வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
செப்டம்பர் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 33-34
“யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’”
it-2-E பக். 51
யெஷுரன்
இது இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட கௌரவ பட்டம். கிரேக்க செப்டுவஜன்டில் “பாசத்தை” குறிப்பதற்காக “யெஷுரன்” என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டப்பெயர், யெகோவாவோடு செய்த ஒப்பந்தத்தை இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும். அதனால், யெகோவாவுக்கு முன்னால் நேர்மையாக நடக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். (உபா 33:5, 26; ஏசா 44:2)
rr பக். 120, பெட்டி
திரும்பவும் எழுந்து நிற்க உதவி
யெகோவாவுக்குச் சக்தி இருப்பதோடு தன்னுடைய மக்களின் சார்பாக தன்னுடைய பலத்தைப் பயன்படுத்த விருப்பமும் இருக்கிறது. இதை, எசேக்கியேலின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசியான மோசே சொன்னார். “பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை. அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன” என்று மோசே எழுதினார். (உபா. 33:27) ஆம், கஷ்ட காலத்தில், நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்தால், அவர் தன்னுடைய அரவணைக்கும் கைகளால் மென்மையாகத் தூக்கி, திரும்பவும் எழுந்து நிற்க நமக்கு உதவுவார்.—எசே. 37:10.
ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுங்கள்
16 ஆபிரகாமைப் போலவே மோசேயும் கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தைத் தன் வாழ்நாளில் பார்க்கவில்லை. இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நுழைவாயிலில் இருந்தபோது கடவுள் மோசேயிடம், “நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை” என்று சொன்னார். ஏனென்றால், அதற்குமுன் மோசேயும் ஆரோனும் ‘மேரிபாவின் தண்ணீருக்கு அருகில் [கடவுளுடைய] கட்டளையை மீறினார்கள்.’ (உபா. 32:50, 52) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் போக முடியாததை எண்ணி மோசே சோர்ந்துபோனாரா அல்லது மனக்கசப்படைந்தாரா? இல்லை. இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும்படி அவர் யெகோவாவிடம் கேட்டார்; கடைசியாக இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே” என்று கூறினார்.—உபா. 33:29.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 439 பாரா 3
மோசே
மோசே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சமாதியைக் கட்டி அதை பொய் வணக்கத்துக்காக இஸ்ரவேலர்கள் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக யெகோவா அந்த இடத்தை மறைத்திருக்கலாம். மோசேயின் உடலை பொய் வணக்கத்துக்காக பயன்படுத்தலாம் என்று பிசாசும் நினைத்திருக்கலாம். அதனால்தான், யூதா இப்படி எழுதினார்: “மோசேயின் உடலைப் பற்றித் தலைமைத் தூதராகிய மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, மிகாவேல் அவனைக் கண்டனம் செய்யத் துணியவில்லை, கடுமையான வார்த்தைகளில் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, “யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்” என்றுதான் சொன்னார்.” (யூ 9)
செப்டம்பர் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 1-2
“வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?”
தைரியமாயிருங்கள், யெகோவா உங்களோடு இருக்கிறார்!
7 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தேவையான தைரியத்தைப் பெற நாம் பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும், படித்ததைப் பின்பற்ற வேண்டும். மோசேக்குப் பிறகு இஸ்ரவேலரை வழிநடத்த நியமிக்கப்பட்ட யோசுவாவிடம் அதைத்தான் யெகோவா சொன்னார்: ‘என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருப்பதற்கு மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; . . . இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் [அதாவது, வாழ்வில் வெற்றி காண்பாய்], அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.’ (யோசு. 1:7, 8) யோசுவா அந்த அறிவுரைப்படி நடந்தார், ‘வாழ்வில் வெற்றி கண்டார்.’ நாமும் அவரைப் போல் நடந்தால், கடவுளுக்கு ஊழியம் செய்ய அதிக தைரியம் பெறுவோம், அதில் வெற்றியும் காண்போம்.
தைரியமாயிருங்கள், யெகோவா உங்களோடு இருக்கிறார்!
