தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட முதலாம் கடிதம்
1 பரலோகத் தகப்பனாகிய கடவுளோடும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றுபட்டிருக்கிற தெசலோனிக்கேயருடைய சபைக்கு, சில்வானுவோடும்*+ தீமோத்தேயுவோடும்+ சேர்ந்து பவுல் எழுதுவது:
கடவுளிடமிருந்து அளவற்ற கருணையும் சமாதானமும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.
2 உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்+ கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். 3 விசுவாசத்தால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் வைத்திருக்கிற நம்பிக்கையின்+ காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நம்முடைய தகப்பனாகிய கடவுளுக்கு முன்னால் எப்போதும் நினைத்துக்கொள்கிறோம். 4 கடவுளுடைய அன்பைப் பெற்ற சகோதரர்களே, நீங்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 5 ஏனென்றால், நல்ல செய்தியை உங்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே பிரசங்கிக்காமல், வல்லமையோடும் கடவுளுடைய சக்தியோடும் முழு நிச்சயத்தோடும் பிரசங்கித்தோம். உங்களுடைய நலனை மனதில் வைத்து நாங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டோம் என்பது உங்களுக்கே தெரியும். 6 உங்களுக்குப் பயங்கர உபத்திரவம் வந்தபோதிலும்,+ கடவுளுடைய சக்தியால் கிடைக்கிற சந்தோஷத்தோடு அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்; எங்களைப் போலவும்+ நம் எஜமானைப் போலவும்+ நடந்துகொண்டீர்கள். 7 இப்படி, மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற விசுவாசிகள்* எல்லாருக்கும் முன்மாதிரிகளாக ஆனீர்கள்.
8 உண்மையில், மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற மக்களுக்கு யெகோவாவின்* செய்தி உங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடவுள்மேல் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்ற செய்தி எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.+ அதனால், நாங்கள் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. 9 நாங்கள் முதன்முதலில் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட விதத்தையும், சிலைகளை விட்டுவிட்டு+ உயிருள்ள உண்மைக் கடவுளுக்கு ஊழியம் செய்ய அவரிடம் திரும்பிய விதத்தையும் அவர்களே மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறார்கள். 10 அதோடு, கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரும் வரப்போகிற கடும் கோபத்திலிருந்து+ நம்மைக் காப்பாற்றுகிறவருமான அவருடைய மகன் இயேசு பரலோகத்திலிருந்து வெளிப்படுவதற்காக+ நீங்கள் காத்துக்கொண்டிருப்பதையும் சொல்லி வருகிறார்கள்.
2 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது வீண்போகவில்லை+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2 நீங்கள் அறிந்திருக்கிறபடி, முன்பு பிலிப்பியில் நாங்கள் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலும்,+ மிகுந்த எதிர்ப்பின்* மத்தியில் நம் கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக+ அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம். 3 நாங்கள் கொடுக்கும் அறிவுரைகள் தவறான கருத்துகளையோ அசுத்தமான எண்ணங்களையோ வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. 4 நல்ல செய்தியை ஒப்படைப்பதற்குக் கடவுள் எங்களைத் தகுதியுள்ளவர்களாகக் கருதியதால், நாங்கள் மனிதர்களுக்குப் பிரியமாகப் பேசாமல் எங்கள் இதயங்களை ஆராய்கிற கடவுளுக்குப்+ பிரியமாகப் பேசுகிறோம்.
