மத்தேயு எழுதியது
10 பின்பு, அவர் தன்னுடைய 12 சீஷர்களையும் கூப்பிட்டு, பேய்களை விரட்டுவதற்கும்+ எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+ 3 பிலிப்பு மற்றும் பர்த்தொலொமேயு;+ தோமா+ மற்றும் வரி வசூலிப்பவரான மத்தேயு;+ அல்பேயுவின் மகன் யாக்கோபு மற்றும் ததேயு; 4 பக்திவைராக்கியமுள்ள* சீமோன் மற்றும் இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.+
5 அந்த 12 பேருக்கும் இயேசு இந்த அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்:+ “மற்ற தேசத்தாரின் பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள்.+ 6 வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள்.+ 7 அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்.+ 8 நோயாளிகளைக் குணப்படுத்துங்கள்,+ இறந்தவர்களை உயிரோடு எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களை விரட்டுங்கள். இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். 9 தங்கம், வெள்ளி, அல்லது செம்புக் காசுகளை உங்களோடு* கொண்டுபோகாதீர்கள்.+ 10 பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ,* செருப்புகளையோ, தடியையோ+ வாங்கிக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.+
11 நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்; அங்கிருந்து புறப்படும்வரை அவருடனேயே தங்கியிருங்கள்.+ 12 ஒரு வீட்டுக்குள் போகும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 13 அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்;+ தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். 14 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.+ 15 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் சோதோம் கொமோரா+ நகரங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்.
16 இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்; அதனால், பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும் புறாக்களைப் போல் கள்ளம்கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள்.+ 17 எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், மனுஷர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்;+ தங்களுடைய ஜெபக்கூடங்களில்+ உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள்.+ 18 அதுமட்டுமல்ல, நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள்,+ அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும்.+ 19 ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள்முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.+ 20 அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.+ 21 சகோதரனின் சாவுக்குச் சகோதரனும், பிள்ளையின் சாவுக்கு அப்பாவும் காரணமாக இருப்பார்கள். பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களுடைய சாவுக்குக் காரணமாவார்கள்.+ 22 நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்;+ ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.+ 23 அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள்;+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதகுமாரன் வருவதற்குள் இஸ்ரவேலில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்.
24 மாணவன் தன்னுடைய குருவைவிட பெரியவன் அல்ல, அடிமை தன்னுடைய எஜமானைவிட பெரியவன் அல்ல.+ 25 மாணவன் தன் குருவைப் போலவும், அடிமை தன் எஜமானைப் போலவும்+ ஆனாலே போதும். வீட்டு எஜமானையே பெயல்செபூப்*+ என்று மக்கள் சொல்லியிருக்கும்போது, அவருடைய வீட்டில் இருப்பவர்களை அப்படிச் சொல்வது இன்னும் நிச்சயம்தானே? 26 அதனால், அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; மூடிமறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது.+ 27 நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கியுங்கள்.+ 28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+ 29 குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு* இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை.+ 30 உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 31 அதனால், பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.+
32 மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை+ என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன்.+ 33 ஆனால், மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ 34 பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க* வந்தேன்.+ 35 அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன்.+ 36 சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள். 37 என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது; என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.+ 38 தன்னுடைய சித்திரவதைக் கம்பத்தை* சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.+ 39 தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.+
40 உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான், என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்.+ 41 ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால் அவரை ஏற்றுக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறுகிற அதே பலனைப் பெறுவான்;+ ஒருவர் நீதிமானாக இருப்பதால் அவரை ஏற்றுக்கொள்கிறவன், நீதிமான் பெறுகிற அதே பலனைப் பெறுவான். 42 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தாழ்மையானவர்களான இவர்களில் ஒருவர் என்னுடைய சீஷராக இருப்பதால், இவருக்கு ஒரு குவளை குளிர்ந்த தண்ணீர் கொடுக்கிறவனும்கூட கண்டிப்பாகத் தன்னுடைய பலனைப் பெறுவான்.”+