20 தீமையும் துயரமும் சோதனையும் நிறைந்த இந்த உலகத்தில் கடவுளுக்குப் பிரியமாய் நடப்பது சவாலான விஷயம்தான். என்றாலும், நாம் தனியாக இல்லை. யெகோவா நம்மோடு இருக்கிறார். கிறிஸ்தவ சபையின் தலைவரான அவரது மகனும் நம்மோடு இருக்கிறார். உலகம் முழுக்க 70 லட்சத்திற்கும் மேலான சக வணக்கத்தாரும் நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் இத்தனை பேரும் இருப்பதால், நாம் தொடர்ந்து விசுவாசத்தைக் காட்டுவோமாக! நற்செய்தியை அறிவிப்போமாக! ‘தைரியமாயிரு; உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்’ என்ற 2013-ன் வருடாந்தர வசனத்தை மனதில் வைப்போமாக!—யோசு. 1:9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:4, 5—வேவுகாரர்களைத் தேடிவந்த ராஜாவின் மனுஷரை ராகாப் ஏன் தவறாக வழிகாட்டினாள்? ராகாப் தனது உயிரையே பணயம் வைத்து இந்த வேவுகாரர்களைக் காப்பாற்றுவதற்குக் காரணம், யெகோவா மீது அவள் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருந்ததுதான். ஆகவே, கடவுளுடைய ஜனங்களுக்குக் கெடுதல் செய்ய வழிதேடுபவர்களிடம் இந்த வேவுகாரர்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. (மத்தேயு 7:6; 21:23-27; யோவான் 7:3-10) சொல்லப்போனால், ராகாப் தன் ‘கிரியைகளினாலே நீதியுள்ளவளாக்கப்பட்டாள்’; அதாவது, ராஜா அனுப்பிய ஆட்களைத் தவறாக வழிகாட்டியது நீதியான ஒரு செயலாகவே இருந்தது.—யாக்கோபு 2:24-26.
செப்டம்பர் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 3-5
“விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலையும் யெகோவா ஆசீர்வதிப்பார்”
it-2-E பக். 105
யோர்தான்
பொதுவாக, கலிலேயா கடல்மட்டத்துக்குக் கீழே இருந்த யோர்தான் ஆற்றின் ஆழம் கிட்டத்தட்ட 3-10 அடியாகவும் (1-3 மீ.) அதன் அகலம் கிட்டத்தட்ட 90-100 அடியாகவும் (27-30 மீ.) இருந்தது. ஆனால், வசந்த காலத்தில் அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது அதன் ஆழமும் அகலமும் இன்னும் அதிகமாகும். (யோசு 3:15) அந்த மாதிரி சமயத்தில், இஸ்ரவேல் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் முழு தேசமும் அதைக் கடந்து போவது பாதுகாப்பானதாக இருந்திருக்காது. முக்கியமாக, எரிகோவுக்கு பக்கத்திலிருந்த ஆற்றுப் பகுதியைக் கடப்பது ரொம்பவே ஆபத்தானதாக இருந்தது. இன்றைக்கும், அந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது யாராவது குளித்துக்கொண்டிருந்தால் அவர்களையும் அடித்துக்கொண்டு போய்விடும். ஆனால், யெகோவா அற்புதமான விதத்தில் தண்ணீரின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியதால் இஸ்ரவேலர்கள் வறண்ட தரை வழியாக அந்த ஆற்றைக் கடந்து போனார்கள். (யோசு 3:14-17)
யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்
17 விசுவாசத்தோடு செய்யும் செயல்கள் மூலம் யெகோவாமீதுள்ள நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தலாம்? இஸ்ரவேலர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தருவாயில் இருந்த சூழ்நிலையைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள். யோர்தான் நதியின் நடுவாகக் கடந்துசெல்லும்படி ஒப்பந்தப் பெட்டியை சுமந்து சென்ற ஆசாரியர்களிடம் யெகோவா கட்டளையிட்டிருந்தார். ஆனால், யோர்தான் நதியை நெருங்கிய இஸ்ரவேலர்கள், மழை வெள்ளத்தால் நதி கரைபுரண்டோடுவதைப் பார்த்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? நதியோரத்தில் கூடாரமிட்டு நீர்மட்டம் குறையும் வரையாக வாரக்கணக்கில் அல்லது அதற்கும் அதிகமாக அங்கே காத்துக்கொண்டிருப்பார்களா? இல்லை, அவர்கள் யெகோவாவை முழுமையாக நம்பினார்கள், அவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். விளைவு? ‘ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்றது . . . ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீர் இல்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாய் கடந்துபோனார்கள்.’ (யோசு. 3:12-17) பாய்ந்து வந்த தண்ணீர் சட்டென நின்றதைப் பார்த்து அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! இஸ்ரவேலர்கள் யெகோவா கொடுத்த அறிவுரைகள்மீது நம்பிக்கை வைத்ததால் அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது.
யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்
18 இன்று அப்படிப்பட்ட அற்புதங்களை யெகோவா செய்வதில்லை என்பது உண்மைதான், ஆனால் அன்றுபோல் இன்றும் தம்முடைய மக்கள் விசுவாசத்தோடு செய்கிற செயல்களை அவர் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அவர் தம்முடைய சக்தியால் அவர்களைப் பலப்படுத்துகிறார். யெகோவாவுக்குத் தலைசிறந்த சாட்சியாகத் திகழும் இயேசு கிறிஸ்து இந்த முக்கியமான வேலையைச் செய்ய ஆதரவு தருவதாக உறுதியளித்தார். ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள். . . . இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்’ என்றார். (மத். 28:19, 20) ஆம், கூச்ச சுபாவமுடைய சாட்சிகள் பலர், முன்பின் தெரியாதவர்களிடம் ஊழியத்தில் தைரியமாகப் பேச கடவுளுடைய சக்தி உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்.—சங்கீதம் 119:46-ஐயும் 2 கொரிந்தியர் 4:7-ஐயும் வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:14, 15—‘யெகோவாவுடைய சேனையின் அதிபதி யார்’? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மீது படையெடுக்கத் துவங்குகையில் யோசுவாவைப் பலப்படுத்த வரும் அந்த அதிபதி, வேறு யாருமல்ல, பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் இருந்த ‘வார்த்தையாகிய’ இயேசு கிறிஸ்துவே அவர். (யோவான் 1:1; தானியேல் 10:13) இன்றும்கூட கடவுளுடைய ஜனங்கள் ஆன்மீகப் போரில் ஈடுபடுகையில் மகிமை பொருந்திய இயேசு கிறிஸ்து நம் கூடவே இருப்பதாக உறுதியளித்திருப்பது நம்மை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!
செப்டம்பர் 27–அக்டோபர் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 6-7
“வீணான காரியங்கள் பக்கம் திரும்பாதீர்கள்”
வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!
5 பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஆகான் என்ற இஸ்ரவேலனும் தன்னுடைய கண்களால்தான் புத்திகெட்டுப்போனான்; எரிகோ நகரத்திலிருந்த சில பொருள்களைக் கண்டு, ஆசைப்பட்டு அவற்றைத் திருடினான். ஆனால், யெகோவா என்ன கட்டளையிட்டிருந்தார்? தம்முடைய பொக்கிஷத்திற்குப் போய்ச்சேர வேண்டிய சில பொருள்களைத் தவிர, எல்லாப் பொருள்களையுமே அழித்துவிட வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். ‘அழிக்கப்பட வேண்டிய பொருள்களிலிருந்து விலகியே இருங்கள், இல்லையென்றால் அவற்றில் எதையாவது எடுத்துக்கொள்ள வேண்டுமென உங்களுக்கு ஆசை வந்துவிடும்’ என்று யோசுவா மூலம் இஸ்ரவேலரை அவர் எச்சரித்திருந்தார். ஆகான் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. விளைவு? இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தாரிடம் தோற்றுப்போனார்கள், அநேகர் உயிரிழந்தார்கள். உண்மை வெட்டவெளிச்சத்திற்கு வரும்வரை, ஆகான் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. அந்தப் பொருள்களை “நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்” என்று கடைசியில்தான் சொன்னான். கண்களின் இச்சையினால் அவன் தன்னுடைய உயிரையே இழந்தான்; ‘அவனுக்குச் சொந்தமானவை எல்லாம்’ அழிக்கப்பட்டன. (யோசு. 6:18, 19; 7:1-26, NW) எடுத்துக்கொள்ளக் கூடாதெனச் சொல்லப்பட்டிருந்த பொருள்கள்மீது அவன் தன் இருதயத்தில் ஆசையை வளர்த்துக்கொண்டான்.
w97 8/15 பக். 28 பாரா 2
தவறை ஏன் தெரிவிக்க வேண்டும்?
தவறை தெரியப்படுத்துவதற்கான ஒரு காரணம், அது சபையின் சுத்தத்தைப் பாதுகாக்க உதவுகிறது. யெகோவா தூய்மையான கடவுள், பரிசுத்தமுள்ள ஒரு கடவுள். அவரை வணங்குகிற அனைவரும் ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமுள்ளவர்களாய் இருக்கும்படி தேவைப்படுத்துகிறார். ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தை இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” (1 பேதுரு 1:14-16) அசுத்தமானதை அல்லது தவறானதை பழக்கமாய் செய்கிற நபர்களை திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் தவிர, முழு சபையின்மீதும் களங்கத்தையும் யெகோவாவின் வெறுப்பையும் அவர்கள் கொண்டுவரக்கூடும்.—யோசுவா, 7-ம் அதிகாரத்தை ஒப்பிடுக.
வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!
8 கண்களின் இச்சைக்கும் உடலின் இச்சைக்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள்கூடச் சிலசமயம் அடிபணிந்துவிடலாம். ஆகவே, நாம் எதைப் பார்க்கிறோம், எதற்கு ஏங்குகிறோம் என்ற விஷயத்தில் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (1 கொ. 9:25, 27; 1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) பார்ப்பதற்கும் இச்சிப்பதற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை நீதிமானாகிய யோபு உணர்ந்திருந்தார். “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என அவர் சொன்னார். (யோபு 31:1) யோபு எந்தவொரு பெண்ணையும் கெட்ட எண்ணத்தோடு தொடாமல் இருந்தது மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட எண்ணத்திற்குக்கூடத் தன் மனதில் இடங்கொடுக்கவில்லை. நம் மனதில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் வரக் கூடாதென்ற குறிப்பை வலியுறுத்த இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.”—மத். 5:28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
பைபிள் காலங்களில் எதிரிகள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முற்றுகை போடுவார்கள். அந்த நகரம் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்பட்டிருந்தால் அங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சேமித்து வைத்த உணவைச் சாப்பிடுவார்கள். கடைசியில் எதிரிகள் அந்த நகரத்தைக் கைப்பற்றும்போது அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், மீதியிருக்கும் உணவு உட்பட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவார்கள். பாலஸ்தீனாவில் இருந்த நகரங்கள் இதுபோல் கைப்பற்றப்பட்டபோது அங்கிருந்த இடிபாடுகளில் கொஞ்சம் உணவு மட்டும் இருந்ததை அல்லது உணவே இல்லாமல் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எரிகோவின் இடிபாடுகளில் அப்படி இல்லை. பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ இப்படிச் சொல்கிறது: ‘அந்த நகரம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிறைய மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு, நிறைய தானியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தளவு அதிகமான தானியங்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம்!’
இஸ்ரவேலர்கள் எரிகோவிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று யெகோவா கட்டளையிட்டிருந்ததால் அவர்கள் அங்கிருந்து எந்த உணவையும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று பைபிள் சொல்கிறது. (யோசு. 6:17, 18) எரிகோவில் நிறைய தானியங்கள் இருந்த காலத்தில்தான், அதாவது அறுவடை காலத்துக்குப் பிறகு அந்த வருஷத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான், இஸ்ரவேலர்கள் எரிகோவைத் தாக்கினார்கள். (யோசு. 3:15-17; 5:10) எரிகோவைக் கைப்பற்றிய பிறகும் நிறைய தானியங்கள் இருந்தன. அதை வைத்துப் பார்க்கும்போது, பைபிள் சொல்கிறபடி ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது!
அக்டோபர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 8-9
“கிபியோனியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்”
it-1-E பக். 930-931
கிபியோன்
யோசுவாவின் காலத்தில். கானானில் இருந்த ஏழு தேசங்களை யெகோவா அழிக்க சொன்னார். அவற்றில், கிபியோனும் ஒன்று! (உபா 7:1, 2; யோசு 9:3-7) ஆனால், மற்ற கானானியர்களிலிருந்து கிபியோனியர்கள் வித்தியாசமாக நடந்துகொண்டார்கள். அவர்களிடம் பெரிய படை இருந்தாலும், அவர்களுடைய நகரம் பெரியதாகவும் பலமுள்ளதாகவும் இருந்தாலும், இஸ்ரவேலர்களோடு அவர்கள் சண்டைக்குப் போகவில்லை. ஏனென்றால், யெகோவா அவர்களுக்குத் துணையாக இருந்ததால், அவர்களை ஜெயிக்க முடியாது என்பதை தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் எரிகோவையும் ஆயி நகரத்தையும் அழித்ததற்குப் பிறகு, அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வதற்காக கில்காலில் இருந்த யோசுவாவிடம் ஆட்களை அனுப்பினார்கள். அந்த ஆட்கள் ரொம்ப தூரத்தில் இருந்து வந்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். எப்படியென்றால், நைந்துபோன உடைகளையும் பிய்ந்துபோய்த் தைக்கப்பட்ட செருப்புகளையும் போட்டுக்கொண்டார்கள். கிழிந்துபோய்த் தைக்கப்பட்ட திராட்சமது தோல் பைகளை எடுத்துக்கொண்டார்கள். பழைய பைகளையும் வைத்திருந்தார்கள். அதோடு, காய்ந்துபோய் உதிரும் நிலையில் இருந்த ரொட்டிகளை எடுத்துக்கொண்டார்கள். வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருந்ததால், இவர்களுடைய ஊர் அந்த தேசத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காக இப்படியெல்லாம் செய்தார்கள். அதுமட்டுமல்ல, எகிப்து தேசத்துக்கும் எமோரிய ராஜாக்களான சீகோனுக்கும் ஓகுக்கும் யெகோவா என்ன செய்தார் என்பதைக் கேள்விப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் புத்திசாலித்தனமாக, எரிகோவுக்கும் ஆயி நகரத்துக்கும் நடந்தவற்றை தெரியாததுபோல் காட்டிக்கொண்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய ஊர் ரொம்ப தூரத்தில் இருந்ததுபோலவும் இந்தச் செய்தி அவர்களுடைய ஊருக்கு வந்து சேருவதற்கு முன்பாகவே அவர்கள் கிளம்பிவிட்டதுபோலவும் காட்டிக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். யோசு 9:3-15.
