முதியோர்கள்—நமது கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் மதிப்புமிக்க அங்கத்தினர்கள்
‘கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் . . . செழித்திருப்பார்கள். அவர்கள் முதிர்வயதிலும் கனி தருவார்கள்.’—சங்கீதம் 92:13, 15.
1. முதியோரை பலர் எப்படி கருதுகிறார்கள்?
வயதானோர் உட்பட உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரையும் யெகோவா நேசிக்கிறார். ஆனால் ஒரு தேசிய கணக்கீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் சுமார் ஐந்து லட்சம் முதியோர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள். முதியோரை துஷ்பிரயோகம் செய்வது ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதை இதுபோன்ற அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. “வயதானவர்கள் பயன்தரும் வகையில் வாழ்ந்த காலமெல்லாம் முடிந்தது, அவர்களால் ஒரு பிரயோஜனமுமில்லை, மற்றவர்களை அதிகமாக சார்ந்திருக்கிறார்கள் என்ற . . . மனநிலை இன்று பலருக்கும் இருப்பது” இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் என ஓர் அமைப்பு குறிப்பிடுகிறது.
2. (அ) உண்மைப் பற்றுறுதியுள்ள வயதான ஊழியர்களை யெகோவா எப்படி கருதுகிறார்? (ஆ) சங்கீதம் 92:12-15-ல் கொடுக்கப்பட்டிருக்கும் இதயத்திற்கு இதமான வருணனை என்ன?
2 உண்மைப் பற்றுறுதியுள்ள வயதான ஊழியர்களை யெகோவா தேவன் பொக்கிஷமாக போற்றுகிறார். அவர்களது சரீர வரம்புகளை அல்ல, ‘உள்ளான மனுஷனையே,’ அதாவது ஆவிக்குரிய நிலைமையையே அவர் உற்றுப் பார்க்கிறார். (2 கொரிந்தியர் 4:16) அவருடைய வார்த்தையாகிய பைபிளில், இதயத்திற்கு இதமான பின்வரும் உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது: “நீதிமான் பனையைப் போல் [“ஈச்ச மரத்தைப் போல்,” NW] செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்று . . . விளங்கப் பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 92:12-15) இந்த வசனங்களை ஆராய்வது கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு முதியோராகிய நீங்கள் ஆற்றும் மதிப்புமிக்க பங்கை வெளிப்படுத்தும்.
‘முதிர்வயதிலும் கனி தருவார்கள்’
3. (அ) ஏன் நீதிமான்கள் ஈச்ச மரங்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்? (ஆ) வயதானோர் எவ்வாறு ‘முதிர்வயதிலும் கனிதர’ முடியும்?
3 நீதிமான்களை ‘நம் கர்த்தருடைய பிராகாரங்களில் நாட்டப்பட்ட’ ஈச்ச மரங்களுக்கு சங்கீதக்காரன் ஒப்பிடுகிறார். அவர்கள் ‘முதிர்வயதிலும் கனி தருவார்கள்.’ இது உற்சாகமூட்டும் விஷயம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? பைபிள் காலங்களில், கிழக்கத்தியருடைய முற்றங்களில் ஒய்யாரமாய் நிமிர்ந்து நிற்கும் ஈச்ச மரங்களைக் காண்பது சகஜம். அழகுக்கு மட்டுமல்ல அபரிமிதமான கனிகளுக்கும் ஈச்ச மரங்கள் உயர்வாக மதிக்கப்பட்டன; சில மரங்கள் நூறு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து கனி கொடுத்தன.a மெய் வணக்கத்தில் உறுதியாக நாட்டப்பட்டவர்களாய் நிலைத்திருப்பதன் மூலம் நீங்களும் இதுபோல தொடர்ந்து ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தரலாம்.’—கொலோசெயர் 1:10.
4, 5. (அ) கிறிஸ்தவர்கள் பிறப்பிக்க வேண்டிய முக்கியமான கனி எது? (ஆ) ‘உதடுகளின் கனியைத்’ தந்த முதியோர்களைப் பற்றிய பைபிள் உதாரணங்களைத் தருக.
4 கிறிஸ்தவர்கள் ‘உதடுகளின் கனியை’ பிறப்பிக்கும்படி, அதாவது தம்மையும் தம் நோக்கங்களையும் துதித்து பேசும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். (எபிரெயர் 13:15) முதியோராக இது உங்களுக்குப் பொருந்துகிறதா? நிச்சயமாகவே பொருந்துகிறது.
