அதிகாரம் மூன்று
‘நான் தெரிந்தெடுத்தவர், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர்’
“‘நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியரும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்’ என்று யெகோவா சொல்லுகிறார்.” (ஏசாயா 43:10, NW) யெகோவாவின் இந்த அறிவிப்பு பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசியால் பதிவு செய்யப்பட்டது; அவருடைய பூர்வகால உடன்படிக்கையின் ஜனங்கள், சாட்சிகளாலான ஒரு தேசமாக இருந்தனர் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர். சுமார் 2,600 ஆண்டுகளுக்குப் பின்பு, 1931-ல், இந்த வார்த்தைகள் தங்களுக்கு பொருந்துகின்றன என்பதை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் யாவரறிய அறிவித்தனர். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை தரித்துக்கொண்டு, கடவுளுடைய பூமிக்குரிய ஊழியருக்கான பொறுப்புகளை முழு இருதயத்தோடு ஏற்றனர்.
2 கடவுளை பிரியப்படுத்த வேண்டும் என்பதே யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளப்பூர்வமான வாஞ்சை. இதன் காரணமாகவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏசாயா புத்தகத்தின் 42-ம் அதிகாரம் ஆழ்ந்த அக்கறைக்குரியது. ஏனெனில் யெகோவா அங்கீகரிக்கிற ஊழியனையும் அங்கீகரிக்காத ஊழியனையும் பற்றி இது அழகாக வருணிக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தையும் இதன் நிறைவேற்றத்தையும் ஆழ்ந்து சிந்தித்தால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி என்பதையும் எது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
“என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்”
3 தாம் தெரிந்தெடுக்கும் ஊழியரின் வருகையைப் பற்றி ஏசாயாவின் வாயிலாக யெகோவா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “இதோ, நான் ஆதரிக்கிற எனது தாசன் [“ஊழியர்,” NW], நான் தெரிந்தெடுத்தவரும் என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதியாருக்குள் நியாயம் பரவச் செய்வார்; அவர் கூக்குரலிட மாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தி அதை வீதியிலே கேட்கப்பண்ண மாட்டார். அவர் நெரிந்த நாணலை முறியார், மங்கியெரிகிற திரியை அணையார், உண்மையோடு நியாயத்தைப் பரவச் செய்வார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைநாட்டுமட்டும் சோர்ந்துபோவதுமில்லை, தளர்ந்துபோவதுமில்லை, அவருடைய போதனையைப் பெறும்படி தீவுகள் காத்திருக்கும்.”—ஏசாயா 42:1-4, தி.மொ.
4 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஊழியர் யார்? இவர் யார் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமுமில்லை. இந்த வார்த்தைகள் மத்தேயுவின் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்தப்பட்டிருப்பதையும் நாம் காண்கிறோம். (மத்தேயு 12:15-21) இயேசுவே பிரியமான ஊழியர், ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்.’ யெகோவா தம்முடைய ஆவியை எப்போது இயேசுவின் மீது அமரப்பண்ணினார்? பொ.ச. 29-ல் இயேசுவின் முழுக்காட்டுதலின் போது அமரப்பண்ணினார். ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு அவருடைய முழுக்காட்டுதலைப் பற்றி விவரிக்கிறது. இயேசு தண்ணீரிலிருந்து வெளிவந்தபோது, “வானம் திறந்தது, பரிசுத்த ஆவி புறாவைப் போல அவர் மீது இறங்கியது, ‘நீர் என்னுடைய நேசகுமாரன், நான் உம்மை அங்கீகரித்திருக்கிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.” இவ்வாறு, யெகோவா தனிப்பட்ட விதமாக தம்முடைய பிரியமான ஊழியரை அடையாளம் காட்டினார். அதைத் தொடர்ந்து இயேசு செய்த ஊழியம், அற்புதங்கள் ஆகியவை உண்மையிலேயே அவர் மீது யெகோவாவின் ஆவி இருந்ததை நிரூபித்தன.—லூக்கா 3:21, 22; 4:14-21; மத்தேயு 3:16, 17; NW.
