யோவேல்
2 “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+
என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள்.
2 அந்த நாள் வெளிச்சமே இல்லாத நாள்.+
கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
மலைமேல் படரும் விடியற்கால வெளிச்சத்தைப் போல மங்கலாக இருக்கும் நாள்.
பலம்படைத்த வெட்டுக்கிளிகளின்* கூட்டம் வருகிறது.+
அதைப் போன்ற ஒரு கூட்டம் இதற்குமுன் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.
எத்தனை தலைமுறை வந்தாலும் வரப்போவதில்லை.
3 அதன் முன்னால் இருப்பதையெல்லாம் நெருப்பு பொசுக்கும்.
அதன் பின்னால் இருப்பதையெல்லாம் தீ ஜுவாலை எரிக்கும்.+
அது வருவதற்குமுன் தேசமெல்லாம் ஏதேன் தோட்டம்+ போல இருக்கும்.
வந்த பின்போ பொட்டல் காடாக மாறிவிடும்.
எதுவுமே தப்பாது.
5 அவை மலைகள்மேல் துள்ளிவருகிற சத்தம் ரதங்களின் சத்தம் போலவும்,+
வைக்கோல் பற்றியெரிகிற சத்தம் போலவும்,
போருக்கு அணிவகுத்துச் செல்கிற வீரர்களின் சத்தம் போலவும் இருக்கும்.+
6 அவற்றால் ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள்.
எல்லாருடைய முகமும் வெளுத்துப்போகும்.
7 அவை படைவீரர்கள் போலப் பாயும்.
ராணுவ வீரர்கள் போல மதிலைத் தாண்டும்.
ஒவ்வொன்றும் அதனதன் வரிசையில் போகும்.
பாதை மாறாமல் போகும்.
8 ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் போகும்.
ஒவ்வொன்றும் முன்னேறிக்கொண்டே போகும்.
அவற்றில் சில, ஆயுதங்களுக்குப் பலியாகும்.
ஆனாலும், மற்றவை தளராமல் செல்லும்.
9 அவை நகரத்துக்குள் பாயும், மதில்மேல் ஓடும்.
வீடுகள்மேல் ஏறும், திருடனைப் போல ஜன்னல்கள் வழியாக நுழையும்.
10 அவற்றைப் பார்த்து தேசம் நடுங்கும், வானம் அதிரும்,
சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்,+
நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும்.
11 யெகோவாவின் படை மாபெரும் படை,+ அதன் முன்னால் அவர் முழங்குவார்.+
அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர் பலம்படைத்தவர்.
யெகோவாவின் மகா நாள் படுபயங்கரமானது.+
யாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்?”+
12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+
விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.
13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+
உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.
அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*
ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+
14 ஒருவேளை அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு,*+
உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தரலாம்.
பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக் கொண்டுவரலாம்.
15 சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!
விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு+ அழைப்பு கொடுங்கள்.
16 ஜனங்களை ஒன்றுகூட்டுங்கள்; சபையைப் புனிதப்படுத்துங்கள்.+
பெரியோர்களை அழையுங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.+
மணமகன் உள்ளறையிலிருந்து புறப்பட்டு வரட்டும், மணமகளும் தன் அறையிலிருந்து வெளியே வரட்டும்.
17 யெகோவாவின் ஊழியர்களான குருமார்கள், ஆலய வாசலுக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் நிற்கட்டும்.+
அழுதுகொண்டே இப்படிச் சொல்லட்டும்:
‘யெகோவாவே, உங்கள் ஜனங்கள்மேல் தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்.
அவர்கள் உங்களுடைய சொத்து, மற்றவர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு விட்டுவிடாதீர்கள்.
மற்ற தேசங்கள் அவர்களை அடக்கி ஆள அனுமதிக்காதீர்கள்.
“அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?”+ என்று யாரும் கேட்டுவிடக் கூடாதே.’
18 யெகோவா அவருடைய தேசத்துக்கு உதவி செய்ய வைராக்கியமாக இருப்பார்.
அவருடைய ஜனங்கள்மேல் கரிசனை காட்டுவார்.+
19 யெகோவா அவருடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்வார்:
‘நான் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தருவேன்.
அதைச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+
மற்றவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதற்கு இனி நான் விடமாட்டேன்.+
20 வடதிசைப் படையை உங்களைவிட்டுத் தூரமாக விரட்டியடிப்பேன்.
வறண்ட வனாந்தரத்துக்கு அதைத் துரத்துவேன்.
அதன் முன்னணியைக் கிழக்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன்.
அதன் பின்னணியை மேற்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன்.
அதனிடமிருந்து கெட்ட வாடை வீசும்.
துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.+
ஏனென்றால், கடவுள் பெரிய காரியங்களைச் செய்வார்.’
21 தேசமே, பயப்படாதே!
யெகோவா பெரிய காரியங்களைச் செய்யப்போவதால் சந்தோஷப்படு.
22 காட்டு மிருகங்களே, கவலைப்பட வேண்டாம்!
வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் பச்சைப்பசேலென்று மாறும்.+
மரங்கள் காய்த்துக் குலுங்கும்.+
அத்தி மரமும் திராட்சைக் கொடியும் அமோக விளைச்சல் தரும்.+
23 சீயோன் ஜனங்களே, சந்தோஷப்படுங்கள்; உங்கள் கடவுளாகிய யெகோவாவை நினைத்து ஆனந்தப்படுங்கள்.+
அவர் பயிர்களுக்குத் தேவையான முதல் பருவ மழையைத் தருவார்.
நன்றாக மழை பெய்யும்படி செய்வார்.
முன்பு போலவே முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருவார்.+
25 முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன்.+
நான்கு வகையான வெட்டுக்கிளிகள்* வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன.
அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்.
26 நீங்கள் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+
உங்களுக்காக அற்புதங்கள் செய்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்வீர்கள்.+
என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள்.+
27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறேன்+ என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா,+ வேறு யாரும் இல்லை.
என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள்.
28 அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்.+
உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.+
29 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும்
என் சக்தியைப் பொழிவேன்.
30 வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.
எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகைக் காடாகவும் இருக்கும்.+