5 யெகோவாவின் பெயருக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் தைரியமாய் சாட்சி பகர்ந்த முதியோர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. மோசேயை தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதியாகவும் யெகோவா நியமித்தபோது அவர் ஏற்கெனவே ‘எழுபது வருஷத்தை’ கடந்திருந்தார். (சங்கீதம் 90:10; யாத்திராகமம் 4:10-17) தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு, யெகோவாவின் அரசுரிமையைப் பற்றி தைரியமாய் சாட்சி கொடுக்க முதிர்வயது ஒரு தடையாக இருக்கவில்லை. சுவர்மீது எழுதப்பட்டிருந்த புதிரான எழுத்துக்களின் அர்த்தத்தைக் கூறும்படி பெல்ஷாத்சார் அழைப்பு விடுத்தபோது தானியேல் ஒருவேளை 90 வயதைக் கடந்திருக்கலாம். (தானியேல், அதிகாரம் 5) வயதுசென்ற அப்போஸ்தலன் யோவானைப் பற்றியென்ன? தனது நீண்ட நாளைய சேவை முடிவுறும் தறுவாயில், “தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” பத்மு தீவில் சிறை வைக்கப்பட்டிருந்தார். (வெளிப்படுத்துதல் 1:9) அந்திம காலத்தில் ‘உதடுகளின் கனியைத்’ தந்த இன்னும் அநேக பைபிள் கதாபாத்திரங்கள் உங்களுடைய நினைவுக்கு வரலாம்.—1 சாமுவேல் 8:1, 10; 12:2; 1 இராஜாக்கள் 14:4, 5; லூக்கா 1:7, 67-79; 2:22-32.
6. இந்தக் கடைசி நாட்களில் தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு யெகோவா எவ்வாறு ‘முதியோரை’ பயன்படுத்தியிருக்கிறார்?
6 எபிரெய தீர்க்கதரிசியாகிய யோவேல் சொன்னதை மேற்கோள் காட்டி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் [“முதியோர்” உட்பட] என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது . . . தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.” (அப்போஸ்தலர் 2:17, 18; யோவேல் 2:28, பொது மொழிபெயர்ப்பு) இதற்கேற்ப, யெகோவா தமது நோக்கங்களை அறிவிப்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்ட வகுப்பினரையும் ‘வேறே ஆடுகளையும்’ சேர்ந்த முதியோர்களை இந்தக் கடைசி நாட்களில் பயன்படுத்தியிருக்கிறார். (யோவான் 10:16) இவர்களில் சிலர் பல பத்தாண்டுகளாக உண்மையுடன் ராஜ்ய கனியை பிறப்பித்து வந்திருக்கின்றனர்.
7. சரீர வரம்புகளின் மத்தியிலும் முதியோர்கள் எவ்வாறு ராஜ்ய கனியை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றனர் என்பதை உதாரணத்துடன் விளக்குக.
7 உதாரணமாக, 1941-ல் முழுநேர சேவை செய்யும் ராஜ்ய பிரஸ்தாபியாக ஆன சோனியா என்ற சகோதரியை எடுத்துக்கொள்ளுங்கள். தீராத வியாதியால் நெடுங்காலமாக போராடிக் கொண்டிருந்தபோதிலும், அவர் தனது வீட்டில் தவறாமல் பைபிள் படிப்புகள் நடத்தி வந்தார். “நற்செய்தியைப் பிரசங்கிப்பது என் வாழ்க்கையின் ஓர் அங்கம். சொல்லப்போனால், அதுவே என் ஜீவன். அதை நிறுத்தவே மாட்டேன்” என சோனியா கூறினார். சமீபத்தில், சோனியாவும் அவருடைய சகோதரி ஆலிவும், சாவை எதிர்நோக்கியிருந்த ஜேனட் என்ற நோயாளியை ஆஸ்பத்திரி ‘வெயிட்டிங் ரூமில்’ சந்தித்தார்கள்; பைபிள் தரும் நம்பிக்கையின் செய்தியை ஜேனட்டுடன் இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தன் மகள் மீது அவர்கள் காண்பித்த அன்பான அக்கறை ஜேனட்டின் தாயை மிகவும் கவர்ந்தது; பக்திமிக்க கத்தோலிக்கராயிருந்த அவர் உடனே பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார், இப்பொழுது நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார். ராஜ்ய கனியை பிறப்பிப்பதற்கு இதுபோல நீங்களும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியுமா?