5 சொல்லப்போனால், நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாகப் புகழ்ந்ததில்லை, உங்களிடம் இருப்பதை அடைவதற்காகப் பேராசைப்பட்டு வெளிவேஷம் போட்டதுமில்லை+ என்பது உங்களுக்குத் தெரியும்; கடவுளே இதற்குச் சாட்சி! 6 உங்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி, நாங்கள் புகழ்தேடி அலைந்ததில்லை; கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்ற முறையில் நாங்கள் உங்களுக்குப் பெரிய பாரமாக இருந்திருக்க முடியும்.+ 7 ஆனால், பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளைக் கனிவோடு கவனித்துக்கொள்வதுபோல்* உங்களை நேசித்து உங்களிடம் மென்மையாக நடந்துகொண்டோம். 8 இப்படி, உங்கள்மேல் கனிவான பாசம் வைத்திருப்பதால், கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்;+ அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.+
9 சகோதரர்களே, நாங்கள் பாடுபட்டு உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களில் யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி,+ நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். 10 விசுவாசிகளாகிய* உங்களிடம் நாங்கள் எந்தளவு உண்மையுள்ளவர்களாகவும்* நீதியுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி. 11 ஒரு அப்பா+ தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும்; உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் அறிவுரை கொடுத்து, ஆறுதலளித்து, புத்திசொல்லி வந்தோம்.+ 12 தன்னுடைய அரசாங்கத்திலும் மகிமையிலும்+ பங்குகொள்வதற்காக உங்களை அழைத்த+ கடவுளுக்கு முன்னால் நீங்கள் எப்போதும் தகுதியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்துவந்தோம்.
13 நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்கள் மூலம் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதர்களுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக நாங்கள் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்.+ அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான். விசுவாசிகளாகிய உங்களுக்குள் அது செயல்பட்டும் வருகிறது. 14 சகோதரர்களே, யூதேயாவில் இருக்கிற கடவுளுடைய சபைகளுக்கு, அதாவது கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற சபைகளுக்கு, நடப்பது போலவே உங்களுக்கும் நடக்கிறது. யூதர்களால் அந்தச் சபையில் இருக்கிறவர்கள் துன்பப்படுவது போலவே நீங்களும் உங்கள் சொந்த மக்களால் துன்பப்படுகிறீர்கள்.+ 15 அந்த யூதர்கள்தான் நம் எஜமானாகிய இயேசுவையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தார்கள்,+ எங்களையும் துன்புறுத்தினார்கள்.+ அவர்கள் இப்போதும் கடவுளுக்குப் பிரியமாக நடப்பதில்லை. மக்களுடைய நலனுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 16 எப்படியென்றால், மற்ற தேசத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களிடம் நாங்கள் பிரசங்கிக்கும்போது எங்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.+ இப்படி, பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்; அவர்கள்மேல் கடவுள் தன்னுடைய கடும் கோபத்தைக் காட்டப்போகிற நேரம் இப்போது வந்துவிட்டது.+
17 சகோதரர்களே, கொஞ்சக் காலம் நாங்கள் உங்களைவிட்டுப் பிரிந்துபோனாலும், உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். ஆனால், எப்படியாவது உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஏங்கினோம். 18 அதனால், உங்களைப் பார்க்க வர வேண்டுமென்று ஆசைப்பட்டோம்; அதிலும், பவுலாகிய நான் ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை உங்களைப் பார்க்க வருவதற்கு முயற்சி செய்தேன்; ஆனால், சாத்தான் எங்களுடைய வழியில் குறுக்கிட்டான். 19 நம் எஜமானாகிய இயேசுவின் பிரசன்னத்தின்போது அவர் முன்னால் எங்கள் நம்பிக்கையாகவும் சந்தோஷமாகவும் பெருமைக்குரிய கிரீடமாகவும் இருக்கப்போகிறவர்கள் யார்? நீங்கள்தானே?+ 20 நிச்சயமாகவே, நீங்கள்தான் எங்கள் மகிமை, நீங்கள்தான் எங்கள் சந்தோஷம்.
