அதிகாரம் 9
பிரசங்க வேலையின் பலன்கள்—‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’
1, 2. (அ) சீஷர்கள் ஏன் குழம்பிப்போகிறார்கள்? (ஆ) இயேசு எந்த அறுவடையைப் பற்றிப் பேசினார்?
“வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று இயேசு சொல்கிறார். அதைக் கேட்டு அவருடைய சீஷர்கள் குழம்பிப்போகிறார்கள். ஏனென்றால், இயேசு எந்த இடத்தைப் பார்த்து இதைச் சொன்னாரோ அந்த இடத்திலுள்ள வயல்களில் பார்லி அப்போதுதான் துளிர்விட்டு பச்சைப்பசேல் என்று இருந்தது. ஆனால், இயேசு சொன்னதுபோல் அவை அறுவடைக்குத் தயாராக இல்லை. அதனால்தான், ‘அறுவடையா? அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறதே!’ என்று நினைத்து குழம்பிப்போகிறார்கள்.—யோவா. 4:35.
2 ஆனால் இயேசு, நிஜ அறுவடையைப் பற்றி அவர்களிடம் பேசவில்லை. ஆன்மீக அறுவடையை, அதாவது மக்களைக் கூட்டிச்சேர்ப்பதை, பற்றியே அவர்களிடம் பேசினார். அந்த வேலை சம்பந்தமான இரண்டு முக்கியப் பாடங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அந்தப் பாடங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, அவர் சொன்ன பதிவை விலாவாரியாகப் பார்க்கலாம்.
அழைப்பும் வாக்குறுதியும்
3. (அ) எதைப் பார்த்து, ‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’ என்று இயேசு சொல்லியிருப்பார்? (ஆ) இயேசு தன் சீஷர்களுக்கு எதைத் தெளிவாகப் புரியவைத்தார்?
3 கி.பி. 30-ன் முடிவில், சீகார் என்ற சமாரிய நகரத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு இடத்தில்தான் இந்த விஷயத்தை இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். சீஷர்கள் சீகார் நகரத்துக்குள் போனபோது, இயேசு அங்கிருந்த ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது அங்கே வந்த பெண்ணிடம் கடவுளைப் பற்றிய சத்தியங்களைப் பேசினார். அவர் சொன்ன விஷயங்களின் முக்கியத்துவத்தை அவள் உடனடியாகப் புரிந்துகொண்டாள். சீஷர்கள் இயேசுவிடம் திரும்பி வந்தபோது, அந்தப் பெண், தான் கேட்ட அருமையான விஷயங்களைப் பற்றி தன் ஊர்க்காரர்களிடம் சொல்வதற்காக அவசர அவசரமாக சீகாருக்குப் போனாள். அவள் சொன்னதைக் கேட்டவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இயேசுவைப் பார்க்க அந்தக் கிணற்றுக்கு வந்துகொண்டிருந்தார்கள். ஒருவேளை, அந்த வயல்களையும் தாண்டி தூரத்தில் வந்துகொண்டிருந்த அந்த சமாரியர்களைப் பார்த்துதான் அவர் இப்படிச் சொல்லியிருப்பார்: “வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.” அதன் பிறகு, தான் சொல்வது நிஜ அறுவடை பற்றியல்ல ஆன்மீக அறுவடை பற்றித்தான் என்பதைத் தன் சீஷர்களுக்குப் புரியவைக்க இயேசு இப்படிச் சொன்னார்: “அறுவடை செய்கிறவர் . . . முடிவில்லாத வாழ்வுக்காகப் பயிர்களைச் சேகரித்து வருகிறார்.”—யோவா. 4:5-30, 36.
4. (அ) அறுவடை பற்றிய என்ன இரண்டு முக்கியமான பாடங்களை இயேசு கற்றுக்கொடுத்தார்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்?