‘உங்கள் சுயபுத்தியின்மேல் சாயாதீர்கள்’
14 அனுபவமிக்க மூப்பர்கள் உட்பட நாம் அனைவரும் அபூரணராக இருப்பதால், தீர்மானங்களை எடுக்கும்போது யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடத் தவறிவிடலாம்; அப்படிச் செய்யாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். மோசேக்கு அடுத்ததாகப் பொறுப்பேற்ற யோசுவாவும் இஸ்ரவேல் மூப்பர்களும் ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள். சாமர்த்தியமான கிபியோனியர் மாறுவேடம் போட்டுக்கொண்டு தொலைதூர தேசத்திலிருந்து வந்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். அப்போது யோசுவாவும் அந்த மூப்பர்களும் யெகோவாவிடம் ஆலோசனை கேட்பதற்குப் பதிலாக, அவர்களாகவே தீர்மானம் எடுத்து கிபியோனியரோடு சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். யெகோவா இறுதியில் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார் என்றாலும், தம் வழிநடத்துதலை அவர்கள் நாடத் தவறியதை நம் நன்மைக்கென பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.—யோசு. 9:3-6, 14, 15.
‘தேசத்தில் நடந்து திரி’
14 ‘உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்’ என அந்தப் பிரதிநிதிகள் சொன்னார்கள். (யோசுவா 9:3-9) அவர்களுடைய உடையும் உணவுப் பொருட்களும் வெகு தூரத்திலிருந்து வந்ததற்கு அத்தாட்சி அளித்ததாக தோன்றின, ஆனால் உண்மையில் கில்காலிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலேயே கிபியோன் இருந்தது. பிரதிநிதிகளின் பேச்சை நம்பிய யோசுவாவும் அவரது பிரபுக்களும் கிபியோனோடும் அதன் பட்டணங்களோடும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அழிவை சந்திக்காதிருப்பதற்காகவே கிபியோனியர் இப்படி தந்திரம் செய்தார்களா? இல்லை, இஸ்ரவேலரின் கடவுளுடைய தயவைப் பெற வேண்டுமென்ற ஆவல் அவர்களது செயலில் வெளிப்பட்டது. ‘சபைக்கும் . . . யெகோவாவுடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும்’ இருக்க கிபியோனியரை யெகோவா அனுமதித்தார். (யோசுவா 9:11-27) யெகோவாவின் சேவையில் எளிய வேலைகளை செய்ய மனமுள்ளவர்களாக இருந்ததை கிபியோனியர் எப்போதும் வெளிக்காட்டினார்கள். பாபிலோனிலிருந்து திரும்பி வந்து மீண்டும் கட்டப்பட்ட ஆலயத்தில் சேவை செய்த நிதனீமியரில் இவர்களில் சிலரும் இருந்திருக்கலாம். (எஸ்றா 2:1, 2, 43-54; 8:20) கடவுளுடன் சமாதானத்தைக் காத்துக்கொள்ள முயலுவதன் மூலமும் அவருடைய சேவையில் அற்ப வேலைகளைக்கூட மனமுவந்து செய்வதன் மூலமும் நாம் அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1030
தொங்கவிடப்படுதல்
சில சமயங்களில், குற்றவாளிகளைக் கொலை செய்வது மட்டுமல்ல, அவர்களுடைய உடலை மரக் கம்பத்தில் தொங்கவிட வேண்டும் என்றும் திருச்சட்டம் சொன்னது. அப்படித் தொங்கவிடப்பட்டவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருந்தது.
it-1-E பக். 521; பக். 525 பாரா 1
“ஒப்பந்தம்” என்பதற்கான எபிரெய வார்த்தை, ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ செய்யாமல் இருப்பதற்கோ, இரண்டு அல்லது அதற்கும் அதிகமானவர்கள் ஒத்துக்கொள்வதைக் குறிக்கிறது. இது ஒரு வாக்குறுதியாகவும் உறுதிமொழியாகவும் இருக்கிறது.
யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் கிபியோனியர்களோடு ஒப்பந்தம் செய்தார்கள். கிபியோனியர்கள் கானான் தேசத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால், அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களை இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டதால், அவர்களை அழிக்க மாட்டோம் என்று இஸ்ரவேலர்கள் வாக்கு கொடுத்தார்கள். அதற்காக, அவர்கள்மேல் இருந்த சாபம் நீங்கிவிடவில்லை. அதனால், கடவுளின் வீட்டுக்கு விறகு வெட்டுகிற வேலையும் தண்ணீர் சுமக்கிற வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. (யோசு 9:15, 16, 23-27)
அக்டோபர் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 10-11
“யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்கிறார்”
it-1-E பக். 50
அதோனிசேதேக்
வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர்கள் கைப்பற்றிய சமயத்தில், எருசலேமின் ராஜாவாக இவன் இருந்தான். யோசுவாவோடு கிபியோனியர்கள் சமாதான ஒப்பந்தம் செய்ததால், மற்ற ராஜாக்களும் அப்படிச் செய்துவிடுவார்களோ என்றும் தான் தனி ஆளாக ஆகிவிடுவோமோ என்றும் அவன் பயந்தான். அதனால், நான்கு ராஜாக்களைச் சேர்த்துக்கொண்டு கிபியோனியர்களிடம் போர் செய்யப் போனான்.
it-1-E பக். 1020
ஆலங்கட்டி மழை
யெகோவா பயன்படுத்தியது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காகவும் தன்னுடைய வல்லமையைக் காட்டுவதற்காகவும் சில சமயங்களில் ஆலங்கட்டி மழையை யெகோவா பயன்படுத்தியிருக்கிறார். (சங் 148:1, 8; ஏசா 30:30; யாத் 9:18-26; சங் 78:47, 48; 105:32, 33) ஐந்து எமோரிய ராஜாக்கள் கிபியோனியர்களிடம் போர் செய்யப் போனபோது அவர்களுடைய உதவிக்காக இஸ்ரவேலர்கள் போனார்கள். எமோரியர்களை அழிப்பதற்காக ஆலங்கட்டி மழையை யெகோவா பயன்படுத்தினார். அந்தச் சமயத்தில் இஸ்ரவேலர்களின் வாளுக்கு பலியானவர்களைவிட ஆலங்கட்டி மழைக்கு பலியானவர்கள்தான் அதிகம்!—யோசு 10:3-7, 11.
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
10:13—இப்படிப்பட்ட ஓர் அதிசயம் எப்படிச் சாத்தியம்? வானத்தையும் பூமியையும் படைத்த ‘யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ?’ (ஆதியாகமம் 18:14) யெகோவா நினைத்தால், இந்தப் பூமியின் இயக்கத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி, பார்ப்பவர்களின் கண்களுக்குச் சூரியனும் சந்திரனும் நகராமல் இருப்பது போல் தோன்றச் செய்ய முடியும். அல்லது பூமியையும் சந்திரனையும் சுழலவிட்டு, ஒளி விலகல் மூலம் சூரிய, சந்திர ஒளிக்கதிர்களைப் பூமியின் மீது தொடர்ந்து பிரகாசிக்கச் செய்ய முடியும். அவர் அதை எப்படிச் செய்திருந்தாலும், மனித சரித்திரத்தில் ‘அந்நாளையொத்த நாள் இருந்ததே இல்லை.’—யோசுவா 10:14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 3/15 பக். 32 பாரா 5
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சில புஸ்தகங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்ட காரணத்திற்காகவும் அவை பிரயோஜனமான பதிவுகளாயிருந்த காரணத்திற்காகவும் அவை கடவுளுடைய தூண்டுதலால்தான் எழுதப்பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. இருந்தாலும், ‘தேவனுடைய வசனம்’ அடங்கிய எல்லா பதிவுகளையும் யெகோவா தேவன் பாதுகாத்து வைத்திருக்கிறார்; அவை “என்றென்றைக்கும் நிற்கும்.” (ஏசா. 40:8) ஆம், நம்மிடமுள்ள 66 பைபிள் புஸ்தகங்களில் யெகோவா அளித்திருக்கும் தகவல்கள், ‘நாம் தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும் இருப்பதற்குப்’ போதுமானவையாக இருக்கின்றன.—2 தீ. 3:16, 17.