“அவர் புறஜாதியாருக்குள் நியாயம் பரவச் செய்வார்”
5 யெகோவாவால் தெரிந்தெடுக்கப்பட்டவர் உண்மையான நியாயத்தை “பரவச் செய்வார்” அல்லது தெளிவாக விளங்கப் பண்ணுவார். “அவர் புறஜாதியாருக்கு நியாயத்தைக் கூறி அறிவிப்பார்.” (மத்தேயு 12:17, தி.மொ.) பொ.ச. முதல் நூற்றாண்டில் இது எவ்வளவாய் தேவைப்பட்டது! யூத மதத் தலைவர்கள் நியாயம், நீதி பற்றிய கருத்தை திரித்துப் போதித்தனர். அவர்கள் கெடுபிடியான சட்ட தொகுப்பை பின்பற்றுவதன் மூலம் நீதியை அடைய நாடினர், அதில் பெரும்பாலானவை அவர்கள் உருவாக்கிய சட்டங்களே. கண்டிப்புமிக்க அவர்களுடைய நியாயத்தில் இரக்கத்திற்கும் பரிவுக்கும் இடமில்லை.
6 இதற்கு மாறாக, இந்த விஷயத்தில் கடவுளின் நோக்குநிலையை இயேசு வெளிப்படுத்தினார். உண்மையான நியாயம், பரிவும் இரக்கமும் நிறைந்தது என்பதை தம் போதனையிலும் வாழ்க்கையிலும் காட்டினார். அவருடைய புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தை சற்று சிந்தித்து பாருங்கள். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) நியாயத்தையும் நீதியையும் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அவருடைய மலைப்பிரசங்கம் என்னே சிறந்த விளக்கம்! சுவிசேஷ பதிவுகளை வாசிக்கும்போது, ஏழைகளிடமும் துயரப்படுவோரிடமும் இயேசு காட்டிய பரிவு நம் மனதை தொடவில்லையா? (மத்தேயு 20:34; மாற்கு 1:41; 6:34; லூக்கா 7:13) நெரிந்து, வளைந்து, மிதிக்கப்பட்ட நாணலைப் போன்று இருக்கும் அநேகருக்கு அவர் ஆறுதலின் செய்தியைக் கூறினார். மங்கியெரிகிற திரியைப்போல அவர்களது வாழ்க்கை ஜீவனற்று இருந்தது. இயேசு “நெரிந்த நாணலை” முறிக்கவுமில்லை, “மங்கியெரிகிற திரியை” அணைக்கவுமில்லை. அதற்கு பதிலாக, அவருடைய அன்பும் பரிவுமிக்க சொற்களும் செயல்களும் சாந்தகுணமுடையோரின் உள்ளத்தில் ஒளிவிளக்காய் பிரகாசித்தன.—மத்தேயு 11:28-30.
7 இருந்தாலும், இயேசு ‘கூக்குரலிடவோ தம்முடைய சத்தத்தை உயர்த்தி, அதை வீதியிலே கேட்கப்பண்ணவோ மாட்டார்’ என்றெல்லாம் இந்தத் தீர்க்கதரிசனம் சொல்வதேன்? ஏனென்றால் அவர் தம்முடைய நாளில் வாழ்ந்த பெரும்பாலானோரைப் போல் மற்றவர்களுக்கு முன்பாக தம்மை பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. (மத்தேயு 6:5) ஒரு குஷ்டரோகியை சுகப்படுத்துகையில், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்று சொன்னார். (மாற்கு 1:40-44) இயேசு தாம் விளம்பரப்படுத்தப்படுவதையோ பிறர் சொல்வதை கேட்டு ஜனங்கள் முடிவெடுப்பதையோ விரும்பவில்லை. மாறாக, அவர் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியராகிய கிறிஸ்து என்பதை நம்பத்தக்க ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களே புரிந்துகொள்ள விரும்பினார்.