3 உங்களுடைய பிரிவால் ஏற்பட்ட வேதனையை எங்களால் தாங்க முடியாமல் போனபோது, நாங்கள் மட்டும் அத்தேனே நகரத்தில் இருப்பது நல்லது என்று நினைத்தோம்.+ 2 கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்கிற கடவுளுடைய ஊழியரான* நம் சகோதரர் தீமோத்தேயுவை+ உங்களிடம் அனுப்பி வைத்தோம்; உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், 3 உங்களுக்கு வருகிற உபத்திரவங்களால் நீங்கள் யாரும் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதற்காகவும் அவரை அனுப்பி வைத்தோம். இந்த உபத்திரவங்கள் நமக்கு நிச்சயம் வரும் என்பது உங்களுக்கே தெரியும்.+ 4 சொல்லப்போனால், நமக்குக் கண்டிப்பாக உபத்திரவம் வரும் என்று உங்களோடு இருந்தபோதே நாங்கள் பல தடவை சொன்னோம்; அதன்படியே உபத்திரவம் வந்துவிட்டது, இதுவும் உங்களுக்குத் தெரியும்.+ 5 அதனால்தான், உங்களுடைய பிரிவால் ஏற்பட்ட வேதனையை என்னால் தாங்க முடியாமல் போனபோது, உங்கள் உண்மைத்தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன்.+ ஏனென்றால், ஏதோவொரு விதத்தில் சோதனைக்காரன்+ உங்களைச் சோதித்திருப்பானோ என்றும், எங்களுடைய உழைப்பு வீண்போயிருக்குமோ என்றும் பயந்தேன்.
6 இப்போதுதான் தீமோத்தேயு உங்களிடமிருந்து வந்து,+ நீங்கள் காட்டுகிற உண்மைத்தன்மையையும் அன்பையும் பற்றி நல்ல செய்தி சொன்னார். நீங்கள் எப்போதும் எங்களைப் பாசத்தோடு நினைத்துப் பார்ப்பதாகவும், நாங்கள் உங்களைப் பார்க்க ஏங்குவது போலவே நீங்களும் எங்களைப் பார்க்க ஏங்குவதாகவும் சொன்னார். 7 அதனால்தான் சகோதரர்களே, எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்களும் உபத்திரவங்களும் வந்தபோதிலும், நீங்கள் உண்மையாக இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்திருக்கிறோம்.+ 8 ஏனென்றால், நம் எஜமானுடைய ஊழியர்களாக நீங்கள் உறுதியோடு நிற்கும்போது எங்களுக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது. 9 நம் கடவுளுக்குமுன் உங்களால் எங்களுக்குக் கிடைத்திருக்கிற அளவில்லாத சந்தோஷத்துக்காக அவருக்கு எப்படி நன்றி சொல்வோம்? 10 உங்களுடைய முகத்தைப் பார்ப்பதற்கும், உங்களுடைய விசுவாசத்தில் குறைவுபடுகிறவற்றை நிறைவாக்குவதற்கும் இரவு பகலாக மிகவும் ஊக்கத்தோடு அவரிடம் மன்றாடுகிறோம்.+
11 நாங்கள் உங்களிடம் நல்லபடியாக வந்துசேருவதற்கு நம் தகப்பனாகிய கடவுளும் நம் எஜமானாகிய இயேசுவும் எங்களுக்கு உதவி செய்வார்களாக. 12 அதோடு, நாங்கள் உங்கள்மீது வைத்திருக்கிற அன்பில் வளர்வதுபோல், நீங்களும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கிற அன்பிலும் மற்ற எல்லார்மீதும் வைத்திருக்கிற அன்பிலும் அதிகமதிகமாக வளரும்படி நம் எஜமான் உதவி செய்வாராக.+ 13 இப்படி, நம் எஜமானாகிய இயேசு தன்னுடைய பரிசுத்தவான்கள் எல்லாரோடும்கூட பிரசன்னமாகும்போது,+ நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய பார்வையில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் இருப்பதற்கு உங்கள் இதயங்களைப் பலப்படுத்துவாராக.+
4 சகோதரர்களே, நீங்கள் எப்படி நடக்க வேண்டும், கடவுளை எப்படிப் பிரியப்படுத்த வேண்டும்+ என்பதைப் பற்றி நாங்கள் கொடுத்த அறிவுரைகளின்படியே நடந்து வருகிறீர்கள். அதை இன்னும் முழுமையாகச் செய்யும்படி நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம், மன்றாடிக் கேட்கிறோம். 2 ஏனென்றால், நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் நாங்கள் கொடுத்த அந்த அறிவுரைகள்* உங்களுக்குத் தெரியும்.
