தானியேல்
7 அது பாபிலோனின் ராஜா பெல்ஷாத்சார்+ ஆட்சி செய்த முதலாம் வருஷம். ஒருநாள் ராத்திரி தானியேல் படுத்திருந்தபோது கனவையும் தரிசனங்களையும் பார்த்தார்.+ பார்த்ததையெல்லாம் அவர் விவரமாக எழுதி வைத்தார்.+ 2 தானியேல் இப்படிச் சொன்னார்:
“ராத்திரி நான் பார்த்த தரிசனத்தில், நான்கு திசைகளிலிருந்தும் காற்று அடித்து ஒரு பெரிய கடலைக் கொந்தளிக்க வைத்தது.+ 3 அப்போது, வித்தியாசமான உருவங்களில் நான்கு பெரிய மிருகங்கள்+ அந்தக் கடலிலிருந்து எழும்பி வந்தன.
4 முதலாவது மிருகம் சிங்கத்தைப் போலிருந்தது.+ அதற்கு கழுகின் சிறகுகள் இருந்தன.+ அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டதைப் பார்த்தேன். அது தரையிலிருந்து தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நிற்க வைக்கப்பட்டது. அதற்கு மனித இதயம் கொடுக்கப்பட்டது.
5 அதன் பின்பு, கரடியைப் போன்ற இன்னொரு மிருகத்தைப் பார்த்தேன்.+ அது ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று, மூன்று விலா எலும்புகளைத் தன்னுடைய பற்களில் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்து, இஷ்டம்போல் இறைச்சி சாப்பிடு’+ என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதற்குப் பின்பு, சிறுத்தையைப் போன்ற இன்னொரு மிருகத்தைப் பார்த்தேன்.+ அதனுடைய முதுகில் பறவையின் சிறகுகளைப் போன்ற நான்கு சிறகுகள் இருந்தன. அந்த மிருகத்துக்கு நான்கு தலைகளும் இருந்தன.+ ஆட்சி செய்யும் அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
7 அதற்குப் பின்பு அந்தத் தரிசனத்தில், நான்காவது மிருகத்தைப் பார்த்தேன். அதனுடைய உருவம் பயங்கரமாகவும் திகிலூட்டுவதாகவும் இருந்தது. அது அபார பலம் உள்ளதாக இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது எல்லாவற்றையும் நொறுக்கி, விழுங்கியது; மீதியானதைக் கால்களால் மிதித்துப்போட்டது.+ முந்தின மூன்று மிருகங்களிலிருந்து அது வித்தியாசமாக இருந்தது. அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. 8 அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டே இருந்தபோது, அவற்றுக்கு இடையில் இன்னொரு சிறிய கொம்பு முளைத்தது.+ அப்போது, முந்தின கொம்புகளில் மூன்று கொம்புகள் பிடுங்கப்பட்டன. புதிய கொம்புக்கு மனிதக் கண்களைப் போன்ற கண்களும், பெருமை பேசுகிற வாயும் இருந்தன.+
9 அதற்குப் பின்பு, சிம்மாசனங்கள் வைக்கப்பட்டன. யுகம் யுகமாக வாழ்கிறவர்+ தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்.+ அவருடைய உடை பனிபோல் வெண்மையாக இருந்தது,+ அவருடைய தலைமுடி பஞ்சுபோல் வெள்ளையாக இருந்தது. அவருடைய சிம்மாசனம் தீக்கொழுந்துகளாகவும் அதன் சக்கரங்கள் எரிகிற நெருப்பாகவும் இருந்தன.+ 10 ஒரு நெருப்பு ஓடை அவருடைய சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு ஓடியது.+ ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்தார்கள், கோடானுகோடி* பேர் அவருக்கு முன்னால் நின்றார்கள்.+ நீதிமன்றம்+ கூடியது, புத்தகங்கள் திறக்கப்பட்டன.
11 பின்பு, அந்தக் கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசும் சத்தத்தை நான் கேட்டேன்.+ அதனால் நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். பின்பு, அந்த மிருகம் கொல்லப்பட்டது. அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டது. 12 மற்ற மிருகங்களிடமிருந்து+ அரசாட்சி பறிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் ஆயுள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீட்டிக்கப்பட்டது.