8 தெரிந்தெடுக்கப்பட்ட இந்த ஊழியர் ‘புறஜாதியாருக்கு நியாயத்தை’ வழங்கவிருந்தார். இதைத்தான் இயேசு செய்தார். தெய்வீக நியாயத்தின் பரிவான இயல்பை வலியுறுத்திக் காட்டுவதோடு, அந்த நியாயம் எல்லா ஜனங்களுக்கும் காட்டப்பட வேண்டும் என இயேசு கற்பித்தார். இயேசு ஒரு சந்தர்ப்பத்தில், கடவுளிடத்திலும் அயலானிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை நியாயப்பிரமாணத்தில் தேறின ஒருவரிடம் நினைப்பூட்டினார். “எனக்கு அயலான் யார்?” என இயேசுவிடம் அந்த மனிதர் கேட்டார். “உன்னுடைய உடன் யூதனே” என இயேசு பதிலளிப்பார் என்று அவர் ஒருவேளை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இயேசுவோ அயலானாக நிரூபித்த சமாரியனைப் பற்றிய உவமையை அவருக்கு சொன்னார். இந்த உவமையில், கள்ளர்களால் தாக்கப்பட்ட ஒருவனுக்கு உதவி செய்ய ஒரு சமாரியன் முன்வந்தார். ஆனால் லேவியனும் ஆசாரியனும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில், அயலானாக இருந்தவர் லேவியனுமல்ல, ஆசாரியனுமல்ல, தாழ்ந்தவனாக கருதப்பட்ட சமாரியனே என்பதை கேள்வி கேட்டவர் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. “நீயும் போய் அப்படியே செய்” என்ற அறிவுரையோடு இயேசு இந்த உவமையை முடித்தார்.—லூக்கா 10:25-37, தி.மொ.; லேவியராகமம் 19:18.
‘அவர் சோர்ந்து போவதுமில்லை, தளர்ந்து போவதுமில்லை’
9 உண்மையான நியாயத்தை இயேசு தெளிவுபடுத்தியதால் அவரது சீஷர்கள் இப்பண்பை வெளிக்காட்ட கற்றுக்கொண்டார்கள். நாமும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீதியையும் நியாயத்தையும் தீர்மானிக்கும் உரிமை கடவுளுக்கே இருப்பதால், எது நல்லது எது கெட்டது என்பதைப் பற்றிய அவருடைய தராதரங்களை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் எதையும் யெகோவாவின் வழிகளுக்கு இசைவாக செய்ய முயலும்போது உண்மையான நியாயம் என்றால் என்ன என்பதை நம்முடைய நேர்மையான நடத்தை தெளிவாக காட்டும்.—1 பேதுரு 2:12.
10 பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் நாம் உற்சாகமாய் ஈடுபடும்போதும் உண்மையான நியாயத்தை வெளிக்காட்டுகிறோம். யெகோவா தம்மையும் தம் குமாரனையும் தம் நோக்கங்களையும் பற்றிய உயிர்காக்கும் அறிவை நமக்கு தாராளமாக கொடுத்திருக்கிறார். (யோவான் 17:3) இந்த அறிவை நாம் மட்டுமே வைத்துக்கொள்வது சரியல்ல, நியாயமுமல்ல. “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என்று சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 3:27) ஆகவே, குலம், இனம், தேசம் எதுவாக இருந்தாலும் எல்லா ஜனங்களிடமும் கடவுளைப் பற்றி நாம் அறிந்ததை முழு இருதயத்துடன் சொல்வோமாக.—அப்போஸ்தலர் 10:34, 35.
11 மேலும், உண்மையான கிறிஸ்தவர் பிறரிடம் இயேசுவைப் போலவே நடந்துகொள்கிறார். இன்று அநேகர் தங்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். அவர்களுக்கு பரிவும் உற்சாகமும் தேவைப்படுகிறது. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சிலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு நெரிந்த நாணலை அல்லது மங்கியெரிகிற திரியை போன்று ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய உதவி தேவையல்லவா? (லூக்கா 22:32; அப்போஸ்தலர் 11:23) நியாயத்தை கடைப்பிடிப்பதில் இயேசுவைப் பின்பற்ற முயலும் உண்மை கிறிஸ்தவர்களில் ஒருவராக இருப்பது ஆ, எவ்வளவு புத்துணர்ச்சி!