4 ஆன்மீக அறுவடை பற்றிய என்ன இரண்டு முக்கியமான விஷயங்களை இயேசு கற்றுக்கொடுத்தார்? முதல் விஷயம், இது அவசரமான வேலை. தன்னைப் பின்பற்றுகிறவர்கள் அந்த வேலையில் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காகவே, ‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’ என்று அவர் சொன்னார். அதோடு, ‘அறுவடை செய்கிறவர் ஏற்கெனவே கூலியை வாங்கிக்கொண்டார்’ என்றும் சொன்னார். இதன் மூலம், அந்த வேலை எந்தளவு அவசரமானது என்பதைச் சீஷர்களின் மனதில் பதிய வைத்தார். ஆம், அறுவடை வேலை ஏற்கெனவே ஆரம்பித்திருந்தது, அதனால், அவர்கள் காலங்கடத்தக் கூடாது. இரண்டாவது விஷயம், வேலையாட்கள் சந்தோஷப்படுகிறார்கள். விதைக்கிறவர்களும் அறுவடை செய்கிறவர்களும் ‘ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுவார்கள்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 4:35ஆ, 36) ‘சமாரியர்கள் நிறைய பேர் தன்மேல் விசுவாசம் வைத்ததை’ பார்த்து இயேசு நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். அது போல, தன்னுடைய சீஷர்களும் இந்த அறுவடை வேலையில் முழு மூச்சோடு ஈடுபடும்போது அதிக சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். (யோவா. 4:39-42) முதல் நூற்றாண்டில் சீஷர்களிடம் இயேசு பேசிய விஷயம் இன்று நமக்கும்கூட ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய அறுவடை வேலை இன்று நடந்துவருகிறது. நம் காலத்தில் செய்யப்படுகிற அறுவடை வேலை எப்போது ஆரம்பமானது? இதை யார் செய்கிறார்கள்? அதனால், கிடைத்திருக்கிற பலன்கள் என்ன?
சரித்திரத்திலேயே மிகப்பெரிய அறுவடை வேலையை நம் ராஜா முன்நின்று வழிநடத்துகிறார்
5. உலகளவில் நடந்துவருகிற அறுவடை வேலையை முன்நின்று வழிநடத்துவது யார்? இது அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலை என்பதை யோவானின் தரிசனம் எப்படிக் காட்டுகிறது?
5 உலகளவில் நடந்துவருகிற ஆன்மீக அறுவடையை, அதாவது மக்களைக் கூட்டிச்சேர்க்கும் வேலையை, முன்நின்று வழிநடத்த இயேசுவை யெகோவா நியமித்திருக்கிறார். அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்த தரிசனத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். (வெளிப்படுத்துதல் 14:14-16-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் தலையில் கிரீடமும் அவருடைய கையில் அரிவாளும் இருப்பதை அந்தத் தரிசனத்தில் யோவான் பார்த்தார். இயேசுவின் ‘தலையில் தங்கக் கிரீடம்’ இருப்பது, அவர் ஒரு ராஜாவாக ஆட்சி செய்வதைக் காட்டுகிறது. ‘அவருடைய கையில் கூர்மையான அரிவாள்’ இருப்பது, அவர் அறுவடை செய்பவராக இருப்பதைக் காட்டுகிறது. அந்தத் தரிசனத்தில், “பூமியின் பயிர் நன்றாக முற்றிவிட்டது” என்று ஒரு தேவதூதர் மூலமாக யெகோவா சொல்கிறார். இதன் மூலம் அறுவடை வேலையை அவசரமாகச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆம், “அறுவடை செய்வதற்கான காலம் வந்துவிட்டது.” அதனால், காலங்கடத்துவதற்கு இது நேரம் கிடையாது. “அரிவாளை எடுத்து அறுவடை செய்” என்று இயேசுவுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தவுடன் இயேசு தன் அரிவாளை பூமியின் மேல் நீட்டி அறுவடை செய்கிறார். அதாவது, பூமியிலுள்ள மக்களைக் கூட்டிச்சேர்க்கிறார். ஆர்வமூட்டும் இந்தத் தரிசனமும்கூட, ‘வயல்கள் . . . விளைந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதை’ நமக்கு நினைப்பூட்டுகிறது. உலகளவில் நடக்கிற இந்த அறுவடை எப்போது ஆரம்பித்தது என்பதை இந்தத் தரிசனத்திலிருந்து தெரிந்துகொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்.
