தானியேல்
9 மேதியர்களின் சந்ததியில் வந்த அகாஸ்வேருவின் மகன் தரியு,+ கல்தேயர்களுடைய ராஜ்யத்துக்கு ராஜாவாக நியமிக்கப்பட்டான்.+ அவன் ஆட்சி செய்த முதலாம் வருஷத்தில், 2 தானியேலாகிய நான் புத்தகங்களை* படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, எருசலேம் 70 வருஷங்களுக்குப் பாழாய்க் கிடக்கும்+ என்று எரேமியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொல்லியிருந்ததைப் புரிந்துகொண்டேன்.+ 3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன். 4 என் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்து, என் ஜனங்களுடைய பாவங்களை ஒத்துக்கொண்டேன். அந்த ஜெபத்தில்,
“உண்மைக் கடவுளாகிய யெகோவாவே, அதிசயமும் அற்புதமுமானவரே, உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுபவரே,+ ஒப்பந்தத்தைக் காப்பவரே,+ 5 நாங்கள் பாவங்களும் குற்றங்களும் செய்தோம். உங்கள் பேச்சை மீறி அக்கிரமம் பண்ணினோம்,+ உங்களுடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விட்டு விலகினோம். 6 எங்கள் ராஜாக்களிடமும் தலைவர்களிடமும் முன்னோர்களிடமும் எல்லா ஜனங்களிடமும் உங்கள் சார்பில் பேசிய உங்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்காமல் போனோம்.+ 7 யெகோவாவே, உங்களிடம் நீதி குடியிருக்கிறது. ஆனால், எங்களிடம் இன்றுவரை அவமானம்தான் தங்கியிருக்கிறது. யூதாவையும் எருசலேமையும் சேர்ந்த இஸ்ரவேலர்களான நாங்கள் எல்லாரும் உங்களுக்குத் துரோகம் செய்ததால் சுற்றுப்புற தேசங்களுக்கும் தூர தேசங்களுக்கும் எங்களைத் துரத்தியடித்தீர்கள்.+
8 யெகோவாவே, உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும் தலைவர்களுக்கும் முன்னோர்களுக்கும் அவமானம்தான் மிஞ்சியிருக்கிறது. 9 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் இரக்கமுள்ளவர், மன்னிக்கிறவர்.+ நாங்கள்தான் உங்களுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டோம்.+ 10 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளின் மூலம் நீங்கள் கொடுத்த சட்டங்களை நாங்கள் பின்பற்றவில்லை, உங்கள் பேச்சைக் கேட்கவில்லை.+ 11 இஸ்ரவேலர்களாகிய நாங்கள் எல்லாரும் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினோம், நீங்கள் சொன்னதைக் கேட்காமல் உங்களைவிட்டு விலகினோம். உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், உங்கள் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபத்தை எங்கள்மேல் பலிக்கச் செய்தீர்கள்.+ 12 எங்களுக்கும் எங்கள் ஆட்சியாளர்களுக்கும்* எதிராக நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றி,+ எங்கள்மேல் மாபெரும் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எருசலேமுக்கு நடந்ததுபோல் இதுவரை பூமியில் வேறெங்குமே நடந்ததில்லை.+ 13 மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்ட எல்லா தண்டனைகளும் எங்களுக்குக் கிடைத்தன.+ அப்படியிருந்தும் எங்கள் கடவுளாகிய யெகோவாவே, உங்கள் கருணைக்காக நாங்கள் கெஞ்சவில்லை, தப்பு செய்வதை நிறுத்தவில்லை,+ நீங்கள் எவ்வளவு நம்பகமானவர் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.
