அப்போஸ்தலரின் செயல்கள்
16 பவுல் தெர்பைக்கும் பின்பு லீஸ்திராவுக்கும் வந்துசேர்ந்தார்.+ அங்கே தீமோத்தேயு என்ற ஒரு சீஷர் இருந்தார்.+ அவருடைய அம்மா இயேசுவைப் பின்பற்றிய ஒரு யூதப் பெண், ஆனால் அப்பா ஒரு கிரேக்கர். 2 லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள் தீமோத்தேயுவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். 3 அவரை பவுல் தன்னோடு கூட்டிக்கொண்டு போக விரும்புவதாகச் சொன்னார். ஆனால், அந்த இடங்களில் வாழ்கிற யூதர்களை மனதில் வைத்து அவருக்கு விருத்தசேதனம் செய்தார்.+ ஏனென்றால், தீமோத்தேயுவின் அப்பா ஒரு கிரேக்கர் என்பது அவர்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. 4 அவர்கள் நகரம் நகரமாகப் போனபோது, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்த கட்டளைகளை அங்கே இருந்தவர்களிடம் தெரிவித்து, அவற்றைக் கடைப்பிடிக்கும்படி சொன்னார்கள்.+ 5 இதனால், சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.
6 பின்பு, கடவுளுடைய வார்த்தையை ஆசிய மாகாணத்தில் அறிவிக்க வேண்டாமென்று கடவுளுடைய சக்தி தடுத்ததால் பிரிகியா, கலாத்தியா பகுதிகள் வழியாக அவர்கள் போனார்கள்.+ 7 அதன் பின்பு, மீசியாவுக்கு வந்தபோது பித்தினியாவுக்குள்+ போக முயற்சி செய்தார்கள். ஆனாலும், கடவுளுடைய சக்தியால் இயேசு அவர்களைத் தடுத்தார். 8 அதனால், அவர்கள் மீசியாவைக் கடந்து துரோவாவுக்கு வந்தார்கள். 9 அங்கே ராத்திரி நேரத்தில் பவுல் ஒரு தரிசனத்தைப் பார்த்தார். அந்தத் தரிசனத்தில், மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன் வந்து நின்று, “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று அவரைக் கெஞ்சிக் கேட்டான். 10 அவர் அந்தத் தரிசனத்தைப் பார்த்ததும், மக்கெதோனியர்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல கடவுள் எங்களை அழைத்திருக்கிறார் என்று நாங்கள் முடிவு பண்ணி, உடனே அங்கே போக ஏற்பாடுகள் செய்தோம்.
11 பின்பு, நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, நேராக சாமோத்திராக்கே தீவுக்குப் போனோம், அடுத்த நாள் நெயாப்போலி நகரத்துக்குப் போனோம். 12 அங்கிருந்து மக்கெதோனிய மாகாணத்தின் முக்கியக் குடியேற்ற நகரமான பிலிப்பிக்குப்+ போய், சில நாட்கள் தங்கினோம். 13 ஓய்வுநாளன்று, அந்த நகரத்தின் வாசலுக்கு வெளியே இருந்த ஓர் ஆற்றங்கரையில் ஜெபம் செய்கிற இடம் இருக்குமென்று நினைத்து அங்கே போனோம். பின்பு அங்கே உட்கார்ந்துகொண்டு, கூடிவந்திருந்த பெண்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தோம். 14 தியத்தீரா+ நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாங்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் பெயர் லீதியாள்; ஊதா நிறத் துணிகளை* விற்பவள்; கடவுளை வணங்கி வந்தவள். பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா* அவளுடைய இதயத்தை முழுமையாகத் திறந்தார். 15 அவளும் அவளுடைய வீட்டில் இருந்தவர்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.+ அப்போது அவள் எங்களிடம், “நான் யெகோவாமேல்* விசுவாசம் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டாள், கடைசியில் எங்களைச் சம்மதிக்கவே வைத்துவிட்டாள்.
