மத்தேயு எழுதியது
28 ஓய்வுநாளுக்குப் பின்பு, வாரத்தின் முதலாம் நாள், பொழுது விடியும் நேரத்தில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கப் போனார்கள்.+
2 அங்கே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது; ஏனென்றால், யெகோவாவின்* தூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, கல்லறையின் கல்லைப் புரட்டிப் போட்டு அதன்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தார்.+ 3 அவருடைய தோற்றம் மின்னலைப் போல் மின்னியது; அவருடைய உடை பனியைப் போல் வெண்மையாக இருந்தது.+ 4 அவரைப் பார்த்த காவல்காரர்கள் பயந்து நடுங்கி, செத்தவர்களைப் போல ஆனார்கள்.
5 தேவதூதர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்?+ 6 அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+ அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள். 7 சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்;+ அங்கே அவரைப் பார்ப்பீர்கள். இதைச் சொல்லத்தான் நான் வந்தேன்”+ என்றார்.
8 அவர்கள் சீக்கிரமாகக் கல்லறையைவிட்டு* வெளியே வந்து, பயத்தோடும் அதேசமயத்தில் மிகுந்த சந்தோஷத்தோடும், இந்த விஷயத்தை அவருடைய சீஷர்களுக்குச் சொல்வதற்காக ஓடினார்கள்.+ 9 திடீரென்று இயேசுவே அவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினார். அவர்கள் அவர் முன்னால் போய் மண்டிபோட்டு, அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டார்கள். 10 இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள்! நீங்கள் என் சகோதரர்களிடம் போய், அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்று சொன்னார்.
11 அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது, காவலர்களில்+ சிலர் நகரத்துக்குள் போய், நடந்த எல்லாவற்றையும் முதன்மை குருமார்களிடம் சொன்னார்கள். 12 இவர்கள் பெரியோர்களோடு* கூடிவந்து ஆலோசனை செய்தார்கள்; அதன் பின்பு, படைவீரர்களுக்கு ஏராளமான வெள்ளிக் காசுகளைக் கொடுத்து, 13 “‘ராத்திரியில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்’+ என்று சொல்லுங்கள். 14 இது ஆளுநருடைய காதுக்கு எட்டினால், நாங்கள் அவரிடம் பேசிக்கொள்கிறோம், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்” என்றார்கள். 15 அதனால், அவர்கள் வெள்ளிக் காசுகளை வாங்கிக்கொண்டு, தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள்; இந்தப் பேச்சு யூதர்கள் மத்தியில் இந்த நாள்வரை பரவியிருக்கிறது.
16 இயேசு சொன்னபடியே+ 11 சீஷர்களும் கலிலேயாவில் இருக்கிற மலைக்குப் போனார்கள்.+ 17 அங்கே அவரைப் பார்த்தபோது அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள்; ஆனால், அவரைப் பின்பற்றியவர்களில் சிலர் சந்தேகப்பட்டார்கள். 18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+ 19 அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி,+ பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.+ 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.+ இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை*+ எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார்.