அக்டோபர் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 12-14
“யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியுங்கள்”
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
14:10-13. காலேபுக்கு 85 வயதான போதிலும் எபிரோன் பிராந்தியத்தினரை விரட்டியடிக்கும் சவால்மிக்க வேலையைக் கொடுக்கும்படி கேட்கிறார். அது ஏனாக்கியர் குடியிருக்கிற பகுதி, அவர்கள் பிரமாண்டமான உருவம் கொண்டவர்கள். யெகோவாவின் உதவியோடு அனுபவமுள்ள இந்தப் போர்வீரர் வெற்றி பெறுகிறார்; எபிரோன் ஓர் அடைக்கலப் பட்டணமாகிறது. (யோசுவா 15:13-19; 21:11-13) சவால்மிக்க தேவராஜ்ய நியமிப்புகளைத் தட்டிக் கழிக்காமலிருக்க காலேபின் மாதிரி நம்மை உற்சாகப்படுத்துகிறது.
விசுவாசமும் தேவபயமும் தருகிற தைரியம்
11 அத்தகைய விசுவாசம் அப்படியே இருந்துவிடுவதில்லை. நாம் வாழ்க்கையில் பைபிள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்போது, அதன் பயன்களை ‘ருசிக்கும்போது,’ நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதைப் ‘பார்க்கும்போது,’ அதோடு, வேறு விதங்களில் யெகோவாவின் வழிநடத்துதலை நாம் வாழ்க்கையில் உணரும்போது அது அதிகரிக்கிறது. (சங்கீதம் 34:8; 1 யோவான் 5:14, 15) யோசுவாவும் காலேபும் கடவுளுடைய நற்குணத்தை ருசித்திருந்ததால் அவர்களுடைய விசுவாசம் வேர்விட்டு வளர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. (யோசுவா 23:14) பின்வரும் குறிப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள்: கடவுள் உறுதி அளித்திருந்தபடியே, 40 வருட வனாந்தரப் பயணத்தின் முடிவில் அவர்கள் உயிரோடு இருந்தார்கள். (எண்ணாகமம் 14:27-30; 32:11, 12) கானானியர்களுடன் ஆறு ஆண்டுகள் நடந்த போரில் இவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இறுதியில், நீண்ட ஆயுசையும் நல்லாரோக்கியத்தையும் அனுபவித்ததோடு, சொத்தாக நிலபுலன்களையும்கூட பெற்றார்கள். தமக்கு விசுவாசத்தோடும் தைரியத்தோடும் சேவை செய்பவர்களை யெகோவா எவ்வளவு அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார்!—யோசுவா 14:6, 9-14; 19:49, 50; 24:29.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 902-903
கேபால்
இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டிய தேசங்களில் ‘கேபாலியர்களின் தேசமும்’ ஒன்றாக இருந்தது. (யோசு 13:1-5) இந்தத் தேசம் இஸ்ரவேலுக்கு வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்ததாலும் (தாணுக்கு வடக்கே கிட்டத்தட்ட 100 கி.மீ. [60 மைல்]) இஸ்ரவேலர்கள் இதைக் கைப்பற்றாததாலும் இந்த வசனத்தில் ஏதோ பிழை இருப்பதாக சில விமர்சகர்கள் நினைக்கிறார்கள். இன்னும் சில விமர்சகர்கள், முதலில் இந்த வசனம், “லீபனோனுக்கு அடுத்த தேசம்” என்றோ ‘கேபாலியர்களின் எல்லை வரையில்’ என்றோ இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு இந்த வசனத்தில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், யோசுவா 13:2-7-ல் யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதிகள் நிறைவேறுமா நிறைவேறாதா என்பது இஸ்ரவேலர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இருந்தது. அவர்கள் கீழ்ப்படியாததால் கேபாலியர்களின் தேசத்தை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போயிருக்கலாம்.—யோசு 23:12, 13-ஐ ஒப்பிடுங்கள்.