8. வயதுசென்ற காலேப் எவ்வாறு யெகோவா மீது தனது நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டினார், அவருடைய முன்மாதிரியை முதிர்வயது கிறிஸ்தவர்கள் எவ்வாறு பின்பற்றலாம்?
8 வயதுசென்ற கிறிஸ்தவர்கள் தள்ளாத வயதில் வரும் கஷ்டங்களின் மத்தியிலும் ராஜ்ய பிரசங்க வேலையில் தைரியத்துடன் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்; இதன் மூலம், வனாந்தரத்தில் நாற்பது வருஷம் மோசேயுடன் இருந்த உண்மையுள்ள இஸ்ரவேலனாகிய காலேபின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்கள். யோர்தான் நதியைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தபோது காலேப் 79 வயதுடையவராக இருந்தார். வெற்றிவாகை சூடிய இஸ்ரவேலர் படையில் ஓர் போர்வீரராக ஆறு ஆண்டுகள் இருந்த பிறகு, தனது கடந்தகால சாதனைகளில் திருப்தியடைந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இராட்சத உருவமுடைய ஏனாக்கியர் வசித்துவந்த யூதாவின் மலைநாட்டிலுள்ள ‘அரணிப்பான பெரிய பட்டணங்களைக்’ கைப்பற்றும் சவால்மிக்க வேலையைத் தனக்குத் தருமாறு கேட்டுக்கொண்டார். யெகோவாவின் உதவியால், ‘அவர் சொன்னபடியே, காலேப் அவர்களைத் துரத்திவிட்டார்.’ (யோசுவா 14:9-14; 15:13, 14) நீங்கள் முதிர்வயதிலும் ராஜ்ய கனியை தொடர்ந்து பிறப்பிக்கையில், காலேபுடன் யெகோவா இருந்தது போலவே உங்களுடனும் இருப்பார் என்பது உறுதி. உத்தமத்தில் நிலைத்திருந்தால், வாக்குப்பண்ணப்பட்ட அவருடைய புதிய உலகில் உங்களுக்கு ஓர் இடம் கிடைப்பதும் நிச்சயம்.—ஏசாயா 40:29-31; 2 பேதுரு 3:13.
‘அவர்கள் புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்’
9, 10. வயதான கிறிஸ்தவர்கள் எவ்வாறு விசுவாசத்தில் ஆரோக்கியமாய் இருந்து, தங்களுடைய ஆவிக்குரிய பலத்தைக் காத்துக்கொள்கிறார்கள்? (13-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
9 வயதான ஊழியர்கள் பலன் தருகிறவர்கள் என்பதற்கு கவனத்தை ஈர்த்து, சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “நீதிமான் பனையைப் போல் [“ஈச்ச மரத்தைப் போல்,” NW] செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப் போல் வளருவான். அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 92:12, 15.
10 தள்ளாத வயதிலும் நீங்கள் எவ்வாறு உங்களுடைய ஆவிக்குரிய பலத்தைக் காத்துக்கொள்ள முடியும்? பல்லாண்டு வாழும் அந்த ஈச்ச மரத்தினுடைய அழகின் இரகசியமே எப்போதும் செழிப்பாக தண்ணீர் பாய்வதில்தான் இருக்கிறது. அதைப் போலவே, நீங்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் அவருடைய அமைப்புடன் கூட்டுறவு கொள்வதன் மூலமும் பைபிள் சத்தியம் எனும் தண்ணீரிலிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். (சங்கீதம் 1:1-3; எரேமியா 17:7, 8) உங்களுடைய ஆவிக்குரிய சக்தி சக விசுவாசிகளுக்கு உங்களை விலையேறப்பெற்ற ஆஸ்தியாக ஆக்குகிறது. பிரதான ஆசாரியரான வயதுசென்ற யோய்தாவின் உதாரணம் இதை எவ்வாறு நிரூபிக்கிறதென கவனியுங்கள்.
11, 12. (அ) யூதா ராஜ்யத்தின் சரித்திரத்தில் யோய்தா வகித்த முக்கிய பங்கு என்ன? (ஆ) மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க யோய்தா எவ்வாறு தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்?
