2 நாளாகமம்
36 யோசியாவுக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாசை+ பொதுமக்கள் எருசலேமில் ராஜாவாக்கினார்கள்.+ 2 யோவாகாஸ் ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். 3 ஆனால், அவர் எருசலேமில் ஆட்சி செய்யாதபடி எகிப்தின் ராஜா அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான். 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+ 4 அதோடு, யோவாகாசின் சகோதரன் எலியாக்கீமை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக நியமித்தான்; அவருடைய பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், அவருடைய சகோதரன் யோவாகாசை நேகோ+ எகிப்துக்குக் கொண்டுபோனான்.+
5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+ 6 இரண்டு செம்பு விலங்குகள் போட்டு அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காக+ பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான். 7 அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை பாபிலோனுக்குக் கொண்டுபோய்த் தன்னுடைய அரண்மனையில் வைத்தான்.+ 8 யோயாக்கீமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும் அவர் செய்த அருவருப்பான செயல்களும் அவரைப் பற்றிய மோசமான விஷயங்களும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார்.+
9 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள், பத்து நாட்கள் ஆட்சி செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களையே அவர் செய்துவந்தார்.+ 10 வருஷத்தின்* ஆரம்பத்தில், யோயாக்கீனையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும்+ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காகப் படைவீரர்களை நேபுகாத்நேச்சார் அனுப்பினான்.+ யோயாக்கீனுக்குப் பதிலாக, அவருடைய சித்தப்பாவான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக்கினான்.+
11 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 12 இவரும் தன்னுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார். யெகோவாவின் கட்டளைப்படி எரேமியா தீர்க்கதரிசி இவரிடம் பேசினார்.+ ஆனாலும், அவர் முன்னால் சிதேக்கியா தாழ்மையாக நடந்துகொள்ளவில்லை. 13 சிதேக்கியாவிடமிருந்து கடவுளுடைய பெயரில் நேபுகாத்நேச்சார் ராஜா உறுதிமொழி வாங்கியிருந்தும், அவனை எதிர்த்துக் கலகம் செய்தார்,+ பிடிவாதமாக இருந்தார், வீம்பாக நடந்துகொண்டார், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் திரும்பிவர மறுத்தார். 14 மக்கள் மட்டுமல்ல, முக்கியமான குருமார்கள் எல்லாரும்கூட மற்ற தேசத்து மக்கள் செய்துவந்த அருவருப்பான எல்லா காரியங்களையும் செய்தார்கள். கடவுளுக்கு உண்மையாக இல்லாமல் படுமோசமாக நடந்துகொண்டார்கள்; யெகோவா புனிதப்படுத்திய எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ 18 உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த எல்லா பாத்திரங்களையும் அவன் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பெரிய பாத்திரங்கள், சிறிய பாத்திரங்கள் என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும், ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சொந்தமான பொக்கிஷங்களையும் கொண்டுபோனான்.+ 19 உண்மைக் கடவுளின் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினான்,+ எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான்,+ கோட்டைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்தான், மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்துப்போட்டான்.+ 20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+ 21 இப்படி, எரேமியா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.+ அந்தத் தேசம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்ட ஓய்வுநாட்களுக்கு ஈடாக,+ 70 வருஷங்களுக்கு அது பாழாய்க் கிடந்தது.+
22 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார்; யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில், 23 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் புறப்பட்டுப் போகலாம்.+ அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுடன் இருப்பாராக’” என்று எழுதப்பட்டிருந்தது.