12 அனைவருக்கும் என்றாவது நியாயம் கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்கும். யெகோவாவால் தெரிந்தெடுக்கப்பட்டவர் ‘நியாயத்தைப் பூமியிலே நிலைநாட்டுமட்டும் சோர்ந்துபோக மாட்டார்; தளர்ந்துபோக மாட்டார்.’ உயிர்த்தெழுப்பப்பட்டு அரசராக முடிசூட்டப்பட்ட கிறிஸ்து இயேசு வெகு விரைவில் ‘தேவனை அறியாதவர்கள் மீது ஆக்கினையைக் கொண்டுவருவார்.’ (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10; வெளிப்படுத்துதல் 16:14-16) கடவுளுடைய ராஜ்யம் மனித ஆட்சியை நீக்கிவிடும். அப்போது, நியாயமும் நீதியும் எங்கும் வியாபித்திருக்கும். (நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 11:3-5; தானியேல் 2:44; 2 பேதுரு 3:13) எங்குமுள்ள கடவுளுடைய ஊழியர்கள், தொலைதூர ‘தீவுகளில்’ உள்ளவர்களும்கூட அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.
‘அவரை ஜாதிகளுக்கு ஒளியாக வைக்கிறேன்’
13 ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகி[றார்].” (ஏசாயா 42:5) சிருஷ்டிகராகிய யெகோவாவைப் பற்றி எத்தகைய மகத்தான சித்தரிப்பு! யெகோவாவின் வல்லமையைப் பற்றிய இந்த நினைப்பூட்டுதல் அவருடைய வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கிறது. யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.”—ஏசாயா 42:6, 7.
14 உயிர் கொடுத்து ஆதரித்து வரும் இந்த அண்டத்தின் மகத்தான சிருஷ்டிகர், தெரிந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஊழியரின் கையைப் பிடித்து எப்போதும் முழு ஆதரவு தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். எப்பேர்ப்பட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இவை! “ஜனத்திற்கு உடன்படிக்கையாக” கொடுப்பதற்கு அவரை யெகோவா பத்திரமாக வைத்திருக்கிறார். உடன்படிக்கை என்பது ஓர் ஒப்பந்தம், இணைப்பு, உறுதிமொழி. இது ஓர் அதிகாரப்பூர்வ ஆணை. யெகோவா தம்முடைய ஊழியரை “ஜனங்களுக்கு உறுதிமொழியாக” வைத்திருக்கிறார்.—அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன்.
15 “ஜாதிகளுக்கு ஒளியாக” இருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட இந்த ஊழியர் ‘குருடருடைய கண்களைத் திறப்பார்,’ “இருளில் இருக்கிறவர்களை” விடுவிப்பார். இதையே இயேசு செய்தார். சத்தியத்திற்கு சாட்சி கொடுப்பதன் மூலம் இயேசு தம்முடைய பரலோக தகப்பனின் நாமத்தை மகிமைப்படுத்தினார். (யோவான் 17:4, 6) மதத்தின் பொய்ப் புரட்டுகளை அம்பலப்படுத்தினார், ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து, மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவர்கள் ஆவிக்குரிய விடுதலையை அடைய வழியைத் திறந்து வைத்தார். (மத்தேயு 15:3-9; லூக்கா 4:43; யோவான் 18:37) இருளுக்குரிய செயல்களைப் பற்றி எச்சரித்தார், சாத்தானை “பொய்க்குப் பிதா” என்றும் “இந்த உலகத்தின் அதிபதி” என்றும் அம்பலப்படுத்தினார்.—யோவான் 3:19-21; 8:44; 16:11.
16 “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:12) தமது பரிபூரண மனித உயிரை மீட்கும் பொருளாக கொடுத்தபோது இதை சிறப்பாக நிரூபித்துக் காட்டினார். இவ்வாறு, விசுவாசத்தைக் காண்பிப்பவர்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பையும், கடவுளுடைய அங்கீகாரத்தையும், நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பையும் அடைவதற்கு வழி வகுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) இயேசு வாழ்நாள் பூராவும் பரிபூரண தெய்வ பக்தியை காட்டியதன் மூலம் யெகோவாவின் அரசதிகாரத்தை ஆதரித்து பிசாசை பொய்யன் என நிரூபித்தார். இயேசு உண்மையிலேயே குருடருக்கு பார்வை அளித்தார். ஆவிக்குரிய இருளில் இருந்தவர்களுக்கு விடுதலையையும் அளித்தார்.