11 யோய்தாவுக்கு அப்போது நூறு வயதுக்கும் மேலாக இருந்திருக்கலாம். பதவி வெறிபிடித்த அத்தாலியாள் ராணி தன் சொந்த பேரப்பிள்ளைகளைக் கொலை செய்வதன் மூலம் யூதாவை கைப்பற்றிக் கொண்டாள். வயதான யோய்தா என்ன செய்ய முடிந்தது? தப்பிப்பிழைத்த ஒரேவொரு அரச வாரிசான யோவாசை ஆறு ஆண்டுகளாக அவரும் அவருடைய மனைவியும் ஆலயத்தில் ஒளித்து வைத்தார்கள். பிற்பாடு, ஆச்சரியமூட்டும் விதத்தில், யோய்தா ஏழு வயது யோவாசை ராஜாவாக அறிவித்து, அத்தாலியாள் கொலை செய்யப்படும்படி செய்தார்.—2 நாளாகமம் 22:10-12; 23:1-3, 15, 21.
12 ராஜாவின் காப்பாளராக இருந்த யோய்தா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மெய் வணக்கத்தை முன்னேற்றுவித்தார். பிறகு “தானும் எல்லா மக்களும், அரசனும் ஆண்டவரின் மக்களாயிருப்பதாக ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.” யோய்தாவின் கட்டளைப்படி, பொய்க் கடவுளாகிய பாகாலின் கோயிலை ஜனங்கள் இடித்துப் போட்டார்கள், அதன் மேடைகளையும் விக்கிரகங்களையும் ஆசாரியனையும் நீக்கினார்கள். அதோடு யோய்தாவின் வழிநடத்துதலின் கீழ்தான், யோவாஸ் ஆலய சேவைகளை மீண்டும் ஏற்படுத்தி, மிகவும் முக்கியமாக செய்யப்பட வேண்டிய வேலையாகிய ஆலயத்தைப் பழுதுபார்க்கும் பணியை நிறைவேற்றினார். ‘ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்குப் போதகம் பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.’ (2 நாளாகமம் 23:11, 16-19; 24:11-14; பொ.மொ.; 2 இராஜாக்கள் 12:2) யோய்தா 130 வயதில் இறக்கும்போது, “தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்தபடியினால்” ராஜாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டார்; இவ்வாறு யாருக்கும் கிடைக்காத ஒரு முறையில் கௌரவிக்கப்பட்டார்.—2 நாளாகமம் 24:15, 16.
13. வயதான கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் நன்மை செய்யலாம்’?
13 மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் அதிகம் ஈடுபட முடியாதபடி மோசமான உடல்நிலையோ வேறு சூழ்நிலைமைகளோ உங்களைக் கட்டுப்படுத்தலாம். அப்படியிருந்தாலும்கூட, நீங்கள் ‘தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் நன்மை செய்யலாம்.’ சபை கூட்டங்களுக்கு ஆஜராகி அவற்றில் பங்கெடுப்பதன் மூலமும் முடிந்தபோதெல்லாம் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதன் மூலமும் யெகோவாவின் ஆவிக்குரிய வீட்டிற்கு பக்தி வைராக்கியத்தைக் காட்டலாம். பைபிளின் அறிவுரையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யையும் சபையையும் பற்றுறுதியுடன் ஆதரிப்பது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை மிகவும் பலப்படுத்தும். (மத்தேயு 24:45-47, NW) “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” சக வணக்கத்தாரை உந்துவிக்கும். (எபிரெயர் 10:24, 25; பிலேமோன் 8, 9) அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு இசைவாக செயல்படுவீர்களாகில், பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்: ‘முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாய் இருக்கும்படி புத்தி சொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாய் இருக்கவும் புத்தி சொல்லு.’—தீத்து 2:2-4.
14. நெடுங்காலம் கிறிஸ்தவ கண்காணிகளாக சேவை செய்பவர்கள் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு என்ன செய்யலாம்?
14 பல வருடங்களாக நீங்கள் சபை மூப்பராக சேவை செய்து வந்திருக்கிறீர்களா? “இத்தனை வருஷமாக நீங்கள் பெற்ற ஞானத்தை சுயநலமின்றி பயன்படுத்துங்கள்” என நீண்ட காலம் சபை மூப்பராக சேவை செய்யும் ஒருவர் அறிவுரை கூறுகிறார். “உத்தரவாதத்தை பகிர்ந்தளியுங்கள், கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுடன் உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். . . . மற்றவர்களிடமுள்ள திறமைகளை பகுத்துணருங்கள். அந்தத் திறமைகளை வளரச் செய்யுங்கள். எதிர்காலத்திற்காக ஆயத்தமாகுங்கள்.” (உபாகமம் 3:27, 28) தொடர்ந்து விஸ்தரித்துவரும் ராஜ்ய பிரசங்க வேலையில் நீங்கள் காட்டும் உள்ளப்பூர்வமான அக்கறை, நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.
