மத்தேயு எழுதியது
5 அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைமேல் ஏறினார்; அவர் உட்கார்ந்த பின்பு, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். 2 அப்போது, அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அவர்களிடம்,
3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்,+ ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.
4 துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.+
5 சாந்தமாக+ இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.*+
6 நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.*+
7 இரக்கம் காட்டுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்.
8 சுத்தமான இதயமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள்.+
9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
10 நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.+
11 நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும்,*+ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும்,+ உங்களைத் துன்புறுத்தும்போதும்+ சந்தோஷப்படுங்கள். 12 மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள்,+ ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்;+ உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்.+
13 நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்;+ உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மறுபடியும் சுவை சேர்க்க முடியும்? வெளியே கொட்டப்பட்டு,+ மனுஷர்களால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறு எதற்கும் அது உதவாது.
14 நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்.+ மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும்.+ 16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+
17 திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே வந்தேன்.+ 18 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும்.+ 19 அதனால், திருச்சட்டத்திலுள்ள ஒரு சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டான்.* ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெறுவான்.* 20 நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும்விட நீங்கள் அதிக நீதியுள்ளவர்களாக இல்லையென்றால்,+ ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டீர்கள்.+
21 ‘கொலை செய்யக் கூடாது,+ கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன்மேல்* கடும் கோபமாகவே+ இருக்கிறவன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; கேவலமான வார்த்தைகளால் தன் சகோதரனை அவமதிக்கிறவன் உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; ‘கேடுகெட்ட முட்டாளே!’ என்று சொல்கிறவனோ கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள்+ தள்ளப்பட வேண்டியிருக்கும்.
23 அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது+ உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், 24 அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.+
25 உங்கள்மேல் ஒருவன் வழக்கு போட்டால், நீதிமன்றத்துக்குப் போகும் வழியிலேயே அவனோடு சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்; இல்லையென்றால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலாளியிடம் ஒப்படைப்பார், பின்பு நீங்கள் சிறையில் தள்ளப்படுவீர்கள்.+ 26 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட உங்கள் கையில் மிஞ்சாது.
27 ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’+ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+ 29 உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.+ உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.+ 30 உன் வலது கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு.+ உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.+
31 ‘தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் விவாகரத்துப் பத்திரத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டது.+ 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை* தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், வேறொருவனோடு முறைகேடான உறவுகொள்ள அவளுக்குச் சந்தர்ப்பம் அளித்துவிடுகிறான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்கிறவன் அவளோடு முறைகேடான உறவுகொள்கிறான்.+
33 அதோடு, ‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது;+ யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’+ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்;+ பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது கடவுளுடைய சிம்மாசனம்; 35 பூமியின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது அவருடைய கால்மணை;+ எருசலேமின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது மகா ராஜாவின் நகரம்.+ 36 உங்கள் தலையின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் உங்கள் தலையில் இருக்கிற ஒரு முடியைக்கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது. 37 நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.+ இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே+ வருகிறது.*
38 ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 39 ஆனால் நான் சொல்கிறேன், அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்.+ 40 ஒருவன் உங்கள்மேல் வழக்கு போட்டு உங்கள் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள்.+ 41 அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள். 42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்.+
43 ‘மற்றவர்கள்மேல்* அன்பு காட்ட வேண்டும், ஆனால் எதிரியை வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 44 ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்,+ உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ 45 இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக+ இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.+ 46 உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், என்ன பிரயோஜனம்?+ வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 47 உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொன்னால், அதில் என்ன விசேஷம்? உலக மக்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 48 அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்”+ என்றார்.