17 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 5:14) நாமும்கூட ஒளிகொண்டு செல்பவர்கள் அல்லவா? நம்முடைய வாழ்க்கை பாணி, பிரசங்க வேலை ஆகியவற்றின் மூலம் மெய்யான ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலுக்கு ஊற்றுமூலராகிய யெகோவாவிடம் மற்றவர்களை வழிநடத்தும் பாக்கியம் நமக்கு இருக்கிறது. நாம் இயேசுவைப் பின்பற்றி யெகோவாவின் நாமத்தை அறிவிக்கிறோம், அவருடைய அரசதிகாரத்தை ஆதரிக்கிறோம், கடவுளுடைய ராஜ்யமே மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை என்பதையும் அறிவிக்கிறோம். அதுமட்டுமல்ல, ஒளிகொண்டு செல்வோராக நாம் மதத்தின் பொய் போதனைகளை அம்பலப்படுத்துகிறோம், அந்தகாரத்தின் அசுத்தமான செயல்களைக் குறித்து எச்சரிக்கிறோம், பொல்லாங்கன் சாத்தானை பற்றியும் வெட்ட வெளிச்சமாக்குகிறோம்.—அப்போஸ்தலர் 1:8; 1 யோவான் 5:19.
“யெகோவாவுக்குப் புதுப் பாட்டைப் பாடுங்கள்”
18 யெகோவா இப்போது தம்முடைய ஜனங்களிடம் கவனத்தைத் திருப்புகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நானே யெகோவா, என் நாமம் இதுவே; என் மகிமையை மற்றவர்களுக்கும் என் புகழை விக்கிரகங்களுக்கும் கொடேன். பூர்வ காலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே இப்பொழுது அறிவிக்கிறேன்; அவை தோன்றாமுன்னே அவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.” (ஏசாயா 42:8, 9, தி.மொ.) ‘எனது ஊழியர்’ என அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனம் மதிப்பற்ற கடவுட்களில் ஒருவரால் அல்ல, ஆனால் உயிருள்ள ஒரே மெய்க் கடவுளால் அறிவிக்கப்பட்டது. இது நிச்சயமாகவே நிறைவேற இருந்தது, நிறைவேறியது. யெகோவா தேவன் உண்மையிலேயே புதியவற்றைப் படைப்பவர். அவை தோன்றுவதற்கு முன்பே அவற்றை பற்றி தம்முடைய ஜனங்களுக்கு தெரியப்படுத்துகிறவர். இதற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
19 ஏசாயா இவ்வாறு எழுதுகிறார்: “சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே, சமுத்திர நிறைவே, தீவுகளே, அவற்றில் குடியிருப்பவர்களே, யெகோவாவுக்குப் புதுப் பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய புகழைப் பாடுங்கள். வனாந்தரமும் அதின் ஊர்களும் கேதாரியர் பாளையங்களும் உரத்த சத்தமிடுவார்கள்; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரிப்பார்கள், பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்கள். யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துவார்கள், அவர் புகழைத் தீவுகளில் பிரஸ்தாபிப்பார்கள்.”—ஏசாயா 42:10-12, தி.மொ.
20 எங்குமுள்ள ஜனங்கள், அதாவது பட்டணங்களில், வனாந்தரத்திலுள்ள கிராமங்களில், தீவுகளில், ‘கேதாரில்’ அல்லது பாலைவனங்களில் உள்ள பாளையங்களில் வசிப்பவர்களும்கூட யெகோவாவை புகழ்ந்து பாடும்படி தூண்டப்படுகிறார்கள். இந்தத் தீர்க்கதரிசன வேண்டுகோளுக்கு நம்முடைய நாளில் லட்சோப லட்சம் பேர் செவிசாய்த்திருப்பது பேரானந்தம் அளிக்கிறது! அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை வரவேற்று யெகோவாவை தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 230-க்கும் அதிகமான தேசங்களில் உள்ள யெகோவாவின் ஜனங்கள் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் இப்புதுப் பாட்டைப் பாடுகிறார்கள். பல்வேறு கலாச்சாரத்தாரோடும் மொழியினரோடும் இனத்தாரோடும் இணைந்து பாடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது!