13 அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார். 14 எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் இவருக்குச் சேவை செய்வதற்காக,+ அரசாட்சியும்+ மேன்மையும்+ ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.+
15 தானியேலாகிய நான் அந்தத் தரிசனங்களைப் பார்த்துப் பயந்துபோனேன்.+ அவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன். 16 அங்கு நின்றவர்களில் ஒருவரிடம் போய் அவற்றின் உண்மையான அர்த்தத்தைக் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் எனக்கு விளக்கினார்.
17 ‘அந்த நான்கு பெரிய மிருகங்கள்,+ பூமியில் எழும்பப்போகும் நான்கு ராஜாக்களைக் குறிக்கின்றன.+ 18 ஆனால், மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்தான்+ ராஜ்யத்தைப் பெறுவார்கள்.+ என்றென்றைக்கும், சதா காலத்துக்கும், அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்’+ என்று சொன்னார்.
19 பின்பு, மற்ற எல்லா மிருகங்களிலிருந்தும் வித்தியாசமாக இருந்த அந்த நான்காவது மிருகத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அது இரும்புப் பற்களோடும் செம்பு நகங்களோடும் பார்ப்பதற்கு படுபயங்கரமாக இருந்தது. அது எல்லாவற்றையும் நொறுக்கி, விழுங்கியது; மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது.+ 20 அதன் தலையில் 10 கொம்புகள்+ இருந்தன. பின்பு, புதிதாக ஒரு கொம்பு முளைத்தது. அப்போது, முந்தின கொம்புகளில் 3 கொம்புகள் விழுந்தன.+ அந்தப் புதிய கொம்புக்குக் கண்களும் பெருமை பேசுகிற வாயும் இருந்தன. அது மற்ற கொம்புகளைவிட பெரியதாக இருந்தது.
21 அதற்குப் பின்பு, அந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடு தொடர்ந்து போர் செய்து அவர்களை ஜெயித்துவந்தது.+ 22 கடைசியில், யுகம் யுகமாக வாழ்கிறவர்+ வந்தார். மகா உன்னதமானவரான அவர் தன்னுடைய பரிசுத்தவான்களின் சார்பாக நியாயத்தீர்ப்பு வழங்கினார்.+ அந்தப் பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு நேரம் வந்தது.+
23 அவர் என்னிடம், ‘நான்காவது மிருகம், இந்தப் பூமியில் எழும்பப்போகிற நான்காவது ராஜ்யத்தைக் குறிக்கிறது. அது மற்ற எல்லா ராஜ்யங்களிலிருந்தும் வித்தியாசமாக இருக்கும். அது பூமியிலுள்ள எல்லாவற்றையும் மிதித்து, நொறுக்கி, விழுங்கிவிடும்.+ 24 அந்த 10 கொம்புகள், அந்த ராஜ்யத்தில் எழும்பப்போகிற 10 ராஜாக்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பின்பு இன்னொரு ராஜா தோன்றுவான். முன்பிருந்த ராஜாக்களிலிருந்து அவன் வித்தியாசமாக இருப்பான். அந்த ராஜாக்களில் 3 பேரை அவன் தோற்கடிப்பான்.+ 25 அவன் உன்னதமானவருக்கு எதிராகப் பேசுவான்.+ மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கு எப்போதும் தொல்லை கொடுப்பான். காலங்களையும் சட்டத்தையும் மாற்ற நினைப்பான். அந்தப் பரிசுத்தவான்கள் ஒரு காலத்துக்கும், இரண்டு காலங்களுக்கும், அரைக் காலத்துக்கும்*+ அவனுடைய கையில் கொடுக்கப்படுவார்கள். 26 ஆனால், நீதிமன்றம் கூடும். அவனுடைய அரசாட்சி பறிக்கப்படும். அவன் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்படுவான்.+
27 உலகெங்கும் இருக்கிற ராஜ்யங்களும் அவற்றின் அரசாட்சியும் மேன்மையும் மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும்.+ அவர்களுடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ எல்லா ராஜ்யங்களைச் சேர்ந்த ஜனங்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்வார்கள்’ என்றார்.
28 நான் பார்த்த தரிசனத்தின் முடிவு இதுதான். தானியேலாகிய நான் இதையெல்லாம் நினைத்துக் கதிகலங்கிப்போனேன். என் முகம் வெளுத்துப்போனது.* ஆனாலும், எல்லாவற்றையும் என் உள்ளத்திலேயே வைத்துக்கொண்டேன்.”