16 ஜெபம் செய்கிற இடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வேலைக்காரப் பெண் எங்களுக்கு எதிரில் வந்தாள். குறிசொல்ல வைக்கிற ஒரு பேய்+ அவளைப் பிடித்திருந்தது. குறிசொல்வதன் மூலம் அவள் தன்னுடைய எஜமான்களுக்கு நிறைய லாபம் சம்பாதித்துக் கொடுத்தாள். 17 பவுலையும் எங்களையும் அவள் விடாமல் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் உன்னதமான கடவுளின் ஊழியர்கள்,+ மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று கத்திக்கொண்டே இருந்தாள். 18 இப்படியே பல நாட்கள் செய்துவந்தாள். கடைசியில் பவுல், அந்தத் தொல்லையைப் பொறுக்க முடியாமல், திரும்பிப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் பெயரில் கட்டளையிடுகிறேன், இவளைவிட்டு வெளியே போ” என்று அந்தப் பேயிடம் சொன்னார். அந்த நொடியே அது அவளைவிட்டு வெளியே போனது.+
19 அவளுடைய எஜமான்கள் தங்களுக்கு இனி லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டபோது,+ பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தையிலிருந்த தலைவர்களிடம் இழுத்துக்கொண்டு போனார்கள்.+ 20 அங்கே அவர்களை நடுவர்கள் முன்னால் நிறுத்தி, “இந்த ஆட்கள் நம்முடைய நகரத்தில் பயங்கர குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்;+ இவர்கள் யூதர்கள். 21 ரோமர்களான நாம் ஏற்றுக்கொள்ளவோ கடைப்பிடிக்கவோ கூடாத சம்பிரதாயங்களை இவர்கள் கற்பிக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்கள். 22 அப்போது, கூட்டத்தார் அந்த இரண்டு பேருக்கும் எதிராகத் திரண்டெழுந்தார்கள். நடுவர்கள் அவர்களுடைய உடைகளைக் கிழித்தெறிந்து, அவர்களைப் பிரம்புகளால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.+ 23 அவர்களை நன்றாக அடித்துச் சிறையில் தள்ளி, கவனமாகக் காவல் காக்கும்படி சிறைக்காவலனுக்குக் கட்டளையிட்டார்கள்.+ 24 இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டதால், சிறைக்காவலன் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்களுடைய கால்களைத் தொழுமரங்களில் பூட்டி வைத்தான்.
25 ஆனால், ஏறக்குறைய நடுராத்திரியில் பவுலும் சீலாவும் ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள்.+ மற்ற கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 அப்போது, திடீரென்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைச்சாலையின் அஸ்திவாரங்கள் ஆட்டங்கண்டன. அந்த நொடியே எல்லா கதவுகளும் திறந்துகொண்டன, எல்லாருடைய விலங்குகளும் கழன்றுவிட்டன.+ 27 தூங்கிக்கொண்டிருந்த சிறைக்காவலன் எழுந்து, சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்தான். கைதிகள் தப்பித்து+ ஓடிவிட்டதாக நினைத்து தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தான். 28 ஆனால் பவுல் சத்தமாக, “உன்னை நீயே எதுவும் செய்துகொள்ளாதே! நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்!” என்று சொன்னார். 29 உடனே அந்தச் சிறைக்காவலன் விளக்குகளைக் கொண்டுவரச் சொல்லி, உள்ளே வேகமாக ஓடினான். நடுநடுங்கியபடி பவுலுக்கும் சீலாவுக்கும் முன்னால் மண்டிபோட்டான். 30 பின்பு அவர்களை வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “மதிப்புக்குரியவர்களே, மீட்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 31 அதற்கு அவர்கள், “எஜமானாகிய இயேசுவை நம்பு, அப்போது நீயும் உன் வீட்டில் இருப்பவர்களும் மீட்புப் பெறுவீர்கள்”+ என்று சொன்னார்கள். 32 பின்பு, அவனுக்கும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லாருக்கும் யெகோவாவின்* வார்த்தையை எடுத்துச் சொன்னார்கள். 33 அவன் அந்த ராத்திரியிலேயே அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லாரும் தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்.+ 34 அதன் பின்பு, அவர்களைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து உணவு பரிமாறினான். கடவுள்மேல் நம்பிக்கை வைத்ததற்காகத் தன் வீட்டிலுள்ள எல்லாரோடும் சேர்ந்து மிகவும் சந்தோஷப்பட்டான்.
35 பொழுது விடிந்ததும் நடுவர்கள், “அந்த ஆட்களை விடுதலை செய்யுங்கள்” என்று காவலர்களிடம் சொல்லி அனுப்பினார்கள். 36 சிறைக்காவலன் இந்தச் செய்தியை பவுலிடம் தெரிவித்து, “உங்கள் இரண்டு பேரையும் விடுதலை செய்யச் சொல்லி நடுவர்கள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் நீங்கள் சிறையிலிருந்து வெளியே வாருங்கள், சமாதானத்தோடு புறப்பட்டுப் போங்கள்” என்று சொன்னான். 37 ஆனால் பவுல் அவர்களிடம், “நாங்கள் ரோமக் குடிமக்கள். எங்களுக்கு முறைப்படி தீர்ப்பளிக்காமலேயே* எல்லாருக்கும் முன்னால் அடித்துச் சிறையில் தள்ளினார்கள்.+ இப்போது ரகசியமாக எங்களை வெளியே அனுப்பப் பார்க்கிறார்களா? அது நடக்கவே நடக்காது! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டு போகட்டும்” என்று சொன்னார். 38 அவர் சொன்னதை நடுவர்களிடம் காவலர்கள் சொன்னார்கள். அவர்கள் இரண்டு பேரும் ரோமக் குடிமக்கள் என்பதைக் கேட்டவுடன் அந்த நடுவர்கள் பயந்துபோனார்கள்.+ 39 அதனால், அவர்களே அங்கு போய்க் கெஞ்சி அந்த இரண்டு பேரையும் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, அந்த நகரத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40 சிறையிலிருந்து அவர்கள் வெளியே வந்த பின்பு, லீதியாளின் வீட்டுக்குப் போனார்கள். அங்கே சகோதரர்களைப் பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்,+ பின்பு அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள்.