6. (அ) அறுவடைக் காலம் எப்போது ஆரம்பித்தது? (ஆ) அறுவடை வேலை பூமியில் எப்போது ஆரம்பித்தது? விளக்குங்கள்.
6 அறுவடை செய்பவரான இயேசுவின் தலையில் கிரீடம் இருப்பதாக வெளிப்படுத்துதல் 14:14 சொல்கிறது. இது 1914-லிலேயே இயேசு ராஜாவாக நியமிக்கப்பட்டதைக் காட்டுகிறது. (தானி. 7:13, 14) அதற்குக் கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அறுவடை வேலையை ஆரம்பிக்கும்படி அவருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டதாக வெளிப்படுத்துதல் 14:15 சொல்கிறது. இது கோதுமை அறுவடை பற்றி இயேசு சொன்ன உவமையை நமக்கு நினைப்பூட்டுகிறது. அதில் “அறுவடை, இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்று இயேசு குறிப்பிட்டார். அப்படியானால், அறுவடைக் காலமும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டமும் ஒரே சமயத்தில், அதாவது 1914-ல், ஆரம்பித்தது என்று தெரிகிறது. (மத். 13:30, 39) ஆனால், ராஜாவாக இயேசு ஆட்சி செய்யத் தொடங்கி சில வருஷங்களுக்குப் பிறகுதான் அறுவடை வேலை ஆரம்பமானது என்பதை இன்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில், 1914-லிருந்து 1919-ன் ஆரம்பம்வரை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இயேசு சுத்தப்படுத்தினார். (மல். 3:1-3; 1 பே. 4:17) அடுத்ததாக, 1919-ல் பூமியில் அறுவடை வேலை ஆரம்பித்தது. சீக்கிரத்திலேயே, இயேசு புதிதாக நியமிக்கப்பட்ட உண்மையுள்ள அடிமையைப் பயன்படுத்தி பிரசங்க வேலை எந்தளவு அவசரமாகச் செய்யப்பட வேண்டும் என்பதை நம் சகோதரர்களுக்குப் புரியவைத்தார். என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்.
7. (அ) பிரசங்க வேலை, அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலை என்பதை நம் சகோதரர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்? (ஆ) என்ன செய்யும்படி நம் சகோதரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்?
7 ஜூலை 1920, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பைபிள் வசனங்களை ஆராய்ந்து பார்த்ததில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் பெரிய வாய்ப்பு சர்ச்சுக்கு [சபைக்கு] இருப்பது தெளிவாகத் தெரிகிறது.” உதாரணத்துக்கு, ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளிலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி உலகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதைச் சகோதரர்கள் தெரிந்துகொண்டார்கள். (ஏசா. 49:6; 52:7; 61:1-3) ஆனால், இந்த மாபெரும் வேலையை எப்படிச் செய்து முடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், யெகோவா தங்களுக்கு வழிகாட்டுவார் என்று அவர்கள் நம்பினார்கள். (ஏசாயா 59:1-ஐ வாசியுங்கள்.) பிரசங்க வேலையை அவசரமாகச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதால், இந்த வேலையில் தீவிரமாக ஈடுபடும்படி நம் சகோதரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்?
8. 1921-ல் பிரசங்க வேலை பற்றிய என்ன இரண்டு பாடங்களை நம் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள்?
