யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஓசியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இ ஸ்ரவேலின் பத்துக்கோத்திர வடக்கு ராஜ்யத்தில் உண்மை வழிபாடு, சுவடு தெரியாமல் மறைந்துவிட்டதெனச் சொல்லலாம். இரண்டாம் யெரொபெயாமுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் தேசம் பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது; ஆனால், அவருடைய இறப்புக்குப்பிறகு அத்தேசம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைகிறது. அதைப் பின்தொடர்ந்து தேசத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது, அரசியல் ஆட்டம் காண்கிறது. இரண்டாம் யெரொபெயாமுக்குப் பின் அரசாண்ட ஆறு ராஜாக்களில் நால்வர் கொலை செய்யப்படுகிறார்கள். (2 இராஜாக்கள் 14:29; 15:8-30; 17:1-6) ஓசியா 59 வருட காலமாக அதாவது, பொ.ச.மு. 804-ல் இருந்து இஸ்ரவேலின் இந்தக் கொந்தளிப்பான காலம் வரையாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
ஓசியாவின் மணவாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பாதை மாறிப்போன இஸ்ரவேல் தேசத்தைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இஸ்ரவேலர் செய்த தவறுகளை அம்பலப்படுத்துவது, இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் எதிரான நியாயத்தீர்ப்புச் செய்திகளை அறிவிப்பது ஆகிய விஷயங்கள் ஓசியா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் எழுத்தாளர் ஓசியா. இப்புத்தகத்தில் அவர் கனிவையும் பரிவையும் வெளிக்காட்டுகிற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; அதோடு வலிமைமிக்க வார்த்தைகளையும், தத்ரூபமாய் விளக்குகிற மொழிநடையையும் பயன்படுத்துகிறார். ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையின் பாகமான இப்புத்தகத்தின் செய்தி ஜீவனும் வல்லமையும் உள்ளது.—எபிரெயர் 4:12.
‘ஒரு சோரஸ்திரீயை உன்னிடமாகச் சேர்த்துக்கொள்’
‘நீ போய், ஒரு சோரஸ்திரீயை உன்னிடமாகச் சேர்த்துக்கொள்’ என்று ஓசியாவிடம் யெகோவா சொல்கிறார். (ஓசியா 1:2) ஓசியா அதற்குக் கீழ்ப்படிகிறார்; கோமேர் அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அதற்குப் பிறகு அவளுக்கு முறைகேடான விதத்தில் இரண்டு பிள்ளைகள் பிறந்ததாகத் தெரிகிறது. இஸ்ரவேலருக்கு யெகோவா இரக்கஞ்செய்வதில்லை என்றும் தமக்கு துரோகம் செய்த ஜனத்தைப் புறக்கணித்து விட்டார் என்றும் அர்த்தம் தருகிற விதத்தில் லோருகாமா, லோகம்மீ என்ற பெயர்கள் இப்பிள்ளைகளுக்குச் சூட்டப்படுகின்றன.
கலகம் செய்கிற தம் ஜனத்தைப்பற்றி யெகோவா உண்மையில் எப்படி உணருகிறார்? ஓசியாவிடம் அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘அந்நிய தேவர்களை மதித்து நடக்கிற . . . இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள்.’—ஓசியா 3:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:1—ஓசியா தன்னுடைய ஊழியக் காலத்தில் யூதாவிலே அரசாண்ட நான்கு ராஜாக்களையும்பற்றி குறிப்பிடுகிறபோதிலும் இஸ்ரவேலில் அரசாண்ட ராஜாக்களில் ஒருவரை மட்டுமே ஏன் குறிப்பிடுகிறார்? ஏனென்றால், தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜாக்கள்தான் கடவுள் தேர்ந்தெடுத்த ஜனத்தை ஆட்சி செய்வதற்கு உரிமையுள்ளவர்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள். வடக்கு ராஜ்யத்தின் ராஜாக்கள் தாவீதின் வம்சாவளியில் வந்தவர்கள் அல்ல, மாறாக யூதா ராஜ்யத்தின் ராஜாக்களே அந்த வம்சாவளியில் வந்தவர்கள்.
1:2-9—ஓசியா உண்மையிலேயே ஒரு சோரஸ்திரீயை மனைவியாகச் சேர்த்துக்கொண்டாரா? ஆம், அவர் மணமுடித்த பெண் பிற்பாடு விபச்சாரியாக ஆனாள். தன்னுடைய இல்லற வாழ்க்கையைக் குறித்து அவர் விளக்கிய விஷயங்கள் கனவிலோ தரிசனத்திலோ நிகழ்ந்தவை என்பதாக அவர் எந்தக் குறிப்பும் தருவதில்லை.