21 சத்துருக்கள் கடவுளை எதிர்த்து நின்று, புகழ் சேர்க்கும் இப்பாடலை நிறுத்திவிட முடியுமா? முடியவே முடியாது! “கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு, யுத்தவீரனைப் போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.” (ஏசாயா 42:13) எந்த சக்தியும் யெகோவாவை எதிர்த்து நிற்க முடியுமா? சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசியாகிய மோசேயும், இஸ்ரவேல் புத்திரரும் இவ்வாறு பாடினர்: “யெகோவா யுத்தவீரர்; யெகோவா என்பதே அவர் திருநாமம். பார்வோனின் இரதங்களையும் சைனியத்தையும் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்; அவனுடைய சிரேஷ்டமான வீரர் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள்.” (யாத்திராகமம் 15:3, 4, தி.மொ.) மிகவும் வலிமைமிக்க அன்றைய ராணுவ சேனையின் மீதே யெகோவா வெற்றிகொண்டார். பராக்கிரமமிக்க போர்வீரராக யெகோவா புறப்பட்டுச் செல்கையில் அவருடைய ஜனங்களின் விரோதிகள் யாருமே வெற்றி பெற முடியாது.
“வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்”
22 தம் விரோதிகளுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கும்போதும் யெகோவா பாரபட்சமின்றி நியாயமாக செயல்படுகிறார். அவர் சொல்கிறார்: “வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்; அமைதியாய் இருந்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக் குரல் எழுப்புகின்றேன்; பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன். மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்; அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்துபோகச் செய்வேன்; ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்; ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.”—ஏசாயா 42:14, 15, பொ.மொ.
23 நியாயத்தீர்ப்பு நடவடிக்கை எடுப்பதற்குமுன் பொல்லாதவர்கள் தங்கள் தீய வழிகளை விட்டு திரும்புவதற்கு யெகோவா காலத்தை அனுமதிக்கிறார். (எரேமியா 18:7-10; 2 பேதுரு 3:9) வலிமைமிக்க உலக வல்லரசாக திகழ்ந்த பாபிலோன் பொ.ச.மு. 607-ல் எருசலேமை பாழாக்கிய விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேலர் உண்மையற்ற போக்கில் சென்றதால் அவர்களைத் தண்டிப்பதற்காக யெகோவா இதை அனுமதிக்கிறார். இருந்தாலும், யாருடைய அனுமதியால் இதைச் செய்கிறார்கள் என்பதை பாபிலோனியர் உணரத் தவறுகிறார்கள். கடவுளுடைய நியாயத்தீர்ப்பு தேவைப்படுத்துவதைக் காட்டிலும் மிக மோசமாக கடவுளுடைய ஜனங்களை நடத்துகிறார்கள். (ஏசாயா 47:6, 7; சகரியா 1:15) தம்முடைய ஜனங்கள் கஷ்டப்படுவதைக் காணும்போது மெய்க் கடவுளின் மனம் எந்தளவுக்கு வேதனைப்படும்! ஆனாலும், உரிய காலம் வரும்வரை அவர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அதற்கு பிறகு, தம்முடைய உடன்படிக்கையின் ஜனங்களை விடுவித்து அவர்களை சுதந்திர தேசமாக்குவதற்கு பிள்ளை பெறுகிறவளைப் போல முயற்சி செய்கிறார். இதற்காக பொ.ச.மு. 539-ல் பாபிலோனை வற்றிப்போகப் பண்ணுகிறார், அதையும் அதன் அரண்களையும் பாழாக்குகிறார்.
24 பல வருடங்கள் சிறையிருப்பில் இருந்து, முடிவில் தாயகம் செல்லும் வழி திறக்கப்படும்போது கடவுளுடைய ஜனங்கள் மெய்சிலிர்த்திருக்க வேண்டும்! (2 நாளாகமம் 36:22, 23) யெகோவாவுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிக்கும் ஆனந்தத்தை அடைந்திருக்க வேண்டும்: “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.”—ஏசாயா 42:16.
