பெரிய தாவீதும் பெரிய சாலொமோனுமான இயேசுவை மதித்துணருதல்
“இதோ! சாலொமோனைவிடப் பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.”—மத். 12:42.
1, 2. தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்யும்படி சாமுவேலிடம் சொல்லப்பட்டது மனித கண்ணோட்டத்தில் ஏன் ஆச்சரியமானதாய் இருந்தது?
ராஜாவுக்குரிய தோரணை அவரிடம் தெரியவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசியின் கண்களுக்கு அவர் ஆடுமேய்க்கும் பையனாகத்தான் தெரிந்தார். அதுமட்டுமல்ல, அவர் பெத்லெகேம் என்ற ஒரு சாதாரண ஊரைச் சேர்ந்தவராக இருந்தார். அது ‘யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியது’ எனச் சொல்லப்பட்டது. (மீ. 5:2) இருந்தாலும், அந்தளவு அற்பமாய்த் தெரிந்த அந்த இளைஞர், சாமுவேல் தீர்க்கதரிசியால் வருங்கால ராஜாவாக அபிஷேகம் செய்யப்படவிருந்தார்.
2 இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய ஈசாயின் வீட்டிற்கு சாமுவேல் வந்தபோது, ஈசா தன் மகனான தாவீதை முதலில் அவருக்குக் காட்டவில்லை; ஏன், இரண்டாவதாகவும் காட்டவில்லை, மூன்றாவதாகவும் காட்டவில்லை. சொல்லப்போனால், அவருடைய எட்டு மகன்களில் கடைசி மகனான தாவீது அப்போது அந்த இடத்திலேயே இருக்கவில்லை. ஆனால், தாவீதைத்தான் யெகோவா தெரிவு செய்திருந்தார், அவருடைய தெரிவே முக்கியமானதாய் இருந்தது.—1 சா. 16:1-10.
3. (அ) யெகோவா ஒருவரிடம் எதை முக்கியமாகப் பார்க்கிறார்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு எது தாவீதின்மேல் செயல்பட ஆரம்பித்தது?
3 சாமுவேலால் பார்க்க முடியாததை யெகோவாவால் பார்க்க முடிந்தது. ஆம், கடவுளால் தாவீதின் இருதயத்தைப் பார்க்க முடிந்தது; அது அவருக்குப் பிரியமானதாய் இருந்தது. ஒருவரின் புறத்தோற்றம் அல்ல, அகத்தோற்றமே கடவுளுக்கு முக்கியம். (1 சாமுவேல் 16:7-ஐ வாசியுங்கள்.) ஈசாயின் ஏழு மகன்களில் ஒருவரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை என்பதை சாமுவேல் புரிந்துகொண்டபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கடைசி மகனை அழைத்துவரும்படி சொன்னார். அதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘அவர் [ஈசா] ஆள் அனுப்பி அவனை [தாவீதை] அழைப்பித்தார்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினார்.’ “அந்நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய சக்தி தாவீதின்மேல் செயல்பட ஆரம்பித்தது.”—1 சா. 16:12, 13; NW.
தாவீது—கிறிஸ்துவுக்கு முன்நிழல்
4, 5. (அ) தாவீதுக்கும் இயேசுவுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை விவரியுங்கள். (ஆ) இயேசு ஏன் பெரிய தாவீது என அழைக்கப்படுகிறார்?
4 தாவீதைப் போல இயேசுவும் பெத்லெகேமில் பிறந்தார்; தாவீது பிறந்து சுமார் 1,100 வருடங்களுக்குப் பிறகு அவர் பிறந்தார். இஸ்ரவேலர் அநேகருடைய கண்களுக்கு இயேசுவும் ஒரு ராஜாவாகத் தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த ஒரு ராஜாவைப்போல் அவர் இருக்கவில்லை. ஆனாலும், தாவீதைப் போல இயேசுவையும் யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார். தாவீதைப்போல் இயேசுவும் யெகோவாவின் அன்புக்குரியவராக இருந்தார்.a (லூக். 3:22) இயேசுமீதுகூட ‘யெகோவாவின் சக்தி செயல்பட ஆரம்பித்தது.’