1:7—யூதாவின் வம்சத்தாருக்கு யெகோவா இரக்கங்காட்டி அவர்களை இரட்சித்தது எப்போது? பொ.ச.மு. 732-ல் எசேக்கியா ராஜாவின் காலத்தில் இது நிறைவேறியது. யெகோவா அப்போது அசீரியர்களின் படையிலிருந்த 1,85,000 வீரர்களை ஒரேவொரு தேவதூதனைக்கொண்டு அழித்தார்; அதன்மூலம் எருசலேமுக்கு எதிரான அவர்களுடைய அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். (2 இராஜாக்கள் 19:34, 35) இவ்வாறு, “வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும்” இரட்சியாமல் ஒரே தேவதூதனைக்கொண்டு யூதாவை யெகோவா இரட்சித்தார்.
1:10, 11—இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் பொ.ச.மு. 740-ல் வீழ்ச்சி அடைந்திருக்க, யூதா புத்திரரோடே ‘இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டது’ எவ்வாறு? யூதா தேசத்து மக்கள் பொ.ச.மு. 607-ல் பாபிலோனுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டுச்செல்லப்படுவதற்கு முன்பே வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த பலர் யூதாவுக்கு வந்துவிட்டிருந்தார்கள். (2 நாளாகமம் 11:13-17; 30:6-12, 18-20, 25) நாடுகடத்தப்பட்ட யூதர்கள் பொ.ச.மு. 537-ல் தாயகம் திரும்பியபோது இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களின் சந்ததியாரும் அவர்களுடன் இருந்தார்கள்.—எஸ்றா 2:70.
2:21-23—‘நான் அவளை [யெஸ்ரயேலை] எனக்கென்று பூமியிலே விதைத்து, அவளுக்கு இரங்குவேன்’ என்று யெகோவா சொன்னதன் மூலம் முன்னுரைக்கப்பட்டது என்ன? ஓசியாவுக்கும் கோமேருக்கும் பிறந்த முதல் மகனுடைய பெயர் யெஸ்ரயேல். (ஓசியா 1:2-4) அப்பெயரின் அர்த்தம், “கடவுள் விதையை விதைப்பார்” என்பதே. இது, பொ.ச.மு. 537-ல் உண்மையுள்ள மீதியானோரை யெகோவா கூட்டிச்சேர்த்து விதைகளைப்போல யூதாவிலே விதைப்பார் என்பதைத் தீர்க்கதரிசனமாகக் காட்டியது. 70 வருடங்கள் பாழாய்க் கிடந்த நிலம் இப்போது தானியத்தையும் மதுரமான திராட்சை ரசத்தையும் எண்ணெயையும் உற்பத்திசெய்ய வேண்டும். விளைச்சலுக்கு சத்துக்களைத் தரும்படி இந்த நல்ல உணவுப்பொருட்கள் பூமியிடம் கேட்கும் என்றும் மழையைத் தரும்படி பூமி வானங்களிடம் கேட்கும் என்றும் மழை மேகங்களைத் தரும்படி வானங்கள் கடவுளிடம் கேட்கும் என்றும் கவிதை நடையில் இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. இவை யாவும், தாயகம் திரும்புகிற மீதியானோரின் தேவைகளை நிறைவாய் கவனித்துக்கொள்வதற்கே. அப்போஸ்தலர்களாகிய பவுலும் பேதுருவும் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோரைக் கூட்டிச்சேர்க்கும் விஷயத்திற்கு ஓசியா 2:23-ஐப் பொருத்துகிறார்கள்.—ரோமர் 9:25, 26; 1 பேதுரு 2:10.
நமக்குப் பாடம்:
1:2-9; 3:1, 2. கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்பட்டு, மணவாழ்க்கையில் நிலைத்திருப்பதன்மூலம் ஓசியா செய்த தியாகத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக நாம் எந்தளவுக்கு நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறோம்?
1:6-9. உடல்ரீதியான வேசித்தனத்தை யெகோவா வெறுப்பது போலவே ஆன்மீகரீதியான வேசித்தனத்தையும் அவர் வெறுக்கிறார்.
1:7, 10, 11; 2:14-23. இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்து யெகோவா முன்னுரைத்தவை எல்லாம் நிறைவேறின. யெகோவாவின் வார்த்தை எப்போதும் நிறைவேறும்.
2:16, 19, 21-23; 3:1-4. உள்ளப்பூர்வமாக மனந்திரும்புகிறவர்களை மன்னிக்க யெகோவா மனமுள்ளவராய் இருக்கிறார். (நெகேமியா 9:17) அவரைப்போல, நாமும் மற்றவர்களுக்குப் பரிவையும் இரக்கத்தையும் காட்ட வேண்டும்.
“கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது”
“தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது.” ஏன்? ஏனென்றால், “தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.” (ஓசியா 4:1) துரோகிகளான இஸ்ரவேலர் மற்றவர்களை ஏமாற்றினார்கள், இரத்தம் சிந்தினார்கள், உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் வேசித்தனம் செய்தார்கள். உதவிக்காக கடவுளை நோக்கிக் கூப்பிடுவதற்குப் பதிலாக, ‘எகிப்தியனைக் கூப்பிட்டார்கள்; அசீரியனிடத்துக்கும் போனார்கள்.’—ஓசியா 7:11.
‘இஸ்ரவேலர் விழுங்கப்பட வேண்டும்’ என்ற நியாயத்தீர்ப்புச் செய்தியை யெகோவா அறிவிக்கிறார். (ஓசியா 8:8) யூதா ராஜ்யமும் குற்றமற்றதாக இல்லை. அதைப்பற்றி ஓசியா 12:2 இவ்வாறு குறிப்பிடுகிறது: “யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.” ஆனாலும் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவது உறுதி; ஏனெனில் கடவுள் இவ்விதமாய் வாக்குறுதி அளிக்கிறார்: “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.”—ஓசியா 13:14.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
6:1-3—“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தது யார்? யெகோவாவிடம் திரும்புவோமென விசுவாசமற்ற இஸ்ரவேலர் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் அப்படியே சொல்லியிருந்தாலும் அது வெறும் நடிப்புதான். அவர்கள் உண்மையில் மனந்திரும்பியிருக்கவில்லை. அவர்கள் காட்டிய அன்பும் கருணையும் நிலையானதாய் இருக்கவில்லை; ‘காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்து போகிற பனியைப்போலவும்’ அவை இருந்தன. (ஓசியா 6:4) மறுபட்சத்தில், இவ்வாறு சொல்லியது ஓசியாவாக இருந்திருந்தால், யெகோவாவின் பக்கம் மீண்டும் திரும்பிவரும்படி அவர் ஜனங்களிடம் கெஞ்சியிருக்கலாம். எப்படியானாலும், வழி தவறிப்போன இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யத்தின் குடிகள் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி யெகோவா பக்கம் உண்மையிலேயே திரும்ப வேண்டியிருக்கிறது.
7:4—விபச்சாரக்காரரான இஸ்ரவேலர் எவ்விதத்தில் ‘எரிகிற அடுப்பைப்போல்’ இருக்கிறார்கள்? அவர்களுடைய இருதயத்தில் தீய ஆசைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததையே இந்த ஒப்புமை விளக்குகிறது.
நமக்குப் பாடம்:
4:1, 6. யெகோவாவின் தயவு நமக்கு எப்போதும் இருக்க வேண்டுமானால், அவரைப்பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ள வேண்டும், அறிந்துகொண்டதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
4:9-13. ஒழுக்கக்கேட்டிலும் அசுத்தமான வழிபாட்டிலும் தொடர்ந்து ஈடுபடுகிறவர்களிடம் யெகோவா கணக்குக் கேட்பார்.—ஓசியா 1:4.
5:1. கடவுளுடைய மக்களை முன்நின்று வழிநடத்துபவர்கள் விசுவாசத்துரோகத்துக்கு சற்றும் இடங்கொடுக்கக் கூடாது. இடங்கொடுத்தால், பொய் வழிபாட்டில் ஈடுபடும்படி அவர்களே சிலரைச் சிக்கவைத்துவிடலாம். இவ்வாறு செய்வதன்மூலம் அவர்களுக்கு ‘கண்ணியும் வலையுமாகிவிடுவார்கள்.’
6:1-4; 7:14, 16. மனந்திரும்பியதாக வெறுமனே சொல்வது பாசாங்குத்தனமானதாயும், பயனற்றதாயும் இருக்கிறது. தவறு செய்தவர் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, இருதயப்பூர்வமான மனந்திரும்புதலைக் காட்ட வேண்டும். இதை “உன்னதமான” ஒன்றிடம் அதாவது உன்னதமான வழிபாட்டிடம் திரும்புவதன்மூலம் காட்ட வேண்டும். அவருடைய செயல்கள், கடவுளுடைய உயர்வான நியதிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும்.—ஓசியா 7:16.
6:6. பழக்கமாகப் பாவம் செய்வது, கடவுளுக்கு உண்மையாய் நடக்காததையும் அவர்மீது அன்பு இல்லாததையும் காட்டுகிறது. ஆன்மீக காரியங்களில் அதிகளவு ஈடுபடுவது இந்தத் தவறைச் சரிக்கட்டிவிடாது.
8:7, 13; 10:13. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற நியமம் விக்கிரகங்களை வழிபட்ட இஸ்ரவேலருடைய விஷயத்தில் உண்மையாய் நிரூபித்தது.—கலாத்தியர் 6:7.