8 டிசம்பர் 1921, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “இந்த வருஷத்தில்தான் மிகச் சிறப்பாக ஊழியம் செய்யப்பட்டிருக்கிறது. எந்த வருஷத்தையும்விட 1921-ல்தான் அதிகமான மக்கள் சத்தியத்தைக் கேட்டிருக்கிறார்கள்.” அதோடு, “இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. . . . அதைச் சந்தோஷ இதயத்தோடு செய்வோமாக” என்று அதே பத்திரிகை சொன்னது. பிரசங்க வேலை சம்பந்தமாக இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களின் மனதில் பதிய வைத்த இரண்டு முக்கியமான விஷயங்களை நம் சகோதரர்களும் புரிந்துகொண்டார்கள். (1) இந்த வேலை அவசரமான வேலை; (2) வேலையாட்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
9. (அ) 1954 காவற்கோபுரம் அறுவடை வேலையைப் பற்றி என்ன சொன்னது, ஏன்? (ஆ) கடந்த 50 வருஷங்களில் உலகம் முழுவதும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை எந்தளவு அதிகரித்திருக்கிறது? (“உலகளாவிய அதிகரிப்பு” என்ற பட்டியலைப் பாருங்கள்.)
9 1930-களின்போது, வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தார் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்பதைச் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். அப்போது, பிரசங்க வேலை இன்னும் சூடுபிடித்தது. (ஏசா. 55:5; யோவா. 10:16; வெளி. 7:9) அதன் பலன்? பிரசங்க வேலையைச் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1934-ல் 41,000 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். 1953-ல் அவர்களுடைய எண்ணிக்கை 5,00,000-ஆக உயர்ந்தது. அதைப் பற்றி டிசம்பர் 1, 1954, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “உலகம் முழுவதும் நடக்கிற இந்தப் பெரிய அறுவடை வேலையைச் செய்ய யெகோவாவின் சக்தியும் அவருடைய வார்த்தையின் வல்லமையும்தான் உதவியாக இருந்திருக்கின்றன.”a—சக. 4:6.
நாடு |
1962 |
1987 |
2013 |
---|---|---|---|
ஆஸ்திரேலியா |
15,927 |
46,170 |
66,023 |
பிரேசில் |
26,390 |
2,16,216 |
7,56,455 |
பிரான்சு |
18,452 |
96,954 |
1,24,029 |
இத்தாலி |
6,929 |
1,49,870 |
2,47,251 |
ஜப்பான் |
2,491 |
1,20,722 |
2,17,154 |
மெக்சிகோ |
27,054 |
2,22,168 |
7,72,628 |
நைஜீரியா |
33,956 |
1,33,899 |
3,44,342 |
பிலிப்பைன்ஸ் |
36,829 |
1,01,735 |
1,81,236 |
அமெரிக்கா |
2,89,135 |
7,80,676 |
12,03,642 |
ஜாம்பியா |
30,129 |
67,144 |
1,62,370 |
1950 |
2,34,952 |
1960 |
6,46,108 |
1970 |
11,46,378 |
1980 |
13,71,584 |
1990 |
36,24,091 |
2000 |
47,66,631 |
2010 |
80,58,359 |
அறுவடை வேலையின் பலன்கள் —சொல்லோவியங்கள் மூலம் முன்னறிவிக்கப்பட்டன
10, 11. கடுகு விதை பற்றிய உவமையிலுள்ள முக்கியமான விஷயங்கள் என்ன?
10 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உவமைகளில், அறுவடை வேலையின் பலன்களைச் சொல்லோவியங்கள் மூலம் இயேசு தெளிவாக முன்னறிவித்தார். கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகளை இப்போது பார்க்கலாம். முக்கியமாக, இந்த முடிவு காலத்தில் அவை எப்படி நிறைவேறின என்பதைப் பார்க்கலாம்.