5 தாவீதுக்கும் இயேசுவுக்கும் இடையே இன்னும் அநேக ஒற்றுமைகள் உள்ளன. உதாரணத்திற்கு, தாவீதின் ஆலோசகரான அகித்தோப்பேல் அவருக்குத் துரோகம் செய்தார், இயேசுவின் அப்போஸ்தலனான யூதாஸ்காரியோத்து அவருக்குத் துரோகம் செய்தான். (சங். 41:9; யோவா. 13:18) தாவீதுக்கும் இயேசுவுக்கும் யெகோவாவுடைய வணக்க ஸ்தலத்தின்மீது பக்திவைராக்கியம் இருந்தது. (சங். 27:4; 69:9; யோவா. 2:17) இயேசு தாவீதின் வாரிசாகவும் இருந்தார். இயேசு பிறப்பதற்கு முன்பு அவருடைய தாயாரிடம் ஒரு தூதன், “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்” என்று சொன்னார். (லூக். 1:32; மத். 1:1) என்றாலும், மேசியாவைப் பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் இயேசுவில் நிறைவேறப் போவதால் அவர் தாவீதைவிட உயர்ந்தவராக இருக்கிறார். அவரே பெரிய தாவீது, பல காலமாக மக்கள் எதிர்பார்த்திருந்த மேசியானிய ராஜா.—யோவா. 7:42.
மேய்ப்பரும் ராஜாவுமானவரைப் பின்பற்றுங்கள்
6. தாவீது எவ்விதங்களில் ஒரு நல்ல மேய்ப்பனாகத் திகழ்ந்தார்?
6 இயேசு ஒரு மேய்ப்பராகவும் இருக்கிறார். நல்ல மேய்ப்பனுக்குரிய இயல்புகள் யாவை? அவர் கடமையுணர்வோடும் தைரியத்தோடும் தன் ஆடுகளைப் பராமரிப்பார், போஷிப்பார், பாதுகாப்பார். (சங். 23:2-4) இளம் வயதில் தாவீது ஒரு மேய்ப்பராக இருந்தார்; அவர் தன் தகப்பனுடைய ஆடுகளை நன்கு கவனித்தார். ஆடுகளுக்கு ஆபத்து வந்தபோது துணிவுடன் செயல்பட்டார்; சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் ஆடுகளைக் காப்பாற்றுவதற்கு அவர் தன் உயிரையே பணயம் வைத்தார்.—1 சா. 17:34, 35.
7. (அ) ஒரு ராஜாவாகத் தன்னுடைய வேலைகளைச் செய்வதற்கு எது தாவீதைத் தயார்படுத்தியது? (ஆ) இயேசு எவ்வாறு ஒரு நல்ல மேய்ப்பராக விளங்குகிறார்?
7 தாவீது தன் ஆடுகளை வயல்நிலங்களிலும் மலைப்பகுதிகளிலும் பல வருடங்களாக மேய்த்து வந்தது, இஸ்ரவேல் ஜனத்தை மேய்க்கும் கடினமான வேலைகளுக்கும் பொறுப்புகளுக்கும் அவரைத் தயார்படுத்தியது.b (சங். 78:70, 71) இயேசுவும்கூட ஒரு மேய்ப்பருக்குரிய தகுதிகளைப் பெற்றிருந்தார். அவர் தம்முடைய ‘சிறு மந்தையையும்,’ ‘வேறே ஆடுகளையும்’ மேய்க்கையில் யெகோவாவிடமிருந்து பலத்தையும் வழிநடத்துதலையும் பெறுகிறார். (லூக். 12:32; யோவா. 10:16) ஆகவே, இயேசு ஒரு நல்ல மேய்ப்பராக விளங்குகிறார். அவர் தம்முடைய ஆடுகளை மிக நன்றாக அறிந்திருப்பதால், அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவற்றை உயிருக்குயிராய் நேசிப்பதால், பூமியில் இருந்தபோது அவற்றிற்காகத் தம்முடைய உயிரையும் மனமுவந்து கொடுத்தார். (யோவா. 10:3, 11, 14, 15) இயேசு ஒரு நல்ல மேய்ப்பராக, தாவீதால் செய்யவே முடிந்திருக்காத ஒன்றைச் செய்திருக்கிறார். தம்முடைய மீட்புப் பலியின் மூலம் மனிதர் மரணத்திலிருந்து விடுபடுவதற்கு வழிதிறந்து வைத்திருக்கிறார். பரலோகத்தில் சாவில்லா வாழ்வைப் பெறுவதற்குத் தம்முடைய ‘சிறு மந்தையினரை’ வழிநடத்துகிறார்; ஓநாய் போன்றோர் இல்லாத நீதியுள்ள புதிய உலகில் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு ‘வேறே ஆடுகளையும்’ வழிநடத்துகிறார்; இந்த இரு சாராரையும் வழிநடத்துவதிலிருந்து எதுவுமே அவரைத் தடுத்து நிறுத்தாது.—யோவான் 10:27-29-ஐ வாசியுங்கள்.