8:8; 9:17; 13:16. வடக்கு ராஜ்யத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அதன் தலைநகரான சமாரியாவை அசீரியர்கள் கைப்பற்றியபோது நிறைவேறின. (2 இராஜாக்கள் 17:3-6) கடவுள் தாம் சொன்னதைச் செய்வார் என்பதிலும் அவர் உரைத்ததை நிறைவேற்றுவார் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கலாம்.—எண்ணாகமம் 23:19.
8:14. பொ.ச.மு. 607-ல் யெகோவா பாபிலோனியரின் மூலமாக யூதாவின் ‘நகரங்களில் அக்கினியை வரப்பண்ணினார்’; அதனால் முன்னறிவிக்கப்பட்ட விதமாக எருசலேமையும் யூதா தேசத்தையும் பாழாக்கிப் போட்டார். (2 நாளாகமம் 36:19) கடவுளுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது.—யோசுவா 23:14.
9:10. இஸ்ரவேலர் தங்களை மெய்க் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்த போதிலும், ‘பாகால்பேயோர் அண்டைக்குப்போய் இலச்சையானதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.’ அவர்களுடைய கெட்ட மாதிரியை எச்சரிப்பாக எடுத்துக்கொண்டு, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததை விட்டுவிலகாதிருப்பதே ஞானமான செயல்.—1 கொரிந்தியர் 10:11
10:1, 2, 12. நாம் மாயமற்ற இருதயத்தோடு கடவுளை வணங்க வேண்டும். ‘நாம் நீதிக்கென்று விதை விதைக்கும்போது கடவுளுடைய தயவுக்கொத்ததாய் அறுப்போம்.’
10:5. பெத்தாவேன் (“தீங்கின் வீடு” என்று அர்த்தம்) என்பது பெத்தேல் (“தேவனுடைய வீடு” என்று அர்த்தம்) என்ற இடத்திற்குக் கொடுக்கப்பட்ட மதிப்புக்குறைவான பெயர் ஆகும். பெத்தாவேனிலிருந்த கன்றுக்குட்டி விக்கிரகம் எதிரிகளால் எடுத்துச் செல்லப்பட்டபோது, சமாரியாவின் குடிகள் அதினிமித்தம் துக்கம் கொண்டாடினார்கள். தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியாத உயிரற்ற விக்கிரகத்தின்மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு முட்டாள்தனம்!—சங்கீதம் 135:15-18; எரேமியா 10:3-5.
11:1-4. யெகோவா தம் மக்களிடம் எப்போதும் அன்பாகவே நடந்துகொள்கிறார். கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பது ஒருபோதும் பாரமானதல்ல.
11:8-11; 13:14. தம்முடைய மக்கள் உண்மை வழிபாட்டை மீண்டும் ஸ்தாபிப்பார்கள் என யெகோவா சொன்ன வார்த்தை ‘வெறுமையாய் அவரிடத்திற்குத் திரும்பவில்லை.’ (ஏசாயா 55:11) இஸ்ரவேலர் பாபிலோனில் சிறையிருந்த காலம் பொ.ச.மு. 537-ல் முடிவடைந்தது; அப்போது அவர்களில் மீதியானோர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். (எஸ்றா 2:1; 3:1-3) யெகோவா தமது தீர்க்கதரிசிகள் மூலமாய் உரைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.
12:6. அன்போடு கருணை காட்டுவதற்கும் நியாயத்தைக் கடைப்பிடிப்பதற்கும் யெகோவாவில் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் நாம் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்.
13:6. இஸ்ரவேலர் ‘திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் யெகோவாவை மறந்தார்கள்.’ தற்பெருமை சற்றும் தலைதூக்காதவாறு நம்மைக் காத்துக்கொள்வது அவசியம்.
“கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள்”
ஓசியா இவ்வாறு மன்றாடுகிறார்: “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.” யெகோவாவை நோக்கி இவ்விதமாய்க் கேட்கும்படி மக்களை அவர் அறிவுறுத்துகிறார்: “தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.”—ஓசியா 14:1, 2.
தான் செய்த தவறைவிட்டு மனந்திரும்பிய ஒருவர் யெகோவாவிடம் சேர்ந்து, அவருடைய வழிகளை ஏற்றுக்கொண்டு, துதியின் பலிகளைச் செலுத்த வேண்டும். ஏன்? ஏனெனில், “கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்.” (ஓசியா 14:9) “கடைசி நாட்களில்” இன்னும் அநேகர் ‘கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் [அதாவது, நடுக்கத்தோடு] வரும்போது’ நாம் எவ்வளவாய் பூரிப்போம்!—ஓசியா 3:5.
[பக்கம் 15-ன் படம்]
ஓசியாவின் மண வாழ்க்கை, இஸ்ரவேலரிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது
[பக்கம் 17-ன் படம்]
பொ.ச.மு. 740-ல் சமாரியா வீழ்ச்சி அடைந்ததோடு பத்துக்கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம் சுவடு தெரியாமல் போனது