25 இந்த வார்த்தைகள் இன்று எப்படி பொருந்துகின்றன? பல நூற்றாண்டுகளாகவே தேசங்களை அவற்றின் விருப்பத்திற்கு யெகோவா விட்டுவிட்டிருக்கிறார். இருந்தாலும், காரியங்களை சரிப்படுத்துவதற்கு அவருடைய குறிக்கப்பட்ட காலம் மிக சமீபித்திருக்கிறது. நவீன நாட்களில் தம்முடைய நாமத்திற்கு சாட்சி கொடுக்க ஒரு ஜனத்தை கடவுள் எழுப்பியுள்ளார். அவர்களுக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் சரிப்படுத்தி, எவ்வித தடங்கலுமின்றி அவரை ‘ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுவதற்கு’ வழியை ஏற்பாடு செய்துள்ளார். (யோவான் 4:24) ‘நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்’ என அவர் வாக்குக் கொடுத்தார். அந்த வாக்கை அவர் காப்பாற்றியிருக்கிறார். பொய் தெய்வங்களை தொடர்ந்து வழிபடுவோருக்கு என்ன நேரிடும்? யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “சித்திர வேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.” (ஏசாயா 42:17) தெரிந்தெடுக்கப்பட்டவரைப் போலவே நாமும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம்!
‘செவிடும் குருடுமான ஊழியன்’
26 கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியராகிய இயேசு கிறிஸ்து மரணம் வரை உண்மையாக இருந்தார். ஆனால், யெகோவாவின் ஜனமாகிய இஸ்ரவேலோ உண்மையற்ற ஊழியனாக மாறுகிறது. ஆவிக்குரிய கருத்தில் செவிடாகவும் குருடாகவும் இருக்கிறது. அவர்களைக் குறித்து யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள். குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன்தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்? பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை. ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத் தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.”—ஏசாயா 42:18-21, பொ.மொ.
27 இஸ்ரவேலர் என்னே பெருத்த ஏமாற்றமளிக்கிறார்கள்! அவர்கள் மீண்டும் மீண்டும் புறஜாதியாரின் பேய் தெய்வங்களை வழிபடுவதில் ஈடுபடுகின்றனர். யெகோவா மறுபடியும் மறுபடியுமாக தம்முடைய ஊழியக்காரர்களை அனுப்பியும் அவருடைய ஜனங்களோ அந்த ஊழியக்காரர்களுக்கு செவிகொடுக்கவில்லை. (2 நாளாகமம் 36:14-16) அதன் விளைவுகளைக் குறித்து ஏசாயா முன்னறிவிக்கிறார்: “இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே. இவர்கள் மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச் சூழ அக்கினி ஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதை மனதிலே வைக்காதே போனார்கள்.”—ஏசாயா 42:22-25.
28 அதன் குடிமக்களின் உண்மையற்ற தன்மையின் காரணமாக பொ.ச.மு. 607-ல் யூத தேசம் பாழாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படும்படி யெகோவா அனுமதிக்கிறார். பாபிலோனியர் யெகோவாவின் ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமை பாழாக்கி, யூதர்களை சிறைபிடித்துச் செல்கிறார்கள். (2 நாளாகமம் 36:17-21) நாம் யெகோவாவின் அறிவுரைகளை கேட்காத செவிடராகவோ அவருடைய வார்த்தையை கவனிக்காத குருடராகவோ இல்லாமல் இந்த எச்சரிப்பூட்டும் உதாரணத்திற்கு கவனம் செலுத்துவோமாக. யெகோவா அங்கீகரித்த ஊழியராகிய கிறிஸ்து இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி யெகோவாவின் அங்கீகாரத்தை நாடுவோமாக. இயேசுவைப் போலவே நாமும் நம்முடைய சொல்லிலும் செயலிலும் உண்மையான நியாயத்தை தெரியப்படுத்துவோமாக. இவ்விதமாக, மெய்க் கடவுளைப் புகழ்ந்து அவரை மகிமைப்படுத்தி ஒளிகொண்டு செல்வோராக சேவிக்கும் யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் நாம் நிலைத்திருப்போம்.
[கேள்விகள்]
1, 2. ஏசாயா 42-ம் அதிகாரம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு ஏன் அக்கறைக்குரியது?
3. ‘எனது ஊழியர்’ பற்றி ஏசாயாவின் வாயிலாக யெகோவா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?