ஜெயங்கொள்ளும் ராஜாவைப் பின்பற்றுங்கள்
8. தாவீது எப்படி ஜெயங்கொள்ளும் ராஜாவாக ஆனார்?
8 ராஜாவாயிருந்த தாவீது மனோதிடம் கொண்ட வீரனாய் இருந்தார். அவர் கடவுளுடைய மக்களின் தேசத்தைப் பாதுகாத்தார்; ‘தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவரைக் காப்பாற்றினார்.’ தாவீது ஆட்சிசெய்தபோது, அத்தேசத்தின் எல்லை எகிப்தின் நதி துவங்கி ஐப்பிராத்து நதிவரைக்கும் விரிவடைந்தது. (2 சா. 8:1-14) யெகோவா தந்த பலத்தில், அவர் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ராஜாவானார். ‘தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவருக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது.—1 நா. 14:17.
9. வருங்கால ராஜாவாக இயேசு எப்படி ஜெயங்கொள்பவராய் இருந்தார்?
9 தாவீது ராஜாவைப் போல இயேசுவும் அஞ்சாநெஞ்சம் படைத்தவராக விளங்கினார். வருங்கால ராஜாவாக அவர் பேய்களை அடக்கினார்; மக்களை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்தார். (மாற். 5:2, 6-13; லூக். 4:36) பிரதான எதிரியான பிசாசாகிய சாத்தானால் அவர்மீது செல்வாக்கு செலுத்த முடியவில்லை. யெகோவாவின் ஆதரவோடு, சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் உள்ள உலகத்தை இயேசு ஜெயித்தார்.—யோவா. 14:30; 16:33; 1 யோ. 5:19.
10, 11. பரலோகத்தில் மாவீர ராஜாவாக இயேசு என்ன பங்கு வகிக்கிறார்?
10 இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்று சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டார்; அதில் மாவீர ராஜாவாகப் பரலோகத்தில் இயேசு வகிக்கும் பங்கை அவர் கண்டார். “ஒரு வெள்ளைக் குதிரை வந்தது; அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது; அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுச் சென்றார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்” என யோவான் எழுதினார். (வெளி. 6:2) அந்த வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவர் இயேசு. அவர் 1914-ல் பரலோகத்தில் ராஜாவாக அரியணை ஏறியபோது, “அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது.” அதன் பிறகு, “அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுச் சென்றார்.” ஆம், தாவீதைப்போல இயேசுவும் ஜெயங்கொள்ளும் ராஜாவாக இருக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக அவர் அமர்த்தப்பட்டு சில காலத்திற்குள் சாத்தானைப் போரில் வென்றார்; அவனையும் அவனுடைய பேய்களையும் பூமிக்குத் தள்ளினார். (வெளி. 12:7-9) அவர் ‘ஜெயித்து முடிக்கும் வரையாக,’ அதாவது சாத்தானுடைய பொல்லாத உலகைத் துடைத்தழிக்கும் வரையாக, அவருடைய வெற்றிச் சவாரி தொடரும்.—வெளிப்படுத்துதல் 19:11, 19-21-ஐ வாசியுங்கள்.
11 தாவீதைப் போல இயேசுவும் பரிவுள்ள ராஜாவாக இருக்கிறார்; அவர் ‘திரள் கூட்டமான மக்களை’ அர்மகெதோனிலிருந்து பாதுகாப்பார். (வெளி. 7:9, 14) அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுப்பப்பட்ட 1,44,000 பேருடன் சேர்ந்து அவர் ஆட்சி செய்யும்போது “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.” (அப். 24:15) பூமியில் உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பைப் பெறுவார்கள். எப்பேர்ப்பட்ட அற்புதமான எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருக்கிறது! ஆகவே, தொடர்ந்து ‘நன்மை செய்ய’ நாம் அனைவரும் தீர்மானமாயிருப்போமாக. அப்படிச் செய்தால், பெரிய தாவீதின் ஆட்சியின்கீழ் பூமியெங்கும் வாழப்போகும் சந்தோஷமான நீதிமான்களில் நாமும் ஒருவராய் இருப்போம்.—சங். 37:27-29.
