யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
21 பின்பு, புதிய வானத்தையும் புதிய பூமியையும்+ நான் பார்த்தேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின.+ கடலும்+ இல்லாமல்போனது. 2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+ 3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+ 4 அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.+ இனிமேல் மரணம் இருக்காது,+ துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.+ முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்.
5 சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்,+ “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”+ என்று சொன்னார். அதோடு, “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை, இவற்றை எழுது” என்று சொன்னார். 6 பின்பு என்னிடம், “இவை நிறைவேறிவிட்டன! ஆல்பாவும் ஒமேகாவும் நானே,* ஆரம்பமும் முடிவும் நானே.+ தாகமாயிருக்கிறவன் எவனோ அவனுக்கு வாழ்வு தரும் நீரூற்றிலிருந்து இலவசமாகத் தண்ணீர் கொடுப்பேன்.+ 7 ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு இவையெல்லாம் கிடைக்கும்.* நான் அவனுடைய கடவுளாக இருப்பேன், அவன் என்னுடைய மகனாக இருப்பான். 8 ஆனால் கோழைகள், விசுவாசமில்லாதவர்கள்,+ அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள், கொலைகாரர்கள்,+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள், சிலைகளை வணங்குகிறவர்கள், பொய் பேசுகிறவர்கள்+ ஆகிய எல்லாருக்கும் நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரிதான் கதி;+ இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.
9 கடைசி ஏழு தண்டனைகளால் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்களில்+ ஒருவர் என்னிடம் வந்து, “இங்கே வா, நான் உனக்கு மணமகளை,+ ஆட்டுக்குட்டியானவரின் மனைவியை, காட்டுகிறேன்” என்று சொன்னார். 10 பின்பு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் உயரமான ஒரு பெரிய மலைமேல் அவர் என்னைக் கொண்டுபோனார். பரிசுத்த நகரமான எருசலேம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார்.+ 11 அதற்குக் கடவுளுடைய மகிமை+ இருந்தது. அது மிகவும் விலை உயர்ந்த கல்லாகிய சூரியகாந்தக் கல்லைப் போல் பளபளவென்று பிரகாசித்தது.+ 12 அதற்கு உயரமான பெரிய மதிலும், 12 நுழைவாசல்களும் இருந்தன. நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் 12 தேவதூதர்கள் இருந்தார்கள். அந்த நுழைவாசல்களின் மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் 12 கோத்திரங்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 13 கிழக்கே மூன்று நுழைவாசல்களும், வடக்கே மூன்று நுழைவாசல்களும், தெற்கே மூன்று நுழைவாசல்களும், மேற்கே மூன்று நுழைவாசல்களும்+ இருந்தன. 14 நகரத்தின் மதிலுக்கு 12 அஸ்திவாரக் கற்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்+ எழுதப்பட்டிருந்தன.
15 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர், நகரத்தையும் அதன் நுழைவாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்கு ஒரு தங்கக்கோலைப் பிடித்திருந்தார்.+ 16 அந்த நகரம் சதுரமாக இருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்தக் கோலால் நகரத்தை அளந்தார். அது சுமார் 2,220 கிலோமீட்டராக* இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவுதான். 17 அவர் அதன் மதிலை அளந்தபோது, மனிதர்களுடைய அளவின்படியும் சரி, தேவதூதருடைய அளவின்படியும் சரி, அதன் உயரம் 144 முழமாக* இருந்தது. 18 அதன் மதில் சூரியகாந்தக் கல்லால்+ கட்டப்பட்டிருந்தது. நகரமோ தெளிவான கண்ணாடி போன்ற சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது. 19 நகரத்து மதில்களின் அஸ்திவாரங்கள் எல்லா விதமான ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாவது சூரியகாந்தம், இரண்டாவது நீலமணி, மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது சுநீரம், ஏழாவது படிகப்பச்சை, எட்டாவது சமுத்திரவர்ணக்கல், ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது பதுமராகம், பன்னிரண்டாவது செவ்வந்திக் கல் ஆகியவையே. 21 அந்த 12 நுழைவாசல்களும் 12 முத்துக்களாக இருந்தன. ஒவ்வொரு நுழைவாசலும் ஒவ்வொரு முத்தாக இருந்தது. நகரத்தின் முக்கியத் தெரு தெளிவான கண்ணாடி போன்ற சுத்தமான தங்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
22 நான் அங்கே ஆலயத்தைப் பார்க்கவில்லை; ஏனென்றால், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா*+ அதன் ஆலயமாக இருக்கிறார், ஆட்டுக்குட்டியானவரும் அதன் ஆலயமாக இருக்கிறார். 23 நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது,+ ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.+ 24 மக்கள் அதன் வெளிச்சத்தில் நடப்பார்கள்.+ பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையை அங்கே கொண்டுபோவார்கள். 25 அதன் நுழைவாசல்கள் நாள் முழுவதும் பூட்டப்படாமல் இருக்கும், அங்கே இரவே இருக்காது.+ 26 மக்களுடைய மகிமையையும் பெருமையையும் அங்கே அவர்கள் கொண்டுபோவார்கள்.+ 27 ஆனால், களங்கமான எதுவும் அதில் நுழையவே நுழையாது. அதேபோல், அருவருப்பானதைச் செய்கிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் அதில் நுழையவே மாட்டார்கள்;+ ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்வின் சுருளில் பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டும்தான் அதில் நுழைவார்கள்.+