4. முன்னுரைக்கப்பட்ட அந்தத் ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்’ யார், இதை நாம் எப்படி அறிவோம்?
5. பொ.ச. முதல் நூற்றாண்டில் நியாயத்தைப் பற்றிய விளக்கம் ஏன் தேவைப்பட்டது?
6. என்ன வழிகளிலெல்லாம் இயேசு உண்மையான நியாயத்தை விளங்கப் பண்ணினார்?
7. இயேசு ‘கூக்குரலிடவோ தம்முடைய சத்தத்தை உயர்த்தி அதை வீதியிலே கேட்கப்பண்ணவோ மாட்டார்’ என தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டதற்குக் காரணம் என்ன?
8. (அ) இயேசு எப்படி ‘புறஜாதியாருக்கு நியாயத்தை’ வழங்கினார்? (ஆ) நியாயத்தைக் குறித்ததில் அயலானாக நிரூபித்த சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமை நமக்கு எதை கற்பிக்கிறது?
9. உண்மையான நியாயத்தின் இயல்பை அறிந்துகொள்வது நம்மை எவ்வாறு பாதிக்கும்?
10. நியாயத்தை வெளிக்காட்டுவதில் ஏன் பிரசங்க வேலையும் கற்பிக்கும் வேலையும் உட்படுகின்றன?
11. இயேசுவைப் போல் பிறரிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
12. அனைவருக்கும் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
13. தெரிந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஊழியரைப் பற்றி யெகோவா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?
14. (அ) யெகோவா தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியரின் கையைப் பிடிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) தெரிந்தெடுக்கப்பட்ட இந்த ஊழியர் என்ன பங்கை வகிக்கிறார்?
15, 16. இயேசு எந்த விதத்தில் “ஜாதிகளுக்கு ஒளியாக” இருந்தார்?
17. எவ்வழிகளில் நாம் ஒளிகொண்டு செல்வோராக செயல்படுகிறோம்?
18. யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு எதைத் தெரியப்படுத்துகிறார்?
19, 20. (அ) என்ன பாட்டை பாட வேண்டும்? (ஆ) யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் பாட்டை இன்று யார் பாடுகிறார்கள்?
21. யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் பாடலைப் பாடுவதை ஏன் கடவுளுடைய ஜனங்களின் விரோதிகளால் நிறுத்திவிட முடியாது?
22, 23. யெகோவா ஏன் ‘வெகுகாலமாய் மௌனம் காத்துவந்திருக்கிறார்’?
24. யெகோவா தம் ஜனமாகிய இஸ்ரவேலருக்கு என்ன எதிர்பார்ப்பை வைக்கிறார்?
25. (அ) இன்று யெகோவாவின் ஜனங்கள் எதைப் பற்றி உறுதியாக இருக்கலாம்? (ஆ) நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
26, 27. இஸ்ரவேல் எவ்வாறு ‘செவிடும் குருடுமான ஊழியனாக’ மாறுகிறது, அதன் விளைவு என்ன?
28. (அ) யூத குடிமக்களின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) யெகோவாவின் அங்கீகாரத்தை நாம் எவ்வாறு நாடலாம்?
[பக்கம் 33-ன் படக்குறிப்பு]
பரிவும் இரக்கமும் நிறைந்ததே உண்மையான நியாயம்
[பக்கம் 34-ன் படக்குறிப்பு]
சமாரிய அயலானைப் பற்றிய உவமையின் மூலம் உண்மையான நியாயம் எல்லா ஜனங்களுக்கும் உரியது என இயேசு காட்டினார்
[பக்கம் 36-ன் படக்குறிப்பு]
உற்சாகப்படுத்துகிறவர்களாகவும் தயவானவர்களாகவும் இருப்பதன் மூலம் தெய்வீக நியாயத்தை கடைப்பிடிக்கிறோம்
[பக்கம் 39-ன் படக்குறிப்பு]
நம்முடைய பிரசங்க வேலை மூலம் தெய்வீக நியாயத்தை வெளிக்காட்டுகிறோம்
[பக்கம் 40-ன் படக்குறிப்பு]
அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் “ஜாதிகளுக்கு ஒளியாக” வைக்கப்பட்டார்