எண்ணாகமம்
16 பின்பு, லேவியின்+ கொள்ளுப்பேரனும் கோகாத்தின்+ பேரனும் இத்சேயாரின் மகனுமாகிய+ கோராகு,+ தாத்தானோடும் அபிராமோடும் ஓனோடும் கிளம்பினார். தாத்தானும் அபிராமும் ரூபனின்+ மகனாகிய எலியாபுக்குப்+ பிறந்தவர்கள். ஓன் என்பவன் ரூபனின் மகனாகிய பேலேத்துக்குப் பிறந்தவன். 2 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகிய நான்கு பேரும், இஸ்ரவேலர்களில் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகத் திரண்டார்கள். இந்த 250 பேரும் ஜனங்களின் தலைவர்கள், சபையின் பிரதிநிதிகள், பிரபலமானவர்கள். 3 அவர்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரண்டு வந்து,+ “உங்களால் நாங்கள் பட்டது போதும்! ஜனங்கள் எல்லாருமே பரிசுத்தமானவர்கள்.+ யெகோவா அவர்களோடு இருக்கிறார்.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் யெகோவாவின் சபையாரைவிட பெரிய ஆளாகக் காட்டிக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
4 மோசே அதைக் கேட்டவுடன் சாஷ்டாங்கமாக விழுந்தார். 5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார். 6 கோராகுவே! கோராகுவின் கூட்டாளிகளே!+ தூபக்கரண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.+ 7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.
8 பின்பு மோசே கோராகுவிடம், “லேவியின் வம்சத்தாரே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 9 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களைப் பிரித்தெடுத்து,+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவருக்கு முன்பாகவும், ஜனங்களுக்கு முன்பாகவும் சேவை செய்ய வாய்ப்புத் தந்திருப்பது+ சாதாரண விஷயமா? 10 உன்னையும் லேவியின் வம்சத்தாராகிய உன் சகோதரர்கள் எல்லாரையும் அவர் தன் பக்கத்தில் வர விட்டிருப்பது சின்ன விஷயமா? இதெல்லாம் போதாதென்று, குருமார்களாகவும் சேவை செய்ய நினைக்கிறீர்களா?+ 11 நீயும் உன்னோடு திரண்டு வந்திருக்கிற உன் கூட்டாளிகளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொள்கிறீர்கள். ஆரோன் என்ன செய்தாரென்று அவருக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்?”+ என்றார்.
12 பின்பு மோசே, எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும்+ கூட்டிக்கொண்டு வரச் சொல்லி ஆட்களை அனுப்பினார். ஆனால் அவர்கள், “நாங்கள் வர மாட்டோம்! 13 பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து நீங்கள் எங்களைக் கொண்டுவந்து இந்த வனாந்தரத்தில் சாகடிக்கப் பார்ப்பது என்ன சாதாரண விஷயமா?+ இப்போது, கொடுங்கோலன் போல எங்களை அடக்கி ஆளவும் நினைக்கிறீர்களா? 14 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நீங்கள் எங்களைக் கொண்டுபோகவும் இல்லை, வயலையும் திராட்சைத் தோட்டத்தையும் எங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கவும் இல்லை. இந்த ஆட்களுடைய* கண்ணைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா?* நாங்கள் வர மாட்டோம்!” என்றார்கள்.
15 அப்போது, மோசேக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. உடனே அவர் யெகோவாவிடம், “இவர்களுடைய உணவுக் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இவர்களிடமிருந்து நான் ஒரு கழுதையைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை”+ என்றார்.
16 பின்பு மோசே கோராகுவிடம், “நாளைக்கு நீயும் உன் கூட்டாளிகளும் யெகோவாவின் முன்னிலையில் நிற்க வேண்டும், நீயும் அவர்களும் ஆரோனும் நிற்க வேண்டும். 17 நீங்கள் ஒவ்வொருவரும் தூபக்கரண்டியை எடுத்து அதில் தூபம்போட்டு யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும். ஆளுக்கு ஒன்றாக மொத்தம் 250 தூபக்கரண்டிகளைக் கொண்டுவர வேண்டும். நீயும் ஆரோனும்கூட தூபக்கரண்டியைக் கொண்டுவர வேண்டும்” என்றார். 18 அதனால், ஒவ்வொருவரும் தங்கள் தூபக்கரண்டியை எடுத்துக்கொண்டார்கள். அதில் தணலும் தூபப்பொருளும் போட்டு, மோசேயோடும் ஆரோனோடும் சேர்ந்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றார்கள். 19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+
20 அப்போது யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 21 “இந்தக் கூட்டத்தைவிட்டு விலகி நில்லுங்கள், இவர்களை நான் ஒரே நிமிஷத்தில் அழிக்கப்போகிறேன்”+ என்றார். 22 உடனே அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, “கடவுளே, உயிருள்ள எல்லாருக்கும் சுவாசத்தைத் தருகிறவரே,+ ஒரேவொரு மனுஷன் செய்த தப்புக்காக எல்லா ஜனங்கள்மேலும் நீங்கள் கோபப்படுவீர்களா?”+ என்று கேட்டார்கள்.
23 அதற்கு யெகோவா மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராமின்+ கூடாரங்களைவிட்டுத் தள்ளி நிற்கும்படி ஜனங்களிடம் சொல்” என்றார்.
