யோவான் எழுதியது
13 இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடம் போவதற்கு+ நேரம் வந்துவிட்டதென்று+ பஸ்கா பண்டிகைக்கு முன்பு இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், உலகத்திலிருந்த தன்னுடைய சீஷர்கள்மேல் அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.+ 2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான். 3 தகப்பன் எல்லாவற்றையும் தன்னுடைய கைகளில் ஒப்படைத்திருந்ததையும், தான் கடவுளிடமிருந்து வந்திருந்ததையும், கடவுளிடமே திரும்பிப் போக+ வேண்டியிருந்ததையும் இயேசு தெரிந்து வைத்திருந்தார். 4 அதனால், இயேசு எழுந்து, தன்னுடைய மேலங்கியைக் கழற்றி, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்;+ 5 பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, சீஷர்களின் பாதங்களைக் கழுவவும், தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கவும் ஆரம்பித்தார். 6 அவர் சீமோன் பேதுருவிடம் வந்தபோது, “எஜமானே, நீங்களா என் பாதங்களைக் கழுவப்போகிறீர்கள்?” என்று பேதுரு கேட்டார். 7 அதற்கு இயேசு, “நான் என்ன செய்கிறேன் என்பது இப்போது உனக்குப் புரியாது, பிறகு புரிந்துகொள்வாய்” என்று சொன்னார். 8 அப்போது பேதுரு, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று சொன்னார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால்+ என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொன்னார். 9 அதற்கு சீமோன் பேதுரு, “அப்படியென்றால் எஜமானே, என் பாதங்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவுங்கள்” என்று சொன்னார். 10 அதற்கு இயேசு, “குளித்தவன் தன் பாதங்களை மட்டும் கழுவினால் போதும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆனால் எல்லாருமே அல்ல” என்று சொன்னார். 11 தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+ அதனால்தான், “உங்களில் எல்லாருமே சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
12 அவர்களுடைய பாதங்களைக் கழுவிய பின்பு, தன்னுடைய மேலங்கியைப் போட்டுக்கொண்டு மறுபடியும் சாப்பிட உட்கார்ந்து, “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? 13 என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் கூப்பிடுவது சரிதான். ஏனென்றால், நான் போதகர்தான், எஜமான்தான்.+ 14 எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால்,+ நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்.*+ 15 நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்.+ 16 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் கிடையாது, அனுப்பப்பட்டவரும் தன்னை அனுப்பியவரைவிட உயர்ந்தவர் கிடையாது. 17 இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்.+ 18 உங்கள் எல்லாரையும் பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், ‘என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்’*+ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.+ 19 அது நிறைவேறும்போது நான்தான் அவர் என்று நீங்கள் நம்புவதற்காக இப்போதே, அது நிறைவேறுவதற்கு முன்பே, நான் உங்களிடம் சொல்கிறேன்.+ 20 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.+ என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்”+ என்று சொன்னார்.
21 இவற்றைச் சொன்ன பின்பு இயேசு மனம் கலங்கி, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று வெளிப்படையாகச் சொன்னார். 22 யாரைப் பற்றி இப்படிச் சொன்னார் என்று தெரியாமல் சீஷர்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டார்கள்.+ 23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். 24 சீமோன் பேதுரு அவரிடம், “யாரைப் பற்றிச் சொல்கிறார்?” என்று சைகையால் கேட்டார். 25 அப்போது அவர் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, அது யார்?”+ என்று கேட்டார். 26 அதற்கு இயேசு, “நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்”+ என்று சொன்னார். பின்பு, ரொட்டித் துண்டைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனான யூதாசிடம் கொடுத்தார். 27 அவன் ரொட்டித் துண்டை வாங்கியதும் சாத்தான் அவனுடைய இதயத்துக்குள் புகுந்தான்.+ அதனால் இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று சொன்னார். 28 ஆனால், எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்று அங்கே உட்கார்ந்திருந்த யாருக்கும் புரியவில்லை. 29 பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால்,+ பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ இயேசு சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள். 30 அவன் அந்த ரொட்டித் துண்டை வாங்கியதும் உடனடியாக வெளியே போனான். அது ராத்திரி நேரமாக இருந்தது.+
31 அவன் வெளியே போன பின்பு இயேசு, “இப்போது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார்,+ அவர் மூலம் கடவுளும் மகிமைப்படுகிறார். 32 கடவுளே அவரை மகிமைப்படுத்துவார்,+ உடனே அவரை மகிமைப்படுத்துவார். 33 சிறுபிள்ளைகளே, இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனாலும், ‘நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது’+ என்று நான் யூதர்களிடம் சொன்னதையே இப்போது உங்களிடமும் சொல்கிறேன். 34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.
36 சீமோன் பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நான் போகிற இடத்துக்கு என் பின்னால் வர இப்போது உன்னால் முடியாது, ஆனால் பிற்பாடு வருவாய்”+ என்று சொன்னார். 37 அப்போது பேதுரு, “எஜமானே, இப்போது உங்கள் பின்னால் வர என்னால் ஏன் முடியாது? உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்”+ என்று சொன்னார். 38 அதற்கு இயேசு, “நீ எனக்காக உயிரையே கொடுப்பாயா? உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்றார்.