அக்டோபர் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 15-17
“விலைமதிப்புள்ள உங்கள் சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்”
it-1-E பக். 1083 பாரா 3
எப்ரோன்
யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரவேலர்கள் எப்ரோனை கைப்பற்றியிருந்தாலும், அங்கே படைவீரர்களைக் காவலுக்கு நிறுத்தவில்லை. அவர்கள் வேறொரு இடத்துக்கு போர் செய்ய போயிருந்த சமயத்தில் ஏனாக்கியர்கள் வந்து எப்ரோனை கைப்பற்றினார்கள். இந்த நகரம் காலேபுக்கு சொத்தாக கொடுக்கப்பட்டிருந்ததால், அவர் (அல்லது, காலேபின் தலைமையின் கீழ் யூதா வம்சத்தார்) மறுபடியும் போய் போர் செய்து அந்த நகரத்தைக் கைப்பற்ற வேண்டியிருந்தது. (யோசு 11:21-23; 14:12-15; 15:13, 14; நியா 1:10)
it-1-E பக். 848
கொத்தடிமைகள்
வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போன பிறகு யெகோவாவின் கட்டளைக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். அங்கே இருந்த கானானியர்கள் எல்லாரையும் துரத்தியடிக்க வேண்டும் என்றும் அவர்களை அழித்துவிட வேண்டும் என்றும் யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், இஸ்ரவேலர்கள் அதைச் செய்யாமல் அவர்களை அடிமைகளாக வைத்துக்கொண்டார்கள். அதனால், காலப்போக்கில் அவர்களுடைய பொய் தெய்வங்களைக் கும்பிட ஆரம்பித்தார்கள். (யோசு 16:10; நியா 1:28; 2:3, 11, 12)
it-1-E பக். 402 பாரா 3
கானான்
கானானியர்கள் எல்லாரையுமே இஸ்ரவேலர்கள் துரத்தியடிக்கவில்லை என்றாலும் “இஸ்ரவேலர்களின் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த எல்லா தேசத்தையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார்” என்றே சொல்ல வேண்டும். அதோடு, “அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்” என்றும் “இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின” என்றும் சொல்லலாம். (யோசு 21:43-45) இஸ்ரவேலர்களைச் சுற்றி இருந்த எதிரிகள் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. சொல்லப்போனால், அவர்களைப் பார்த்து பயப்பட்டார்கள். கானானியர்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் (இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்கள்) இருந்தாலும் இஸ்ரவேலர்கள் அவர்களைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை என்றும் கானானியர்களை அவர்கள் ஜெயிப்பார்கள் என்றும் யெகோவா சொல்லியிருந்தார். (யோசு 17:16-18; நியா 4:13) ஆனாலும், இஸ்ரவேலர்கள் சில சமயங்களில் தோற்றுப்போனதற்குக் காரணம், யெகோவா அவர்களுக்கு உதவாததால் அல்ல, அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால்தான்!—எண் 14:44, 45; யோசு 7:1-12.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்களுக்குத் தெரியுமா?
பைபிளில் சொல்லியிருப்பது போல் பூர்வ இஸ்ரேலில் அடர்ந்த காடுகள் இருந்ததா?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இருந்த சில இடங்களில் அடர்ந்த காடுகளும் நிறைய மரங்களும் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (1 இரா. 10:27; யோசு. 17:15, 18) ஆனால், அங்கிருந்த காடுகளையும் மரங்களையும் மக்கள் இன்று அழித்துவிட்டார்கள். அதனால், பூர்வ இஸ்ரேலைப் பற்றி பைபிளில் சொல்லியிருக்கும் விஷயம் உண்மைதானா என்று சந்தேகவாதிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
“இஸ்ரேலில், இன்று இருப்பதைவிட அன்று காடுகள் அதிகமாக படர்ந்து விரிந்து இருந்தன” என்று லைஃப் இன் பிப்ளிக்கல் இஸ்ரேல் (Life in Biblical Israel) என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அங்கிருந்த உயரமான பகுதிகளில் நிறைய தேவதாரு மரங்களும் (பைனஸ் ஹலபென்ஸிஸ்) ஓக் மரங்களும் (க்யூர்கஸ் கல்லிப்ரைனோஸ்) கர்வாலி மரங்களும் (பிஸ்டாசியா பாலஸ்டீனா) இருந்தன. மத்திய மலைத்தொடருக்கும் மத்தியதரைக் கடலோர பகுதிக்கும் இடையில் இருந்த மலை அடிவாரத்தில் நிறைய காட்டத்தி மரங்களும் (ஃபிகஸ் சிகோமோரஸ்) இருந்தன.
இன்று, இஸ்ரேலில் இருக்கும் சில இடங்களில் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இருப்பதாக ப்ளான்ட்ஸ் ஆஃப் தி பைபிள் (Plants of the Bible) என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. இதற்கு காரணம் என்ன? ‘விறகுக்காகவும், விவசாயத்துக்காகவும், மந்தைகளை மேய்ப்பதற்காகவும், கட்டிடங்களைக் கட்டுவதற்காகவும் மனிதன் அவற்றைப் படிப்படியாக அழித்துவிட்டான்’ என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.