‘கர்த்தர் உத்தமரென்று விளங்கப் பண்ணுங்கள்’
15. வயதான கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘கர்த்தர் உத்தமரென்று விளங்கப் பண்ணுகிறார்கள்’?
15 ‘கர்த்தர் உத்தமரென்று விளங்கப் பண்ணும்’ உத்தரவாதத்தை வயதான ஊழியர்கள் சந்தோஷத்தோடு செய்கிறார்கள். நீங்கள் வயதான கிறிஸ்தவராக இருந்தால், ‘யெகோவா கன்மலை, அவரிடத்தில் அநீதியில்லை’ என்பதை உங்களுடைய சொல்லாலும் செயலாலும் பிறருக்கு காண்பிக்கலாம். (சங்கீதம் 92:14) படைப்பாளருடைய உயர்ந்த குணங்களுக்கு ஈச்ச மரம் மௌனமாக சாட்சி கொடுக்கிறது. ஆனால், இப்பொழுது மெய் வணக்கத்தைத் தழுவுகிறவர்களுக்கு தம்மை பற்றி சாட்சி கொடுக்கும் பாக்கியத்தை யெகோவா உங்களுக்குத் தந்திருக்கிறார். (உபாகமம் 32:7; சங்கீதம் 71:17, 18; யோவேல் 1:2, 3) அவருக்கு சாட்சி கொடுப்பது ஏன் முக்கியம்?
16. ‘கர்த்தர் உத்தமரென்று விளங்கப் பண்ணுவதன்’ முக்கியத்துவத்தை எந்த பைபிள் உதாரணம் விளக்குகிறது?
16 இஸ்ரவேலின் தலைவராகிய யோசுவா ‘வயதுசென்று முதிர்ந்தவரானபோது,’ “இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து” கடவுளுடைய உத்தம கிரியைகளைப் பற்றி நினைப்பூட்டினார். அவர் இவ்வாறு கூறினார்: ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை. . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.’ (யோசுவா 23:1, 2, 14) உண்மையுடன் நிலைத்திருக்க வேண்டுமென்ற மக்களின் உறுதியை இந்த வார்த்தைகள் சில காலத்திற்கு பலப்படுத்தின. ஆனால் யோசுவா இறந்தபின்பு, ‘கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்தார்கள்.’—நியாயாதிபதிகள் 2:8-11.
17. நவீன காலங்களில் யெகோவா எவ்வாறு தமது மக்களை வழிநடத்தி வந்திருக்கிறார்?
17 தற்கால கிறிஸ்தவ சபையில் இருப்பவர்களின் உத்தமத்தன்மை, வயதான ஊழியர்கள் சொல்லும் சான்றுகளை சார்ந்தில்லை. என்றாலும், இந்தக் கடைசி நாட்களில் தமது ஜனங்கள் சார்பாக யெகோவா செய்திருக்கும் ‘பெரிய கிரியைகளைப்’ பற்றி அவர்களே சொல்லக் கேட்கையில் யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் நாம் வைத்திருக்கும் விசுவாசம் பலப்படுகிறது. (நியாயாதிபதிகள் 2:7; 2 பேதுரு 1:16-19) பல வருடங்களாக நீங்கள் யெகோவாவின் அமைப்புடன் கூட்டுறவு வைத்திருந்தால், உங்களுடைய பிராந்தியத்தில் அல்லது நாட்டில் சில ராஜ்ய அறிவிப்பாளர்களே இருந்த சமயத்தை அல்லது பிரசங்க வேலைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட சமயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம். காலம் செல்லச் செல்ல, சில தடைகளை யெகோவா நீக்கி, ராஜ்ய வளர்ச்சியை ‘தீவிரமாய் நடப்பித்ததை’ நீங்கள் பார்த்திருக்கலாம். (ஏசாயா 54:17; 60:22) பைபிள் சத்தியங்கள் தெளிவுபடுத்தப்பட்டதையும் கடவுளுடைய காணக்கூடிய அமைப்பில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றத்தையும் நீங்கள் கவனித்திருக்கலாம். (நீதிமொழிகள் 4:18; ஏசாயா 60:17) யெகோவா உத்தமரென்று விளங்கப் பண்ணும் உங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா? கிறிஸ்தவ சகோதரத்துவத்தை இது எவ்வளவாய் உந்துவித்து பலப்படுத்தும்!
