மத்தேயு எழுதியது
27 பொழுது விடிந்தபோது முதன்மை குருமார்கள், பெரியோர்கள்* ஆகிய எல்லாரும் இயேசுவை எப்படிக் கொன்றுபோடலாம் என்று ஒன்றுகூடிப் பேசினார்கள்.+ 2 பின்பு, அவருடைய கைகளைக் கட்டி, ஆளுநர் பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.+
3 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பார்த்து மனம் வருந்தினான்; அதனால், முதன்மை குருமார்களிடமும் பெரியோர்களிடமும் அந்த 30 வெள்ளிக் காசுகளைத் திரும்பக் கொண்டுபோய்,+ 4 “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரை* காட்டிக்கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னான். அதற்கு அவர்கள், “எங்களுக்கென்ன? அது உன் பாடு!” என்று சொன்னார்கள். 5 அதனால், அவன் அந்த வெள்ளிக் காசுகளை ஆலயத்துக்குள் வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து போய்த் தூக்குப்போட்டுக்கொண்டான்.+ 6 ஆனால், முதன்மை குருமார்கள் அந்த வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்தின் விலையாக இருப்பதால் ஆலயத்தின் பொக்கிஷ அறையில் இதைப் போடுவது சரியல்ல” என்று சொன்னார்கள். 7 அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த பின்பு, அன்னியர்களைப் புதைப்பதற்காக அந்தக் காசுகளை வைத்து குயவரின் நிலத்தை வாங்கினார்கள். 8 அதனால், அது இரத்த நிலம்+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது. 9 “இஸ்ரவேலர்கள் சிலரால் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையான 30 வெள்ளிக் காசுகளை அவர்கள் எடுத்து, 10 குயவரின் நிலத்தை விலைக்கு வாங்கினார்கள்; யெகோவா* எனக்குக் கட்டளையிட்டது இதுவே”+ என்று எரேமியா* தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது அப்போது நிறைவேறியது.
11 ஆளுநர் முன்னால் இயேசு நின்றுகொண்டிருந்தார்; ஆளுநர் அவரிடம், “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்” என்றார்.+ 12 ஆனால், முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அவர்மேல் குற்றம்சாட்டியபோது அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 13 பின்பு பிலாத்து அவரிடம், “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்றார். 14 ஆனால் அவர் பதில் சொல்லவில்லை, ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை; அதனால் ஆளுநர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
15 ஒவ்வொரு வருஷமும் பஸ்கா பண்டிகையின்போது, மக்களுடைய விருப்பத்தின்படி ஒரு சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநருடைய வழக்கம்.+ 16 பரபாஸ் என்ற பேர்போன கைதி அப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தான். 17 அதனால், மக்கள் ஒன்றுகூடி வந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும், பரபாசையா அல்லது கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவையா?” என்று கேட்டார். 18 ஏனென்றால், பொறாமையால்தான் அவரைத் தன்னிடம் ஒப்படைத்திருந்தார்கள் என்பது பிலாத்துவுக்குத் தெரிந்திருந்தது. 19 அதோடு, நியாயத்தீர்ப்பு மேடையில் அவர் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய மனைவி அவரிடம் ஆள் அனுப்பி, “அந்த நல்ல மனுஷனுடைய விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்; அவரைப் பற்றி இன்று நான் ஒரு கனவு கண்டு ரொம்பவே கலங்கிப்போனேன்” என்று சொன்னாள். 20 ஆனால், பரபாசை விடுதலை செய்துவிட்டு+ இயேசுவைக் கொல்ல வேண்டுமென்று+ அவரிடம் கேட்கச் சொல்லி முதன்மை குருமார்களும் பெரியோர்களும் கூட்டத்தாரைத் தூண்டினார்கள். 21 அப்போது ஆளுநர், “இந்த இரண்டு பேரில் யாரை உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “பரபாசை!” என்று அவர்கள் கத்தினார்கள். 22 அதற்கு பிலாத்து, “அப்படியானால், கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவர்கள் எல்லாரும், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்தினார்கள்.+ 23 அப்போது அவர், “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று சொல்லி இன்னும் அதிகமாகக் கூச்சல் போட்டார்கள்.+
24 தன்னுடைய முயற்சி பலன் தரவில்லை என்பதையும் கலவரம்தான் வெடிக்கப்போகிறது என்பதையும் பிலாத்து புரிந்துகொண்டு, தண்ணீரை எடுத்து, “இந்த மனுஷனுடைய சாவுக்கு* நான் பொறுப்பாளி கிடையாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, கூட்டத்தார்முன் தன் கைகளைக் கழுவினார். 25 அதற்கு மக்கள் எல்லாரும், “இவனுடைய சாவுக்கு* நாங்களும் எங்கள் பிள்ளைகளுமே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்”+ என்று சொன்னார்கள். 26 பின்பு, அவர்களுக்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்.+
27 அதன் பின்பு, ஆளுநருடைய படைவீரர்கள் இயேசுவை ஆளுநர் மாளிகைக்குள் கொண்டுபோய், மற்ற எல்லா படைவீரர்களையும் அவரிடம் கூடிவரச் செய்தார்கள்.+ 28 பின்பு, அவருடைய உடையைக் கழற்றி, கருஞ்சிவப்பு நிற சால்வையை அவருக்குப் போர்த்திவிட்டார்கள்.+ 29 முட்களால் ஒரு கிரீடத்தைச் செய்து அதை அவர் தலைமேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள்; பின்பு, அவருக்கு முன்னால் மண்டிபோட்டு, “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொல்லிக் கேலி செய்தார்கள். 30 அதன்பின் அவர்மேல் துப்பி,+ அந்தக் கோலை எடுத்து அவருடைய தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். 31 அவரைக் கேலி செய்த பின்பு, கடைசியாக அந்தச் சால்வையை எடுத்துவிட்டு அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிட்டார்கள்; பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பதற்காகக் கொண்டுபோனார்கள்.+