ஞானத்திற்காக சாலொமோன் செய்த ஜெபத்திற்குப் பதில்
12. சாலோமோன் ஜெபத்தில் எதைக் கேட்டார்?
12 தாவீதின் மகனான சாலொமோனும்கூட இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தார்.c சாலொமோன் ராஜாவானபோது, யெகோவா அவருடைய கனவில் தோன்றி அவர் கேட்கிற எதையும் அளிப்பதாகச் சொன்னார். சாலொமோன் நினைத்திருந்தால் அதிக செல்வத்தையோ, அதிகாரத்தையோ, தீர்க்காயுசையோ கேட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக யெகோவாவிடம், “நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்று சுயநலமின்றி கேட்டார். (2 நா. 1:7-10, பொது மொழிபெயர்ப்பு) அவருடைய ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார்.—2 நாளாகமம் 1:11, 12-ஐ வாசியுங்கள்.
13. சாலொமோனுடைய ஞானம் எப்படி நிகரற்றதாய் இருந்தது, அவருக்கு எப்படி ஞானம் கிடைத்தது?
13 சாலொமோன் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்தவரையில், அவருக்கு நிகராக யாராலும் ஞானமான வார்த்தைகளைப் பேச முடியவில்லை; அவர் ‘மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னார்.’ (1 இரா. 4:30, 32, 34) அவற்றில் பெரும்பாலானவை எழுத்தில் வடிக்கப்பட்டன; இன்றும்கூட, ஞானத்தைத் தேடுவோரால் பொன்னெனப் போற்றப்படுகின்றன. சேபா தேசத்து ராணி “விடுகதைகளினால்,” அதாவது கடினமான கேள்விகளினால், சாலொமோனுடைய ஞானத்தைச் சோதிப்பதற்காக 2,400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்தார். சாலொமோன் சொன்ன விஷயங்களும் அவருடைய ராஜ்யத்தின் செழுமையும் அந்த ராணியை மிகவும் கவர்ந்தன. (1 இரா. 10:1-9) சாலொமோனுக்கு எப்படி அந்தளவு ஞானம் கிடைத்தது என்பதை பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.”—1 இரா. 10:24.
ஞானமுள்ள ராஜாவைப் பின்பற்றுங்கள்
14. இயேசு எவ்விதங்களில் ‘சாலொமோனிலும் பெரியவராக’ இருக்கிறார்?
14 சாலொமோனுடைய ஞானத்தை விஞ்சிய மனிதர் ஒரே ஒருவர்தான். அவரே இயேசு கிறிஸ்து; அவர் தம்மை “சாலொமோனைவிடப் பெரியவர்” என்பதாகக் குறிப்பிட்டார். (மத். 12:42) அவர் ‘முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகளை’ பேசினார். (யோவா. 6:68) உதாரணமாக, சாலொமோன் சொன்ன நீதிமொழிகள் சிலவற்றின் நியமங்களை இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் விரிவுபடுத்தினார், கூடுதலான நியமங்களையும் அளித்தார். சாலொமோன், யெகோவாவை வழிபடுவோருக்குச் சந்தோஷத்தைத் தரும் பல விஷயங்களை விவரித்தார். (நீதி. 3:13; 8:32, 33; 14:21; 16:20) இயேசு, யெகோவாவின் வழிபாட்டிலிருந்தும் அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திலிருந்தும் கிடைக்கும் சந்தோஷமே உண்மையான சந்தோஷம் என்பதை வலியுறுத்தினார். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது” என்று அவர் சொன்னார். (மத். 5:3) இயேசுவின் போதனைகளிலுள்ள நியமங்களைப் பின்பற்றுவோர் ‘ஜீவ ஊற்றாகிய’ யெகோவாவிடம் நெருங்கி வருகிறார்கள். (சங். 36:9; நீதி. 22:11; மத். 5:8) கிறிஸ்து ‘கடவுளுடைய ஞானத்தின்’ பிரதிபிம்பமாக இருக்கிறார். (1 கொ. 1:24, 30, 31) மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, ‘ஞானத்தை அருளும்’ கடவுளுடைய சக்தியைப் பெற்றிருக்கிறார்.—ஏசா. 11:2.
