மத்தேயு எழுதியது
16 பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம் வந்து, வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டார்கள்.+ 2 அதற்கு அவர், “சாயங்கால நேரத்தில், ‘வானம் சிவந்திருக்கிறது, அதனால் வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கிறீர்கள்;+ 3 காலை நேரத்தில், ‘வானம் சிவந்து மேகமூட்டமாக இருக்கிறது, இன்றைக்குக் காற்றுடன்கூடிய மழை வரும்’ என்று சொல்கிறீர்கள். வானத்தைப் பார்த்து வானிலை எப்படி இருக்குமென்று உங்களால் சொல்ல முடிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் பார்த்து உங்களால் அர்த்தம் சொல்ல முடியவில்லை. 4 விசுவாசதுரோகம் செய்கிற பொல்லாத தலைமுறையினர் ஒரு அடையாளத்தை* கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால், யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது”+ என்று சொன்னார். அதன் பின்பு, அவர்களைவிட்டு விலகிப்போனார்.
5 சீஷர்கள் அக்கரைக்குப் போனார்கள், ஆனால் ரொட்டிகளை எடுத்துக்கொண்டுபோக மறந்துவிட்டார்கள்.+ 6 இயேசு அவர்களிடம், “பரிசேயர்கள் சதுசேயர்களுடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருங்கள்”+ என்று சொன்னார். 7 அப்போது அவர்கள், “நாம் ரொட்டியை எடுக்காமல் வந்துவிட்டோமே” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 8 இயேசு இதைத் தெரிந்துகொண்டு, “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ரொட்டியைக் கொண்டுவராததைப் பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? 9 இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? ஐந்து ரொட்டிகளை 5,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது மீதியானதை எத்தனை கூடைகளில் சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?+ 10 ஏழு ரொட்டிகளை 4,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது மீதியானதை எத்தனை பெரிய கூடைகளில் சேகரித்தீர்கள் என்பதும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?+ 11 நான் ரொட்டிகளைப் பற்றிப் பேசவில்லை என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்கள் சதுசேயர்களுடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்”+ என்று சொன்னார். 12 ரொட்டி செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து அல்ல, ஆனால் பரிசேயர்கள் சதுசேயர்களுடைய போதனையைக் குறித்துதான் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் சொன்னார் என்பதை அப்போது அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
13 பிலிப்புச் செசரியாவில் இருக்கிற பகுதிகளுக்கு இயேசு வந்தபோது, “மனிதகுமாரனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று சீஷர்களிடம் கேட்டார். 14 அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர் என்றும்,+ வேறு சிலர் எலியா என்றும்,+ இன்னும் சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள். 15 “ஆனால், நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். 16 அதற்கு சீமோன் பேதுரு, “நீங்கள் கிறிஸ்து,+ உயிருள்ள கடவுளுடைய மகன்”+ என்று சொன்னார். 17 அப்போது இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ சந்தோஷமானவன். ஏனென்றால், இதை உனக்கு எந்த மனுஷனும் வெளிப்படுத்தவில்லை, என் பரலோகத் தகப்பன்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.+ 18 நான் உனக்குச் சொல்கிறேன், நீ பேதுரு;+ நான் என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல்+ கட்டுவேன்; கல்லறையின் வாசல்களால் அதை ஜெயிக்க முடியாது.+ 19 பரலோக அரசாங்கத்தின் சாவிகளை நான் உனக்குத் தருவேன்; பூமியில் நீ பூட்டுவதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும், பூமியில் நீ திறப்பதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்”+ என்று சொன்னார். 20 பின்பு, தான் கிறிஸ்து என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று சீஷர்களுக்குக் கண்டிப்புடன் சொன்னார்.+
21 அன்றுமுதல் இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் எருசலேமுக்குப் போய் பெரியோர்களாலும் முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் பல பாடுகள் பட்டு, கொலை செய்யப்பட வேண்டும், பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்பதை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். 22 அப்போது பேதுரு அவரைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று அதட்டலாகச் சொன்னார்.+ 23 ஆனால் இயேசு திரும்பிக்கொண்டு, “என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாய்; நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்”* என்று பேதுருவிடம் சொன்னார்.+
24 பின்பு இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வரட்டும்.+ 25 தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.+ 26 சொல்லப்போனால், ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் என்ன பிரயோஜனம்?+ உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?+ 27 மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் தன்னுடைய தூதர்களோடு வருவார்;+ அப்போது, அவரவருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவரவருக்குப் பலன் கொடுப்பார்.+ 28 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதைப் பார்ப்பதற்கு முன்னால் சாகவே மாட்டார்கள்”+ என்று சொன்னார்.