நீதியான ஓர் உலகம்—வெறும் கனவல்ல!
“பூமியில் வாழும் மனிதனுக்கு அதிக அக்கறைக்குரிய விஷயம் நீதியே” என்று சொன்னார் அமெரிக்க அரசியல் மேதகை டேனியேல் வெப்ஸ்டர். மேலும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “[யெகோவா] நியாயத்தை விரும்புகிறவர்.” (சங்கீதம் 37:28) முதல் மனித தம்பதியினர் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டபடியால், நியாய உணர்வு உட்பட, தெய்வீக பண்புகளைப் பெற்றிருந்தனர்.—ஆதியாகமம் 1:26, 27.
‘சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிற நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகளைப்’ பற்றியும்கூட பைபிள் பேசுகிறது. இவ்விதமாக, “அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:14, 15) ஆம், மனச்சாட்சியை—எது சரி எது தவறு என்பது பற்றிய ஓர் உள்ளுணர்வை—மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள். தெளிவாகவே, நியாயத்திற்கான தேவை மனிதனின் பிறவியிலேயே இருக்கிறது.
நியாயத்துக்கான தேவையோடு மிகவும் நெருங்கிய விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்காக மனிதனின் நாட்டமாகும். ஏனென்றால் சங்கீதம் 106:3 இவ்வாறு சொல்கிறது: “நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW].” ஆனால் ஏன் மனிதனால் நீதியான ஓர் உலகை படைக்க முடியவில்லை?
மனிதன் ஏன் தோல்வியடைந்துவிட்டான்?
நீதியான ஓர் உலகை சாதிப்பதில் மனிதன் தோல்வி கண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளிடமிருந்து நாம் சுதந்தரித்திருக்கும் கறையே. பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) அந்தக் கறையே பாவம். ஆதாமும் ஏவாளும் குறையில்லாதவர்களாய் படைக்கப்பட்டபோதிலும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்ய தீர்மானித்து, இவ்விதமாக தங்களைப் பாவிகளாக்கிக் கொண்டார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:1-6) இதன் காரணமாக, அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பாவமுள்ள, தவறான மனச்சாய்வுகளைப் பரம்பரைச் சொத்தாக விட்டுச்சென்றுவிட்டார்கள்.
பேராசை, தப்பெண்ணம் போன்ற ஆளுமைப் பண்புகள் பாவமுள்ள மனச்சாய்வுகளின் விளைவுகள் அல்லவா? உலகில் காணப்படும் அநீதிகளுக்கு காரணமாயிருப்பதும் இந்தப் பண்புகள் அல்லவா? ஏன், வேண்டுமென்றே சுற்றுச்சூழலைக் கெடுப்பதற்கும் பொருளாதார அநீதிக்கும்கூட இந்தப் பேராசைதானே அடிப்படைக் காரணம்! வகுப்பு கலவரங்களுக்கும் இன சம்பந்தமான அநீதிகளுக்கும் பின்னால் இருப்பது நிச்சயமாகவே தப்பெண்ணம்தான். இப்படிப்பட்ட பண்புகளே மக்களை திருடவும், ஏமாற்றவும், பிறருக்கு தீங்கிழைக்கும் விதமாக நடந்துகொள்ளவும்கூட தூண்டுகின்றன.
நியாயமாய் நடந்துகொள்ளவும் நன்மை செய்யவும் எடுக்கப்படும் நல்லெண்ணமுள்ள முயற்சிகளும்கூட நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளின் காரணமாக அநேகமாய் தவிடுபொடியாகி விடுகின்றன. அப்போஸ்தலன் பவுல்தானே இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” இந்தப் போராட்டத்தை விளக்குபவராய் அவர் தொடர்ந்து சொல்வதாவது: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.” (ரோமர் 7:19-23) இன்று நமக்கும்கூட அதே விதமான போராட்டம் இருக்கலாம். அதனால்தான் மிகவும் அடிக்கடி அநீதிகள் இழைக்கப்படுகின்றன.