11 கடுகு விதை பற்றிய உவமை. ஒருவன் ஒரு கடுகு விதையை விதைக்கிறான். அது பெரிய மரமாக வளர்ந்ததும் பறவைகள் அதன் கிளைகளில் தங்குகின்றன. (மத்தேயு 13:31, 32-ஐ வாசியுங்கள்.) அதன் வளர்ச்சியைப் பற்றிய என்ன முக்கியமான விஷயங்கள் உவமையில் சொல்லப்பட்டுள்ளன? (1) மலைக்கவைக்கும் அளவுக்கு அது வளருகிறது. ‘எல்லா விதைகளையும்விட அது மிகச் சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து பெரிய கிளைகளை விடுகிறது.’ (மாற். 4:31, 32) (2) நிச்சயம் வளரும் என்ற உறுதி அளிக்கப்படுகிறது. ‘விதைக்கப்பட்ட பின்பு, அது முளைக்கிறது’ என்று இயேசு சொன்னார், “அது முளைக்கலாம்” என்று சொல்லவில்லை. அப்படியானால், அதன் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (3) அந்த மரம் பறவைகளைக் கவருகிறது, தங்குவதற்கு இடமளிக்கிறது. “வானத்துப் பறவைகள்” வந்து ‘அதன் நிழலில் தங்குகின்றன.’ இந்த மூன்று விஷயங்களும் இன்று நடக்கிற ஆன்மீக அறுவடையோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?
12. கடுகு விதை பற்றிய உவமை இன்று நடக்கும் அறுவடை வேலைக்கு எப்படிப் பொருந்துகிறது? (“பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு” என்ற பட்டியலையும் பாருங்கள்.)
12 (1) வளர்ச்சியின் அளவு: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி எந்தளவுக்குப் பிரசங்கிக்கப்படும் என்பதையும் கிறிஸ்தவச் சபை எந்தளவுக்கு வளரும் என்பதையும் இந்த உவமை தெளிவாகக் காட்டுகிறது. 1919-லிருந்து, அறுவடை வேலையை மும்முரமாகச் செய்பவர்கள், சுத்திகரிக்கப்பட்ட கிறிஸ்தவச் சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், கொஞ்ச வேலையாட்களே இருந்தார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. சொல்லப்போனால், 1900-களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி நம்மை மலைக்கவைக்கிறது. (ஏசா. 60:22) (2) உறுதி அளிக்கப்படுகிறது: கிறிஸ்தவச் சபையின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சின்னஞ்சிறிய விதைபோல் இருந்த கிறிஸ்தவச் சபைமேல், கடவுளுடைய எதிரிகள் கற்களைப் போன்ற பல பிரச்சினைகளைக் குவித்தபோதிலும், அவற்றையெல்லாம் தள்ளிவிட்டு, அது முளைத்து வளர்ந்துகொண்டே இருந்தது. (ஏசா. 54:17) (3) தங்குவதற்கு இடமளிக்கிறது: “வானத்துப் பறவைகள்” அந்த மரத்தில் தங்குவது எதை அர்த்தப்படுத்துகிறது? சுமார் 240 தேசங்களைச் சேர்ந்த நல்மனமுள்ள லட்சக்கணக்கானோர், நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவச் சபையின் பாகமாவதை அர்த்தப்படுத்துகிறது. (எசே. 17:23) அங்கே அவர்களுக்கு ஆன்மீக உணவும், புத்துணர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கின்றன.—ஏசா. 32:1, 2; 54:13.
13. புளித்த மாவு பற்றிய உவமையிலுள்ள முக்கியமான விஷயங்கள் என்ன?
13 புளித்த மாவு பற்றிய உவமை. ஒரு பெண் அதிகமான மாவில் கொஞ்சம் புளித்த மாவைக் கலந்து வைக்கும்போது, அது மொத்த மாவையும் புளித்துப்போக வைக்கிறது. (மத்தேயு 13:33-ஐ வாசியுங்கள்.) என்ன முக்கியமான விஷயங்கள் இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கின்றன? இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம். (1) மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புளித்த மாவு, ‘மாவு முழுவதையும் புளித்துப்போக’ வைக்கிறது. (2) முழுமையாகப் பரவுகிறது. அந்தப் புளித்த மாவு, ‘மூன்று பெரிய படி மாவையும்,’ அதாவது மொத்த மாவையும் புளித்துப்போக வைக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் இன்று நடக்கிற ஆன்மீக அறுவடையோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?