18. (அ) ‘யெகோவா உத்தமரென்று விளங்கப் பண்ணுவதால்’ வரும் நீடித்த நன்மையை உதாரணத்துடன் விளக்குக. (ஆ) யெகோவா உத்தமர் என்பதை நீங்கள் எவ்வாறு அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறீர்கள்?
18 உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யெகோவாவின் அன்பான கவனிப்பையும் வழிநடத்துதலையும் அனுபவித்த சமயங்களைப் பற்றியென்ன? (சங்கீதம் 37:25; மத்தேயு 6:33; 1 பேதுரு 5:7) மார்த்தா என்ற வயதான சகோதரி இவ்வாறு சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்: “என்ன நடந்தாலும்சரி, யெகோவாவை மாத்திரம் ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். அவர் உங்களை ஆதரிப்பார்.” இந்த அறிவுரை மார்த்தாவின் பைபிள் மாணாக்கரான டோல்மீனா மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது; இவர் 1960-களின் ஆரம்பத்தில் முழுக்காட்டுதல் பெற்றவர். “என்னுடைய கணவர் இறந்தபோது, நான் மிகவும் நம்பிக்கை இழந்திருந்தேன், ஆனால் ஒரு கூட்டத்தையும் தவறவிடாதிருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதற்கு அந்த வார்த்தைகள் எனக்கு உதவின. உண்மையிலேயே யெகோவா என்னை தொடர்ந்து பலப்படுத்தினார்” என டோல்மீனா சொல்கிறார். அவரும் தன்னுடன் பைபிள் படிக்கும் மாணாக்கர்களுக்கு பல ஆண்டுகளாக இதே அறிவுரையை கொடுத்து வந்திருக்கிறார். உற்சாகம் அளிப்பதன் மூலமும் யெகோவாவின் உத்தமமான செயல்களை விவரித்துக் கூறுவதன் மூலமும் சக விசுவாசிகளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் பெரிதும் உதவலாம்.
உண்மையுள்ள முதியோரை யெகோவா பொக்கிஷமாக கருதுகிறார்
19, 20. (அ) வயதான தமது ஊழியர்கள் செய்யும் வேலைகளை யெகோவா எப்படி கருதுகிறார்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
19 நன்றிகெட்ட இன்றைய உலகத்திற்கு வயோதிபர் மீது அக்கறை காட்ட நேரமில்லை. (2 தீமோத்தேயு 3:1, 2) இவ்வுலகம் அப்படியே அவர்களை நினைவுகூர்ந்தாலும் அதற்குக் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய கடந்தகால சாதனைகளே—அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதல்ல, ஆனால் என்ன செய்தார்கள் என்பதே. இதற்கு நேர் மாறாக, பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) கடந்த காலத்தில் நீங்கள் செய்த உண்மையுள்ள கிரியைகளை யெகோவா தேவன் நினைவுகூருகிறார் என்பது உண்மைதான். ஆனால், அவருடைய சேவையில் நீங்கள் தொடர்ந்து என்ன செய்து வருகிறீர்கள் என்பதையும் அவர் உயர்வாக மதிக்கிறார். ஆம், உண்மையுள்ள வயதானவர்களை கனி தருகிறவர்களாக, ஆவிக்குரிய விதத்தில் ஆரோக்கியமானவர்களாக, சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்களாக கருதுகிறார். ஆம், தமது பலத்துக்கு உயிருள்ள அத்தாட்சிகளாக அவர்களை கருதுகிறார்.—பிலிப்பியர் 4:13, NW.
20 நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் மூத்த அங்கத்தினர்களை கடவுள் நோக்கும் விதமாக நீங்கள் நோக்குகிறீர்களா? அப்படி செய்தால், அவர்களுக்கு உங்களுடைய அன்பை காண்பிக்க உந்துவிக்கப்படுவீர்கள். (1 யோவான் 3:18) அவர்களுடைய தேவைகளை கவனிப்பதில் இத்தகைய அன்பைக் காட்டுவதற்குரிய நடைமுறையான வழிகள் சிலவற்றை அடுத்த கட்டுரை சிந்திக்கும்.
