அப்போஸ்தலரின் செயல்கள்
24 ஐந்து நாட்களுக்குப் பின்பு, தலைமைக் குருவான அனனியா+ சில பெரியோர்களையும்* தெர்த்துல்லு என்ற வழக்கறிஞரையும் கூட்டிக்கொண்டு ஆளுநரிடம்+ வந்தார். பவுலுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய வழக்கைச் சொன்னார்கள். 2 தெர்த்துல்லு அழைக்கப்பட்டபோது, அவன் பவுல்மேல் குற்றம்சாட்ட ஆரம்பித்து,
“மாண்புமிகு பேலிக்ஸ் அவர்களே, உங்களால்தான் நாங்கள் மிகுந்த சமாதானத்தை அனுபவித்து வருகிறோம். உங்களுடைய முன்யோசனையால்தான் இந்தத் தேசத்தில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. 3 எல்லா சமயங்களிலும் எல்லா இடங்களிலும் இவற்றை நாங்கள் வரவேற்கிறோம், அதற்காக மிகவும் நன்றியோடு இருக்கிறோம். 4 இனியும் நான் உங்களுடைய நேரத்தை வீணாக்க விரும்பாததால் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவாகக் கேட்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். 5 இந்த ஆள் ஒரு விஷமி.*+ நாசரேத்தூராரின் மதப்பிரிவுக்குத் தலைவன்;+ உலகம் முழுவதும் இருக்கிற யூதர்கள் மத்தியில் தேசத் துரோகச் செயல்களைத் தூண்டிவிடுகிறான்.+ 6 ஆலயத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கும் முயற்சி செய்தான்; அதனால்தான் இவனைப் பிடித்தோம்.+ 7 *—— 8 நாங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மை என்பதை இவனை விசாரிக்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்” என்று சொன்னான்.
9 யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, அவன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று சாதித்தார்கள். 10 பின்பு, பவுலைப் பேசச் சொல்லி ஆளுநர் தலையசைத்தார். அப்போது பவுல்,
“பல வருஷங்களாக நீங்கள் இந்தத் தேசத்தாருக்கு நீதிபதியாக இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், இப்போது என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்.+ 11 கடவுளை வணங்குவதற்காக நான் எருசலேமுக்குப் போய் 12 நாட்கள்கூட ஆகவில்லை.+ இதை நீங்களே விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். 12 ஆலயத்தில் நான் யாருடனாவது வாக்குவாதம் செய்ததையோ, ஜெபக்கூடங்களிலும் சரி, நகரத்தின் வேறெந்தப் பகுதியிலும் சரி, கலகம் செய்ய மக்களைத் தூண்டிவிட்டதையோ இவர்கள் பார்க்கவில்லை. 13 அதுமட்டுமல்ல, இப்போது என்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை உங்கள்முன் இவர்களால் நிரூபிக்கவும் முடியாது. 14 ஆனால், ஒன்றை மட்டும் நான் ஒத்துக்கொள்கிறேன். மதப்பிரிவு என்று இவர்கள் சொல்கிற வணக்கமுறையின்படி நான் என்னுடைய முன்னோர்களின் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்து வருகிறேன்.+ ஏனென்றால், திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன்.+ 15 அதோடு, நீதிமான்களும் அநீதிமான்களும்+ உயிரோடு எழுப்பப்படுவார்கள்+ என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 16 அதனால்தான், கடவுளுக்கும் மனுஷர்களுக்கும் முன்னால் சுத்தமான* மனசாட்சியோடு இருக்க எப்போதும் கடினமாக முயற்சி செய்கிறேன்.+ 17 அதனால், பல வருஷங்களுக்குப் பின்பு, என்னுடைய தேசத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பண உதவி செய்வதற்கும்+ என்னுடைய கடவுளுக்குக் காணிக்கைகள் கொடுப்பதற்கும் வந்தேன். 18 தூய்மைச் சடங்கு செய்திருந்த என்னை இவர்கள் அப்போதுதான் ஆலயத்தில் பார்த்தார்கள்.+ அங்கு என்னோடு எந்தக் கூட்டமும் இருக்கவில்லை, எந்த அமளியும் ஏற்படவில்லை. ஆனால், ஆசிய மாகாணத்திலிருந்து வந்த சில யூதர்கள் இருந்தார்கள். 19 எனக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் அந்த யூதர்களே உங்கள் முன்னால் வந்து குற்றம்சாட்டியிருக்க வேண்டும்.+ 20 அல்லது, நான் நியாயசங்கத்தார் முன்னால் நின்றபோது என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என இங்கே இருப்பவர்களாவது சொல்லட்டும். 21 அவர்கள் மத்தியில் நின்று, ‘இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று நான் நம்புவதால்தான் இன்று உங்கள் முன்னால் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்!’+ என்று சத்தமாகச் சொன்னதைத் தவிர, வேறென்ன குற்றத்தை இவர்கள் என்னிடம் கண்டார்கள்?” என்று கேட்டார்.
22 ஆனால், பேலிக்சுக்கு இந்த மார்க்கத்தை*+ பற்றிய உண்மைகள் நன்றாகத் தெரிந்திருந்ததால், “படைத் தளபதி லீசியா வரும்போது இந்த வழக்கு சம்பந்தமாக முடிவெடுப்பேன்” என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார். 23 பின்பு படை அதிகாரியிடம், ‘இவனைக் காவலில் வையுங்கள். ஆனால் இவனுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள்; இவனுடைய ஆட்கள் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்வதைத் தடுக்க வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்.
24 சில நாட்களுக்குப் பின்பு, பேலிக்ஸ் தன்னுடைய யூத மனைவியாகிய துருசில்லாளோடு வந்தார். பின்பு பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து அவர் சொன்ன விஷயங்களைக் கவனித்துக் கேட்டார்.+ 25 ஆனால், நீதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் வரப்போகிற நியாயத்தீர்ப்பையும்+ பற்றி அவர் சொன்னபோது பேலிக்ஸ் பயந்துபோனார்; அதனால், “நீ இப்போது போகலாம். சமயம் வரும்போது உன்னை மறுபடியும் வரச் சொல்லி ஆள் அனுப்புகிறேன்” என்று சொன்னார். 26 அதேசமயத்தில், பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார். அதனால், அவரை அடிக்கடி வரவழைத்து அவரோடு பேசினார். 27 ஆனால், இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, பேலிக்சுக்கு அடுத்து பொர்க்கியு பெஸ்து பதவிக்கு வந்தார். பேலிக்ஸ் யூதர்களுடைய தயவைப் பெற விரும்பியதால்+ பவுலைச் சிறையிலேயே விட்டுவிட்டுப் போனார்.