25 பின்பு, மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார். இஸ்ரவேலின் பெரியோர்களும்*+ அவருடன் போனார்கள். 26 அவர் அங்கிருந்த ஜனங்களிடம், “தயவுசெய்து இந்த அக்கிரமக்காரர்களின் கூடாரங்களைவிட்டு விலகி நில்லுங்கள், அவர்களுடைய பொருள்கள் எதையும் தொடாதீர்கள். தொட்டால், அவர்களுடைய பாவங்களுக்காக நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றார். 27 உடனே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் இருந்தவர்கள் விலகிப்போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரங்களைவிட்டு வெளியே வந்து, தங்களுடைய மனைவிகளோடும் மகன்களோடும் சிறுபிள்ளைகளோடும் வாசலில் நின்றார்கள்.
28 அப்போது மோசே, “என் இஷ்டப்படி நான் எதையும் செய்யவில்லை, யெகோவா சொன்னதைத்தான் செய்தேன். இனி நடக்கப்போவதை வைத்து அதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். 29 எல்லாரும் இயற்கையாகச் சாவதுபோல் இந்த ஆட்கள் செத்தால், எல்லாருக்கும் கிடைக்கிற தண்டனையே இந்த ஆட்களுக்கும் கிடைத்தால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அர்த்தம்.+ 30 ஆனால், இதுவரை யாரும் கேள்விப்படாத விதத்தில் யெகோவா இவர்களைத் தண்டித்தால், அதாவது பூமி பிளந்து இவர்களையும் இவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அப்படியே விழுங்கினால், இவர்கள் உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோனால், இவர்கள் யெகோவாவை மதிக்கவில்லை என்று நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
31 அவர் இதையெல்லாம் பேசி முடித்தவுடனே, அவர்கள் நின்றுகொண்டிருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது.+ 32 பூமி பிளந்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் கோராகுவுக்குச் சொந்தமான எல்லாரையும்+ அவர்களுடைய எல்லா பொருள்களையும் விழுங்கியது. 33 அவர்களும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாரும் உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோனார்கள். பூமி அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.+ 34 அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டு, “ஐயோ! நாமும் மண்ணுக்குள் புதைந்துவிடுவோம்!” என்று அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். 35 அப்போது, யெகோவாவின் முன்னிலையிலிருந்து நெருப்பு வந்து,+ தூபம்காட்டிய 250 பேரையும் பொசுக்கியது.+
36 பின்பு யெகோவா மோசேயிடம், 37 “தூபக்கரண்டிகள்+ பரிசுத்தமானவையாக இருப்பதால் அவற்றை நெருப்பிலிருந்து எடுக்கும்படி குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசாரிடம் சொல். அதோடு, தணலையும் தூரமாக எடுத்துக் கொண்டுபோய்க் கொட்டச் சொல். 38 பாவம் செய்து செத்துப்போன அந்த ஆட்களின் தூபக்கரண்டிகள் சன்னமான தகடுகளாக அடிக்கப்பட்டு, பலிபீடத்தைச்+ சுற்றிலும் பொருத்தப்பட வேண்டும். அந்தத் தூபக்கரண்டிகளை அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்ததால் அவை பரிசுத்தமாகிவிட்டன. இஸ்ரவேலர்களை எச்சரிக்கும் அடையாளமாக அவை இருக்க வேண்டும்”+ என்றார். 39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.
41 அடுத்த நாளே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.+ “நீங்கள் இரண்டு பேரும் யெகோவாவின் ஜனங்களைக் கொன்றுவிட்டீர்கள்!” என்று குற்றம்சாட்டினார்கள். 42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+
43 உடனே, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் போய் நின்றார்கள்.+ 44 யெகோவா மோசேயிடம், 45 “நீங்கள் இந்தக் கூட்டத்தைவிட்டு விலகி நில்லுங்கள். இவர்களை நான் ஒரே நிமிஷத்தில் அழிக்கப்போகிறேன்”+ என்றார். அப்போது, அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.+ 46 அதன்பின் மோசே ஆரோனைப் பார்த்து, “பலிபீடத்தின் தணலைத்+ தூபக்கரண்டியில் எடுத்து, அதன்மேல் தூபப்பொருளைப் போட்டு, சீக்கிரமாக ஜனங்களிடம் போய் அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்.+ யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது. கொள்ளைநோய் தாக்க ஆரம்பித்துவிட்டது!” என்றார். 47 மோசே சொன்னபடியே, ஆரோன் உடனடியாக அதை எடுத்துக்கொண்டு சபையாரின் நடுவில் ஓடினார். கொள்ளைநோய் ஜனங்களைத் தாக்க ஆரம்பித்திருந்ததைப் பார்த்தார். அதனால், அவர் தூபக்கரண்டியில் தூபம்போட்டு ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார். 48 செத்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் நடுவில் அவர் நின்றுகொண்டே இருந்தார். கடைசியில் கொள்ளைநோயின் தாக்குதல் ஓய்ந்தது. 49 கோராகுவினால் இறந்தவர்கள் போக, இந்தக் கொள்ளைநோயினால் இறந்தவர்கள் 14,700 பேர். 50 கொள்ளைநோயின் தாக்குதல் ஓய்ந்த பிறகு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் இருந்த மோசேயிடம் ஆரோன் திரும்பி வந்தார்.