14. புளித்த மாவு பற்றிய உவமை, இன்று நடக்கிற அறுவடை வேலைக்கு எப்படிப் பொருந்துகிறது?
14 (1) மாற்றம்: புளித்த மாவு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியையும், அதிகமான மாவு மனிதர்களையும் குறிக்கிறது. புளிப்பில்லாத மாவோடு புளித்த மாவைக் கலக்கும்போது அதில் மாற்றம் ஏற்படுகிறது. அது போல, மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது அவர்களுடைய இதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. (ரோ. 12:2) (2) பரவுதல்: புளிப்பில்லாத மாவில் புளித்த மாவு பரவுவது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி பரவுவதை அர்த்தப்படுத்துகிறது. அந்தப் புளித்த மாவு, மொத்த மாவிலும் பரவுவது போல, நல்ல செய்தியும் “பூமியின் எல்லைகள் வரையிலும்” பரவியிருக்கிறது. (அப். 1:8) நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிற நாடுகளிலும் இந்தச் செய்தி பரவும் என்பதை இது காட்டுகிறது. பெரும்பாலும் அந்த இடங்களில் நம் பிரசங்க வேலை மற்றவர்களுடைய கண்ணில் படாமல் நடைபெற்று வருகிறது.
15. ஏசாயா 60:5, 22-லுள்ள வார்த்தைகள் எப்படி நிறைவேறியிருக்கின்றன? (பக்கம் 93-லுள்ள “யெகோவாவின் உதவியோடு செய்ய முடிந்தது” என்ற பெட்டியையும், பக்கங்கள் 96-97-லுள்ள “‘சாதாரண ஜனங்கள்’ எப்படி ‘சக்திபடைத்த தேசமாக’ ஆகியிருக்கிறார்கள்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
15 நம் நாளில் ஆன்மீக அறுவடை எந்தளவுக்கு நடைபெறும் என்பதைப் பற்றியும் அதனால் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றியும் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னறிவித்தார். இயேசு இந்த உவமைகளைச் சொன்னதற்கு சுமார் 800 வருஷங்களுக்கும் முன்பே அதை முன்னறிவித்தார்.b மக்கள் “தொலைதூரத்திலிருந்து” கூட்டம் கூட்டமாக தன்னுடைய அமைப்புக்குள் வந்துகொண்டிருப்பதாக யெகோவா சொல்கிறார். அவர், ஒரு ‘பெண்ணிடம்,’ அதாவது இன்று பூமியில் மீதியாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம், இப்படிச் சொல்கிறார்: “கடலின் செல்வங்கள் உன்னிடம் கொண்டுவரப்படும். தேசங்களின் சொத்துகள் உன்னிடம் வந்து சேரும். நீ அதைப் பார்த்து பூரித்துப்போவாய். உன் இதயம் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.” (ஏசா. 60:1, 4, 5, 9) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்துவருகிற ஊழியர்கள் தங்களுடைய நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே பூரித்துப்போகிறார்கள். கொஞ்சம் பேர் மட்டுமே இருந்த இடத்தில் இப்போது ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
யெகோவாவின் ஊழியர்கள் சந்தோஷப்படுவதற்கான காரணங்கள்
16, 17. ‘விதைக்கிறவரும் அறுவடை செய்கிறவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுவதற்கு’ ஒரு காரணம் என்ன? (“அமேசான் காடுகளில் இரண்டு உள்ளங்களைத் தொட்ட இரண்டு துண்டுப்பிரதிகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
16 “அறுவடை செய்கிறவர் . . . முடிவில்லாத வாழ்வுக்காகப் பயிர்களைச் சேகரித்து வருகிறார். இதனால், விதைக்கிறவரும் அறுவடை செய்கிறவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். (யோவா. 4:36) உலகளவில் நடந்துவரும் அறுவடை வேலையில் நாம் எப்படி ‘ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறோம்’? பல வழிகளில் சந்தோஷப்படுகிறோம். அவற்றில் மூன்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.