3 நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்+ என்பதும், பாலியல் முறைகேட்டுக்கு* விலகியிருக்க வேண்டும்+ என்பதும் கடவுளுடைய விருப்பம்.* 4 உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.+ 5 கடவுளைப் பற்றித் தெரியாத உலக மக்கள்+ திருப்தியடையாமல் கட்டுக்கடங்காத காமப்பசிக்கு இடம்கொடுப்பது போல நாம் இடம்கொடுக்கக் கூடாது.+ 6 இந்த விஷயத்தில், யாரும் எல்லை மீறிப் போய்த் தன்னுடைய சகோதரனுக்குக் கெடுதல் செய்துவிடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட எல்லா செயல்களுக்கும் யெகோவா* தண்டனை கொடுப்பார். இதை நாங்கள் உங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம், கடுமையாக எச்சரித்தும் இருந்தோம். 7 ஏனென்றால், அசுத்தமாக வாழ்வதற்காக அல்ல, பரிசுத்தமாக வாழ்வதற்காகத்தான் கடவுள் நம்மை அழைத்திருக்கிறார்.+ 8 அப்படியானால், இந்தப் போதனையை அலட்சியம் செய்கிறவன் மனிதனை அல்ல, தன்னுடைய சக்தியை உங்களுக்குத் தருகிற கடவுளையே+ அலட்சியம் செய்கிறான்.+
9 சகோதர அன்பைப்+ பற்றி நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை; ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.+ 10 சொல்லப்போனால், மக்கெதோனியா முழுவதிலும் இருக்கிற சகோதரர்கள் எல்லாரிடமும் நீங்கள் அன்பு காட்டி வருகிறீர்கள். சகோதரர்களே, அதை இன்னும் அதிகமாகக் காட்டும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். 11 நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரையின்படியே, அமைதியாக வாழ்வதைக் குறிக்கோளாக வையுங்கள்,+ மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்,+ உங்கள் கைகளால் வேலை செய்யுங்கள்.+ 12 அப்போதுதான், வெளியாட்களுடைய* பார்வையில் நீங்கள் கண்ணியமாய் நடந்துகொள்கிறவர்களாக இருப்பீர்கள்;+ உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.
13 சகோதரர்களே, இறந்தவர்களுக்கு*+ என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்; அப்போதுதான், நம்பிக்கையில்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துக்கப்பட மாட்டீர்கள்.+ 14 இயேசு இறந்து உயிரோடு எழுந்தார்+ என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. அப்படியானால், இயேசுவின் சீஷர்களாக இறந்தவர்களையும்* அவரோடு இருப்பதற்காகக் கடவுள் உயிரோடு எழுப்புவார்.+ 15 யெகோவாவுடைய* வார்த்தையின் அடிப்படையில் இதைத்தான் நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்: நம் எஜமானுடைய பிரசன்னத்தின்போது நம்மில் உயிரோடிருப்பவர்கள் இறந்தவர்களை* எந்த விதத்திலும் முந்திக்கொள்ள மாட்டோம். 16 ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய+ குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.+ 17 பின்பு, நம்மில் உயிரோடிருப்பவர்கள், வானத்தில் நம் எஜமானைச் சந்திப்பதற்காக+ அவர்களோடுகூட மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.+ இப்படி, எப்போதும் நம் எஜமானோடு இருப்போம்.+ 18 அதனால், இந்த வார்த்தைகளைச் சொல்லி எப்போதும் ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துங்கள்.
