மல்கியா
3 “இதோ, நான் என்னுடைய தூதுவரை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார்.+ நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.+ நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்கிற ஒப்பந்தத்தின் தூதுவரும் வருவார். அவர் நிச்சயமாக வருவார்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
2 “ஆனால், அவர் வரப்போகிற நாளை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்? அவருக்குமுன் யாரால் நிற்க முடியும்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும், சலவைக்காரரின் சலவைக்கட்டி போலவும் இருப்பாரே.+ 3 அவர் புடமிடுகிறவரைப் போலவும், வெள்ளியைச் சுத்தப்படுத்துகிறவரைப் போலவும் உட்காருவார்.+ லேவியின் மகன்களை அவர் சுத்தப்படுத்துவார். தங்கத்தையும் வெள்ளியையும் புடமிடுவது போல அவர்களைப் புடமிடுவார். அதனால், அவர்கள் யெகோவாவுக்கு நீதியோடு காணிக்கை செலுத்தும் ஜனங்களாக ஆவார்கள். 4 அப்போது யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும், முன்னோர்களின் காலத்தில் செலுத்தப்பட்ட காணிக்கைகளைப் போலவே யெகோவாவுக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.+
5 நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்காக நான் உங்களிடம் வருவேன். எனக்குப் பயந்து நடக்காத சூனியக்காரர்களுக்கும்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும்,+ கூலியாட்களை ஏமாற்றுகிறவர்களுக்கும்,+ விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* அடக்கி ஒடுக்குகிறவர்களுக்கும்,+ வேறு தேசத்து ஜனங்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கும்*+ எதிராகச் சாட்சி சொல்ல நான் வேகமாக வருவேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
6 “நான் யெகோவா; நான் மாறுவதில்லை.*+ நீங்கள் யாக்கோபின் பிள்ளைகள்; அதனால்தான், உங்களை அழிக்காமல் இன்னும் விட்டுவைத்திருக்கிறேன். 7 உங்களுடைய முன்னோர்களின் காலத்திலிருந்தே நீங்கள் என்னுடைய விதிமுறைகளை மீறியிருக்கிறீர்கள்.+ என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
ஆனால், “நாங்கள் எப்படி உங்களிடம் திரும்பி வருவது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
8 “ஒரு சாதாரண மனுஷன் கடவுளிடம் திருட* முடியுமா? ஆனால், நீங்கள் என்னிடம் திருடுகிறீர்கள்.”
ஆனால், “நாங்கள் எப்படி உங்களிடம் திருடுகிறோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
“பத்திலொரு பாகத்தையும்* காணிக்கைகளையும் எனக்குக் கொடுக்காமல் வைத்துக்கொள்கிறீர்களே! 9 உங்களை நான் சபித்துவிட்டேன்.* ஏனென்றால், என்னிடம் திருடுகிறீர்கள். சொல்லப்போனால், உங்களுடைய மொத்த தேசமே என்னிடம் திருடுகிறது. 10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
11 “நாசமாக்குகிறதை* நான் அதட்டுவேன். இனி உங்கள் தேசத்தின் விளைச்சலை அது நாசமாக்காது; உங்கள் திராட்சைத் தோட்டமும் கனிதராமல் போகாது”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
12 “மற்ற எல்லா தேசத்தாரும் உங்களைச் சந்தோஷமானவர்கள் என்று சொல்வார்கள்.+ நீங்கள் சந்தோஷம் தரும் தேசத்தாராக இருப்பீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
13 “கொஞ்சம்கூட உண்மை இல்லாத வார்த்தைகளை நீங்கள் எனக்கு எதிராகப் பேசினீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால், “உங்களுக்கு எதிராக அப்படியென்ன பேசினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.+
14 “‘கடவுளுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறீர்கள்.+ அதோடு, ‘பரலோகப் படைகளின் யெகோவா கொடுத்த பொறுப்புகளைச் செய்ததாலும் அவருக்குமுன் மனம் வருந்தி நடந்ததாலும் என்ன பலனைக் கண்டோம்? 15 அகங்காரம்* பிடித்தவர்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அக்கிரமம் செய்கிறவர்கள்தான் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். அவர்கள் துணிச்சலோடு கடவுளைச் சோதித்துப் பார்த்தாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்’+ என்று சொல்கிறீர்கள்.”
16 அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக*+ ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.+
17 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை என்னுடைய விசேஷ சொத்தாக்குவேன்.+ அந்த நாளில் அவர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.+ கீழ்ப்படிந்து நடக்கிற ஒரு மகனுக்கு அப்பா கரிசனை காட்டுவது போல நான் அவர்களுக்குக் கரிசனை காட்டுவேன்.+ 18 அப்போது, நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.”+