மத்தேயு எழுதியது
12 ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீஷர்களுக்குப் பசியெடுத்தது, அதனால் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.+ 2 பரிசேயர்கள் அதைப் பார்த்ததும், “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உன்னுடைய சீஷர்கள் செய்கிறார்கள்!”+ என்று அவரிடம் சொன்னார்கள். 3 அதற்கு அவர், “தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா?+ 4 அவர் கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை+ தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே?+ 5 அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா?+ 6 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார்.+ 7 ‘பலியை அல்ல,+ இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’+ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். 8 ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.
9 பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களுடைய ஜெபக்கூடத்துக்குள் போனார். 10 சூம்பிய* கையுடைய ஒருவன்+ அங்கே இருந்தான். அங்கிருந்தவர்கள் அவர்மேல் குற்றம் சுமத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்டார்கள்.+ 11 அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா?+ 12 அப்படியானால், ஆட்டைவிட மனுஷன் எவ்வளவு மதிப்புள்ளவன்! அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார். 13 பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்று சொன்னார். அவன் நீட்டினான், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. 14 ஆனால், அந்தப் பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் போட்டார்கள். 15 இயேசு இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டுப் போனார். நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள்,+ அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். 16 ஆனால், தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென்று கண்டிப்புடன் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.+ 17 ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது:
18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார். 19 இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார்,+ குரலை உயர்த்திப் பேச மாட்டார்; முக்கியத் தெருக்களில் இவருடைய குரலை யாரும் கேட்க மாட்டார்கள். 20 நியாயத்தை நிலைநாட்டும்வரை, நசுங்கிய எந்த நாணலையும் இவர் ஒடிக்க மாட்டார்; மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.+ 21 உண்மையில், எல்லா மக்களும் இவருடைய பெயரில் நம்பிக்கையோடு இருப்பார்கள்.”+
22 பின்பு, பேய் பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவனால் பார்க்கவோ பேசவோ முடியவில்லை; அவனை அவர் குணமாக்கியவுடன் அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 அப்போது மக்கள் எல்லாரும் பிரமித்துப்போய், “ஒருவேளை இவர்தான் தாவீதின் மகனோ?” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 24 அதைக் கேட்ட பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். 25 அவர்களுடைய யோசனைகளை அவர் தெரிந்துகொண்டு, “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு ஊருக்குள் அல்லது வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அதுவும் நிலைக்காது. 26 அதேபோல், சாத்தானைச் சாத்தானே விரட்டினால், அவன் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்குகிறான் என்று அர்த்தம்; அப்படியானால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்? 27 நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்கள்* யாருடைய உதவியால் அவற்றை விரட்டுகிறார்கள்? அதனால், உங்களுடைய சீஷர்களே நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்கிறார்கள். 28 நான் கடவுளுடைய சக்தியால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை* என்றுதான் அர்த்தம்.+ 29 ஒரு பலசாலியை முதலில் கட்டிப்போடவில்லை என்றால், ஒருவன் எப்படி அவனுடைய வீட்டுக்குள் புகுந்து பொருள்களைக் கொள்ளையடிக்க முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்புதான் வீட்டைக் கொள்ளையடிக்க முடியும். 30 என் பக்கம் இல்லாதவன் எனக்கு விரோதமாக இருக்கிறான், என்னோடு சேர்ந்து மக்களைக் கூட்டிச்சேர்க்காதவன் அவர்களைச் சிதறிப்போக வைக்கிறான்.+
31 அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எல்லா விதமான பாவமும் நிந்தனையும் மனுஷர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமான நிந்தனை மன்னிக்கப்படாது.+ 32 உதாரணமாக, மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்;+ ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக யாராவது பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படாது; இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, மன்னிக்கப்படாது.+
33 நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.+ 34 விரியன் பாம்புக் குட்டிகளே,+ பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.+ 35 நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனுஷனோ தன் இதயத்தில் நிறைந்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான்.+ 36 நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான* வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;+ 37 ஏனென்றால், உங்களுடைய வார்த்தைகளை வைத்தே நீங்கள் நீதிமான்களா குற்றவாளிகளா என்பதைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று சொன்னார்.
38 அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.+ 39 அப்போது அவர், “விசுவாசதுரோகம் செய்கிற பொல்லாத தலைமுறையினர் ஒரு அடையாளத்தை* எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால், யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது.+ 40 ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்கு யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தது போலவே+ மனிதகுமாரனும் ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்.+ 41 நியாயத்தீர்ப்பின்போது நினிவே மக்கள் இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்; ஏனென்றால், யோனா பிரசங்கித்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தினார்கள்.+ ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+ 42 நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் தொலைதூரப் பகுதியிலிருந்து வந்தாள்;+ ஆனால், இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+
43 ஒரு பேய் ஒரு மனுஷனைவிட்டுப் போகும்போது, ஓய்வெடுக்க இடம் தேடி வறண்ட இடங்கள் வழியாக அலைந்து திரிகிறது; ஆனால் எந்த இடமும் கிடைக்காமல்,+ 44 ‘நான் விட்டுவந்த என் வீட்டுக்கே திரும்பிப் போவேன்’ என்று சொல்கிறது; அது திரும்பிப் போகும்போது அந்த வீடு காலியாகவும் நன்றாகப் பெருக்கி அலங்கரிக்கப்பட்டும் இருப்பதைப் பார்க்கிறது. 45 பின்பு, மறுபடியும் போய், தன்னைவிடப் பொல்லாத ஏழு பேய்களைக் கூட்டிக்கொண்டு வருகிறது. அந்தப் பேய்கள் உள்ளே புகுந்து அங்கேயே குடியிருக்கின்றன; அந்த மனுஷனுடைய நிலைமை முதலில் இருந்ததைவிட இன்னும் மோசமாகிறது.+ இப்படித்தான், இந்தப் பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்று சொன்னார்.
46 கூட்டத்தாரிடம் அவர் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ அவரோடு பேசுவதற்காக வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.+ 47 அப்போது ஒருவர் அவரிடம், “உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரர்களும் உங்களோடு பேசுவதற்காக வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார். 48 இயேசு அவரைப் பார்த்து, “யார் என்னுடைய அம்மா, யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்; 49 பின்பு தன்னுடைய சீஷர்கள் பக்கமாகக் கையை நீட்டி, “இதோ! என் அம்மாவும் சகோதரர்களும் இவர்கள்தான்!+ 50 என்னுடைய பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* நடக்கிறவர்தான் என் சகோதரர், என் சகோதரி, என் அம்மா”+ என்று சொன்னார்.