15. கடவுளுடைய ஞானத்திலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்?
15 பெரிய சாலொமோனைப் பின்பற்றுவோரான நாம் கடவுளுடைய ஞானத்திலிருந்து எப்படி நன்மையடையலாம்? யெகோவாவின் ஞானம் அவருடைய வார்த்தையில் காணப்படுவதால், அதை ஆழ்ந்து படித்துத் தியானிப்பதன் மூலம், குறிப்பாக இயேசுவைப் பற்றிய பதிவுகளைப் படித்துத் தியானிப்பதன் மூலம், அந்த ஞானத்தைப் பெற நாம் முதலாவதாக முயல வேண்டும். (நீதி. 2:1-5) அதோடு, ஞானத்திற்காகக் கடவுளிடம் விடாமல் கேட்க வேண்டும். உதவிக்காக நாம் செய்யும் உள்ளப்பூர்வமான ஜெபங்களுக்குப் பதில் கிடைக்குமென அவருடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (யாக். 1:5) கடவுளுடைய சக்தியின் உதவியால், அவருடைய வார்த்தையில் பொதிந்துள்ள ஞானம் எனும் பொக்கிஷத்தைக் கண்டுபிடிப்போம்; பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் அது நமக்கு உதவும். (லூக். 11:13) சாலொமோன் ஜனங்களைக் “கூட்டிச்சேர்ப்பவர்” என்று அழைக்கப்பட்டார்; அதன்படியே அவர் ஜனங்களைக் கூடிவரச்செய்து ‘அவர்களுக்குத் தொடர்ந்து அறிவைப் போதித்தார்.’ (பிர. 12:9, 10, NW) கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசுவும்கூட ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பவராக இருக்கிறார். (யோவா. 10:16; கொலோ. 1:18) ஆகவே, நாம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும், அங்கு நமக்கு ‘தொடர்ந்து போதிக்கப்படுகிறது.’
16. சாலொமோனுக்கும் இயேசுவுக்கும் இடையே என்ன ஒற்றுமை உள்ளது?
16 சாலொமோன் எத்தனையோ காரியங்களைச் சாதித்தார். தேசிய அளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்; அரண்மனைகள், சாலைகள், தண்ணீர் வசதிகள், பண்டகசாலைகளுக்கான நகரங்கள், இரதங்களுக்கான நகரங்கள், குதிரை வீரர்களுக்கான நகரங்கள் ஆகியவற்றை அமைக்கும் வேலைகளைக் கண்காணித்தார். (1 இரா. 9:17-19) இந்தக் கட்டுமானப் பணிகளிலிருந்து எல்லாரும் பயனடைந்தார்கள். இயேசுவும்கூட கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறார். அவர் தம்முடைய சபையை “கற்பாறையின்மீது” கட்டினார். (மத். 16:18) புதிய உலகில் நடைபெறப்போகும் கட்டுமான வேலையையும் அவர் மேற்பார்வை செய்வார்.—ஏசா. 65:21, 22.
சமாதானத்தின் ராஜாவைப் பின்பற்றுங்கள்
17. (அ) சாலொமோனுடைய ஆட்சியின் சிறப்பம்சம் என்ன? (ஆ) சாலொமோனால் எதைச் செய்ய முடியவில்லை?
17 மூல மொழியில் சாலொமோன் என்ற பெயரின் அர்த்தம் “சமாதானம்” என்பதாகும். சாலொமோன் ராஜா, எருசலேமிலிருந்து ஆட்சி செய்தார்; எருசலேம் என்ற பெயரின் அர்த்தம் “இரட்டிப்பான சமாதானத்தின் உறைவிடம்” என்பதாகும். அவருடைய 40 வருட ஆட்சியின்போது இஸ்ரவேல் தேசத்தில் சரித்திரம் காணாதளவுக்கு சமாதானம் கரைபுரண்டோடியது. அந்த வருடங்களைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.” (1 இரா. 4:25) சாலொமோனுக்கு அளவுகடந்த ஞானம் இருந்தபோதிலும், தன்னுடைய குடிமக்களை வியாதியிலிருந்தும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்க முடியவில்லை. ஆனால், பெரிய சாலொமோன் இவை எல்லாவற்றிலிருந்தும் தமது குடிமக்களை விடுவிப்பார்.—ரோமர் 8:19-21-ஐ வாசியுங்கள்.