17 முதலாவதாக, இந்த வேலையில் யெகோவா நமக்குத் துணையாக இருப்பதை நினைத்துச் சந்தோஷப்படுகிறோம். பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்திய விதைகளை விதைக்கிறோம். (மத். 13:18, 19) ஒருவர் கிறிஸ்துவின் சீஷராவதற்கு நாம் உதவும்போது, நம் வேலையின் பலனை அறுவடை செய்கிறோம். சத்திய விதை ‘முளைத்துப் பெரிதாக வளருவதற்கு’ யெகோவா எப்படி உதவுகிறார் என்பதை யோசித்துப் பார்க்கும்போது நம் எல்லாருடைய மனதிலும் சந்தோஷம் ஊற்றெடுக்கிறது. (மாற். 4:27, 28) நாம் தூவும் சில விதைகள் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு முளைத்து மற்றவர்களால் அறுவடை செய்யப்படுகிறது. சகோதரி ஜோனுக்குக் கிடைத்ததைப் போன்ற அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த இந்தச் சகோதரி, 60 வருஷங்களுக்கு முன் ஞானஸ்நானம் எடுத்தவர். அவர் இப்படிச் சொல்கிறார்: “சிலர் என்னிடம், ‘பல வருஷங்களுக்கு முன் நீங்கள்தான் என் இதயத்தில் சத்திய விதையை விதைத்தீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பிற்பாடு அவர்களுக்கு மற்றவர்கள் பைபிள் படிப்பு நடத்தி, யெகோவாவின் ஊழியராக ஆவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். நான் விதைத்த விதை வளர்ந்து அறுவடை செய்யப்பட்டிருப்பதை நினைக்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது.”—1 கொரிந்தியர் 3:6, 7-ஐ வாசியுங்கள்.
18. சந்தோஷப்படுவதற்கான என்ன காரணம் 1 கொரிந்தியர் 3:8-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது?
18 இரண்டாவதாக, “ஒவ்வொருவனும் தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவான்” என்று பவுல் சொன்னதை மனதில் வைக்கும்போது சந்தோஷமுள்ள வேலையாட்களாக இருப்போம். (1 கொ. 3:8) சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நிறைய பேருக்கு நாம் உதவியிருப்பதைப் பொறுத்து அல்ல, அதற்காக நாம் எந்தளவுக்கு உழைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்குப் பலன் கிடைக்கிறது. நல்ல செய்தியை அவ்வளவாக வரவேற்காத இடங்களில் ஊழியம் செய்கிறவர்களுக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்! விதைகளைத் தூவும் வேலையில் முழு இதயத்தோடு ஈடுபடுகிற ஒவ்வொருவரும் கடவுளுக்கு முன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறவர்களாக’ இருக்கிறார்கள். அதனால், அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.—யோவா. 15:8; மத். 13:23.
19. (அ) மத்தேயு 24:14-ல் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நம் சந்தோஷத்துக்குக் காரணமாக இருக்கிறது? (ஆ) நம்மால், ஒருவரைக்கூட சீஷராக்க முடியாவிட்டாலும் நம் வெற்றி எதைச் சார்ந்திருக்கிறது?