14 அதனால் யெகோவாவே, நீங்கள் கவனித்துக்கொண்டே இருந்து, எங்கள்மேல் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் எல்லாவற்றையும் நீதியோடு செய்திருக்கிறீர்கள். நாங்கள்தான் உங்களுடைய பேச்சைக் கேட்கவில்லை.+
15 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய கைபலத்தால் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து+ இந்த நாள்வரையிலும் உங்கள் பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+ ஆனால், நாங்கள் உங்களுக்கு எதிராகப் பாவமும் அக்கிரமமும் செய்தோம். 16 உங்கள் ஜனங்களாகிய நாங்கள் செய்த பாவங்களினாலும் எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளினாலும் சுற்றியுள்ளவர்கள் எருசலேம் நகரத்தையும் எங்களையும் பழித்துப் பேசுகிறார்கள்.+ யெகோவாவே, நீங்கள் எப்போதும் நீதியாக நடந்துகொள்பவர்.+ அதனால், இப்போதும் பரிசுத்த மலையாகிய எருசலேம் நகரத்தின் மேலுள்ள கடும் கோபத்தைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். 17 எங்கள் கடவுளே, அடியேன் கெஞ்சிக் கேட்கிறேன், என் ஜெபத்தைக் கேளுங்கள். யெகோவாவே, பாழாய்க் கிடக்கும்+ உங்களுடைய பரிசுத்த இடத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பொழியுங்கள்.+ உங்கள் மகிமைக்காக இதைச் செய்யுங்கள். 18 என் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய கண்களைத் திறந்து எங்களுடைய பரிதாப நிலையையும், உங்கள் பெயர் தாங்கிய நகரத்தையும் பாருங்கள். எங்கள் செயல்கள் நீதியானவை என்பதால் அல்ல, நீங்கள் மகா இரக்கமானவர் என்பதால் உங்களிடம் கெஞ்சுகிறோம்.+ 19 யெகோவாவே, கேளுங்கள். யெகோவாவே, எங்களை மன்னியுங்கள்.+ யெகோவாவே, எங்களைக் கண்ணோக்கிப் பார்த்து எங்களுக்கு உதவுங்கள். என் கடவுளே, உங்கள் நகரமும் உங்கள் ஜனங்களும் உங்களுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் அந்தப் பெயரின் மகிமைக்காக நீங்கள் தாமதிக்காமல் உதவி செய்யுங்கள்”+ என்றேன்.
20 நான் இப்படி ஜெபம் செய்து, நானும் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டும், பரிசுத்த மலைக்குக்+ கருணை காட்டும்படி என் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொண்டும் இருந்தேன். 21 இப்படி ஜெபம் செய்துகொண்டு இருந்தபோதே, நான் முன்பு தரிசனத்தில் பார்த்த காபிரியேல்+ என்னிடம் வந்தார். அது மாலைநேர காணிக்கை செலுத்தும் சமயம். நான் சக்தியே இல்லாமல் மிகவும் களைப்பாக இருந்தேன். 22 அப்போது, காபிரியேல், எல்லாவற்றையும் எனக்குப் புரிய வைத்தார். அவர் என்னிடம்,
“தானியேலே, உனக்கு எல்லா விவரங்களையும் ஆழமாகப் புரிய வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். 23 கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.*+ அதனால், நீ அவரிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தவுடனே எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் சொல்லப்போவதைக் கவனமாகக் கேட்டு, தரிசனத்தைப் புரிந்துகொள்.
24 உன் ஜனங்களுக்காகவும் பரிசுத்த நகரத்துக்காகவும்+ 70 வாரங்களை* கடவுள் குறித்திருக்கிறார். அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களை ஒழித்துக்கட்டவும்,+ தவறுகளுக்குப் பரிகாரம் செய்யவும்,+ நீதியை என்றென்றுமாக நிலைநாட்டவும்,+ தரிசனத்துக்கும் தீர்க்கதரிசனத்துக்கும்* முத்திரை போடவும்,+ பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை* அபிஷேகம் செய்யவும் அந்த 70 வாரங்களைக் கடவுள் குறித்திருக்கிறார். 25 எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்குக்+ கட்டளை கொடுக்கப்படுகிற சமயத்திலிருந்து 7 வாரங்களும் 62 வாரங்களும்+ கழித்து தலைவராகிய+ மேசியா*+ தோன்றுவார். எருசலேம் பொது சதுக்கத்தோடும் அகழியோடும்* புதுப்பித்துக் கட்டப்படும். ஆனால், அது நெருக்கடியான காலங்களில் நடக்கும்.
26 அந்த 62 வாரங்களுக்குப் பின்பு, மேசியா தனக்கென்று எதுவும் இல்லாமல் கொல்லப்படுவார்.+
ஒரு படைத் தலைவரும் அவருடைய வீரர்களும் வந்து நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிப்பார்கள்.+ வெள்ளத்தால் அதற்கு முடிவு வரும், அந்த முடிவு வரும்வரை போர் நடக்கும். நாசம் செய்ய கடவுள் தீர்மானித்திருக்கிறார்.+
27 பலருக்காக அவர்* ஒரு வாரத்துக்கு ஒப்பந்தத்தை நீடிக்கச் செய்வார். அந்த வாரத்தின் பாதியில், பலிகளுக்கும் காணிக்கைகளுக்கும் முடிவுகட்டுவார்.+
பாழாக்கும் ஒருவன் அருவருப்பானவற்றின் சிறகுமேல் வருவான்.+ பாழாய்க் கிடப்பது அடியோடு அழிக்கப்படும்வரை, கடவுள் தீர்மானித்தது நிறைவேறும்” என்று சொன்னார்.