5 சகோதரர்களே, இவை நடக்கப்போகிற காலங்களையும் வேளைகளையும்* பற்றி நான் உங்களுக்கு எதுவும் எழுத வேண்டியதில்லை. 2 ஏனென்றால், இரவில் திருடன் வருவதுபோல்+ யெகோவாவின்* நாள்+ வரும் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். 3 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது. 4 ஆனால் சகோதரர்களே, நீங்கள் இருட்டில் இருப்பவர்கள் அல்ல; அதனால், வெளிச்சத்தில் திடீரென்று மாட்டிக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள். 5 நீங்கள் எல்லாரும் ஒளியின் பிள்ளைகளாகவும் பகலின் பிள்ளைகளாகவும் இருக்கிறீர்கள்;+ நாம் இரவுக்கோ இருட்டுக்கோ சொந்தமானவர்கள் அல்ல.+
6 அப்படியானால், மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது;+ அதற்குப் பதிலாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.+ 7 தூங்குகிறவர்கள் இரவில் தூங்குவார்கள்; குடிவெறியர்கள் இரவில் குடிபோதையில் இருப்பார்கள்.+ 8 ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+ 9 ஏனென்றால், கடவுள் நம்மேல் கடும் கோபத்தைக் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்காமல், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பதற்காகத்தான் நம்மைத் தேர்ந்தெடுத்தார்.+ 10 நாம் விழித்திருந்தாலும் கண்மூடிவிட்டாலும்* கிறிஸ்துவோடு உயிர்வாழ வேண்டும்+ என்பதற்காகவே கிறிஸ்து நமக்காக இறந்தார்.+ 11 அதனால், நீங்கள் இப்போது செய்து வருகிறபடியே எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்,* ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்.+
12 சகோதரர்களே, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, நம் எஜமானுடைய சேவையில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திசொல்கிற சகோதரர்களுக்கு மரியாதை காட்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். 13 அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.+ ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்.+ 14 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுதான்: ஒழுங்கீனமாக இருப்பவர்களை எச்சரியுங்கள்,*+ மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம்* ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்.+ 15 உங்களில் யாரும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்;+ உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் முயற்சி செய்யுங்கள்.+
16 எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.+ 17 எப்போதும் ஜெபம் செய்யுங்கள்.+ 18 எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்;+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்.* 19 கடவுளுடைய சக்தி உங்களுக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதீர்கள்.+ 20 தீர்க்கதரிசனங்களை அவமதிக்காதீர்கள்.+ 21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்;+ அதையே உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். 22 எல்லா விதமான கெட்ட செயலையும் விட்டு விலகுங்கள்.+
23 சமாதானத்தின் கடவுள் உங்களை முழுமையாகப் புனிதமாக்கட்டும். சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது உங்கள் சிந்தை, உயிர், உடல் ஆகியவை எல்லா விதத்திலும் குறையில்லாமலும் குற்றமில்லாமலும் இருக்கும்படி பாதுகாக்கட்டும்.+ 24 உங்களை அழைக்கிறவர் நம்பகமானவர் என்பதால் நிச்சயம் அப்படிச் செய்வார்.
25 சகோதரர்களே, எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+
26 சுத்தமான இதயத்தோடு எல்லா சகோதரர்களுக்கும் முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள்.
27 இந்தக் கடிதத்தைச் சகோதரர்கள் எல்லாருக்கும் நீங்கள் வாசித்துக் காட்ட வேண்டும் என்று நம் எஜமானுடைய பெயரில் கட்டளை கொடுக்கிறேன்.+
28 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.
சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “இயேசுவின் சீஷர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அல்லது, “போராட்டத்தின்.”
வே.வா., “நெஞ்சார நேசிப்பதுபோல்.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாகிய.”
வே.வா., “பற்றுமாறாதவர்களாகவும்.”
அல்லது, “கடவுளுடைய சக வேலையாளான.”
வே.வா., “கட்டளைகள்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சித்தம்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “கிறிஸ்தவ சபையில் இல்லாத ஆட்களுடைய.”
நே.மொ., “தூங்கிவிட்டவர்களுக்கு.”
நே.மொ., “தூங்கிவிட்டவர்களையும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தூங்கிவிட்டவர்களை.”
அதாவது, “குறித்த நாட்களையும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “இறந்துவிட்டாலும்.”
வே.வா., “ஆறுதல்படுத்துங்கள்.”
வே.வா., “இருப்பவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்.”
வே.வா., “சோர்ந்துபோய் இருப்பவர்களிடம்.”
வே.வா., “சித்தம்.”