மனிதன் ஆட்சிசெய்யும் விதமும்கூட உலகில் காணப்படும் அநீதிக்குப் பங்களித்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும் சட்டங்களும் இருக்கின்றன, அவற்றை அமல்படுத்துகிறவர்களும் இருக்கின்றனர். மேலும் நீதிபதிகளும் இருக்கின்றனர், நீதிமன்றங்களும் இருக்கின்றன. நிச்சயமாகவே கொள்கையுடன் வாழும் சில ஆட்கள் மனித உரிமைகளை நிலைநாட்டவும் அனைவருக்கும் நீதிகிட்டவும் முயற்சி செய்திருக்கின்றனர். இருந்தபோதிலும், அவர்களுடைய பெரும்பாலான முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன. ஏன்? அவர்களுடைய தோல்வியில் உட்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் சுருக்கி, எரேமியா 10:23 இவ்விதமாக குறிப்பிடுகிறது: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” கடவுளிடமிருந்து தூர விலகிச் சென்றுவிட்டதால், உண்மையிலேயே மனிதன் நீதியும் நேர்மையுமுள்ள ஓர் உலகை நிலைநாட்ட கையாலாகாதவனாய் இருக்கிறான்.—நீதிமொழிகள் 14:12; பிரசங்கி 8:9.
நீதியான ஓர் உலகை படைப்பதில் மனித முயற்சிகளுக்கு பெரிய தடையாக இருப்பவன் பிசாசாகிய சாத்தானே. கலகக்கார தூதனாகிய சாத்தானே ஆதியிலிருந்த ‘மனுஷகொலைபாதகனும்’ ‘பொய்யனுமாய்’ இருக்கிறான் என்றும் “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும்” பைபிள் தெளிவாக சொல்லுகிறது. (யோவான் 8:44; 1 யோவான் 5:19) அப்போஸ்தலன் பவுல் அவனை ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்’ என்று அடையாளம் காட்டுகிறார். (2 கொரிந்தியர் 4:3, 4, NW) சாத்தான் நீதியை வெறுக்கிறவனாக இருப்பதால் அக்கிரமத்தை முன்னேற்றுவிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இந்த உலகை அவன் ஆட்டிப்படைக்கும் வரையில் எல்லாவித அநீதிகளும் அதன் விளைவாக வரும் துயரங்களும் தொடர்ந்து மனிதவர்க்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கும்.
மனித சமுதாயத்தில் அநீதியை தவிர்க்கவே முடியாதென்பதை இவை அனைத்தும் அர்த்தப்படுத்துகிறதா? நீதியான ஓர் உலகம் சாத்தியமில்லாத வெறும் ஒரு கனவுதானா?
நீதியான ஓர் உலகம் நனவாவது சாத்தியமே—எவ்வாறு?
நீதியான ஓர் உலகுக்கான நம்பிக்கையை சாத்தியமாக்குவதற்கு, அநீதிகளுக்குக் காரணமாயிருப்பவற்றை ஒழித்துவிடக்கூடிய ஊற்றுமூலரை மனிதவர்க்கம் எதிர்நோக்கியிருக்க வேண்டும். ஆனால் யாரால் பாவத்தை அடியோடு ஒழித்து, சாத்தானையும் அவனுடைய ஆட்சியையும் நீக்க முடியும்? எந்த மனிதனோ எந்த மனித ஏஜென்சியோ இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வேலையை சாதித்திட முடியாது என்பது தெளிவாய் உள்ளது. யெகோவா தேவனால் மாத்திரமே முடியும்! அவரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) யெகோவா ‘நியாயத்தை விரும்புகிறவராக’ இருப்பதால், மனிதவர்க்கத்தினர் நீதியான ஓர் உலகில் வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டும் என்று விரும்புகிறார்.—சங்கீதம் 37:28.