[அடிக்குறிப்பு]
a ஒவ்வொரு பேரீச்சம் கொத்திலும் ஆயிரம் பழங்கள் வரை இருக்கலாம், அது எட்டு கிலோகிராம் அல்லது அதற்கும் அதிகமான எடையுடன் இருக்கலாம். “ஒவ்வொரு [ஈச்ச] மரமும் அதன் வாழ்நாட்காலத்தில் அதன் சொந்தக்காரர்களுக்கு இரண்டு அல்லது மூன்று டன் பேரீச்சம் பழங்களை தந்திருக்கும்” என எழுத்தாளர் ஒருவர் மதிப்பிடுகிறார்.
உங்களுடைய பதில் என்ன?
• வயதானோர் எவ்வாறு ‘கனி தருகிறார்கள்’?
• வயதான கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய பலம் ஏன் மதிப்புமிக்க ஓர் ஆஸ்தியாக இருக்கிறது?
• ‘யெகோவா உத்தமர்’ என்பதை எவ்வாறு வயதானவர்கள் ‘விளங்கப் பண்ண’ முடியும்?
• யெகோவா தமது நீண்ட கால ஊழியர்களை ஏன் பொக்கிஷமாக போற்றுகிறார்?
[பக்கம் 13-ன் பெட்டி]
அவர்கள் விசுவாசத்தில் எவ்வாறு ஆரோக்கியமாய் இருந்திருக்கிறார்கள்
விசுவாசத்தில் ஆரோக்கியமாய் இருக்கவும் ஆவிக்குரிய பலத்தைக் காத்துக்கொள்ளவும் நீண்ட காலமாக சேவிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எது உதவி செய்திருக்கிறது? இதோ, சிலருடைய குறிப்புகள்:
“யெகோவாவுடன் நம் உறவை பலப்படுத்துவது சம்பந்தமான வசனங்களை வாசிப்பது மிகவும் முக்கியம். அநேக இரவுகளில், 23-ம் சங்கீதத்தையும் 91-ம் சங்கீதத்தையும் நான் ஒப்பிக்கிறேன்.”—ஆலிவ், 1930-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“முழுக்காட்டுதல் பேச்சு கொடுக்கும் போதெல்லாம் நான் ஆஜராயிருந்து, அது எனக்கு கொடுக்கப்படும் பேச்சு போல நினைத்து உன்னிப்பாக செவிகொடுத்துக் கேட்பதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறேன். என்னுடைய ஒப்புக்கொடுத்தலை மனதில் தெளிவாக வைத்திருக்கிறேன், உண்மையுடன் நிலைத்திருக்க அது முக்கிய படியாக இருந்திருக்கிறது.”—ஹேரி, 1946-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“தினமும் ஜெபிப்பது முக்கியம், ‘நம் வழிகளிலெல்லாம் யெகோவாவை நினைத்துக்கொண்டு’ அவரது உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் எப்போதும் கேட்க வேண்டும்.” (நீதிமொழிகள் 3:5, 6)—ஆன்டானியூ, 1951-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“பல வருஷங்களாக தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்து வருகிறவர்களுடைய அனுபவங்களைக் கேட்பது அவருக்கு உண்மைத்தன்மையுடன் நிலைத்திருக்க வேண்டுமென்ற என் தீர்மானத்தைப் பலப்படுத்துகிறது.”—ஜோன், 1954-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காதிருப்பது முக்கியம். நாம் பெற்றிருப்பதெல்லாம் கடவுளுடைய தகுதியற்ற தயவினால் பெற்றது. இப்படிப்பட்ட மனநிலை, கடைசிவரை சகித்திருக்கத் தேவைப்படும் ஆவிக்குரிய போஷாக்கிற்காக சரியான வழிநடத்துதலை நோக்கியிருக்க உதவும்.”—ஆர்லின், 1954-ல் முழுக்காட்டப்பட்டவர்.
[பக்கம் 11-ன் படம்]
முதியோர்கள் மதிப்புமிக்க ராஜ்ய கனியை பிறப்பிக்கிறார்கள்
[பக்கம் 14-ன் படம்]
முதியோருடைய ஆவிக்குரிய பலம் மதிப்புமிக்க ஓர் ஆஸ்தி