மத்தேயு எழுதியது
6 பின்பு அவர், “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. 2 அதனால், நீங்கள் தானதர்மம்* செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள்.* மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 3 நீங்களோ தானதர்மம் செய்யும்போது, உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 4 இப்படி, மற்றவர்களுக்குத் தெரியாத விதத்தில் நீங்கள் தானதர்மம் செய்யும்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.+
5 நீங்கள் ஜெபம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போல்+ இருக்கக் கூடாது; ஏனென்றால், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் ஜெபக்கூடங்களிலும் முக்கியமான தெருக்களின் முனைகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 6 நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள்.+ அப்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார். 7 நீங்கள் ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்; நிறைய வார்த்தைகளைச் சொல்லி ஜெபம் செய்தால் கடவுள் கேட்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல் இருக்காதீர்கள்; நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு என்னென்ன தேவை என்பது உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.+
9 அதனால், நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்:+
‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர்+ பரிசுத்தப்பட வேண்டும்.+ 10 உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.+ உங்களுடைய விருப்பம்*+ பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.+ 11 இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்;+ 12 எங்கள் கடனாளிகளை* நாங்கள் மன்னித்ததுபோல் எங்கள் கடன்களை* எங்களுக்கு மன்னியுங்கள்.+ 13 சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள்,*+ பொல்லாதவனிடமிருந்து+ எங்களைக் காப்பாற்றுங்கள்.’
14 மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.+ 15 மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+
16 நீங்கள் விரதம் இருக்கும்போது,+ வெளிவேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்.*+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 17 நீங்களோ விரதம் இருக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்; 18 அப்போது, நீங்கள் விரதம் இருப்பது மனுஷர்களுக்குத் தெரியாது, ஆனால் எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பனுக்குத் தெரியும். அதனால், எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.
19 பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்.+ ஏனென்றால், இங்கே பூச்சியும்* துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். 20 அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;+ அங்கே பூச்சியோ துருவோ அவற்றை அழிக்காது;+ திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள். 21 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.
22 கண்தான் உடலுக்கு விளக்கு.+ உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக* இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; 23 ஆனால், உங்கள் கண் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,*+ உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்ப்பட்ட இருளாக இருக்கும்!
24 யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்;+ அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.+
25 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.+ உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம், இல்லையா?+ 26 வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்;+ அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? 27 கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை* கூட்ட முடியுமா?+ 28 உடைக்காகவும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்;* அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட+ இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை. 30 விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும்* காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா? 31 அதனால், ‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.+ 32 இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.
33 அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்* முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+ 34 நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.+ நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்”* என்றார்.