19 மூன்றாவதாக, நாம் செய்கிற வேலை தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதால், நாம் சந்தோஷப்படுகிறோம். “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று அப்போஸ்தலர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு கொடுத்த பதிலைக் கவனியுங்கள். உலகளாவிய பிரசங்க வேலை, அந்த அடையாளத்தின் ஒரு அம்சமாக இருக்கும் என்று அவர்களிடம் இயேசு சொன்னார். அவர் சீஷராக்கும் வேலையைப் பற்றியா சொன்னார்? இல்லை. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்றுதான் சொன்னார். (மத். 24:3, 14) அப்படியானால், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுதான், அதாவது விதைகளை விதைப்பதுதான், இயேசு கொடுத்த அடையாளத்தின் ஒரு அம்சம். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது, ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். நம்முடைய வெற்றி ஒருவரை சீஷராக்குவதைச் சார்ந்தது அல்ல, மற்றவர்களுக்கு “சாட்சி” கொடுப்பதைச் சார்ந்தது.c மக்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் நாம் பங்குகொள்கிறோம். அதோடு, ‘கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கும்’ பாக்கியத்தைப் பெறுகிறோம். (1 கொ. 3:9) நாம் சந்தோஷப்படுவதற்கு இது சிறந்த காரணம், இல்லையா?
“சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும்”
20, 21. (அ) மல்கியா 1:11-லுள்ள வார்த்தைகள் எப்படி நிறைவேறி வருகின்றன? (ஆ) அறுவடை வேலை சம்பந்தமாக என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள், ஏன்?
20 அறுவடை வேலை அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலை என்பதைத் தன் அப்போஸ்தலர்களுக்கு இயேசு புரியவைத்தார். 1919-லிருந்து, தன்னுடைய நவீன கால சீஷர்களும் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள அவர் உதவி செய்து வருகிறார். அதனால், கடவுளுடைய மக்கள் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த அறுவடை வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. மல்கியா தீர்க்கதரிசி முன்னறிவித்தபடி இன்று பிரசங்க வேலை, “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும்” செய்யப்பட்டு வருகிறது. (மல். 1:11) விதைப்பதிலும் அறுவடை செய்வதிலும் ஈடுபடுகிற நாம், சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரையாக, பூமியின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி, சேர்ந்து வேலை செய்கிறோம், ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறோம். அதோடு, சூரியன் உதிக்கும் சமயத்திலிருந்து அது மறையும் சமயம்வரை அவசர உணர்வோடு இந்த வேலையைச் செய்கிறோம்.
21 கடந்த சுமார் 100 வருஷங்களில் கடவுளுடைய ஊழியர்களின் ஒரு சிறிய தொகுதி “சக்திபடைத்த தேசமாக” வளர்ந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது, நம் இதயம் ‘சந்தோஷத்தில் பொங்கி வழிகிறது.’ (ஏசா. 60:5, 22) இந்தச் சந்தோஷமும், ‘அறுவடையின் எஜமானாகிய’ யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பும் அறுவடை வேலையை, அதாவது சரித்திரத்திலேயே மிகப்பெரிய அறுவடை வேலையை, முழுமையாகச் செய்து முடிக்க நம் ஒவ்வொருவரையும் தூண்ட வேண்டும்.—லூக். 10:2.
a அந்தக் காலப்பகுதியிலும் அதைத் தொடந்து வந்த வருஷங்களிலும் நடந்த சம்பவங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 425-520-ஐ வாசியுங்கள். 1919-லிருந்து 1992 வரை அறுவடை வேலை மூலம் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அதில் தெரிந்துகொள்ளலாம்.
b இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II-ல் பக்கங்கள் 303-320-ஐப் பாருங்கள்.
c இந்த முக்கியமான சத்தியத்தை பைபிள் மாணாக்கர்கள் ஏற்கெனவே புரிந்துவைத்திருந்தார்கள். நவம்பர் 15, 1895, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “களஞ்சியத்தில் கொஞ்சம் கோதுமையைச் சேர்க்க முடிந்தால்கூட, ஏராளமான ஆட்களுக்கு சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுக்க முடியும். . . . எல்லாராலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியும்.”