள் வணங்க வேண்டும்;+ அவருக்கு முன்னால்தான் தலைவணங்க வேண்டும், அவருக்குத்தான் பலி கொடுக்க வேண்டும். 37 அவர் தந்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் திருச்சட்டத்தையும் கட்டளைகளையும்+ நீங்கள் அப்படியே பின்பற்ற வேண்டும்; மற்ற தெய்வங்களுக்கு நீங்கள் பயபக்தி காட்டக் கூடாது. 38 உங்களுடன் நான் செய்த ஒப்பந்தத்தை நீங்கள் மறந்துவிடக் கூடாது;+ மற்ற தெய்வங்களுக்குப் பயபக்தி காட்டக் கூடாது. 39 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு மட்டும்தான் நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும்; ஏனென்றால், உங்களுடைய எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றப்போகிறவர் அவர்தான்” என்று கட்டளையிட்டிருந்தார்.
40 ஆனால், அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை, முன்பு பின்பற்றி வந்த மதத்தைத்தான்* பின்பற்றினார்கள்.+ 41 இப்படி, அந்தத் தேசத்தார் யெகோவாவுக்குப் பயபக்தி காட்டியபோதிலும்,+ தங்களுடைய தெய்வச் சிலைகளையும் வழிபட்டார்கள். அவர்களுடைய மகன்களும் பேரன்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்தது போலவே இன்றுவரை செய்துவருகிறார்கள்.