தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம்
6 அடிமைகளாக* இருக்கிற எல்லாரும் தங்களுடைய எஜமான்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருத வேண்டும்;+ அப்போதுதான், கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் எந்தப் பழிச்சொல்லும் வராது.+ 2 அதோடு, கிறிஸ்தவ எஜமான்களைச் சகோதரர்கள்தானே என்று நினைத்து அவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, தங்களுடைய நல்ல வேலையால் பயன் பெறுகிற தங்கள் எஜமான்கள் விசுவாசிகளாகவும்* அன்புக்குரியவர்களாகவும் இருப்பதை மனதில் வைத்து இன்னும் ஆர்வத்தோடு அவர்களுக்காக உழைக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் நீ அவர்களுக்குத் தொடர்ந்து கற்றுக்கொடு, தொடர்ந்து அறிவுரை சொல். 3 ஒருவன் பொய்க் கோட்பாட்டைக் கற்றுக்கொடுக்கிறவனாக, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த பயனுள்ள* அறிவுரைகளையோ+ கடவுள்பக்திக்குரிய விஷயங்களையோ+ ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால், 4 அவன் தலைக்கனம் பிடித்தவன், எதையும் புரிந்துகொள்ளாதவன்,+ விவாதங்களிலும் வார்த்தைகளைப் பற்றிய வாக்குவாதங்களிலும் மூழ்கிப்போயிருப்பவன்.*+ இவற்றிலிருந்தே பொறாமையும், சண்டை சச்சரவும், அவதூறான பேச்சும்,* பொல்லாத சந்தேகங்களும் வருகின்றன. 5 அதோடு, புத்திகெட்டவர்களாகவும்+ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறவர்கள் மத்தியில் சிறுசிறு விஷயங்களைப் பற்றிய வாக்குவாதங்கள் எப்போதும் ஏற்படுகின்றன; கடவுள்பக்தியின் மூலம் ஆதாயம் பெறலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.+ 6 கடவுள்பக்தி மிகுந்த ஆதாயம் தரும்+ என்பது உண்மைதான்; ஆனால் கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்* உள்ளவர்களுக்குத்தான் அது மிகுந்த ஆதாயம் தரும். 7 ஏனென்றால், இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது.+ 8 அதனால், நமக்கு உணவும் உடையும்* இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.+
9 ஆனால், பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்;+ அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களை நாசத்திலும் அழிவிலும்தான் அமிழ்த்துகின்றன.+ 10 பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.+
11 ஆனால், கடவுளுடைய ஊழியனாகிய நீ இவற்றைவிட்டு விலகி ஓடு. நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம்+ ஆகியவற்றையே நாடு. 12 விசுவாசத்துக்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடு; முடிவில்லாத வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்; அந்த வாழ்வுக்காகத்தான் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்; அதைப் பற்றித்தான் நீ நிறைய பேருக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்திருக்கிறாய்.
13 எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிற கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்த கிறிஸ்து இயேசுவின்+ முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளை கொடுக்கிறேன்: 14 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும்வரை,+ எந்த விதமான களங்கத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத விதத்தில் நான் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடி. 15 குறித்த காலத்தில் அவர் தன்னை வெளிப்படுத்துவார். அவர்தான் சந்தோஷமானவர், ஒரே மாமன்னர், ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்.+ 16 அவர் ஒருவர்தான் சாவாமை உள்ளவர்,+ அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்;+ எந்த மனிதனும் அவரைப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது.+ அவருக்கே மாண்பும் முடிவில்லாத வல்லமையும் சொந்தம்! ஆமென்.*
17 இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.* 18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல். 19 இந்த விதத்தில் எதிர்காலத்துக்காக நல்ல அஸ்திவாரத்தைப் போட்டு, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்+ என்று அறிவுரை சொல்; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வை அவர்களால் உறுதியாகப் பிடித்துக்கொள்ள முடியும்.+
20 தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்;+ பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், “அறிவு” என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு.+ 21 ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவு தங்களுக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு சிலர் விசுவாசத்தைவிட்டே விலகிப்போயிருக்கிறார்கள்.
கடவுளுடைய அளவற்ற கருணை உன்மீது இருக்கட்டும்!