நீதியான ஓர் உலகை படைப்பதற்கான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றி பேசுகையில் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இந்தப் ‘புதிய வானங்கள்’ புதிய சடப்பொருளான வானங்கள் அல்ல. நம்முடைய சடப்பொருளான வானங்களைக் கடவுள் பரிபூரணமாக படைத்திருக்கிறார், மேலும் அவை அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றன. (சங்கீதம் 8:3; 19:1, 2) ‘புதிய வானங்கள்’ என்பது பூமியின்மீது ஆளப்படும் ஒரு புதிய ஆட்சி. இப்பொழுதிருக்கும் ‘வானங்கள்’ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள். வெகு சீக்கிரத்தில், கடவுள் கொண்டுவரும் அர்மகெதோன் யுத்தத்தில் இவை ‘புதிய வானங்களால்’—அவருடைய பரலோக ராஜ்யம் அல்லது அரசாங்கத்தால்—மாற்றீடு செய்யப்படும். (வெளிப்படுத்துதல் 16:14-16) இயேசு கிறிஸ்துவே அந்த ராஜ்யத்தின் ராஜா. மனிதரின் ஆட்சிக்கு நிரந்தரமான முடிவுகட்டி இந்த அரசாங்கம் என்றென்றும் ஆளுகை செய்யும்.—தானியேல் 2:44.
அப்படியென்றால் “புதிய பூமி” என்பது என்ன? அது ஒரு புதிய கோளமல்ல, ஏனென்றால் பூமியை அவர் மனித குடியிருப்புக்கு முற்றிலும் ஏற்றதாகவே படைத்திருக்கிறார், மேலும் அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம். (சங்கீதம் 104:5) “புதிய பூமி” புதிய சமுதாயத்தின் மக்களைக் குறிக்கிறது. (ஆதியாகமம் 11:1; சங்கீதம் 96:1) அழிக்கப்படவிருக்கும் “பூமி,” இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் பாகமாக தங்களை ஆக்கிக்கொள்ளும் மக்களால் ஆனது. (2 பேதுரு 3:7) அதற்கு பதிலாக வரப்போகும் “புதிய பூமி,” நீதியையும் நியாயத்தையும் நேசித்து அக்கிரமத்தை வெறுக்கிற கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களால் ஆனது. (சங்கீதம் 37:10, 11) இவ்விதமாக சாத்தானின் உலகம் இல்லாமல் போகும்.
ஆனால் சாத்தானுக்கு என்ன காத்திருக்கிறது? அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு முன்னுரைத்தார்: “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் [கிறிஸ்து இயேசு] பிடித்து, அதை ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைப்போட்டான்.” (வெளிப்படுத்துதல் 20:1-3) இருண்ட பாதாள சிறையில் இருக்கும் ஒரு கைதியினால் ஒன்றும் வாலாட்ட முடியாது; அதைப் போலவே, கட்டுண்டவனாய் இருக்கும் சாத்தானும் மனிதவர்க்கத்தின்மீது செல்வாக்கு செலுத்த முடியாது. நீதியான ஓர் உலகம் வருவதற்கு முன்னால் இது நிகழும்போது அது மனிதவர்க்கத்துக்கு என்னே நிம்மதியளிப்பதாய் இருக்கும்! ஆயிரம் ஆண்டுகள் முடிந்தப்பின் சாத்தான் அழிக்கப்பட்டுபோவான்.—வெளிப்படுத்துதல் 20:7-10.
சுதந்தரிக்கப்பட்டிருக்கும் பாவத்துக்கு என்ன நேரிடும்? பாவத்தை பூண்டோடு ஒழிக்க ஏற்கெனவே யெகோவா ஆதாரத்தை அளித்திருக்கிறார். “மனுஷகுமாரனும் [இயேசு கிறிஸ்து] . . . அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) ‘மீட்கும் பொருள்’ என்ற வார்த்தை பிணைக் கைதிகளை மீட்பதற்காக தேவைப்படும் விலையைக் குறிக்கிறது. மனிதவர்க்கத்தை விடுதலை செய்வதற்கு மீட்கும் பொருளாக இயேசு தம்முடைய பரிபூரண மனித உயிரை ஈடாக செலுத்தினார்.—2 கொரிந்தியர் 5:14; 1 பேதுரு 1:18, 19.