32 அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது, சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவரைப் பார்த்தார்கள்; அவரைக் கட்டாயப்படுத்தி, இயேசு சுமந்து வந்த சித்திரவதைக் கம்பத்தை* சுமக்க வைத்தார்கள்.+ 33 கொல்கொதா, அதாவது மண்டையோடு, என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு+ அவர்கள் வந்தபோது, 34 கசப்புப் பொருள்* கலந்த திராட்சமதுவை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்;+ அவரோ அதை ருசிபார்த்துவிட்டு, குடிக்க மறுத்தார். 35 அவர்கள் அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, குலுக்கல் போட்டுப் பார்த்து அவருடைய மேலங்கிகளைப் பங்குபோட்டுக் கொண்டார்கள்.+ 36 பின்பு, அங்கே உட்கார்ந்து அவரைக் காவல் காத்தார்கள். 37 அதோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டைத் தெரியப்படுத்தும்படி, “இவர் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி அவருடைய தலைக்குமேல் வைத்தார்கள்.+
38 பின்பு, அவருடைய வலது பக்கம் ஒருவன், இடது பக்கம் ஒருவன் என இரண்டு கொள்ளைக்காரர்களை மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+ 39 அந்த வழியாகப் போனவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி,+ 40 “ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே,+ உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ கடவுளுடைய மகன் என்றால் சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* இறங்கி வா!”+ என்று அவரைப் பழித்துப் பேசினார்கள்.+ 41 அதேபோல், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும் ஒன்றுசேர்ந்து அவரைக் கேலி செய்து,+ 42 “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவன் இஸ்ரவேலின் ராஜாவாம்;+ இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு இவனை நம்புவோம். 43 இவன்தான் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறானே; ‘நான் கடவுளுடைய மகன்’+ என்றுகூட சொன்னானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார்கள். 44 அதேபோல், அவர் பக்கத்திலே மரக் கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்த கொள்ளைக்காரர்களும் அவரைப் பழித்துப் பேசினார்கள்.+
45 ஆறாம் மணிநேரத்திலிருந்து* ஒன்பதாம் மணிநேரம்வரை* பூமி முழுவதும் இருள் சூழ்ந்தது.+ 46 சுமார் ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதாவது, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று சொன்னார். 47 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று சொன்னார்கள்.+ 48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக அவருக்குக் கொடுத்தான்.+ 49 மற்றவர்களோ, “பொறு! எலியா இவனைக் காப்பாற்ற வருகிறாரா பார்ப்போம்” என்று சொன்னார்கள். 50 மறுபடியும் இயேசு உரத்த குரலில் சத்தமிட்டு உயிர்விட்டார்.+
51 அப்போது, ஆலயத்தின் திரைச்சீலை*+ மேலிருந்து கீழ்வரை+ இரண்டாகக் கிழிந்தது,+ பூமி அதிர்ந்தது, பாறைகள் பிளந்தன. 52 கல்லறைகள் திறந்துகொண்டன, இறந்துபோன* பரிசுத்தவான்களுடைய சடலங்கள் பல வெளியே வந்து விழுந்தன; 53 பலர் அவற்றைப் பார்த்தார்கள். (அவர் உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கல்லறைத் தோட்டத்திலிருந்து வந்த ஆட்கள் பரிசுத்த நகரத்துக்குள் போனார்கள்.)* 54 படை அதிகாரியும் அவரோடு இயேசுவைக் காவல்காத்த ஆட்களும், பூமி அதிர்ந்ததையும் மற்ற சம்பவங்களையும் பார்த்து மிகவும் பயந்து, “நிச்சயமாகவே இவர் கடவுளுடைய மகன்தான்” என்று சொன்னார்கள்.+
55 இயேசுவுக்குப் பணிவிடை செய்வதற்காக கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பலர், தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.+ 56 அவர்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் அம்மாவான மரியாளும், செபெதேயுவின் மகன்களுடைய அம்மாவும் இருந்தார்கள்.+
57 சாயங்கால நேரமாகிவிட்டதால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த பணக்காரரும் இயேசுவின் சீஷராக ஆகியிருந்தவருமான யோசேப்பு,+ 58 பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார்.+ அதை அவரிடம் கொடுக்கச் சொல்லி பிலாத்து கட்டளையிட்டார்.+ 59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். 61 ஆனால், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் அங்கேயே கல்லறைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்.+
62 அடுத்த நாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள்,+ முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் கூட்டமாக வந்து, 63 “ஐயா, அந்த மோசக்காரன் உயிரோடு இருந்தபோது, ‘மூன்று நாட்களுக்குப் பிறகு நான் உயிரோடு எழுப்பப்படுவேன்’+ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. 64 அதனால், அவனுடைய சீஷர்கள் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய், ‘அவர் உயிரோடு எழுப்பப்பட்டார்!’ என்று மக்களிடம் சொல்லிவிடாதபடி, மூன்றாம் நாள்வரை கல்லறையைக் காவல் காப்பதற்குக் கட்டளையிடுங்கள்;+ இல்லையென்றால், முதலில் செய்த மோசடியைவிட இந்த மோசடி படுமோசமாக இருக்கும்” என்று சொன்னார்கள். 65 அதற்கு பிலாத்து, “காவலர்களைக் கூட்டிக்கொண்டு போய், உங்களால் முடிந்தளவு காவல் காத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். 66 அதனால், அவர்கள் போய் அந்தக் கல்லறையின் கல்லுக்கு முத்திரைபோட்டு, அதைக் காவல் காக்க காவலர்களை நிறுத்தினார்கள்.