18. கிறிஸ்தவ சபையில் என்ன சூழ்நிலைகளை நாம் அனுபவிக்கிறோம்?
18 இப்போதும்கூட கிறிஸ்தவ சபையில், நாம் சமாதானத்தை அனுபவிக்கிறோம். ஆம், நாம் உண்மையான ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிறோம். நாம் கடவுளோடும் சக மனிதரோடும் சமாதானமாக இருக்கிறோம். இன்று நாம் அனுபவிக்கிற சூழ்நிலைகளைக் குறித்து ஏசாயா முன்னுரைத்ததைக் கவனியுங்கள்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசா. 2:3, 4) நாம் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைவாக நடக்கையில், ஆன்மீகப் பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்கிறோம்.
19, 20. நாம் சந்தோஷப்படுவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
19 என்றாலும், எதிர்காலம் இதைவிடச் சிறப்பாய் இருக்கும். இயேசுவின் ஆட்சியில் கீழ்ப்படிதலுள்ள மனிதர் என்றுமில்லாதளவுக்குச் சமாதானத்தை அனுபவிப்பார்கள்; அவர்கள் பரிபூரணத்தை அடையும்வரை படிப்படியாக ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.’ (ரோ. 8:21) ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நடக்கப்போகும் கடைசி பரீட்சையில் வெற்றிபெற்ற பிறகு, “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங். 37:11; வெளி. 20:7-10) ஆம், கிறிஸ்து இயேசுவின் ஆட்சி, நாம் கற்பனைகூட செய்ய முடியாதளவுக்குச் சாலொமோனுடைய ஆட்சியை விஞ்சிவிடும்!
20 மோசே, தாவீது, சாலொமோன் ஆகியோருடைய கண்காணிப்பின்கீழ் இஸ்ரவேலர் சந்தோஷத்தை அனுபவித்தார்கள்; கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நாம் இன்னுமதிக சந்தோஷத்தை அனுபவிப்போம். (1 இரா. 8:66) பெரிய மோசேயும், பெரிய தாவீதும், பெரிய சாலொமோனுமான தம்முடைய ஒரேபேறான குமாரனை நமக்குத் தந்திருப்பதற்காக யெகோவாவுக்குப் பலகோடி நன்றி!
[அடிக்குறிப்புகள்]
a தாவீது என்ற பெயரின் அர்த்தம் “அன்புக்குரியவர்” என்பதாக இருக்கலாம். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோதும் மறுரூபமானபோதும், யெகோவா வானத்திலிருந்து அவரை நோக்கி, “இவர் என் அன்பு மகன்” என்றார்.—மத். 3:17; 17:5.
b தாவீது, மேய்ப்பரை அண்டியிருக்கும் ஓர் ஆட்டுக்குட்டியைப் போலவும் ஆனார். பாதுகாப்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அவர் பெரிய மேய்ப்பரான யெகோவாவை நம்பியிருந்தார். “யெகோவா என் மேய்ப்பர். எனக்கு ஒன்றிலும் குறைவிருக்காது” என முழு நம்பிக்கையோடு அவர் சொன்னார். (சங். 23:1, NW) இயேசுவை “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என யோவான் ஸ்நானகர் அடையாளம் காட்டினார்.—யோவா. 1:29.
c சாலொமோனுடைய இன்னொரு பெயர் யெதிதியா; அப்பெயரின் அர்த்தம் “யெகோவாவுக்கு நேசமானவன்” என்பது ஆர்வத்திற்குரியது.—2 சா. 12:24, 25.
உங்களால் விளக்க முடியுமா?
• இயேசு எப்படிப் பெரிய தாவீதாக இருக்கிறார்?
• இயேசு எப்படிப் பெரிய சாலொமோனாக இருக்கிறார்?
• பெரிய தாவீதாகவும் பெரிய சாலொமோனாகவும் இருப்பவரை நீங்கள் ஏன் உயர்வாகக் கருதுகிறீர்கள்?
[பக்கம் 31-ன் படம்]
சாலொமோனுக்குக் கடவுள் கொடுத்த ஞானம் பெரிய சாலொமோனின் ஞானத்துக்கு முன்நிழலாக இருந்தது
[பக்கம் 32-ன் படம்]
இயேசுவின் ஆட்சி, நாம் கற்பனைகூட செய்ய முடியாதளவுக்குச் சாலொமோனுடைய ஆட்சியை விஞ்சிவிடும்!