2 சாமுவேல்
12 அதனால், யெகோவா நாத்தானை+ தாவீதிடம் அனுப்பினார். அவர் தாவீதைப் பார்த்து,+ “ஒரு ஊரில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை. 2 பணக்காரனிடம் ஏராளமான ஆடுமாடுகள் இருந்தன;+ 3 ஆனால், ஏழையிடம் ஒரேவொரு பெண் ஆட்டுக்குட்டிதான் இருந்தது. அதை அவன் விலைக்கு வாங்கியிருந்தான்.+ அதை நன்றாகக் கவனித்துக்கொண்டான். அந்த வீட்டில் அவனோடும் அவனுடைய மகன்களோடும் அந்த ஆட்டுக்குட்டி வளர்ந்துவந்தது. அவனிடம் இருக்கும் கொஞ்ச உணவைச் சாப்பிட்டு, அவனுடைய கிண்ணத்தில் இருப்பதைக் குடித்து, அவனுடைய மடியில் தூங்கியது. அது அவனுக்கு ஒரு மகளைப் போல் இருந்தது. 4 ஒருநாள் அந்தப் பணக்காரனுடைய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். அவனுக்கு விருந்து வைக்க தன்னிடமிருந்த ஆட்டையோ மாட்டையோ வெட்டாமல், அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைப் பிடித்துச் சமைத்தான்”+ என்று சொன்னார்.
5 அதைக் கேட்டதும் தாவீதுக்கு அந்தப் பணக்காரன்மீது பயங்கர கோபம் வந்தது; “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,*+ அந்த மனிதன் கொல்லப்பட வேண்டும்! 6 அவன் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொண்டான், அதனால் நஷ்ட ஈடாக நான்கு ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும்”+ என்று நாத்தானிடம் சொன்னார்.
7 உடனே நாத்தான், “நீங்கள்தான் அந்த மனிதன்! இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன்.+ சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றினேன்.+ 8 உன் எஜமானுடைய சொத்துகளையும்+ அவனுடைய மனைவிகளையும்+ உனக்குத் தர தயாராயிருந்தேன். இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் உன்னை ராஜாவாக்கினேன்.+ இது போதாதென்றால் இதற்கு மேலேயும் உனக்குக் கொடுக்கத் தயாராக இருந்தேன்.+ 9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+ 10 ஏத்தியனான உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டு என்னை அவமதித்ததால், உன் வம்சத்தை எப்போதும் வாள் துரத்திக்கொண்டே இருக்கும்.’+ 11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+ 12 நீ ரகசியமாகச் செய்தாய்,+ நானோ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால் பட்டப்பகலில்* செய்ய வைப்பேன்’” என்று சொன்னார்.
13 உடனே தாவீது, “நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னார். அதற்கு நாத்தான், “யெகோவா உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டார்.+ நீங்கள் சாக மாட்டீர்கள்.+ 14 ஆனாலும், இந்த விஷயத்தில் யெகோவாவை நீங்கள் துளிகூட மதிக்காததால், உங்களுக்கு இப்போது பிறந்த குழந்தை கண்டிப்பாகச் செத்துவிடும்” என்று சொன்னார்.
15 அதன் பின்பு, நாத்தான் தன்னுடைய வீட்டுக்குப் போனார்.
உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண் குழந்தையை யெகோவா தாக்கினார்; அது நோய்வாய்ப்பட்டது. 16 குழந்தைக்காக உண்மைக் கடவுளிடம் தாவீது கெஞ்சி மன்றாடினார். கடுமையாக விரதமிருந்து, தன் அறைக்குள் போய் ராத்திரி முழுவதும் தரையிலேயே கிடந்தார்.+ 17 வீட்டிலுள்ள பெரியோர்கள்* சுற்றி நின்று அவரை எழுப்ப முயற்சி செய்தார்கள். ஆனால், அவர் எழுந்திருக்கவுமில்லை, சாப்பிடவுமில்லை. 18 ஏழாம் நாளில் குழந்தை இறந்துபோனது. ஆனால், அவரிடம் விஷயத்தைச் சொல்ல அவருடைய ஊழியர்கள் பயந்தார்கள். “குழந்தை உயிரோடு இருந்தபோதே நாம் சொன்னதை அவர் கேட்கவில்லை. இப்போது குழந்தை இறந்துவிட்டதென்று சொன்னால் ஏதாவது விபரீதமாகச் செய்துவிடுவாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
19 ஊழியர்கள் கிசுகிசுவென்று பேசிக்கொள்வதைப் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதென்று தாவீது புரிந்துகொண்டார். “குழந்தை இறந்துவிட்டதா?” என்று கேட்டார்; அதற்கு அவர்கள், “ஆமாம்” என்று சொன்னார்கள். 20 உடனே அவர் தரையிலிருந்து எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டார்;+ பின்பு, உடை மாற்றிக்கொண்டு யெகோவாவின் கூடாரத்துக்குப்+ போய் தரையில் விழுந்து வணங்கினார். அதன் பின்பு அரண்மனைக்கு வந்து, உணவு கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டார். 21 அவருடைய ஊழியர்கள், “நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? குழந்தை உயிரோடு இருந்தபோது விரதமிருந்து அழுதுகொண்டிருந்தீர்கள்; குழந்தை இறந்தவுடனே எழுந்து வந்து சாப்பிடுகிறீர்களே?” என்று கேட்டார்கள். 22 அதற்கு அவர், “குழந்தை உயிரோடு இருந்தபோது விரதமிருந்து+ அழுதுகொண்டிருந்தேன்; யெகோவா ஒருவேளை என்மேல் இரக்கம் காட்டி குழந்தைக்கு உயிர்ப்பிச்சை தருவார்+ என்று நினைத்தேன். 23 ஆனால் இப்போதுதான் குழந்தை இறந்துவிட்டதே, இனி விரதமிருந்து என்ன பிரயோஜனம்? குழந்தையை என்னால் உயிரோடு கொண்டுவரவா முடியும்?+ எனக்கு வேண்டுமானால் சாவு வரலாம்,+ அவன் என்னிடம் திரும்பி வரமாட்டான்”+ என்று சொன்னார்.
24 தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு+ ஆறுதல் சொன்னார். பின்பு, அவளுடன் உறவுகொண்டார். அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைத்தார். யெகோவா அவனை நேசித்தார்.+ 25 யெகோவா அவன்மேல் அன்பு வைத்ததால்,* அவனுக்கு யெதிதியா* என்று பெயர் வைக்கும்படி நாத்தான்+ தீர்க்கதரிசியிடம் சொன்னார்.
26 அம்மோனியர்களின்+ நகரமான ரப்பாவுக்கு+ எதிராக யோவாப் தொடர்ந்து போர் செய்து அந்த ராஜ நகரத்தைக் கைப்பற்றினார்.+ 27 பின்பு தாவீதிடம் ஆட்களை அனுப்பி, “ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்து,+ அந்தத் தண்ணீர் நகரத்தை* பிடித்துவிட்டேன். 28 நகரத்தையும் நானே கைப்பற்றிவிட்டால், அதற்கான பேரும் புகழும் எனக்கு வந்துவிடும். அதனால் உடனே அங்கிருக்கிற வீரர்களைத் திரட்டிக்கொண்டு வந்து, நகரத்தின் மீது போர் செய்து அதைக் கைப்பற்றுங்கள்” என்று சொன்னார்.
29 அதனால் தாவீது எல்லா வீரர்களையும் திரட்டிக்கொண்டு ரப்பாவுக்குப் போய் போர் செய்து அதைக் கைப்பற்றினார். 30 பின்பு, அவர் மல்காம் தெய்வத்தின் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டார். அதன் எடை ஒரு தாலந்து* தங்கம். அதில் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை தாவீதின் தலையில் வைத்தார்கள். அந்த நகரத்திலிருந்து ஏராளமான பொருள்களையும் அவர் கைப்பற்றினார்.+ 31 அங்கிருந்த மக்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவந்து அவர்களுக்குக் கல் அறுக்கும் வேலை கொடுத்தார். கூர்மையான இரும்புக் கருவிகளையும் இரும்புக் கோடாலிகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார். செங்கல் செய்கிற வேலையையும் கொடுத்தார். அம்மோனியர்களுடைய நகரங்களில் இருந்த எல்லாரிடமும் இப்படியே வேலை வாங்கினார். கடைசியில், தன்னுடைய படை முழுவதையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.