இயேசுவின் மீட்கும் பலி இப்பொழுதேகூட நமக்குப் பிரயோஜனமாய் இருக்கிறது. அதில் விசுவாசத்தைக் காண்பிப்பதன் மூலம் கடவுளுக்கு முன்பாக நாம் சுத்தமான ஒரு நிலைநிற்கையை அனுபவிக்க முடியும். (அப்போஸ்தலர் 10:43; 1 கொரிந்தியர் 6:11) கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில், மீட்கும் பொருளானது மனிதவர்க்கம் பாவத்திலிருந்து முழுமையாக மீட்கப்படுவதை சாத்தியமாக்கும். பைபிளின் கடைசி புத்தகம் அடையாள அர்த்தமுள்ள “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி” கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருவதையும் ‘ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவான’ இலைகளையுடைய அடையாள அர்த்தமுள்ள விருட்சங்கள் இரு கரையிலும் இருப்பதையும் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 22:1, 2) இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக படைப்பாளர் செய்யும் மகத்தான ஏற்பாட்டை பைபிள் இங்கே வருணிக்கிறது. இந்த ஏற்பாடு முழுமையாக பொருத்திப் பயன்படுத்தப்படும்போது கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாக்கும்
நீதியான ஓர் உலகில் வாழ்க்கை
ராஜ்ய ஆட்சியில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனைசெய்து பாருங்கள். குற்றச்செயலும் வன்முறையும் கடந்தகால சம்பவங்களாக இருக்கும். (நீதிமொழிகள் 2:21, 22) பொருளாதார அநீதி இருக்காது. (சங்கீதம் 37:6; 72:12, 13; ஏசாயா 65:21-23) சமுதாய, இன, மரபு, மற்றும் வகுப்புவாத வேற்றுமைகளின் எல்லா தடயங்களும் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டிருக்கும். (அப்போஸ்தலர் 10:34, 35) போர்களும் போராயுதங்களும் இனிமேலும் இரா. (சங்கீதம் 46:9) அநீதியிலிருந்து விடுபட்ட ஓர் உலகிற்குள் மரித்த லட்சக்கணக்கானோர் உயிர் பெற்றுவருவர். (அப்போஸ்தலர் 24:15) அனைவரும் குறையில்லாத திட ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழ்வர். (யோபு 33:25; வெளிப்படுத்துதல் 21:3, 4) “[இயேசு கிறிஸ்து] நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—ஏசாயா 42:3.
இதற்கிடையில், நமக்கு அநீதி இழைக்கப்படலாம், ஆனால் நாம் ஒருபோதும் அந்த அநீதியை திரும்ப செய்யாதிருப்போமாக. (மீகா 6:8) அநீதியை சகித்திருக்க வேண்டியதாக இருந்தாலும்கூட நம்பிக்கையுள்ள ஒரு நோக்குநிலையை நாம் காத்துக்கொள்வோமாக. வாக்கு கொடுக்கப்பட்டுள்ள நீதியான ஓர் உலகம் வெகுசீக்கிரத்தில் சாத்தியமாகும். (2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:11-13) சர்வவல்லமையுள்ள கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார், அது அப்படியே “வாய்க்கும்.” (ஏசாயா 55:10, 11) கடவுள் நம்மிடம் என்ன தேவைப்படுத்துகிறார் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீதியான அந்தப் புதிய உலகில் வாழ தயாராவதற்கு இதுவே தருணம்.—யோவான் 17:3; 2 தீமோத்தேயு 3:16, 17.
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் வாக்களித்திருக்கும் புதிய உலகில் அநீதியின் எல்லா தடயங்களும் துடைத்தழிக்கப்படும்